ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

பாடமும் படிக்கலாம்... பிசினஸிலும் ஜெயிக்கலாம்!

பி.பி.ஏ மாணவர்களின் புது ரூட்

##~##

ல்லூரியில் படித்துக்கொண்டே தொழில் செய்வது... சிரமம். அதில் வெற்றி பெறுவது... அதனினும் சிரமம். இந்த இரண்டையும் சத்தமின்றிக் கடந்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர், கோயம்புத்தூர், கிருஷ்ணா கல்லூரி மாணவ - மாணவிகள்!

'கோகோ மொசார்ட் சாக்லேட்டுகள்’ என்ற பெயரில், ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டு, அதில் சாதித்து வரும் ஷெர்ஷா, ஜெனித் சர்ச்சில், பரத் பாண்டியன், அமீர்கான், ஜெயஸ்ரீ, ராகவி லக்ஷ்மி, சுஷ்மிதா மற்றும் அஷிதாவுக்கு வாழ்த்துக்களைச் சேர்த்தோம்!

சந்திப்பை உற்சாகமாக தொடக்கி வைத்தனர்... ஜெயஸ்ரீயும், அஷிதாவும்.

'நாங்கள் பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு மாணவர்கள். ஒருநாள் கல்லூரியில் பேசிக்கொண்டிருந்தபோது, 'படித்துக்கொண்டே ஏதேனும் சிறுதொழில் செய்தால், வருங்காலத்தில் அது தொழில், நிர்வாகம் போன்றவற்றுக்கு நல்லதொரு அனுபவமாக இருக்குமே' என்று ஆலோசித்தோம். அப்போது, ஹோம்மேட் சாக்லேட் பற்றிக் கூறினான் ஜெனித். எளிமையான,

பாடமும் படிக்கலாம்... பிசினஸிலும் ஜெயிக்கலாம்!

புதுமையான தொழிலாகத் தோன்றியதால், அதையே தேர்ந்தெடுத்தோம். சென்ற ஆகஸ்ட் மாதம் எட்டு பேரும் ஆளுக்கு 500 ரூபாய் முதல் போட்டு, தொழிலை ஆரம்பித்தோம்!'' என்றவரைத் தொடர்ந்த ஜெனித்...

'என் சொந்த ஊர் மூணாறு என்பதால், மலைப்பிரதேசங்களில் பிரபலமான ஹோம்மேட் சாக்லேட் பற்றிய தெளிவு எனக்கு இருந்தது. எனவே, இதை அனைவரும் 'டிக்’ செய்தனர்'' என்று நிறுத்த...

''தொழிலை ஆரம்பித்தபோது நாங்கள் பட்ட சிரமங்கள் அதிகம். கல்லூரி மாணவர்களாகச் சென்று ஆர்டர் கேட்டதால், கடைகளில் எங்கள் மேல் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். 'நாளை வாருங்கள்...’, 'நாங்களே அழைக்கிறோம்...’ என்று ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி திருப்பி அனுப்பிவிடுவார்கள். ஏதாவது ஒரு கடையில் வாய்ப்புக் கிடைத்துவிட்டால், அவர்கள் மூலமே இன்னும் சில கடைகளைப் பிடித்துவிடலாம் என்று நாங்களும் தளராமல் பல படிகள் ஏறி, இறங்கினோம். இறுதியாக கோவையில் ஒரு கடையில் சென்று ஆர்டர் கேட்டுவிட்டு, 'இவர்களும் திருப்பி அனுப்பத்தான் போகிறார்கள்’ என்று நாங்கள் நின்றிருந்தவேளையில், 'சரி, 10 கிலோ சாக்லேட் சப்ளை பண்ணுங்க...’ என்று அவர்கள் சொல்ல, உற்சாகத்தில் துள்ளிக் குதிக்காத குறைதான்!'' என்று சிரித்தனர் அமீர்கான், ராகவி இருவரும்!

பாடமும் படிக்கலாம்... பிசினஸிலும் ஜெயிக்கலாம்!

