ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

ஏமாற்றிய ஏஷென்ட்டுகள்... ஏற்றம் தந்த கலெக்டர்!

நாப்கின் தயாரிப்பில் அசத்தும் வள்ளிஸ்டெப்ஸ் கட்டுரை : வே.கிருஷ்ணவேணி; படங்கள் : என்.ஜி.மணிகண்டன்

##~##

 திருச்சி, முசிறியைச் சேர்ந்த வள்ளியைப் பற்றி, 11.9.12 தேதியிட்ட 'அவள் விகடன்’ இதழில் 'எதிர்நீச்சல் போட்டா... எந்தக் கடலையும் தாண்டலாம்..!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. நாப்கின் தொழில் செய்துகொண்டிருந்த வள்ளிக்கு, இந்த ஒன்றரை வருடங்களில், ஏமாற்றம், தடுமாற்றம், தோல்வி என எதிர்நீச்சல் போட வேண்டிய சந்தர்ப்பங்கள் நிறையவே நேர்ந்திருக்கின்றன. அதை எல்லாம் கடந்து, தன் ஏணியை வானத்தை நோக்கிப் போட்டு ஏறிக்கொண்டிருக்கும் வள்ளி, இந்த ஏற்றமிகு வாழ்க்கையையும் 'அவள் விகடன்’ இதழ் மூலமாக உங்களிடம் பகிர்வதற்கு முன்வருகிறார்... கூடவே, அழகானதொரு 'அவள் விகடன்' திட்டத்துடன்!

அவரைப் பற்றிய முன்பு வெளியான கட்டுரையில்...

''நாப்கின் உற்பத்தி அதிகரிக்கவே... பள்ளி, கல்லூரி, மகளிர் விடுதிகள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள்னு தேடிப்போய் விற்பனைக்கு ஏற்பாடு செய்துட்டு வர்றேன். தமிழக அரசு வழங்கும் இலவச நாப்கின் திட்டத்துக்கு எங்களைப் போல சிறுதொழில் தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கினா ரொம்ப பலமா இருக்கும்’' என்றவரின் செல்போன் சிணுங்க, பேசிவிட்டுத் திரும்பியவர், ''ஒரு தொண்டு நிறுவனம், மாதம் பத்தாயிரம் நாப்கின்களை கேட்டு ஆர்டர் கொடுக்கத்தான் போன் பண்ணியிருந்தாங்க!’' என்றார்.

ஏமாற்றிய ஏஷென்ட்டுகள்... ஏற்றம் தந்த கலெக்டர்!

- இப்படிக் குறிப்பிட்டிருந்தோம்.

நம் சந்திப்புக்குப் பின், மீண்டும் அந்த நம்பரில் இருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அடுத்த நாளே நேரில் வந்திருக்கிறார்கள் மூன்று பேர். பின் நடந்தவற்றை வள்ளியே கூறுகிறார்...

''சிங்கப்பூர் கம்பெனிக்காரங்களோட ஏஜென்ட் நாங்க. சிங்கப்பூர் கம்பெனிக்கு உங்க நாப்கினை ஏற்றுமதி செய்து கொடுக்குறோம். ஒரு நாப்கினுக்கு 9 ரூபாய் 15 பைசா தர்றோம். மாசத்துக்கு ஒரு லட்சம் நாப்கின் தேவைனு அவங்க சொல்ல, பட்ட கஷ்டத்துக்கு கடவுள் கண்ணைத் திறந்திட்டாருனு எங்கிட்ட வேலை பார்த்த பத்து ஆட்களையும் உற்சாகப்படுத்தி உற்பத்தியைப் பெருக்கினேன்.

