ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

மேடையில் பேசிடும் மெல்லிய புயல்கள்!

பேச்சு கட்டுரை : பொன்.விமலாபடங்கள் : சொ.பாலசுப்ரமணியன், க.தனசேகரன், ப.சரவணகுமார், அபிநயா.கு, வி.சதீஸ்குமார்  

##~##

 ட்டிமன்றங்கள்... பலவற்றையும் போல, ஆண்களுக்கே தாரைவார்க்கப்பட்ட விஷயங்களில் ஒன்றாகத்தான் இருந்தன. தற்போது சரிக்கு சரி எனும் அளவுக்கு பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது மேடைகளில். 'இலக்கிய உயரமா, கலக்கல் சினிமா பாடல்கள் வேண்டுமா, கிண்டல் - கேலி என கலாய்க்க வேண்டுமா... ' என்றபடி ஆண்களுக்கு இணையாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்! அதைப் பற்றி இங்கே பகிர்கிறார்கள் பெண் பேச்சாளர்கள் சிலர்...

காதல் பிரித்தது... பேச்சு சேர்த்தது!

சுமதிஸ்ரீ

''பெண் பேச்சாளர்கள் என்றாலே முரட்டு சுபாவத்துடன் இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால், 'சுமதி எப்பவும் சிரிச்சுட்டே இருக்கும்’ என்பதே என் அடையாளம். இறுகிய முகம், இறுக்கிக் கட்டிய பட்டுப்புடவை போன்ற பெண் பேச்சாளர்களின் முத்திரைகளை எல்லாம் உடைக்கத்தான், என் உடை, சிரிப்பு... எல்லாமே. ஆனால், நாகரிகம் கெடாத வகையில் தனித்துவம் காட்டுகிறேன்.

மேடையில் பேசிடும் மெல்லிய புயல்கள்!

பள்ளி, கல்லூரி நாட்களிலேயே பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் என்று மேடை ஏறினேன். கல்லூரி முடிக்கும்போதே காதல் திருமணம். இரண்டு பக்கமும் பயங்கர எதிர்ப்பு. இழந்த சொந்தங்களை அன்பால் ஈடு செய்தார் கணவர். என் பட்டிமன்ற பேச்சுகளும், பெரும் துணையாக வந்தன. ஒன்பது மாத கர்ப்பிணி, குழந்தை பிறந்து இரண்டு மாதத்தில் என்றெல்லாம் மேடையேறியிருக்கிறேன். வீட்டில் பெரியவர்கள் யாரும் ஆதரவுக்கு இல்லாததால், குழந்தையைப் பார்வையாளர்கள் வரிசையில் கொடுத்துவிட்டு, நான் பேசிய மேடைகள் என்றும் மறக்க முடியாதவை. சமீபத்தில்தான், என் மாமியார் குடும்பம் என்னை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டார்கள். அதற்கு, அவர்களை ரசிக்க வைத்த என் மேடைப் பேச்சுகளும் ஒரு காரணம்.

ஒரு மேடையில், 'மீன் கடலை விட்டு வெளியே வந்தால் இறந்துவிடும், இங்கோ மீனவன் கடலுக்குப் போனால் இறந்துவிடுவான்’ என்று நம் தமிழக மீனவர் பிரச்னையை நான் தொட்டுக்காட்டி பேசியபோது, பலத்த கரவொலி. இப்படி ஒவ்வொரு கரவொலிக்குப் பின்னும் நம் திறமை பளிச்சிடும்.''

குடும்பத்தைக் காப்பாற்றும் மேடை!

சுந்தரவள்ளி

''மதுரைக்காரப் பெண் நான். இப்போது சென்னையில் இருக்கிறேன். பொதுவாகவே மிகவும் அமைதியான பெண். ஆனால், இந்த இயல்பை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் எனக்கு வந்தது. ப்ளஸ் டூ படித்தபோது, எதிர்பாராதவிதமாக அப்பா இறந்துவிட்டார். உறவுகள் விலக

மேடையில் பேசிடும் மெல்லிய புயல்கள்!

ஆரம்பிக்க, உதவியற்று நின்றோம். அப்போதுதான், குடும்பத்தைத் தூக்கி நிறுத்த, ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் துறுதுறு பெண் ஆனேன்.

