ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

''நாங்களும் சாதிப்போம்ல..!''

அணிவகுக்கும் ஆச்சர்ய மங்கைகள்கட்டுரை : சா.வடிவரசு, பொன்.விமலா, உ.சிவராமன்படங்கள் : சொ.பாலசுப்ரமணியன், தே.தீட்ஷித், ஜெ.பிரதீப் ஸ்டீபன்ராஜ் சாதனை

##~##

பாரம்பரியத் தொழில்களில் இருந்து நவீன வேலைகள் வரை, இன்று 'ஆண்களுக்கு மட்டும்’ என்றும் எதுவும் இல்லை. எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்குச் சமமாக, சமயங்களில் ஆண்களைவிட அற்புதமாக அசத்தி வருகிறார்கள் பெண்கள். அப்படி சிலர் பேசுகிறார்கள் இங்கு..!

''பறக்க ஆசைப்பட்டேன், பறக்கிறேன்!''

''நைஸ் மீட்டிங் யூ!''

- சென்னையில் உள்ள 'ஓரியன்ட் ஃபிளைட் ஸ்கூல்’ வளாகத்தில் ஃப்ரெஷ்ஷாகப் பேசுகிறார், கேப்டன் கரம்ஜீத் கோர்.

''டெல்லியில், மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த பெண் நான். சின்ன வயதில் பைலைட் கனவு, ஆசையெல்லாம் எதுவும் கிடையாது. 'மாதா சுந்தரி’ கல்லூரியில பி.ஏ., ஹிந்தி படித்தேன். கல்லூரி என்.சி.சி-யில் சேர்ந்தபோது, ஒரு நாள் விமான நிலையத்துக்கு அழைத்துக் கொண்டு போய், சில பயிற்சிகள் கொடுத்தனர். அப்போது என் கண்முன்பாக பறந்துபோன ஒவ்வொரு விமானத்தையும் ஆச்சர்யமாக, அதிசயமாகப் பார்த்து ரசித்தேன். 'நாமும் ஒருமுறை விமானத்தில் போக வேண்டும்’ என்கிற ஆசை அப்போது தொற்றிக்கொண்டது. 800 ரூபாய் கட்டணத்தில், டெல்லி டு சண்டிகர்... ஆசைக்காக விமானத்தில் பறந்தேன். விமானத்தைவிட்டு கீழே இறங்கிய பிறகு, என் ஆசை இன்னும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த நிமிடம்... 'பைலட் ஆகியே தீரவேண்டும்' என்று முடிவெடுத்தேன்.

அந்தக் காலகட்டத்தில் பெண் பைலட் என்பது, எட்டாவது அதிசயம். எங்க வீட்டில் எல்லோரும் தயங்கினாலும், 'முயற்சி பண்ணித்தான் பாரேன்...’னு அம்மா தட்டிக்கொடுத்தார். காலேஜ் படிப்பு முடிந்ததும், 89-ம் ஆண்டு பைலட் பயிற்சியில் சேர்ந்தேன். இன்னும் சில பெண்களும் வந்தனர். ஒவ்வொரு விஷயத்தையும் ஆசை ஆசையாகக் கற்றுக்கொண்டேன். மொத்தம் 250 மணி நேர பயிற்சி வகுப்பு முடிந்தபோது... ஒரு விமானியாக மாறியிருந்தேன். முதல் முறையாக பயிற்சியாளர் இல்லாமல் நானே பொறுப்பெடுத்து விமானம் ஓட்டிய அந்த நாள், இன்னமும் ஞாபகம் இருக்கிறது. சில வருடங்கள் விமானியாக வேலை பார்த்தேன். இடையில் உடல்நிலை காரணமாக இடைவெளி விட்டேன்.

''நாங்களும் சாதிப்போம்ல..!''

93-ல் திருமணம் நடந்தது. கணவரும் பைலட்! தொடர்ந்து குடும்பத் தலைவியாக இருந்து மகன், மகளை வளர்த்தெடுத்தேன். பிறகு, 2005-ம் ஆண்டு, புதுச்சேரியிலிருக்கும் 'ஓரியன்ட் ஃபிளைட் ஸ்கூல்’ பயிற்சியாளர் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கணவரும் பிள்ளைகளும் 'ஆல் த பெஸ்ட்’ சொல்லி அனுப்பினார்கள். விமானம் ஓட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கி நொடியில், தடைபட்டிருந்த என் கனவு, மீண்டும் உயிர்பெற்றது'' என்று உற்சாகமாகச் சொல்லும் கரம்ஜீத்,

''ஒரு விமானிக்கு உடல்நலம் மிக முக்கியம். 'ஸாரி’ என்ற வார்த்தையே எங்களுடைய கேரியரில் இருக்கக் கூடாது. ஏனென்றால்... பயணமும் பயணிகளும் எங்களுடைய பொறுப்பாயிற்றே..!''

- மிகமிகப் பொறுப்பு உணர்ச்சியுடன் சொல்கிறார்!

''ஆல் இண்டியா பெர்மிட் வாங்கி அசத்தப்போறேன்!''

