ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

சவால்களை உடைத்த சலங்கை!

 ஆச்சர்யப்பட வைக்கும் அனிதா ரத்னம்நடனம்கட்டுரை : ம.பிரியதர்ஷினி; படங்கள் : ஸ்டீவ்ஸ்.சு.இராட்ரிக்ஸ்

சவால்களை உடைத்த சலங்கை!
##~##

 ண்களும்கூட நாட்டியமாடும் நடன மங்கை... அனிதா ரத்னம். இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் தன் நடனத்தாலும்... தன் னுடைய போர்க்குணத்தாலும் அறியப்பட்டிருக்கும் இவர்... இன்று, தான் அமர்ந்திருக்கும் இந்த சிம்மாசனத்துக்கு ஏறி வருவதற்காக கடந்த படிக்கற்களில் பல, தடைக்கற்கள் என்பதே உண்மை!

'டி.வி.எஸ். குடும்பம்' எனும் பாரம்பரியமிக்க பெருங்குடும்பத்தில் பிறந்திருந்தாலும்... சிறுபிராயத்தில் நடனத்துக்கு மறுக்கப்பட்ட அனுமதி, முறிந்துபோன திருமண உறவுகள், 'சிங்கிள் பேரன்ட்'டாக பிள்ளைகளை ஆளாக்க பட்ட கஷ்டங்கள்... இவற்றுக்கு நடுவில் நடனத்தில் முன்னெடுத்த புதிய முயற்சிகள்... என்று டாக்டர் அனிதா ரத்னம் பேசப்பேச... அவருடைய ஒவ்வொரு அவதாரமும் நம்மை பிரமிக்க வைக்கின்றது!

அதுவரை ஆடி மட்டுமே பார்த்து ரசித்த அனிதாவை, சென்னை, செனடாப் ரோட்டில் அமைந்துள்ள கலைநயமிக்க அவருடைய வீட்டில், அன்று பேச்சிலும் ரசித்தோம்!

''என் அம்மாவுக்கு பரதம் கத்துக்க ஆசை. 1930-கள்ல பரதம்கிறது ஒரு கறுப்புப் புள்ளி மாதிரி. அதனால தாத்தா டி.எஸ்.ராஜம் அனுமதிக்கல. 'பெண் குழந்தை பிறந்தா, நிச்சயம் நடனம் கத்துக்க வைப்பேன்’னு அம்மா எடுத்த சபதத்தை நிறைவேற்றவே, பிறந்த பெண் குழந்தை நான். 1960-கள்ல 'கலாஷேத்திரா’வை நிறுவிய ருக்மணிதேவி அருண்டேல், நடனத்தின் பெருமையை உலகுக்கு உரக்கச் சொன்னாங்க. அதே காலகட்டத்துல அம்மாவோட முயற்சியால, வீட்டுலயே எனக்கு நடன வகுப்பு ஏற்பாடனது.

அஞ்சு வயசுல, மாமாவோட கல்யாணத்துல, ரெண்டரை மணி நேரம் ஆடி அரங்கேற்றம் செய்தேன். முடிச்சதும் எல்லாரும் என் கன்னத்தைக் கிள்ளிப் பாராட்ட, என் தாத்தாவோ... 'இனி அனிதா டான்ஸ் எல்லாம் ஆடக்கூடாது. அப்புறம் அவளை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க’னு சிடுசிடுத்தார். அது, இப்பவும் காதுல ஒலிக்குது. ஆனா... அப்பா, அம்மா முழு பலமா இருந்ததால, பரதத்தை விடாம பிடிச்சுக்கிட்டேன். கூடவே ஸ்போர்ட்ஸ், பாப், கிடார்னு கலக்கினேன். தங்கை ப்ரீத்தாவும் நானும் தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் போய் நடன நிகழ்ச்சிகள் செய்தாலும், டான்ஸை தொழிலா எடுக்கற தைரியம் அப்போ எனக்கு இல்லை.

சவால்களை உடைத்த சலங்கை!

அமெரிக்க வாழ் தமிழருக்கு மணம் முடிச்சாங்க. அமெரிக்காவுல தியேட்டர் அண்ட் டெலிவிஷன் தொடர்பான எம்.ஏ. படிப்பை முடிச்சேன். கூடவே நடன நிகழ்ச்சி கள், நடன வகுப்புகள்னு செய்துட்டிருந்தேன். இந்தச் சூழல்ல... 81-ல திருமணம் 'பிரேக் அப்’ ஆயிருச்சு. அந்த அழுத்தத்தில் இருந்து வெளியில வர்றதுக்காக, நியூயார்க் போன நான், சேனல் 'டாக் ஷோ’ பண்ணினேன். டைரக்டர், புரொட்யூசர், ஹோஸ்ட், அட்வர்டைஸ்மென்ட் ஏரியானு பல பொறுப்புகளை ஏத்துகிட்டேன். வேலை பளுவால நடனத்தையே மறந்திருந்தேன்.

