ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

திருமண வாழ்க்கை திருப்தியாக இருக்கிறதா..?

தமிழக பெண்களிடம் ஒரு அதிரடி சர்வே! கட்டுரை : அவள் விகடன் டீம்படங்கள் : வீ.சிவக்குமார், தே.தீட்ஷித், ஜெ.பாரதி , எ.கிரேசன் எபினேசர், பா.வேலுமணி,  கு.கார்முகில்வண்ணன்

திருமண வாழ்க்கை திருப்தியாக இருக்கிறதா..?

'அவள் விகடன்' 400-வது இதழுக்காக, 'திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது?' என்பது பற்றி தமிழகப் பெண்களிடம் ஒரு சர்வே செய்யலாம் என்று யோசித்த நாங்கள், 'சடசட’வென திட்டமிட்டு, 'பரபர’வென கேள்விகளைத் தயாரித்தோம். 'தமிழகம் முழுவதும் உள்ள பெண்களின் மன ஓட்டத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்' என்பதற்காக, சுமார் 1,000 பெண்களை நேரடியாக சந்தித்து, கேள்வித் தாள்களைக் கொடுத்து, பதில்களை வாங்குவது என்பதுதான் திட்டம்.

பெண்களின் மனதை அத்தனை எளிதில் படித்துவிட முடியாது. குறிப்பாக, அவர்களுடைய மண வாழ்க்கை பற்றிய விஷயங்களை அவர்களுடைய மனதுக்கு நெருக்கமானவர்களால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். அப்படிப்பட்ட அரிதான விஷயங்களை இந்த சர்வே மூலம் அவர்கள் எங்களோடு பகிர்ந்துகொண்டார்கள் என்பதை நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

திருமண வாழ்க்கை திருப்தியாக இருக்கிறதா..?

கிராமம், நகரம், மாநகரம் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த சர்வேக்காக விகடன் குழும இதழ்களின் நிருபர்கள் மற்றும் மாணவப் பத்திரிகையாளர் படை... சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, விருதுநகர், ஈரோடு, கன்னியாகுமரி, தஞ்சாவூர், சேலம், காஞ்சிபுரம், கரூர், திண்டுக்கல், வேலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகிய நகரங்கள் மற்றும் அவற்றின் கிராமங்களில் களமிறக்கி விடப்பட்டது. கேள்வித்தாள்களைக் கையில் வாங்கியதுமே... ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொருவித ரியாக்ஷன்தான்.

'என்னது... சர்வேயா...?' என்று விலகி ஓடியது வெகு சில பெண்களே..! 'சொல்லிட்டா போச்சு' என்று ஆச்சர்யத்தோடும், ஆவலோடும் வந்து நின்ற பெண்கள்தான் அதிகம். கேள்வித் தாளை வாங்கி, ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை ஃபில் செய்துகொண்டே வந்தவர்களில் பலர்... பதினோராவது கேள்விக்கு வந்ததும் 'ஷாக்' அடித்தாற்போல நிமிர்ந்து பார்த்து ஒருவித சங்கோஜத்துடன் நெளியவே...

'உங்களுடைய பெயர், முகவரி... என்று எதையும் தரத் தேவையில்லை. தயக்கமே இல்லாமல் டிக் அடிக்கலாம்' என்று எடுத்துக் கொடுக்க... அதன் பிறகே சின்னத் தயக்கத்துடன் கேள்விக்கு விடையளித்தார்கள்.

திருமண வாழ்க்கை திருப்தியாக இருக்கிறதா..?

'தாம்பத்யம் பெரும்பாலும்... கணவரின் விருப்பம், இருவரின் விருப்பம், என் விருப்பம், கடமைக் காக’ என நான்கு பதில்களுடன் கூடிய கேள்வி தான் அது.

கன்னியாகுமரியில் நடந்த சர்வே அத்தனை சுவாரஸ்யம். சந்தோஷத்தோடு 'டிக்' அடித்துகொண்டே வந்த பெண்களில் சிலர், ஏழாவது கேள்வியைப் படித்ததும் (குழந்தைக்கு உணவு தருவது, தூங்க வைப்பது, படிக்க வைப்பது போன்றவற்றில் கணவரின் பங்கு? தினமும், நேரம் கிடைக்கும்போது, எப்போதாவது, பெரும்பாலும் இல்லை), வாய்விட்டு சிரித்தபடியே... ''உண்மையைச் சொல்லட்டுமா... 'கணவர் எங்களோட வேலைகள்ல பங்கெடுத்துகிட்டா நல்லா இருக்கும்'னு சுமையான பல தருணங்கள்ல யோசிச்சுருக்கோம். ஆனா, அறிவுக்கு தோணுற இந்த விஷயம்... மனசுக்கு தோணுறதில்லை. வழக்கமான பெண்கள் மனநிலைப்படி 'இதெல்லாம் நம்மோட வேலை... அவரை செய்ய விடக்கூடாது'னு நினைச்சு, நாங்களே இந்த வேலைகளை கொடுக்கறதில்லை. ஆனா, கணவரை விட்டுக்கொடுக்க முடியுமா சொல்லுங்க?'' என்றபடியே, 'நேரம் கிடைக்கும்போது' என்ற ஆப்ஷனை 'டிக்' செய்து அதிரவைத்தார்கள்.

திருமண வாழ்க்கை திருப்தியாக இருக்கிறதா..?

ஒரு சில இடங்களில் கிடைத்த ரியாக்ஷன்கள் வேறுவிதமானவை. திருமணமானவர்கள், கணவனைப் பிரிந்தவர்கள் என்று இரண்டு தரப்பு பெண்களிடம் சர்வே எடுத்துக்கொண்டிருக்க, ''அட, எங்களுக்கும் கொடுங்க. கல்யாண லைஃப் எப்படி இருக்கும்னு அட்வான்ஸா நாங்க உங்களுக்கு சொல்லிடறோம்'' என்று கலாய்த்தபடியே வம்படி யாக சர்வே தாள்களை நம்மிடம் இருந்து பறித்த கல்லூரி மாணவிகள்... ஓவர் குறும்புதான். 'கணவரின் சம்பளத்தில் நீங் கள் விரும்பியதை வாங்க முடிகிறதா?' என்ற கேள்விக்கு 'ஆம்' என்று இந்த கேர்ள்ஸ் நிரப்பிக் கொடுத்தது காமெடியின் உச்சம்.

பின்குறிப்பு: இவர்களுடைய படிவங்களை கணக்கில் சேர்க்கவில்லை.

சேலத்தில் சர்வே ஷீட்டை வாங்கிய பெண்கள், கேள்விகளைப் படித்து தயக்கத்தோடு 'சார், ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க' என்றபடியே மெதுவாக ஜகா வாங்கினார்கள். மிகவும் கஷ்டப்பட்டு பலரை சம்மதிக்க வைத்து சர்வேயை வாங்கவேண்டியதாக இருந்தது.

சென்னையிலும் அதே நிலைதான். மெத்த படித்த வர்கள் நிரம்பிய ஏரியா, துணிச்சலோடு இருக்கும் பெண்கள் என்ற அடையாளப்படுத்தப்பட்டி ருக்கும் சென்னை பெண் கள்... 'தயங்கோ தயங்கு' என்று தயங்கினார்கள். சென்னையைப் பொறுத்த வரை, 'தாம்பத்யம் பெரும்பாலும்?' என்ற கேள்விக்கு 'இருவரின் விருப்பம்' என்ற ஆப்ஷனையே அதிகம் டிக் செய்தார்கள்.

திருமண வாழ்க்கை திருப்தியாக இருக்கிறதா..?

'திருமணத்துக்கு முன்போலவே, தற்போதைய வாழ்வில் இயல்பாக இருக்க முடிகிறதா?' என்ற கேள்விக்கு 'இல்லை’ என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல பதில் சொல்லி இருந்தார்கள் பல வாசகிகள். திருமணத்துக்குப் பிறகு சினிமா, கோயில், ஷாப்பிங் என்று மனைவிக்காக கிட்டத்தட்ட 50 சதவிகித கணவர்கள் நேரம் செலவழிப்பதில்லை என்கிற அதிர்ச்சியும் தாக்கியது இந்த சர்வேயில்!

அன்புக்குரிய வாசகிகளே... சர்வே முடிவுகள் ஏறக்குறைய இருந்தாலும், தாம்பத்ய வாழ்க்கை, திருமணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை என்று பலவற்றிலும் பெண்களின் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறவில்லை என்பதையே காட்டுகின்றன!

திருமண வாழ்க்கை திருப்தியாக இருக்கிறதா..?

இதைப் படிக்கும் ஆண்களே... உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்துக்காகவுமே ஓடோடிக் கொண்டிருக்கும் பெண்கள், உள்ளுக்குள் ளேயே வைத்து மறுகிக் கொண்டிருக்கும் பல விஷயங்கள்... இலைமறை காயாக இந்த சர்வே மூலமாக வெளிப்பட்டிருக்கிறது.

இதற்கான தீர்வு... உங்கள் கைகளில்தான்!