ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

அரசியலில் பெண்கள்... என்ன சாதித்தார்கள்?

அரசியல்கட்டுரை  : ஜோ.ஸ்டாலின், மா.அ.மோகன் பிரபாகரன்படம்: மு.சரவணக்குமார்

##~##

ரசியல் என்பது, சமயங்களில் ரத்தம் சிந்தும் யுத்தம்... அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிப்பவர்களின் ஆடுகளம். வெல்வதற்கு எந்த எல்லைக்கும் போக அஞ்சாதவர்கள் நிறைந்த உலகம். ஆனால், இங்கும் நுழைந்து பெண்கள் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர்கள் நிறைய பேர். மூன்று தலைமுறைப் பெண் அரசியல்வாதிகளின் சாதனைகளும், அதன் பின்னணியில் அவர்கள் சந்தித்த சவால்களும், அனுபவங்களும் இங்கே...

ஆண் என்றால், 'சாமர்த்தியம்'... பெண் என்றால், 'கொச்சைப் பேச்சு'!

சுப்புலட்சுமி ஜெகதீசன் (தி.மு.க-வின் மூத்த தலைவர்)

''பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவள்... கணவர் வீட்டினர் தீவிரமான திராவிட இயக்க ஆதரவாளர்கள். அதுவரை திராவிட இயக்கங்கள் பற்றிய எந்த அறிமுகமும் இல்லாத எனக்கு, கணவர் வீட்டில் பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர்  கலைஞர் எழுதய புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பகுதி மக்களுக்கு சின்னச் சின்ன உதவிகளையும் என்னால் முடிந்த மட்டும் செய்துகொண்டுஇருந்தேன்.

அப்போது தி.மு.க-வில் இருந்து பிரிந்துபோன எம்.ஜி.ஆர்., அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார். 77-ம் ஆண்டு தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் பெண் வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள், என் வீட்டில் உள்ளவர்களிடம் பேசி, தேர்தலில் போட்டியிட வைத்து, வெற்றிபெறவும் வைத்தனர். மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆனேன். கைத்தறி மற்றும்  துணிநூல்துறை அமைச்சராகவும் ஆனேன். அப்போதுதான் முழுநேர அரசியல்வாதியாக உருவெடுத்தேன்.

அரசியலில் பெண்கள்... என்ன சாதித்தார்கள்?

80-ல் அ.தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட சமயத்தில் என்னைப் பிடிக்காதவர்கள் என்மீது அவதூறு பரப்பினார்கள். பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் மீது கடைசி ஆயுதமாக என்ன அவதூறைச் சொல்ல முடியுமோ அதைச் சொன்னார்கள். பெரும் மன உளைச்சலுக்கு ஆளான நான், அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிடலாம் என முடிவெடுத்தேன். இக்கட்டான இந்த சூழ்நிலையில் கணவரும் உறவினர்களும் உறுதுணையாக நின்றனர். பிறகு. தி.மு.க-வில் இணைந்தேன். போராட்டங்கள், சிறைவாசங்கள் என சென்றன நாட்கள். 89-ம் ஆண்டு தேர்தலில் ஈரோடு தொகுதியில் வென்று, சத்துணவு மற்றும் சமூகநலத்துறை அமைச்சராக சிறப்பாக செயலாற்றினேன்.

பின் வந்த காலகட்டத்தில், 'தடா’ சட்டத்தில், ஒரு கொலைக்குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கில் நானும் கணவரும் 11 மாதங்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டோம். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த எனக்கு, 92 முதல் 98 கண்டிஷன்கள் போடப்பட்டு இருந்தன. இதனால் மிகவும் சிரமப்பட்டேன்.

96-ம் ஆண்டுத் தேர்தலின்போது மொடக்குறிச்சி தொகுதியில் விவசாய கூலித் தொழிலாளர் சங்கப் பிரச்னை தீவிரமாக இருந்தது. சங்கங்களின் நிர்வாகிகள், தேர்தலை முடக்க திட்டமிட்டிருந்தனர். அவர்களை நேரடியாக சந்தித்து, 'நிச்சயம் உங்களின் பிரச்னையைத் தீர்த்து வைக்கிறேன்’ என்று உறுதி அளித்தேன். ஆனால், சொந்தக் கட்சிக்குள் என் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் இருந்தவர்களின் தூண்டுதலின் பேரில் சிலர் என் வெற்றியை சீர்குலைக்க நினைத்தனர். என்னுடன் சேர்த்து 1,033 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். என்றாலும், 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு வேட்பாளராக போட்டியிட்டு வென்று, மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றேன்.