இதுக்கு நடுவுல... ரெண்டாவது கணவர் வந்தார். பெரிய பிசினஸ்மேன்... பத்து வருஷ சந்தோஷ வாழ்க்கை, திடீர்னு தள்ளாட ஆரம்பிச்சுடுச்சு. நல்ல பேரோடயும் புகழோடயும் நான் நடத்திட்டு இருந்த நிகழ்ச்சிகள்... என் ரெண்டாவது கணவருக்கு பிடிக்காம போனது துரதிர்ஷ்டம். இந்த திருமண வாழ்க்கையும் முறிஞ்சு... ரெண்டரை வயசுப் பெண் குழந்தை, மூணு மாத ஆண் குழந்தைனு கையில் வெச்சுட்டு நின்னப்போ, 'அடுத்த என்ன?'னு புரியல.

அமெரிக்காவுல பசங்க சந்தோஷமா வளர்வாங்கனு தோணல. இந்தியாவில் என் தங்கை, தம்பி குழந்தைகளோட சந்தோஷமா வளர்வாங்கனு தோணுச்சு. 'அம்மாவா... தொழிலா?'னு ரெண்டு பாதை என் முன்ன விரிஞ்சுது. குழந்தைகள்தான் உலகம்னு முடிவெடுத்து, இந்தியா வந்த நான், அதுல உறுதியா இருந்தேன்'' என்று வார்த்தைகளுக்குக் கண்களால் அழுத்தம் கொடுத்த அனிதா, தொடர்ந்தார்.

''நிறையபேர், 'அவளுக்கு என்ன..? நிறைய பணம் இருக்கு, பார்த்துக்க ஆள் இருக்கு’னு பேசினாங்க. ஆனா, ஒரு சிங்கிள் பேரன்ட்டா என்னோட துயரம் எனக்கு மட்டும்தான் தெரியும். கணவனைப் பிரியற முக்கால்வாசி இந்தியப் பெண்களுக்கு, புகுந்த வீட்டுக்குக் குறையாமதான் இருக்கும் பிறந்த வீட்டு அழுத்தமும். ஆனா, என் அப்பாவும் அம்மாவும் எனக்கு பெரிய உறுதுணையா இருந்து, 'குழந்தைகளை நாங்க பார்த்துக்கிறோம்... நீ அடுத்த ஸ்டெப்பை பத்தி யோசி’னு தைரியம் கொடுத்தாங்க.

இதுக்குப் பிறகு, நா.முத்துசாமியோட கூத்துப்பட்டறையில களரி கத்துக்கிட்டேன். அப்படியே தமிழ்ச் சங்கம் மூலமா சின்ன சின்ன புரஜெக்ட்டுகள். இடையில் நடனத் துறையில் இருக்கிற சுமார் ரெண்டாயிரம் பேரோட விலாசம், தொடர்பு எண்களை 'நர்த்தகி’னு புத்தகமா தொகுத்தேன். 'நர்த்திகி.காம்’னு வெப்சைட் ஆரம்பிச்சு, விமர்சனம், நேர்காணல்கள், நிகழ்ச்சி நிரல்கள்னு வடிவமைச்சேன்.

சவால்களை உடைத்த சலங்கை!

93-ல இருந்து வருஷா வருஷம் தமிழ்நாடு அளவுல டான்ஸ் ஃபெஸ்டிவல்ஸை நடத்துற பொறுப்பை ஏத்துகிட்டு நடத்திக் காட்டினேன். இதன் மூலமா டான்ஸ் டிராமா, சீஸன்ல சபாக்கள்ல ஆடுறதுனு என் கிராஃப் மேல போக ஆரம்பிச்சுது. அப்புறம் 'அரங்கம்’னு நடனத்துக்கான ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சு, இப்போ வரை நடத்தறேன். 2010-ல மதர் தெரஸா யுனிவர்ஸிட்டில 'உமன் ஸ்டடீஸ்’ல டாக்டர் பட்டம் வாங்கினேன். பள்ளி, கல்லூரிகளில், பெண்கள் அமைப்புகளில் பேசுவது, பேட்டி எடுப்பது, நடன நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதுனு நேரம் போதாம ஓடின காலகட்டமிது.

என்னோட வாழ்க்கை ரொம்ப டிஸிப்ளின்ட். இரவில் வெளியில எங்கயும் போகமாட்டேன். ஆறரை மணிக்கு மேல் எதுவும் சாப்பிட மாட்டேன். எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சு, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுனு நான் ரொம்ப டிரெடிஷனல்.

என்னோட நிகழ்ச்சிகளில் நடனம் மட்டுமில்ல, அதுக்கான லைட்டிங், சவுண்ட், காஸ்ட்யூம், ஸ்க்ரீன் டிசைன், செட் டிசைன்னு அத்தனை விஷயத்திலும் கிரியேட்டிவ்வா இருப்பேன்.