எங்கள் கல்லூரியில் கு.ஞானசம்பந்தன் ஐயா தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. அதில் கலந்துகொள்ள வேண்டிய ஒருவர் திடீரென வராமல் போக, 12 மணி பட்டிமன்றத்துக்கு, 11 மணிக்கு என்னை அழைத்து, 'நீதான் பேசப் போற...’ என்றார்கள். அன்று நான் வாங்கிய கைதட்டல், மேடையை எனக்கு சிநேகமாக்கியது. அன்று ஆரம்பித்தவள், இதோ என் 37-வது வயதிலும் தொடர்கிறேன்.

மேடைகளில் பெண் பேச்சாளர்களுக்கு கைதட்டல்கள் கிடைக்கலாம். ஆனால், மேடைக்கு கீழே எங்களின் நிலை பரிதாபம். ஏதோ ஒரு ஊருக்கு நிகழ்ச்சிக்குச் செல்லும்போது, அங்கு யாரோ ஒருவரின் வீட்டில் உடை மாற்றிக் கிளம்ப வேண்டும். பெரும்பாலும் இரவு 11, 12 மணிக்குதான் பட்டிமன்றங்கள் முடியும். அதன் பின் அந்த ஊர் பேருந்து நிலையத்தில் ஒற்றை ஆளாக காத்திருந்த பொழுதுகள் ஏராளம். இன்று நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. சில நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், காரில் வழி அனுப்பி வைக்கிறார்கள்.''

பறிபோகும் இலக்கிய சிம்மாசனம்!

சங்கீதா

''என் காதல் கணவரும் பேச்சாளர். அதனால் ஒருவருக்கு ஒருவர் சரியாக விமர்சனம் செய்துகொள்வோம். கருத்துக்கள் நிறைந்த களமான பட்டிமன்றத்தை, இன்று ஊடகங்கள் வெறும்

மேடையில் பேசிடும் மெல்லிய புயல்கள்!

நகைச்சுவை களமாகவே மாற்றி வருகின்றன. சேனல்களின் இஷ்டப்படி நடக்கும் பட்டிமன்றங்களில், இலக்கியங்கள் பேசுவது குறைந்துவிட்டது.

நான்கு ஜோக், நான்கு பாட்டு தெரிந்தால் பட்டிமன்ற பேச்சாளராகிவிடலாம் என்பது சரியல்ல. இதில் எனக்கு நான் சில நெறிகளை வகுத்துள்ளேன். அரைத்த மாவையே அரைப்பது போல, எல்லா மேடைகளிலும் ஒரே பேச்சை பேசக்கூடாது. 'போலச் செய்தல்’ என்பது கூடவே கூடாது. பிற பேச்சாளர்களைப் போல காப்பி அடித்துப் பேசினால், நாம் நிலைத்து நிற்க முடியாது. நம் பேச்சு பார்வையாளர்களை சிரிக்கவைக்க வேண்டும், ஏதாவது ஒரு கருத்தை சிந்திக்கவைக்க வேண்டும், அவர்களுக்குப் புதிதாக ஏதாவது ஒரு தகவல் தெரிவிப்பதாக இருக்க வேண்டும், சமூகத்துக்கான செய்தி ஒன்றையாவது கடத்த வேண்டும்.

தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் எனக்கு, சினிமா, இணையம் என்று சரணடைந்திருக்கும் இளைய சமுதாயம் மேடைப்பேச்சில் பங்குகொள்வது மட்டுமல்ல, ரசிப்பதிலும் வெகுதொலைவில் இருப்பது வருத்தம். எழுத்தாளர்களின் எண்ணங்கள் பதிவு செய்யப்படுவதுபோல, பேச்சுக்கும் எழுத்துப் பதிவு இருந்தால், அடுத்த தலைமுறைக்கும் கடத்தலாமே என்பது என் யோசனை.''

முதுகுக்குப் பின்னே... இரண்டடி முன்னே!

ரேணுகா

''இப்போது மதுரையில் ஓர் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் நான், மூன்றாம் வகுப்புப் படிக்கும்போதே திருப்பாவை, திருவெம்பாவையெல்லாம் பாடுவேன். பக்தி இலக்கியங்கள்

மேடையில் பேசிடும் மெல்லிய புயல்கள்!