என்னுடைய அனுபவத்தில் நான் கண்டது... பெண்கள் எந்த உயரத்துக்குப் போனாலும் அவர்களுக்கான அடிப்படைச் சிக்கல் அங்கும் இருக்கிறது. ஒரு ஆண் எந்த வழியில் முன்னேறினாலும் அதை சாமர்த்தியம் என்று பேசும் இந்த சமூகம், ஒரு பெண் நல்ல வழியில் முன்னேறினாலும்கூட அவளைக் கொச்சைப்படுத்தியே பேசுகிறது. இது அப்போதும் நடந்தது, இப்போதும் நடக்கிறது. ஆனால், நாம் இதற்காக துவண்டு போகத் தேவையில்லை. ஒரு ஆணால் இந்த சமுதாயத்துக்கு செய்யக்கூடிய நன்மைகளைவிட ஒரு பெண்ணால் அதிகமாகவே செய்ய முடியும் என்பதே என் அனுபவத்தில் நான் கண்ட நிதர்சனம்.''

அரசியலில் பெண்கள்... என்ன சாதித்தார்கள்?

இரவில் ஊர் திரும்பினால்... இம்சை பார்வை!

பாலபாரதி (மார்க்சிஸ்ட் கட்சி திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)

''என் பள்ளி ஆசிரியர் ஆ.சுப்பிரமணியத்தின் வழிகாட்டுதல்படி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் போன்றவற்றில் இணைத்துக்கொண்டேன். சோஷலிச கருத்துக்களும், அதன் மாதிரியாக அறிமுகமான சோவியத் ரஷ்யாவும் எனக்கு ஈர்ப்புக் கருவியாக இருந்தன. கல்லூரி படிப்பு முடிந்ததும், அங்கன்வாடி ஆசிரியர் வேலை கிடைத்தது. மாத ஊதியம் வெறும் 130 ரூபாய்தான். இதை அதிகரித்து தரச் சொல்லி, ஊழியர்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தினோம். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து, கட்சியின் முழுநேர ஊழியராக வந்துவிடும்படி கேட்டனர். வேலையை ராஜினாமா செய்துவிட்டு கட்சிப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டேன்.

அப்போது வெளியூர்களில் போய் கட்சி வேலை பார்ப்பதும், இரவு தாமதமாக வீடு திரும்புவதையும் எங்கள் ஊர் மக்களில் சிலரால் புரிந்துகொள்ள முடியவில்லை, சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் பல சங்கடங்களை அனுபவிக்க நேர்ந்தது. இரவு 9 மணிக்கு மேல், பேருந்தில் வரும்போது கண்டக்டர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி டிக்கெட் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சக பெண்கள் என்னைப் பார்க்கும் பார்வையும், என் காதுபட பேசும் வார்த்தைகளும் மிகுந்த தடிப்பாக இருக்கும். ஆனால், நான் அவர்களை அப்பாவிகளாகத்தான் பார்த்தேன். அதற்கான பயிற்சியை கட்சி எனக்கு அளித்து இருத்தது.

மீன்பிடித் தடைக்காலத்தில் ஆண் மீனவர்களுக்கு மட்டும் உதவித் தொகை கொடுக்கப்பட்டு வந்தது. மீன்களை விலைக்கு வாங்கி, கூடையில் வைத்து தெருத்தெருவாக போய் விற்கும் பெண்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. லட்சக்கணக்கான பெண் மீனவர்கள் தற்போது பயனடைந்து வருகின்றனர். இதுபோல நிறைய விஷயங்களை செய்துகொடுத்திருக்கிறேன்.

