அலைபாயும் நெஞ்சினிலே..!  - 11

ஒரு பெண்ணையோ... பையனையோ காதலிப்பதற்கு முன், 'இவன்/இவள் எப்படியாவது நமக்குக் கிடைத்துவிட வேண்டும்' என்கிற ஆர்வத்தில், காதலிப்பவருக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுத்து இறங்கிப் போவோம். இதுவே காதல் 'ஓ.கே' ஆகிவிட்டால்... கொஞ்சம் கொஞ்சமாக நம் விருப்பங்களை, அவர் மீது திணிக்க ஆரம்பிப்போம். இன்னும் திருமணம் ஆகிவிட்டால், கேட்கவே தேவையில்லை. ஆசை கைகூடிவிட்ட தைரியத்தில், விருப்பங்களை பரஸ்பரம் திணிப்பதோடு, கட்டாயப்படுத்தவும் ஆரம்பித்துவிடுவோம்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரியான வயதில், சரியான தகுதிக்கு வந்த பிறகு காதலித்து திருமணம் செய்துகொள்ளாதவர்கள் மட்டுமல்ல, இவை அனைத்தும் சரியாக இருந்தும்... காதல் கசந்து, பிரிந்தவர்களும் இங்கே இருக்கிறார்கள்தானே! கார்த்திக் - கல்பனா ஜோடியின் காதல் கதையை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். சரியான வயது மற்றும் தகுதி வந்து காதல் கல்யாணம் செய்துகொண்ட இவர்களின் வாழ்விலும் விரிசல் வந்தது. அதற்குக் காரணம்... சரியான புரிதல் இல்லை என்பதுதான்.

காதலி, மனைவி ஆன பிறகு, 'இவள்... நம்மை விட்டு எங்கே போகப் போகிறாள்?' என்று கணவன் நினைக்க, இதையே மனைவியும் நினைக்க... திருமணத்துக்குப் பிறகு, காதல் கசந்து போக இதுவே மிகமுக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது. காதல் காலத்தில் இருவரிடமும் குடிகொண்டிருக்கும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பகிர்தல் குணம் போன்றவையெல்லாம், கல்யாணம் ஆனதும் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுப் போவதும்... குடும்ப வாழ்வை விரிசலில் நிறுத்துகிறது.

உண்மையாகவே புரிந்துகொண்டு வழிநடத்தினால், காதல் என்பது தெய்விக உறவு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், தன்னைப் பற்றிய புரிதலே இல்லாத வயதில், அலைபாயும் நெஞ்சோடு, 'என் லவ்வை புரிஞ்சுக்கோ...’ என்று உருகி உருகிக் காதலித்து, வாழ்வை இழக்கும் இளசுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. இப்படி பதின்மவயதுப் பிள்ளைகள்கூட காதலிப்பதும்; காதலுக்காக பெற்றோர்களை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறுவதும்; அடிப்படைத் தேவைகளுக்குக்கூட அடுத்தவரை எதிர்பார்ப்பதுமாக சீரழிவதும்... கண்களைக் கசிய வைக்கின்றன.

அலைபாயும் நெஞ்சினிலே..!  - 11

'ஆதலால் காதல் செய்வீர்’ திரைப்படத்தின் தேடலுக்காக, கோவையில் ஒரு டாக்டரைச் சந்தித்தேன். அவர் சொன்ன தகவல்கள், கேட்கக் கேட்க பகீரென்று இருந்தன. அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும்கூட என்னால் மீள முடியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