இந்த சமயத்துல, வந்தவங்கள்ல ஒருத்தருக்கும், ஒரு பெண்ணுக்கும் ஏதோ தொடர்பு ஏற்பட்டு, அதனால சில பிரச்னைகள். திடீர்னு பார்த்தா... அந்த மூணு ஏஜென்ட்டுகளும் (!) சொல்லாம கொள்ளாம ஊரையே காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. அவங்க இங்க வந்து தங்கியிருந்த 15 நாட்கள்ல சாம்பிளா மட்டும் நான் ஆயிரம் நாப்கின்களுக்கு மேல கொடுத்திருந்தேன். ஆர்டர் இதோ வந்திடும், அதோ வந்திடும்னு போக்குகாட்டிட்டு, போயே போயிட்டாங்க. வேலை ஆட்களோட சம்பளம், இதரப் பொருட்களோட செலவு, உழைப்பு, நேரம்னு கிட்டத்தட்ட எனக்கு 80 ஆயிரம் ரூபாய்க்கும் மேல நஷ்டம்.

மன உளைச்சலில் பிரமையே இல்லாம பித்துப்புடிச்ச நான், மறுபடியும் தற்கொலை செய்துக்குற அளவுக்குப் போயிட்டேன். 'தொழில்லதானே இழப்பு வந்துச்சு... உன் உடம்புல தெம்பு இருக்குல... மனசுல நம்பிக்கை வை...’னு என் கணவர்தான் அதிலிருந்து என்னை மீட்டுக்கொண்டு வந்தார். மனசு கொஞ்சம் தெளிஞ்சவொடன, 'தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கத்’துக்குப் போனேன். என் நிலையைச் சொல்லி அழுதேன். அங்கே இருந்த மற்ற பெண்கள் எல்லோரும் அவங்கவங்களோட கஷ்டங்களைச் சொன்னப்போ, தோல்வியை பார்க்காதவங்க யாரும் இல்லைனு புரிஞ்சுது.

பொய்யான சிங்கப்பூர் ஆர்டர்ல, மாசத்துக்கு 20,000 ரூபாய்க்கு மேல லாபம் எடுக்கணும்னு நினைச்சதை, எப்படியும் சம்பாதிச்சுக் காட்டணும் உறுதிமொழி எடுத்தேன். ரெண்டு லட்ச ரூபாய்க்கு மெஷின்களை வாங்கிப் போட்டேன். உற்பத்தியைப் பெருக்கினாலும், சரியான மார்க்கெட்டிங் இல்லாம லோன் கட்டமுடியாம ரொம்ப நொடிச்சுட்டேன்.

ஏமாற்றிய ஏஷென்ட்டுகள்... ஏற்றம் தந்த கலெக்டர்!

'ஏதாவது வழி சொல்லுங்க’னு, கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுத்தேன். கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் மேடம், என் மனுவைப் பார்த்துட்டு, நாங்க உங்களுக்கு எந்த மாதிரியான உதவி பண்ணணும்னு கேட்டாங்க. 'இலவச நாப்கின் திட்டத்துக்கு, அரசாங்கம் என்னோட நாப்கின்களை கொள்முதல் செய்தா உதவியா இருக்கும்’னு சொன்னேன்.

இதை எனக்கு மட்டும்னு பேசாம, கணவனை இழந்து, பிரிந்து, பிள்ளைகளைக் காப்பாத்த... இப்படிப் போராடும் பெண்கள் தட்டுத்தடுமாறி ஒரு தொழிலை கையில எடுத்தாலும், அதுக்கு மார்க்கெட்டிங் கிடைச்சாதான் காலூன்ற முடியும், அதுக்கு அரசுதான் உதவணும்'னு சொன்னேன். கலெக்டர் மேடமும், மகளிர் திட்ட அலுவலக டீம் மீட்டிங்கில், 'மகளிருக்கான தொழிலை மகளிர் திட்டத்துல இருந்து செயல்படுத்தணும்’னு பேசியிருக்காங்க.