தொடர்ந்த ஷெர்ஷா, ''தனித்தனி வாடிக்கையாளர்களாகப் பிடிப்பது கடினம் என்பதால், கடைகளையே இலக்காகக்கொண்டு முயற்சிகளைத் தொடர்ந்தோம். ஆனால், கடைகளுக்கு சப்ளை செய்ததில் அதிகப்படியான லாபம் கிடைக்கவில்லை. லாபம் இல்லாவிட்டாலும், நஷ்டத்தில் சென்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதன்பிறகு கோவையில் எங்கு, என்ன கண்காட்சி நடந்தாலும் ஸ்டால் அமைத்தோம். அதன் மூலம் விளம்பரமும், வாடிக்கையாளர்களும் அதிகமாகவே கிடைத்தனர். அப்படி வந்த வாடிக்கையாளர்கள்தான் எங்களுக்கு பல யோசனைகளும் அறிவுரைகளும் தந்தனர்'' என்றார், தொழில் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்த மகிழ்ச்சியுடன்.

''முதலில் சோதனை முயற்சியாக முழு பார் சாக்லேட்டை வாங்கி, டிசைன் செய்து, பேக் செய்து விற்றோம். ஆனால், அது கவர்ச்சிகரமாக இல்லை. எனவே, பெரிய பெரிய சாக்லேட் பார்களை வாங்கி அதை உருக்கி வெவ்வேறு வடிவங்களில் வார்த்து, அழகாக பேக் செய்து விற்றோம். இம்முறை கடைகளில் மட்டுமல்லாது, கஸ்டமர்களுக்கும் டோர் டெலிவரி செய்தோம்.'கோவையில் கிடைக்கும் பல ஹோம்மேட் சாக்லேட்டுகளைவிட இது விலையும் மலிவாக இருக்கிறது’ என்றபடி எங்களின் வாடிக்கையாளர் வட்டம் பெருகியது. எனவே, விலையை தேவையில்லாமல் உயர்த்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்'' என்றார் சுஷ்மிதா.

பாடமும் படிக்கலாம்... பிசினஸிலும் ஜெயிக்கலாம்!

இவர்கள் இப்போது கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட ஃப்ளேவர்களில் ஹோம்மேட் சாக்லேட்டுகளை சப்ளை செய்வதுடன், ஃபேஸ்புக்கில் இதற்கென ஒரு பக்கம் ஆரம்பித்து, விளம்பரங்களைப் பதிவேற்றி வாய்ப்புக் கேட்கின்றனர்.  

''படிப்பு முடிந்தவுடன், இதே தொழிலை இன்னும் பெரிய அளவில், பெரிய 'பிராண்ட்’டில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதற்காக பிரத்யேக வலைதளம் உருவாக்கும் எண்ணமும் உள்ளது...'' என்று லைனுக்கு வந்த பரத் பாண்டியன்,

பாடமும் படிக்கலாம்... பிசினஸிலும் ஜெயிக்கலாம்!

''பண்டிகைக் காலங்களில் நாங்கள் படுபிஸி. அந்தளவுக்கு ஆர்டர்கள் குவியும். இப்போது கோவையில் மட்டுமே எங்களுக்கு 500-க்கும் மேல் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அனுபவம் கிடைக்குமே என்று விளையாட்டாகத்தான் ஆரம்பித்தோம். ஆனால், இவ்வளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. இதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் அளித்திருக்கும் உழைப்பு அதிகம். அதற்கான பரிசே இந்த வெற்றி'' என்றார் பரத் அழகாக.

''இதில் எங்களுக்கு உத்வேகம் தந்துவரும் பேராசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் முதலில் நன்றி சொல்ல வேண்டும். கிடைக்கும் லாபம் அனைத்தையும் சேர்த்து வருகிறோம். படிப்பு முடிந்த பிறகு, இது அனைத்தையும் சேவைக்கே பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். படித்துக்கொண்டே ஏதேனும் செய்ய நினைக்கும் மாணவர்கள், வர வாய்ப்புள்ள பிரச்னைகளை நினைத்து முதலிலேயே ஒதுங்கிவிடுகின்றனர். அது தவறு. முதலில் துணிந்து களத்தில் இறங்குங்கள். பிரச்னைகளை பிறகு கவனித்துக்கொள்ளலாம். தம்ப்ஸ் அப்!''

- கோரஸாக முடித்தனர் அனைவரும்!

ஞா.சுதாகர்  

படங்கள்: ர.சதானந்த்