''பள்ளி, கல்லூரி மாணவிகள் பலர், 'காதலிச்சேன்... கர்ப்பமாயிட்டேன். வீட்டை நினைச்சாலே பயமா இருக்கு... அபார்ஷன் செய்துடுங்க டாக்டர் ப்ளீஸ்...’ என்று வந்து நிற்பார்கள். வேறு வழியில்லாமல் நானும் அவர்களுக்கு அபார்ஷன் செய்துவிடுகிறேன். சிலர் கருவைக் கலைக்க வாய்ப்புள்ள நாட்க¬யும் தாண்டி வந்து, கருக்கலைப்பு செய்யச் சொல்லிக் கெஞ்சுவார்கள். 'அது உன் உயிருக்கே ஆபத்தாயிடும்...’ என்பதை எடுத்துச்சொல்லி, 'நிலைமையை வீட்டில் சொல்லி திருமணம் செய்துக்கோங்க...’ என்று அறிவுறுத்தி அனுப்பிவைப்பேன்''

அலைபாயும் நெஞ்சினிலே..!  - 11

- டாக்டர் இப்படிச் சொன்னதும், நெஞ்சு படபடக்க அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்.

இப்படி நான் சேகரித்த அபாயகரமான தகவல்களைத்தான் என் திரைக்கதையில் சேர்த்தேன். 'கருவைச் சுமக்கும் வயதில்லாத சிறுமிகள்கூட கருத்தரிக்கிறார்கள்' என்ற செய்தி, உண்மையாகவே என் உள் நெஞ்சைக் குத்தியது. வயது கோளாறுகளால் காதலித்தவர்கள்... 'வயது கோளாறு' என்று சொல்வதுகூட தவறு. காதலிப்பதற்கான வயதே இல்லாதவர்களெலல்லாம் காதலித்து, அடுத்தகட்ட தாம்பத்ய நிலைக்கும் செல்லும் கொடுமைகளை நினைத்தால் நெஞ்சம் நொறுங்குகிறது.

அலைபாயும் நெஞ்சினிலே..!  - 11

இளம்வயதுகளில் செய்யும் தவறுகள் பற்றி உங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதேநேரத்தில், தற்போதைய காதல்களில் சில ஆரோக்கியமான நிகழ்வுகளும் நிகழ்ந்துகொண்டிருப்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். முன்பெல்லாம் காதல் தோல்வி அடைந்தால், காதலன் முழம் நீளத்துக்கு தாடியை வைத்துக் கொண்டு, வாழ்க்கையையே பறிகொடுத்த மாதிரி அலைந்துகொண்டிருப்பான். இப்போதெல்லாம் காதலில் வெற்றியோ... தோல்வியோ... கொண்டாட்டமும் சோகமும் ஒரே வாரத்துக்குள் முடிந்து விடுகின்றன. சில பெரு நகரங்களில் காதலில் தோற்றால், 'பிரேக் அப் பார்ட்டி’ வைத்து கொண்டாடுவதாகக்கூட கேள்விப்படுகிறேன். நினைத்தால் காதலிப்பதும், நினைத்தால் விலகுவதுமாக காதல் குறித்த பார்வையும்... அதன் மீதான அளவீடும் குறைந்துகொண்டே வருகிறது என்பதைத்தான் இதெல்லாம் காட்டுகிறது.

கண்மூடித்தனமான காதல் எத்தனை தவறோ... அதற்கு சற்றும் குறைவில்லாத தவறுதான், 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்கிற இத்தகைய காதல்களும்!

ஒன்று காதல் ஜெயிக்கிறது... இல்லை தோற்கிறது. ஜெயித்தாலும் சரி... தோற்றாலும் சரி... அதன் நன்மையும் தீமையும் காதலர்களை மட்டுமல்ல, பெற்றோரையும், காதல் தம்பதியின் குழந்தைகளையும்... உறவுக் கூட்டத்தையும் வந்தடையும் என்பதை உணர்வதுதான் முக்கியம்.

ஆதலால் காதலர்களே... முந்தைய தலைமுறையையும் அடுத்த தலைமுறையையும் மனதில் நிறுத்திய பிறகு, காதலிக்க ஆரம்பியுங்கள்.

காதல் ப்ளஸ் வாழ்க்கையில் ஜெயிக்க வாழ்த்துக்கள்!

நிறைவடைந்தது

தொகுப்பு: பொன்.விமலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism