ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

காற்றே... காற்றே... நீ வைக்கம் காற்றே!

இசை கட்டுரை : பொன்.விமலா; படங்கள் : வீ.சக்தி அருணகிரி

காற்றே... காற்றே... நீ வைக்கம் காற்றே!

'காற்றே காற்றே நீ... மூங்கில் துளைகளில் கீதம் இசைப்பதென்ன...’ பாடலுக்கு மயங்கிய மனங்களே... அந்த தேன் குரலுக்குச் சொந்தக்காரர் இவர்தான்... 'வைக்கம்’ விஜயலஷ்மி!

மலையாளத்தில் வெளியான 'செல்லுலாய்டு’ திரைப்படத்தில் ஹிட் ஆகி, இப்போது பலரின் செல்போன் காலர் டியூனாக இருக்கும் 'காட்டே காட்டே...’ பாடலைப் பாடிய அவர், தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 'ஜெ.சி.டேனியல்’ என்ற திரைப்படத்தில் ஜெயச்சந்திரன் இசையில் பழநிபாரதி வரிகளில் 'காற்றே காற்றே நீ...’ என்று தமிழ் மனங்களையும் வருடினார். பிறவியிலேயே பார்வையில்லாத இந்த மாற்றுத்திறனாளி, தன்னம்பிக்கையில் வளர்ந்தவர்!

##~##

இடைமறிக்க மனமில்லாமல் கேட்டோம் அவர் குரலை...

''கேரளாவில் இருக்கிற 'வைக்கம்’தான் சொந்த ஊர். அதனாலதான் என்னை 'வைக்கம்’ விஜயலஷ்மினு கூப்பிடறாங்க. அப்பாவும் அம்மாவும் நல்லா பாடுவாங்க. அதைக் கேட்டுக் கேட்டே எனக்கும் இசை மேல பிரியம். என்னோட மானசீக குரு... ஜேசுதாஸ் சார். துளசி டீச்சர், பிரசன்னா டீச்சர், மாவேலிக்கரா பொன்னம்மாள் டீச்சர்னு நிறைய பேர்கிட்ட இசை கத்துக்கிட்டேன். 5 வயசுல ஆரம்பிச்சு, 27 வருஷமா கச்சேரி பண்ணிட்டு இருக்கேன். எம்.எஸ்.சுப்புலஷ்மி, பாலமுரளி கிருஷ்ணா இவங்கள்லாம் எனக்கு உந்துசக்தி...''

- அழகாகத் தமிழ் பேசுகிறார் சேச்சி.

''கர்னாடக இசைப் பாடல்கள், பக்திப் பாடல்கள், ஹிந்துஸ்தானி, மராத்திய இசையோடு சினிமாப் பாடல்களும் பாடிட்டு இருக்கேன். இதுவரைக்கும் மலையாளம் மற்றும் தமிழ்ல எட்டு படங்களில் பாடியிருக்கேன். இமான் சார் இசையில் 'என்னமோ ஏதோ’ படத்தில் 'புதிய உலகை’ பாடல், 'குக்கூ’ படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் 'கோடையிலே மழை போல என்னுயிரே நீ இருக்க...’ பாடல்னு என் குரல் உங்களை சந்திச்சுட்டே இருக்கும். பாடல் வரிகளைப் படிச்சு என்னால பாட முடியாது. அதனால, வேற யாராவது பாடி, கேசட்ல பதிஞ்சு கொடுத்துடுவாங்க. அதைக் கேட்டு, மனப்பாடம் செய்த பிறகு, கம்போஸிங்ல பாடுவேன்...''

- விழிகள் மூடி, நம் விழிகளை விரிய வைக்கிறார் ஆச்சர்யத்தில்!

காற்றே... காற்றே... நீ வைக்கம் காற்றே!

''பாடுறது மட்டும் இல்ல... இசையமைக்கணும்ங்கிறதும் என் பெரிய ஆசை. அப்பாகிட்ட சொன்னப்போ, எனக்காகவே பிரத்யேகமா ஒரு கம்பியால் ஆன வீணையை செஞ்சு கொடுத்தார். அதில்தான் கோத்து வெச்சுருக்கேன் என் மெட்டுகளையும், கனவுகளையும். 'இசையமைப்பாளர் விஜயலஷ்மி', நிச்சயம் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வருவா. மிருதங்கம், தவில், கடம்

காற்றே... காற்றே... நீ வைக்கம் காற்றே!

இதெல்லாம்கூட வாசிப்பேன். குட்டிப் பசங்க வாயில வெச்சு ஊதுற 'பீப்பீ’யை கூட மெல்லிசையா வாசிப்பேன்'' என்று மென்குரலில் சொன்னவர்,

''இப்போ எனக்கு 32 வயசாகுது. பிறவிக்குறைபாட்டோட பிறந்த என்னை இவ்வளவு தூரம் அழைச்சுட்டு வந்த, தளராம தாங்கி ஊக்கம் கொடுத்த என் அப்பா, அம்மாவுக்கு என்னோட ஒவ்வொரு வெற்றியும், பாராட்டுகளும் சமர்ப்பணம். சங்கீத கலாநிதி, சங்கீத வசந்தம், யுவகலா ரத்தினம், ரத்ன மாலிகானு நிறைய விருதுகள் வாங்கியிருக்கேன். பி.ஏ., ஹிஸ்டரி முடிச்சுருக்கற நான், தொலைதூரக் கல்வி முறை மூலமா எம்.ஏ., மியூசிக் படிச்சுட்டு இருக்கேன். இசையோட சேர்த்து இன்னொரு இலக்கும் உண்டு எனக்கு. என்னை மாதிரி இருக்கிறவங்களுக்கு முன்னுதாரணமா இருக்கணும்!''

- ஒற்றை கம்பி வீணை மீட்டிக் காட்டுகிறார் விஜயலஷ்மி!