ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

“இனி, உங்கள் கேலிகளால் அழப் போவதில்லை!”

தீர்க்கமாகப் பேசும் திருநங்கை சொப்னா கட்டுரை : பொன்.விமலா, படம் : பா:காளிமுத்துசமூகம்

##~##

 ''முடங்கிக் கிடந்தால்... முடிகூட சுமைதான்; எழுந்து நடந்தால் இமயமும் பக்கம்தான்! இதுதான் என் தாரக மந்திரம்...''

- நேர்படப் பேசும் சொப்னா, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய 'குரூப் - 4' தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் முதல் திருநங்கை. இந்திய அளவிலும் முதல் நபரே!

''கூடப் படித்தவர்கள், பழகியவர்கள், சொந்தபந்தங்கள் அனைவரும் கேலிப் பொருளாகவும், வேற்றுகிரகவாசியாகவும் பார்த்தபோது, 'இவர்கள் முன்பாக சாதித்துக் காட்ட வேண்டும்' என்ற எண்ணமே எனக்குள் வளர்ந்தது. அதுதான் ஜெயிக்க வைத்திருக்கிறது. என் கனவு இன்னும் முடியவில்லை. சொப்னா ஐ.ஏ.எஸ் என்பதை நோக்கி தொடர்ந்து பயணிப்பேன்!'' என்று திடமாகப் பேசுகிறார் சொப்னா.

''ஒரு திருநங்கையாக நான் கடந்து வரும் பாதை, மிகக் கொடுமையானது. எனக்கு இப்போது 23 வயது. ப்ளஸ் டூ படிக்கும் வரை ஓர் ஆணாகத்தான் இருந்தேன். சிறு வயதிலிருந்தே ஆணாக இருப்பதில் விருப்பம் இல்லை. பெண் மாதிரி உடுத்த வேண்டும், அலங்காரம் பண்ண வேண்டும் என்ற எண்ணங்களே என்னை ஆக்கிரமித்திருந்தன. நடை, உடை, பாவனையைப் பலரும் கேலி செய்தாலும், படிப்பில் மட்டுமே நான் முழு கவனம் செலுத்த... பன்னிரண்டாம் வகுப்பு தமிழில், மாவட்டத்தில் மூன்றாவது இடம் பெற்றேன்!

“இனி, உங்கள் கேலிகளால் அழப் போவதில்லை!”

இடையில் மும்பை சென்று, அறுவைசிகிச்சை மூலமாக பெண்ணாக மாறிய நான், 'சொப்னா’ என்று பெயர் சூட்டிக்கொண்டேன். இதையடுத்து... வீட்டில், சமுதாயத்தில் என்று திரும்பிய பக்கமெல்லாம் நான் சந்தித்த எதிர்ப்புகள் கடுமையானவை, கொடுமையானவை. அனைத்தையும் புறந்தள்ளி, படிப்பில் கவனத்தைத் திருப்பினேன். பி.ஏ., தமிழ் முதலாமாண்டு படிக்கும்போதே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆகிவற்றுக்கும் விண்ணப்பித்தேன்... அனுமதிக்கவில்லை. ஓர் ஆண்,  முழுமையாக பெண்ணாக மாறிவிட்ட பின், பெண் பால் என்று ஏற்க வேண்டும் என்று முறையிட்டேன். ஏற்க மறுத்துவிட்டனர். சகதோழிகளுடன் கலெக்டர் ஆபீஸ் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம் முன்பாக முற்றுகை, சாலை மறியல் என்றெல்லாம் போராட்டங்களை நடத்தினோம்.

அடுத்து, சென்னை, உயர் நீதிமன்ற படியேறினேன். வழக்கறிஞர்கள் பவானி சுப்பராயன்,    சஞ்சீவ்குமார் இருவரும் எனக்காக வாதாடினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.கே.அகர்வால், சத்தியநாராயணன் இருவரும்  சாதகமான தீர்ப்பு வழங்கினார்கள். இது, 'இந்தியாவில் உள்ள திருநங்கைகள் யார் வேண்டுமானாலும் அரசுப் பணியாளர் தேர்வெழுதலாம்' என்று பாதையை திறந்துவிட்டிருக்கிறது. இப்போது குரூப் 1 தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளேன். நிச்சயம் ஜெயிப்பேன்!''