இளைய தலைமுறை பெண்களின் பங்களிப்பு அரசியலில் அதிகரித்துள்ளது. நான் அரசியலுக்கு வந்தபோது, இருந்த இறுக்கம் இன்று இல்லை. ஊடகங்கள் பெருகி உள்ளன. போக்குவரத்து வசதி நினைத்துப் பார்க்க முடியாத அளவில் வளர்ந்துள்ளது. இவற்றை அரசியலில் ஈடுபடப்போகும் பெண்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.''

ஒரு நாள் நீரோட்டமாக பாயும்!

ஜோதிமணி (தேசிய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர்)

''கரூரில், பெரிய திருமங்கலம் என்னுடைய ஊர். அதே ஊரில் உள்ள தலித் காலனி மக்களுக்கு குடிநீர் கிடையாது. ஊர் பொதுக்குழாயில் தண்ணீர் எடுக்க அவர்களை ஆதிக்க சாதியினர் அனுமதிக்கவில்லை. 'நம்மிடம் அதிகாரம் இருந்தால், ஒரே நாளில் பல குழாய்களை அமைத்துக் கொடுத்துவிடலாமே, அதை யார் தடுக்க முடியும்’ என்று நினைத்தேன். பஞ்சாயத்துக்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, இதற்கு முடிவு கட்ட நினைத்தேன். வீட்டில் சொன்னதும் ஒரே களேபரமாகிவிட்டது. துக்க வீட்டுக்குக் கூட்டமாகப் போய் ஆறுதல் சொல்வதைப் போல், எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் படையெடுத்து வந்து அறிவுரை சொன்னார்கள். நான் எதற்கும் மசியவில்லை. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

இதுவரை எல்லாம் சுபம். அதன்பிறகுதான் எதார்த்தம் முகத்தில் அறைந்தது. உண்மையான அரசியல் புரிந்தது. நான் நினைத்ததுபோல், அதிகாரத்தால் எதையும் செய்ய முடியவில்லை. எதிர்க்கட்சிகள், ஆதிக்க சாதி, கறை படிந்த அதிகாரிகள் என அந்தக் கூட்டணி மிகமிக வலுவாக இருந்தது. மக்களைத் திரட்டியே அதை உடைத்தேன். தலித் காலனி தண்ணீர் பிரச்னை தீர்ந்தது.

அரசியலில் பெண்கள்... என்ன சாதித்தார்கள்?

அமராவதி ஆற்றில் அரசாங்கமே அநியாயத்துக்கும் மணல் அள்ளியது. இதை எதிர்த்து மக்களும் என்னுடன் போராட வந்தார்கள். கடைசியில் நீதிமன்றத்தை அணுகி, நிரந்தர தடை பெற்றிருக்கிறோம். இவையெல்லாம் அரசியலில் என்னை மிகவும் பக்குவப்படுத்திய நாட்கள்.

ஓர் ஆண் அரசியலுக்கு வந்தால், தன்னுடைய தகுதியை நிரூபிக்க மட்டும் அவன் போராடினால் போதும். ஆனால், ஒரு பெண் அரசியலுக்கு வந்தால்... சமூகம் ஏற்கெனவே பெண்களுக்கு கட்டமைத்து வைத்துள்ள தடைகளை உடைக்க முதலில் அவள் போராட வேண்டும். இரண்டாவதாக அவளுடைய தகுதியை நிரூபிக்க அவள் போராட வேண்டும். கீழ் மட்டத்திலிருந்து இன்றைக்கு மகளிர் காங்கிரஸின் தேசிய செயலாளர் வரை வந்திருக்கிறேன். இந்த இடங்கள் எதுவும் எளிதாகக் கிடைக்கவில்லை. இதற்காக பணம் செலவழித்தது இல்லை. உழைப்பின் மூலம் என்னுடைய தகுதியை நிரூபித்தே அடைந்திருக்கிறேன்.

இன்று அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் விலகி இருக்கின்றன. அதுபோல அரசியலில் பெண்களுக்கு இருந்த இறுக்கமும் தளர்ந்துள்ளது. படித்த பெண்கள் முன்னைவிட ஆர்வமாக அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர். அனைத்துத் துறைகளையும் போல், அரசியலிலும் பெண்களின் நீரோட்டம் தொடங்கி உள்ளது. நிச்சயமாக அது மிகப்பெரிய வெள்ளமாக ஒரு நாள் பாயும்''.