எங்க திருச்சிப் பெண்கள் உற்பத்தி பண்ற நாப்கினை அரசோட இலவச நாப்கின் திட்டத்தோட சேர்க்கணும்னு கலெக்டர் ஆலோசனை சொல்ல, அதை அடுத்து திருச்சி, கரூர், கடலூர், திருப்பூர், ஈரோடு, சிதம்பரம், சீர்காழி, தஞ்சாவூர்னு மொத்தம் பத்து மாவட்டத்திலும் இப்போ இலவச நாப்கின் திட்டத்துல பங்கெடுக்க எங்களைப் போன்ற பெண்களுக்கு வாய்ப்புக் கொடுத்துருக்காங்க.

இதுக்காக, தமிழ்நாடு மகளிர் தொழில் முனை வோர் சங்கம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழு பெண்களை ஒருங்கிணைச்சு ஒரு மீட்டிங் போட் டாங்க. 'உங்க உற்பத்தியைப் பொறுத்து, அரசாங்கம் ஆர்டர் கொடுக்கும்’னு சொன்னாங்க'' என்றபோது வள்ளியின் கண்களில் பெருமிதம்!

தொடர்ந்தவர், ''இந்த முயற்சிகளுக்கு இடையில், 'டிக்’ (TIC) லோன் மூலமா மெஷின் வாங்கியிருந்த நான், தவணையை சரியா கட்டாததால மெஷினை ஜப்தி பண்ண வந்துட்டாங்க. மகளிர் திட்ட அலுவலகத்தில் முறையிட, 'நாங்க ஹெல்த் டிபார்ட்மென்ட் மூலமா இவங்க நாப்கினை எடுத்துக்கப் போறோம். அதுக்கு அப்புறம் இவங்க தவறாம லோன் கட்டிடுவாங்க. இப்போ மெஷினை ஜப்தி பண்ண வேண்டாம்’னு கேட்டுக்கிட்டாரு உதவி திட்ட அலுவலர். அதனால ஜப்தி நடவடிக்கையை நிறுத்தினாங்க.

அதேபோல, பிரசவ நாப்கினுக்கான அரசாங்க ஆர்டர் எனக்கும், என்னைப் போல பல பெண்களுக்கும் கிடைச்சுது. தவிர, படுக்கையில் இருக்கிறவங்க பயன்படுத்துற 'அண்டர்பேட் நாப்கின்’ செய்ய, ஒரு தனியார் நிறுவன ஆர்டரும் கிடைச்சுருக்கு. கஷ்டமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கரைய ஆரம்பிச்சுருக்கு.

ஏமாற்றிய ஏஷென்ட்டுகள்... ஏற்றம் தந்த கலெக்டர்!

இன்னிக்கு நான் 500 பேருக்கும் மேல வகுப்பு எடுத்திட்டு இருக்கேன். பலருக்கும் தொழிலுக்கான ஆலோசனைகளையும்... என் தொழிலில் நான் சந்திச்ச தோல்விகளையும், அதைக் கடந்த தைரியத்தையும் தன்னம்பிக்கைப் பாடமாவும் சொல்லிட்டு இருக்கேன். ஏன்னா, 'அப்படி இருங்க, இப்படி இருங்க’னு வாய் வார்த்தையா சொல்றதைவிட, 'நான் அப்படி இருந்தேன், இப்படி செய்தேன்’னு அனுபவப்பட்டு சொல்லும்போது, அது கேட்கிறவங்க மனசுல பதியும்ல..?!'' என்றவரிடம்,

''கஷ்டத்தில் இருக்கும் பெண்களுக்கு, இலவச பயிற்சி தந்து, அரசாங்க கடனுதவியும் பெற்றுத் தந்து, அவர்கள் தொழிலில் முன்னேற உதவிகள் செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?'' என்று கேட்டோம்.

''அதுக்கென்ன... நான் தயார். அதுவும் 'அவள் விகடன்' மூலமா இப்படியொரு உதவியைச் செய்றதுக்கு வாய்ப்பு வந்தா... அது எனக்கும் பெருமைதானே. உழைப்பால தேய்ந்த கைகளை ஒன்றிணைப்போம்!'' என்று கடந்த தடவை சந்தித்ததைவிட, இம்முறை கூடுதல் உத்வேகம் வள்ளியின் வார்த்தைகளில்!