ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

சந்தோஷ முடிவுகளே சாதிக்க வைக்கும்!

எழுத்து ரகசியம் பகிர்கிறார் ரமணிசந்திரன்கட்டுரை : சா.வடிவரசு; படங்கள் : எம்.உசேன்புதினம்

##~##

 க்தி மணம் வீசும் மயிலாப்பூரில், பறவைகள் ஓயாது பேசிக்கொண்டிருக்கும் பிருந்தாவன் சாலை. காலைவேளையொன்றில் அந்த வீட்டின் அழைப்பு மணியை அடித்தோம். கதவுக்குப்பின் புன்னகையோடு ரமணிசந்திரன்... எழுத்துலகின் ஆட்சியாளர்களில் ஒருவர்!

ஒரு கடிதத்தில் தொடங்கிய தன் எழுத்துப் பயணத்தை சுவாரஸ்யமாகப் பகிர்ந்த ரமணிசந்திரனின் தோற்றமும், பேச்சும் எளிமையிலும் எளிமை!

''திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி கிராமம்தான் நான் பிறந்த ஊர். என் அப்பா தீவிர முருக பக்தர் என்பதால், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அருகே குடியேறினோம். பிறகு, பள்ளிப் படிப்புக்காக பாளையங்கோட்டைக்கு குடிபெயர்ந்தோம். வீட்டில் கிட்டத்தட்ட எல்லோருமே புத்தகங்களை விரும்பிப் படிப்பவர்கள். அதனால் ஏராளமான தமிழ், ஆங்கில புத்தகங்கள் இல்லத்தில் நிரம்பியிருக்கும். நான்கு வயதிலேயே வாசிக்கும் பழக்கம் ஆரம்பித்துவிட்டதாக ஞாபகம். பாட்டிக்கு, 'சிவகாமி யின் சபதம்’ வாசித்துக் காட்டிய நாட்கள் இன்றும் நினைவில் இருக்கின்றன. அப்போது எழுத்துக் கூட்டிப் படிக்க மட்டுமே தெரிந்த அந்த நாவலை, பதின்ம வயதில் இரண்டாவது முறை படித்தபோதுதான் வார்த்தைகளின் செழுமையையும், கதையின் கற்பனையையும் அனுபவித்துப் படித்துத் தெரிந்துகொண்டேன்.

பள்ளிப் படிப்பை முடித்தவுடன்,  சாராள் தக்கர் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் சேர்ந்தேன். சில காரணங்களினால் என் படிப்பைத் தொடர முடியாமல் போனது. இருந்தும், தமிழ் மற்றும் ஆங்கிலம் எனப் புத்தகங்களுடனேயே பயணித்தன என் பொழுதுகள்!

சந்தோஷ முடிவுகளே சாதிக்க வைக்கும்!

என் சகோதரிக்கு அடிக்கடி கடிதம் எழுதுவது வழக்கம். அப்படி ஒருமுறை எழுதிய கடிதத்தை, அவருடைய கணவர் படித்துவிட்டு, 'நேரில் பார்த்து பேசுற மாதிரி இருக்கு!’ என்று சொல்லியிருக்கிறார். அவர், அன்று 'ராணி’ பத்திரிகை ஆசிரியர் என்பதால், என்னை கதை ஏதாவது எழுதச் சொன்னார். அந்தப் பத்திரிகை நடத்திய போட்டிக்கு, பக்கத்து வீட்டு அம்மா பெயரில் கதை ஒன்றை எழுதி அனுப்பினேன். இரண்டாவது பரிசு கிடைத்தது. அப்போதுதான் புரிந்தது... எனக்குள், எழுத்துத் திறமையும் இருக்கிறது என்பது! இருந்தாலும், வேறொருவர் பெயரில் எழுதிய கதையால், மனசங்கடமான பிரச்னைகள் எழுந்தன. அதனால், அதன் பின் எதையும் எழுதவில்லை.