''ந்தா... லாரியை நிப்பாட்டிட்டு வந்துடறேன்!'' என்று உற்சாகமாகிறார், திருச்சியைச் சேர்ந்த லாரி டிரைவர் சசிகலா.

''பக்கத்துல இருக்கற மண்டையூர்தான்... சொந்த ஊர். ஒண்ணரை வயசு இருக்கும்போதே எங்கப்பாவை வெட்டிக் கொன்னுட்டாங்க. ரெண்டு பொண்ணுங்கள வெச்சுகிட்டு எங்கம்மா இட்லி கடை போட்டுதான் பொழப்பு ஓட்டினாங்க. எனக்கு போலீஸ் ஆகணும்னு ஆசை. ஆனா, பத்தாவது ஃபெயிலானதால, முடியாம போச்சு. பொண்ணா இருந்தாலும் தில்லா ஏதாவது வேலை பார்க்கணும்னு நினைச்சேன்.

''நாங்களும் சாதிப்போம்ல..!''

டூ வீலர் ஓட்டத் தெரிஞ்ச நான், ஒரு டிரைவிங் ஸ்கூல்ல சேர்ந்து கார் ஓட்டக் கத்துக்கிட்டு, ஒரு பொலிரோ கார் வாங்கி சொந்தமா கால் டாக்ஸி போட்டு பழனி, கும்பகோணம்னு சவாரி போனேன். மக்களும் நம்பிக்கையோட குடும்பம் குடும்பமா சுற்றுலா வந்தாங்க. 35 வயசானப்போ, தைரியமா எறங்கி அடிக்கணும்னு முடிவு பண்ணி... ஹெவி மோட்டார் வெஹிகிள் (HMV) லைசென்ஸ் வாங்கி, லாரி வாங்கினேன். மூணு வருஷமாகுது... ஒரு டேங்கர் லாரி, ஒரு லோடு லாரினு எங்கிட்ட ரெண்டு லாரி இருக்கு. டேங்கர் லாரிக்கு டிரைவர் போட்டு ஓட்டுறேன். லோடு லாரிக்கு நானேதான் டிரைவர்!

தினமும் மார்க்கெட்டுல காய்கறி லோடு ஓட்டுறேன். டிராஃபிக், கூட்ட நெரிசல் எல்லாம் இருக்காதுங்கறதால, பெரும்பாலும் லாரியை மார்க்கெட்டுக்கு ராத்திரி நேரத்துலதான் ஓட்டுவோம். லாரியில கியர் போட்டு ஓட்டுறதைவிட, ஸ்டீரிங்கை சுத்திச் சுத்தி வண்டிய திருப்புறதுதான் சவாலா இருக்கும். லோடோடு இருக்கும்போது அப்படியே வண்டி சாயுற மாதிரி இருக்கும். அதைஎல்லாம் சமாளிச்சு ரொம்ப சமயோஜிதமா ஓட்டணும். நாம ஒழுங்கா ஓட்டினாலும், எதிர்ல தாறுமாறா வருவாங்க. அவங்களையும் சமாளிச்சு ஓட்டுறதால, இதுவரை நான் எந்த விபத்தையும் சந்திச்சதில்லை.

பொதுவா லாரி டிரைவர்னாலே இந்த சமூகத்துல நல்ல மரியாதை கிடையாது. அதுலயும் ஒரு பொண்ணு லாரி ஓட்டினா, ஏதோ சர்க்கஸ் மாதிரி பார்த்து சிரிக்கறாங்க. 'ஏம்மா, உனக்கு இந்த வேலை...’னு கேக்கறாங்க. அதேசமயம், பாராட்டுறவங்களும் இருக்காங்க. தமிழ்நாடு தொழில் முனைவோர் சங்கம், எனக்கு 'வீரப் பெண்மணி விருது’ கொடுத்திருக்காங்க'' என்று சொல்லும், சசிகலா, சட்டமன்ற தேர்தலில், திருச்சி-1 தொகுதியில் தே.மு.தி.க கட்சி சார்பாக போட்டியிட்டு, 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தவர் என்பது இன்னொரு ஆச்சர்ய செய்தி!

''இதுவரை உள்ளூரில் மட்டுமே டிரிப் அடிச்சிட்டு இருந்தேன். ஆல் இண்டியா பெர்மிட் வாங்கி, இனி கன்னியாகுமரியில இருந்து காஷ்மீர் வரை ஓட்டணும்!''

- சசிகலா விடைபெற்று டிரைவர் ஸீட்டில் அமர்ந்துகொள்ள, இண்டிகேட்டர் போட்டு லாகவமாக திரும்புகிறது அவரது செல்ல லாரி!

''எல்லார் வீட்டுலயும் என் போட்டோ!''

''பொதுவா, காதுகுத்தும் தொழில்ல ஒரு பொண்ணு இருக்கறது ஆச்சர்யம். அதுலயும் கைம்பொண்ணான என்னை கொண்டாடி, தங்களோட வீடுகளுக்கு காது குத்தறதுக்காக அழைக்கிற எங்க ஊர்க்காரங்களுக்கு நான் நன்றி சொல்லியே ஆகணும்!''