மித்தாலஜி துறையில் பிஹெச்.டி பண்ணணும், சுயசரிதை எழுதணும்ங்கிற ஆசைகள் இருக்கு. நடன நிகழ்ச்சிகளுக்கு நான் பயன்படுத்தின ஆடைகளோட உருவாக்கத்தில் உள்ள கற்பனையைப் பற்றி மட்டுமே ஒரு புக் எழுதுற திட்டமும் இருக்கு. இன்னும் 50 வருஷம் எனக்குக் கொடுத்தா... இதைஎல்லாம் நிறைவேத்திடுவேன்'' என்று பெருமூச்சுவிடும் அனிதா,

''குழந்தைகளை ஆளாக்க பட்ட கஷ்டங்களை அவங்க ரொம்பவே உணர்ந்து நடந்துக்கிட்டாங்க. இப்போ என் மகள் ஒரு நாவலிஸ்ட், ரைட்டர். மகன் சினிமாவில் அசிஸ் டென்ட் சினிமாட்டோ கிராஃபர். ரெண்டு பேருமே கிரியேட்டிவ் ஃபீல்டில் இறங்கறதா முடிவெடுத்தப்போ, 'இது வொண்டர்ஃபுல். ஆனா, ஸ்ட்ரெஸ் ஜாஸ்தி. ஒரு பாராட்டுக்குப் பின்ன நிறைய முயற்சி, அழுகை, கோபம், சோகம் எல்லாம் இருக்கும். எல்லாத்தையும் கடந்து வரணும்...’னு சொல்லியிருக்கேன்.

சிங்கிள் பேரன்ட்டா இருந்து குழந்தைகளை வளர்க்கிற பெண்களுக்குச் சொல்ல, சில வார்த்தைகள் என் அனுபவத்தில் இருக்கு. 'என்ன பேசுவாங்களோ...’னு இந்த உலகத்தைப் பத்தி டோன்ட் கேர். தையலா, சமையலா, எழுத்தா, இசையா... உங்ககிட்ட இருக்கிற திறமையைக் கண்டு பிடிச்சு, அதை தொழிலா மாத்துங்க. சுயஉதவிக் குழுக்கள், சட்டம், பெண்கள் அமைப்புகள்னு உங்களுக்கு பற்றுக் கொடிகள் நிறைய இருக்கு. ஏன், பலருக்கு நானே பற்றுக்கொடியா இருக்கேன். சிவகாசியில் கணவரைப் பிரிந்து குழந்தைகளை வளர்க்கும் தாய் அவங்க. அவ்ளோ ருசியா எள்ளுருண்டை பண்ணுவாங்க. டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் அதை விற்றுக்கொடுக்கறதா அவங்களுக்கு உறுதி கொடுத்திருக்கேன்'' என்று சொல்லுபோதே தன் ஆளுமையைப் புரிய வைக்கும் அனிதா,

''பெண்களோட தலையில தடியெடுத்து அடிக்கறதுக்கு சமூகம் எப்பவும் தயாரா இருக்கும். தைரியத்தால் அதை தகர்த்து தலையெடுக்கிறது நம்ம கையில்தான் இருக்கு!'' என்றார் கட்டை விரலை உயர்த்தி!

சவால்களை உடைத்த சலங்கை!

அப்போ... இப்போ!

''50 வருஷத்துக்கு முன்ன நடனம் என்பது, எல்லாருக்கும் கிடைக்கக் கூடியதா இல்லை. இப்போ மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டைனு தேடி வர அவசியம் இல்லாதபடி எல்லா தெருவிலேயும் டான்ஸ் ஸ்கூல்கள் இருக்கு. அதில் பிரச்னையும் உண்டு. பணம் இருந்தா மேடையை விலைக்கு வாங்கி, திறமைசாலிகளை, அமெச்சூர்கள் ஓவர்டேக் செய்துடுறாங்க.

இப்போ இல்ல... அப்பவும் நடனம் கொஞ்சம் காஸ்ட்லி கலைதான். அந்த ஆடைக்கே நிறைய செலவு பண்ணணும். அப்போ குருதட்சணை 250 ரூபாய், இப்போ குறைந்தது 10,000 ரூபாய். அப்போ குருகிட்ட கத்துக்கிட்ட கலையை வைத்து யாரும் பிசினஸ் பண்ணல. இப்போ அதுதான் நடக்குது. யு.கே, அமெரிக்கா, இந்தியாவில் எல்லாம் 100 குழந்தைங்களுக்கு பரதம் சொல்லிக் கொடுத்தா, அது பெரிய பிஸினஸ். ஆனா, பரதத்தை இப்ப எல்லாம் யாரும் ஒரு கட்டத்துக்கு அப்புறம் தொடர்றது இல்லை என்பது என் வருத்தம்.''