பின்னர் 'ராணி’ பத்திரிகையில் தொடர்கதை எழுதுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாக எடுத்துக்கொண்டு, குடும்பம் தொடர்பான சம்பவங்களை கதையின் கருவாக வைத்து, 'கவிதா’ என்ற தலைப்பில் தொடர்கதை எழுதினேன். இதை நான்தான் எழுதுகிறேன் என்று பக்கத்து வீட்டில் இருப்பவருக்குக்கூட தெரியாமல் பார்த்துக்கொண்டேன். பிறகு, அது புத்தகமாகவும் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு புத்தகங்களை கணவர் மற்றும் குடும்பத்தாரின் ஊக்கத்தோடு எழுதியுள்ளேன். 63-ம் ஆண்டு தொடங்கி 90-ம் ஆண்டு வரை, 'யார் இதை எழுதுகிறார்கள்?’ என்று வெளியில் தெரியாதவாறுதான் எழுதிவந்தேன். பின் கொஞ்சம் கொஞ்சமாக பெயர் வெளியில் தெரிய ஆரம்பித்தது.

எழுத்தில் எனக்கென சில கொள்கைகளை வகுத்துதான் எழுதுகிறேன். அதை மீறி எப்போதும், எதற்காகவும் எழுதமாட்டேன். உதாரணமாக, என் நாவல்களின் முடிவானது... மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்பது முக்கியக் கொள்கை. என்னுடைய 26-வது வயதில் எழுதிய ஒரு சிறுகதையில், சந்தேகப் படு கிற கணவர், தன் நண்பர் மூலமாக மனைவியை கண்காணிக்கிறார். இதைத் தெரிந்துகொண்ட மனைவி, இப்படிப்பட்ட கணவர் எனக்கு வேண்டாம் என்று பிரிந்து வாழ்கிறார் என முடித்திருந்தேன். இதற்கு வாசகர் ஒருவர், 'முடிவு சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. தனியாகப் பிரிந்து வாழ்வதாக முடித்திருக்கிறீர்களே... அதன் பின் அந்தப் பெண்ணின் வாழ்க்கை என்ன ஆவது; எவ்வளவு காலம் அவரால் தனியாக வாழ முடியும்; முடிவை சரிவர யோசிக்காமல் எழுதிவிட்டீர்களே!’ என்று கடிதம் எழுதியிருந்தார்.

'இவர் சொல்வதும் சரிதானே' என்று யோசித்த நான், இனி, 'சந்தோஷ முடிவு’தான் என்று முடிவெடுத்தேன். சந்தோஷமாக முடியும் நாவல்களுக்கு விருதுகள் கிடைப்பது கடினம். என் புத்தகங்களைப் படித்த பலரும் என்னிடம் பரவலாகச் சொல்லும் கருத்து... 'உங்க புத்தகத்தை படிச்சு முடிக்கும்போது திருப்தியா இருக்கு, சந்தோஷமா இருக்கு!’ என்பதைத்தான். இதைவிட வேறு என்ன பெரிய விருது?

நல்ல விஷயங்களை வாசகர்ளுக்குக் கடத்து வது, மருத்துவம், அறிவியல், பழமொழி என்று ஒரு சிறு விஷயத்தை என் எழுத்தில் குறிப்பிட்டாலும் அதைப் பற்றி முழுமையாக அறிந்த பின்னே எழுதுவது... இவை எல்லாம் என் கொள்கைகள். தவிர, நான் எழுதும்போது, பிற எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்க மாட்டேன். அவரின் சாயல் என் எழுத்தில் பிரதிபலிக்காமல் இருக்கவே இந்த கவனம்.

கதைக்கான களத்தை, எனக்குப் பரிச்சயமானதாகவே தேர்ந்தெடுப்பேன். ஒருவேளை சில காட்சிகளுக்கான களம் பற்றி நேரடிப் பரிச்சயம் இல்லை என்றால், கணவரிடம் கேட்பேன். அவரை நேரடியாக சென்று பார்வையிட்டு வரச் சொல்லியும், கேட்டுத் தெரிந்துகொள்வேன்.