- உசிலம்பட்டி அருகே உள்ள செல்லாம்பட்டியில் உள்ள மண்டபத்தில், அப்போதுதான் ஒரு குழந்தைக்கு காது குத்திவிட்டு, தாம்பூலம் வாங்கி வந்திருந்தார் மகேஸ்வரி.

''நாங்களும் சாதிப்போம்ல..!''

''20 வருசமா காதுகுத்துற தொழில் பார்க்குறேன். எங்களோட குலத்தொழிலே இதுதான். என் அப்பா, வீட்டுக்காரர், மாமனார், மச்சான்னு எல்லோரும் இதுலதான். ஒரே நாள்ல ரெண்டு மூணு விசேஷம் வந்தா, என் வீட்டுக்காரரும் மாமனாரும் ஆளுக்கொரு வீடா போய் சமாளிப்பாங்க. மாமனார் இறந்தப்போ, வீட்டுக்காரருக்கு ஒத்தாசையா நானும் விசேஷங்களுக்குப் போய் காது குத்தற வேலை செய்ய ஆரம்பிச்சேன். முகூர்த்த மாசங்கள்ல வீட்டுக்காரரும் நானும் கால்ல சக்கரத்தைக் கட்டிட்டு ஓடுவோம். எல்லாம் எங்க ரெண்டு புள்ளைகளுக்காகத்தான். அப்பதான் எங்க வீட்டுல பெரிய அடி விழுந்துச்சு. என் பொண்ணோட கல்யாணம் முடிஞ்ச ரெண்டாவது நாள்... என் வீட்டுக்காரர் தவறிட்டாரு. கல்யாணத்துக்கு வந்தவங்களை வழியனுப்புறதுக்குள்ள, வீட்டுல இப்படியொரு இடி. உடைஞ்சே போயிட்டேன்.

வீட்டோட முடங்கிக் கிடந்த நான், அதுக்குப் பிறகு தொழிலை தொடரலாம்னு நினைச்சாலும்... 'காதுகுத்து விசேஷத்துல ஒரு விதவையா எப்படி போய் சடங்கு செய்றது?'னு தயக்கமா இருந்துச்சு. ஆனா, எங்க ஊரு சனங்க, 'எந்த சங்கடமும் இல்ல, நீ வந்து காதுகுத்தினாதான் சந்தோஷம்!’னு வீட்டுக்கு வந்து ஆறுதல் சொல்லி, அழைப்பு வெச்சுட்டுப் போனாங்க. நெஞ்சு நெகிழ்ந்து போயிட்டேன். மறுபடியும் பரபரனு காதுகுத்தக் கிளம்பிட்டேன்.

காதணி விழா வெச்சுருக்கறவங்க, ஒரு வாரத்துக்கு முன்னயே அரிசி, பழம், தாம்பூலம், பத்திரிகை, 500 ரூபாய் பணம் வெச்சு என்னை அழைப்பாங்க. வெளியூர்னா பயணச் செலவுக்கான காசையும் கொடுத்துடுவாங்க. பொதுவா காதுகுத்தும்போது, அந்த தினத்துல இருக்குற மூலங்களைப் பார்க்கணும்; தெற்கே மூலம்னு இருந்தா... கிழக்கு - மேற்கா குழந்தையை உட்கார வெச்சு காது குத்தணும். முதல்ல நரம்பு பார்த்து, அதுல படாத மாதிரி சந்தனத்தை குறியா தொட்டு வெச்சுக்கணும். செம்பு கம்பியில கம்மலை மாட்டி, சந்தனம் வெச்சுருக்குற இடத்துக்கு மையத்துல குத்தி, அப்படியே கம்மலை வெச்சு திருகாணியையும் மாட்டிடணும். காதுகுத்துன உடனே அந்த  இடத்துல ரெண்டு சொட்டு தண்ணிவிட்டா... புண்ணு வராம இருக்கறதோடு சலம் கட்டாம இருக்கும்.

விசேஷங்கள் தவிர, மூக்கு குத்த, சைடு காது குத்திக்கனு வீடு தேடி வந்து பொண்ணுங்க குத்திக்கிட்டுப் போவாங்க. சின்ன வயசுல காதுகுத்திக்காம விட்டுட்ட ஆம்

பளைங்க, கல்யாணத்துக்கு முன்ன எங்க வீட்டுக்கு வந்து குத்திட்டுப் போவாங்க. காதுகுத்துற தொழில், எல்லா மாசத்துலயும் இருக்காது. மத்த நேரங்கள்ல தையல் வேலை பார்ப்பேன்''

- என்று ஓயாத தன் ஓட்டம் சொல்லும் மகேஸ்வரியின் மகன், ஆட்டோ ஓட்டுகிறார்.

''ஒண்ணு சொல்லட்டா... இந்த ஊர்ல இருக்குற எல்லா வீடுகள்லயும் என்னோட போட்டோ இருக்கும்... அவங்களோட புள்ளைக்கு காது குத்துற மாதிரி!''

- குழந்தையாகச் சிரிக்கிறார் மகேஸ்வரி.