ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

கணவனைக் காப்பாற்றினேன்... கைத்தொழிலை கைப்பற்றினேன்!

அஜந்தா சொல்லும் வெற்றி ரகசியம்சுயதொழில் கட்டுரை : வே.கிருஷ்ணவேணி, படம் : ஆ.முத்துக்குமார்

##~##

 ''நமக்கு அமையும் தொழில்... நம்முடைய லட்சியத்தின்படி இருக்கலாம், அதிர்ஷ்டத்தின்படி இருக்கலாம்... அல்லது எதிர்பாராமல் கைகூடினதாகவும் இருக்கலாம். எனக்கு கைகூடினது... மூன்றாவது ரகம்!'' என்று எடுத்ததுமே எதிர்பார்ப்பைக் கூட்டி ஆரம்பித்தார், சென்னை, பாரிமுனை பகுதியில் வசிக்கும் அஜந்தா.

''என் கணவருக்கு ஹார்ட் அட்டாக் வந்த சமயம். குடும்பமே பதறிப்போயிருந்தோம். அப்போ கங்கையம்மன் ஊர்வலம் எங்க வாசல் வழியா போச்சு. 'ஆத்தா தாயே... என் வீட்டுக்காரரை சுகமாக்கிக் கொடு. அடுத்த முறை நீ எங்க வாசல் வழியா வர்றப்போ, நானே என் கையால உனக்கு அலங்காரப் பொருட்கள் செஞ்சு சாத்தறேன்!’னு வேண்டிக்கிட்டேன். அம்மன் அருளால என் வீட்டுக்காரருக்கு குணமாச்சு. இதுதான் நான் கிராஃப்ட் செய்றதுக்கான ஆரம்பப் புள்ளி விழுந்த இடம்...''

- 15 ஆண்டுகளாக கைவினைப் பொருட்கள் தொழில் செய்துவரும் அஜந்தா, இப்படி சொல்லி, எதிர்பார்ப்பை மேலும் கூட்டிவிட்டு, தொழில் அனுபவங்களைத் தொடர்ந்தார்.

''வேண்டிகிட்டபடியே ஜடை, மாலை, நகைகள்னு என் கையால செஞ்சு அம்மனுக்கு சாத்தினேன். அதிலிருந்தே ஏதாவது மனக்கஷ்டமா இருந்தா, சுவாமி சிலைகளுக்கு ஏற்ற மாதிரியான மாலைகள், ஆடை அலங்காரம், ஜடை மாட்டினு செய்ய ஆரம்பிக்க, மனசு நிம்மதியாகும். என் தோழி விஜிகிட்ட.... 'ஏதாச்சும் தொழில் செய்யறதுக்கு நமக்கு வழி கிடைக்கலையே'னு அப்பப்ப புலம்புறதுண்டு. இந்த நிலையில, சாமிக்காக நான் செய்யற பொருட்களைப் பார்த்துட்டு, 'உன் கைத்திறனையே ஒரு தொழிலா மாத்த வேண்டியதுதானே!’னு 'பளிச்’ பாதை காட்டினா, விஜி. அதுக்குப் பிறகுதான் ஜுவல்லரி, சாமி மாலை, ஜடை, கிஃப்ட் பவுச், பேங்கிள்ஸ், பேங்கிள் பவுச், கோல்டன் ட்ரீஸ், சாட்டின் மாலை, ஆரத்தி தட்டுனு பலவிதமான கிராஃப்ட் வேலைப்பாடுகளை செய்து, ஃபேன்ஸி ஸ்டோர்களில் விற்பனைக்காகக் கொடுத்துட்டு இருக்கேன். தவிர, ஒரு தனியார் பள்ளியில சனிக்கிழமைகளில் மட்டும் 4, 5-ம் வகுப்பு குழந்தைகளுக்கு எம்ப்ராய்டரி கிளாஸ் எடுக்கிறேன். ஆதரவற்ற குழந்தைகளுக்கு அப்பப்போ இலவச வகுப்புகளும் எடுக்கிறேன். பொதுவா, பள்ளத்துல இருந்து ஏறி வர்றவனுக்குதான் மேட்டோட உயரம் புரியும். அந்த மாதிரி, இந்த வெற்றி எனக்கு சிறு வயதுக் கனவு!'' என்றவர்,

கணவனைக் காப்பாற்றினேன்... கைத்தொழிலை கைப்பற்றினேன்!

''எங்க வீட்டுல என்னோட சேர்த்து பத்து பேர். ஒவ்வொருவரையும் தனித்தனியா கவனிக்க முடியாத சூழ்நிலை பெத்தவங்களுக்கு. எனக்கு 11 வயதானப்போ, அம்மா இறந்துட்டாங்க. பாய் வியாபாரம் செய்து, அப்பாதான் எங்களைப் பார்த்துக் கிட்டார். குடும்ப சூழல் புரிஞ்சு நான் ப்ளஸ் டூ படிச்சு முடிச்ச கையோட, தனி யார் பள்ளியில வேலைக்குச் சேர்ந்தேன். நாலு வருஷம் வேலை, வீடுனு ஓடுச்சு. நல்ல இடத்துல திருமணம் முடிஞ்சது. அயனாவரத்துலதான் புகுந்த வீடு. அன்பான கணவர் முரளி, 'நீ இவ்வளவு நாள் கஷ்டப்பட்டது போதும்’னு ஆதரவா இருந்தார். குழந்தை திவ்யாவோட விளையாட்டு, சமையல், வீட்டு வேலைனு போயிட்டு இருந்தது வாழ்க்கை. அவ ஸ்கூலுக்குப் போனதுக்கு பிறகு, வீடே வெறிச்சோடிப் போய் கிடக்கும். அந்த நேரத்தைதான் கிராஃப்ட்டுக்காக கொடுத்தேன்.

இப்போ மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. கை செலவுக்கெல்லாம் கணவரை எதிர்பார்க்க தேவை இல்லாம, சுயதொழிலால நானே வருமானம் பார்க்குறதுல இரட்டிப்பு சந்தோஷம். சின்ன சேமிப்பையே முதலீடா போட்டா போதும். கைத்திறன் இருந்தா, மாதம் 15 ஆயிரம் சுலபமா லாபம் பார்க்கலாம். முதல்ல, அக்கம்பக்கம், நட்பு வட்டத்துக்கு நீங்க செய்யும் பொருட்களை சாம்பிளா கொடுத்து பயன்படுத்தச் சொல்லுங்க. அப்புறம் அவங்களே உங்களுக்கு ஆர்டர் கொடுக்கறதோட, தெரிஞ்சவங்களுக்கும் அறிமுகப்படுத்தி வைப்பாங்க. வெற்றி தன்னால வந்து சேரும்!'' என்று நம்பிக்கை கொடுக்கிறார், 46 வயதாகும் அஜந்தா.