'என்னை பாதித்த விஷயத்தை எழுதுகிறேன்...’ என்று பல எழுத்தாளர்கள் சொல்வார்கள். நான், அந்த ரகம் அல்ல. இந்த விஷயத்தை இப்படிச் சொன் னால், மக்களுக்குப் பய னுள்ளதாகவும், அவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாகவும், வளத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடியதாகவும் இருக்கும் என்று என் மனதில் தோன்றினால், எழுதத் தொடங்கிவிடுவேன்.

முன்பைக் காட்டிலும் இன்றைக்கு அதிகமானோர் புத்தகம் படிப்பதாக தகவல் வருகிறது. புத்தகங்களின் விற்பனையும் அதிகமாகி இருப்பதாக, பதிப்பகத்தார்கள் சொல்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைக்கு அதிகமானோர் கணிப்பொறி உதவியோடு ஆன்லைனில் படிப்பதாகவும் சொல்கிறார்கள். இருந்தாலும், புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிப் படிக்கும் அனுபவம் அதில் கிடைப்பதில்லை என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். கணிப்பொறி பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. எனினும், என் பேரப் பிள்ளைகளிடம் இப்போது கற்று வருகிறேன்.

இன்றைக்கு நிறைய இளம் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையான திறமை இருக்கிறது. இந்த தலைமுறையினரின் எழுத்துக்களுடன், மூத்தவளான என் எழுத்தும் பிரசுரமாவது சந்தோஷமாகவே இருக்கிறது என்பதால், தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால், முன்பு பயன்படுத்திய வார்த்தைகள் சிலவற்றை இன்று பயன்படுத்த முடிவதில்லை. இன்றைய சூழலுக்கு ஏற்ற வார்த்தைகளைத் தேடி எழுதுவது, சுவாரஸ்யமாகவே இருக்கிறது'' என்று தலைமுறை மாறுதல் பற்றியும் தன் பேச்சில் கோத்துக்கொண்ட இந்த கதையரசி,

''46 வருடங்களாக சென்னையில்தான் வசிக்கிறேன். என் கணவரின் பெயர் பாலச்சந்திரன். அதிலிருந்து 'சந்திரன்’ என்பதை என்னுடைய பெயருடன் இணைத்து, ரமணிசந்திரன் ஆனேன். ஒரு மகன், மகள், பேரன், பேத்திகள் என்று வாழ்க்கை இனிக்கச் செல்கிறது.

சந்தோஷ முடிவுகளே சாதிக்க வைக்கும்!

இதுவரை 157 நாவல்களை எழுதியுள்ள எனக்கு, எழுத்து தவிர இசை மேலும் அதிக விருப்பம். ஓய்வுநேரங்களில் பழைய பாடல்கள் கேட்பது பிடிக்கும். புதிய பாடல்களில் தரமான பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கேட்பேன். என் எழுத்து எத்தனையோ பேரை தாலாட்டுவதாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். என்னைத் தாலாட்டுவது, இசை!'' என்று தலையசைத்தார்!

அப்போ... இப்போ!

''என்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்ததைவிட, இன்றைக்கு அதிகமான இளம் எழுத்தாளர்கள், குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் வந்துள்ளனர். அனைவருமே புதுப் புது படைப்புகளை சமூகத்துக்கு வழங்கி வருகிறார்கள். வாசகர்களும் தங்களின் கருத்துகளை எழுத்தாளர்களிடம் நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்றைக்கு சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இது எழுத்துத் துறையில் ஆரோக் கியமான மாற்றமே! முன்பு, கதைக்கு வேண்டிய தகவல் களைத்  தெரிந்துகொள்ள, உறுதிபடுத்த புத்தகங்களைத் தான்  நம்பியிருந்தோம்.  

இன்றைக்கு  உடனுக்குடன் கணினியில் தேடித் தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்புகள் வந்திருப்பது... இந்த தலைமுறைக்கு வரப் பிரசாதமே! இது வருங் காலத்தில் இன்னும் பல வளர்ச்சிகளை எட்டும்.''