மேல்தான் ஆரம்பத்தில் பிரியம். அதுவே இசைப் பட்டிமன்றம், இலக்கியப் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சுழலும் சொல்லரங்கம் என்று பயணிக்க வைத்தது. தவிர, மீனாட்சி திருக்கல்யாணம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிகள் என்று நேரடி நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகளிலும் தொகுத்து வழங்குகிறேன்.

பெண் பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு சங்கடங்களும் உண்டு. நம் முதுகுக்குப் பின்னால் ஆயிரம் பேசுவார்கள். அதைப்பற்றி எல்லாம் துளியும் கவலைப்பட மாட்டேன். எனக்குப் பயந்து முதுகுக்கு பின்னால் பேசும்போது, நான் அவர்களைவிட இரண்டு அடி முன்னால் இருக்கிறேன் என்றே பெருமைப்படுவேன்.

ஒரு முறை இறையன்பு, ஐ.ஏ.எஸ் அவர்களின் தலைமையில் பட்டிமன்றம். நான் நடுவரைப் பார்த்து, 'அறிவில் ஆதவனாகத் திகழும் நடுவர் அவர்களே...’ என்றேன். உடனே அவர், 'நல்லவேளை... இரண்டையும் சேர்த்துச் சொல்லவில்லை!’ என்றார். அரங்கம் முழுக்க ஒரே சிரிப்பலை. அறிவில் ஆதவன்=அறிவில்லாதவன் என்று அங்கு நகைச்சுவை கொண்டு வந்தார் அவர்!''

கருத்தாக பேசும் கருத்தம்மா!

கௌசல்யா

''27 வயதாகும் மிஸ். பட்டிமன்றப் பேச்சாளர் நான். என்னை அனைவரும் 'கருத்தம்மா’ என்று செல்லமாக அழைப்பார்கள். நான் கருப்பாக இருப்பதால் அல்ல, பட்டிமன்றங்களில்கருத்தாகப்

மேடையில் பேசிடும் மெல்லிய புயல்கள்!

பேசுவதால் அந்தப் பெயர். மேடைப்பேச்சுக்காக கல்லூரிப் பேராசிரியர் பணியை விட்டு விட்டேன். இப்போது மாநிலக் கல்லூரியில் பிஹெச்.டி படித்துக் கொண்டிருக்கிறேன். 'ரெயின்போ எஃப்.எம்.’ வானொலியிலும் நிகழ்ச்சிகள் செய்துகொண்டிருக்கிறேன்.

சின்ன வயதில் நான் வாயாடுவதைப் பார்த்து, 'நீ வக்கீலாதான் ஆகப்போற...’ என்றார்கள். ஆனால், கலைஞர் முதல்வராக இருந்தபோது அவர் கையால் பரிசு வாங்கும் அளவுக்கு மேடைப்பேச்சில் முன்னேறினேன். சிங்கப்பூர், ஜப்பான் என்று வெளிநாடுகளுக்கும் சென்று பேசும் அளவுக்கு ஊக்கம் கொடுத்து வளர்த்துவிட்ட என் அப்பா, ஆட்டோ டிரைவர். அவருக்கு உடல்நிலை சரியில்லாத இந்த சூழலில், என் பட்டிமன்ற வாய்ப்புகள்தான் எங்கள் குடும்பத்தை தாங்குகின்றன. ஆனாலும், பட்டிமன்றங்களில் சன்மானம் குறைவாகவே கிடைக்கிறது.

ஒரு பட்டிமன்றத்துக்குக் தயாராக நாங்கள் செலவிடும் நேரம் அதிகம். திடீரென்று அழைப்பு வரும், வெளியூர்களுக்குச் செல்ல வேண்டியது இருக்கும். ரயிலில் நிற்கக்கூட இடமில்லாமல், நான்கைந்து மணி நேரம் நெரிசலில் பயணம் செய்த அனுபவமும் உண்டு. எல்லா சங்கடங்களை யும் கிடைக்கும் கைதட்டலில் கரைக்கப் பழகிக் கொண்டேன்!''