- உணர்ச்சிகளும் உண்மைகளும் நிறைந்திருந்தன சொப்னா பேச்சில்!

''திருநங்கைகளின் வாழ்க்கை நியாயங்கள், இந்த சமூகத்தின் பார்வைக்கே வரவில்லை. காரணம், இங்கே திருநங்கைகளாக சாதித்தவர்கள் மிகக் குறைவானவர்கள்தான். சிலர், தங்கள் வெற்றிக்குப் பின், தங்களை மட்டுமே முன்னிறுத்திக் கொள்கிறார்களே தவிர, ஆதரவுக்காக, அங்கீகாரத்துக்காக தவிக்கும் சகதிருநங்கைகளைக் கைதூக்கிவிடுவதில்லை. அந்தத் தவறை நான் நிச்சயமாகச் செய்யமாட்டேன். என்னைப் பற்றிப் பேசுவதைவிட, என் இனம் பற்றி பேசவே வாய்ப்புக் கேட்கிறேன்.

திருநங்கைகளும், திருநம்பிகளும் மனிதர்கள்தான். ஆண் பால், பெண் பால் போல, மூன்றாம் பால் என்று எங்களை அழைப்பதைக்கூட நான் விரும்பவில்லை. ஓர் ஆண் பெண்ணாக மாறிவிட்டால்... பெண்; ஒரு பெண் ஆணாக மாறிவிட்டால்... ஆண் அவ்வளவுதான். இதில் ஆச்சர்யப்படவோ, அதிசயப்படவோ, கேலி செய்யவோ என்ன இருக்கிறது? எங்களுக்கு ஊன்றுகோலாக இல்லாவிட்டால்கூட பரவாயில்லை, உற்றுப் பார்க்காதீர்கள்!

ஒரு பெண்ணுக்கு என்னவெல்லாம் கொடுமைகள் நிகழ்கிறதோ, அந்தக் கொடுமைகளுக்கெல்லாம் மேலான கொடுமைகள் எங்களுக்கு நடக்கிறது. ஈவ் டீஸிங் புகார் கொடுக்கும் உரிமை பெண்ணுக்கு இருக்கிறது. அதே புகாரை நாங்கள் அளிக்கப் போனால், 'இது கண்ணடிச்சுச்சோ... இல்ல கையப் பிடிச்சி இழுத்துச்சோ...’ என்று எங்கள் மேலேயே கேஸை திருப்புகிறார்கள்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் காதல் உணர்வு, எங்களுக்கும் உண்டு. ஆனால், திருநங்கை, திருநம்பிகளுக்கு திருமணம் என்பது எண்ணிப் பார்க்கக்கூட மறுக்கப்படும் விஷயமாக நீடிப்பது... பெரும் துயரம்'' என்று நொந்துகொண்டவர்,

''அரசாங்கத்திடம் நாங்கள் கேட்பது சலுகையோ... யாசகமோ அல்ல. இந்த பூமியில் பிறந்துவிட்ட ஒவ்வொரு உயிரினத்துக்கும் பலவித உரிமைகள் இருக்கின்றன. அதேபோல மனிதர்களாக பிறந்துவிட்ட எங்களுக்கும் உரிமைகள் உண்டு. அவையெல்லாம் பறிக்கப்பட்டிருப்பதால், திருப்பித் தரக் கேட்கிறோம். இந்த சின்ன விஷயத்தைக் கூட புரிந்துகொள்ள முடியாதவர்களாகவே பெரும்பாலானவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

என் நண்பன் சொல்வான்... 'உலகில் யார் தந்த வலிக்காகவும் கண்ணீர் சிந்தாதே; உன் கண்ணீருக்கு தகுதியானவர்கள்... உன்னை அழவைக்க மாட்டார்கள்’ என்று. இனி, நாங்கள் உங்கள் கேலிகளால் அழப் போவதில்லை. சொப்னாவாகிய நான், என்னைப் போல் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒவ்வொரு திருநங்கை, திருநம்பிக்காகவும் நிச்சயமாக போராடிக்கொண்டே இருப்பேன்''

- கண்களில் புது வெளிச்சம் தெரிகிறது சொப்னாவுக்கு!