ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

ரெடி... ஸ்டார்ட்... ஆக்ஷன்!

சினிமா கட்டுரை : பொன்.விமலா

##~##

 ரு திரைப்படத்தின் தாய், தந்தை... இரண்டுமே இயக்குநர்தான். நிறைய சுவாரஸ்யங்களையும், சவால்களையும் உள்ளடக்கிய 'இயக்குநர்’ பொறுப்பு, ஆண்களின் கைகளில் மட்டுமே நீடித்துக் கொண்டிருக்கிறது... இந்திய சினிமா 100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும்! என்றாலும், 'அத்திப்பூத்தாற்போல' அவ்வப்போது, 'பெண்களும் இயக்குநராகலாம்' என்று நிரூபிக்கத்தான் செய்கிறார்கள் நம் பெண்கள்! அவர்களில் சிலர் இதோ உங்கள் முன்பாக...

''பாத்ரூம் தேடி அலைந்த காலம் அது...''  லஷ்மி

''ஆண் இயக்குநர், பெண் இயக்குநர்னு பிரிச்சுப் பார்க்கத் தேவையில்லைங்கறதுதான் என்னோட பார்வை. இருந்தாலும், ஒரு வெற்றிக்கு கொடுக்க வேண்டிய உழைப்பு, காக்க வேண்டிய பொறுமை, வளர்க்க வேண்டிய சகிப்புத்தன்மை... இதெல்லாம் ஆணைவிட, பெண்ணுக்கு அதிக தேவையா இருக்குங்கறதும் உண்மை''

- பொறுப்புடன் ஆரம்பித்தார் லஷ்மி.

''1968-ல் சினிமாவுக்குள்ள வந்தேன். அப்போ என் அம்மா, 'அசைவம் சாப்பிடக் கூடாது, மது அருந்தக் கூடாது’னு ரெண்டு சத்தியங்களை என்கிட்ட வாங்கினாங்க. சினிமாவில் வேலை செய்யுற பெண்களைப் பத்தின அந்தக் கால எண்ணம் இப்படித்தான் இருந்துச்சு. தொடர்ந்து வந்த காலங்கள்ல... இயக்கம், ஒளிப்பதிவு, பாடல், இசைனு சினிமாவோட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் கொடி நாட்டினப்போ, அத்தனை சந்தோஷம் எனக்கு!  

நடிகையான எனக்கு, இயக்குநர் ஆசை மெள்ள எட்டிப் பார்க்கவே, பாலச்சந்தர் சார்கிட்ட சொன்னேன். 'நல்லா நடிக்கிறியே... எதுக்கு டைரக்ஷன்?’னு கேட்டவர், 'சரி, அதுக்கேத்த உழைப்பைத் தர தயாரா இரு’னு சொல்லி, தானே தயாரிப்பாளரானார். 81-ம் வருஷத்துல 'மழலைப்பட்டாளம்’ படம் மூலமா 'டைரக்டர் லஷ்மி’ ஆனேன். பிரபல எழுத்தாளர் சாவி, 'படம் நல்லா ஓடினா அது லஷ்மிக்கு நல்ல பேரு, ஓடாம போனா பாலச்சந்தருக்கு கெட்ட பேரு’னு சொல்லி, எனக்கு ஏற்பட்டிருக்கற நெருக்கடியை உணர வெச்சார். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், கவியரசர் கண்ணதாசன், வசனகர்த்தா விசு, ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன்னு பலமானவங்களோட சேர்ந்து, தைரியமா படவேலைகளைப் பார்த்தேன். 'மழலைப்பட்டாளம்’ தமிழ், கன்னடம் ரெண்டு மொழிகள்லயுமே ஹிட்.

ரெடி... ஸ்டார்ட்... ஆக்ஷன்!

ஒரு படத்தை முடிச்ச பிறகுதான், டைரக்ஷன்ங்கிறது எத்தனை சவாலான வேலைங்கறதை புரிஞ்சுகிட்டேன். அப்ப எல்லாம் டைரக்ஷனுக்கு சம்பளமும் குறைவு. எல்லாத்தையும்விட, பெண் என்கிறதால களத்தில் சந்திக்க வேண்டிய சவால்கள் நிறைய. முக்கியமா, அவுட்டோர் ஷூட்டிங்னா... பாத்ரூம் போக மறைவிடம்கூட கிடைக்காது. ஒரு முறை நானும் ஆச்சியும் கார்ல போயிட்டிருந்தப்போ, வழி நெடுக கூட்டம் நின்னு வேடிக்கை பார்த்தாங்க. 'சரி, ரெண்டு கிலோ மீட்டர் தள்ளிப் போனா, பாத்ரூம் போகலாம்’னு அசௌகரியத்தோட பயணிச்சு, ஓரிடத்துல வண்டிய நிறுத்தினா, எங்களுக்கு முன்னயே 50, 60 சைக்கிள் நின்னுச்சு. 'எப்படியும் இந்தப் பக்கமாதான் நீங்க கார்ல போவீங்கனு காத்திருந்தோம். எங்க அதிர்ஷ்டம் கார்ல இருந்து இறங்கிட்டீங்க’னு எல்லாரும் சொல்ல, நொந்துட்டோம்.

இப்படி, சினிமாங்கறது பெண்களுக்கு சிரமமான களமா இருந்த காலம் அது. இப்போ 'கேரவேன்’ல இருந்து ஹைடெக் டெக்னாலஜி வரை பெண்களுக்கு சினிமா சிநேகமாகியிருக்கிறது, சந்தோஷமா இருக்கு!''

''வெற்றியை மக்கள் தீர்மானிக்க வேண்டும்!''  ஸ்ரீபிரியா

''சினிமா டைரக்ஷன்ல எனக்கு ரோல் மாடல், சாவித்ரி அம்மாவும் பானுமதி அம்மாவும்தான். அந்த பிரமிப்புதான் என்னையும் ஒரு இயக்குநராக்கியது...''

- புன்னகையுடன் ஆரம்பித்தார் ஸ்ரீபிரியா.

''1980-களில்தான் படம் இயக்கும் ஆசை வந்தது. 'சாந்தி முகூர்த்தம்’ படம் எடுத்தேன். நல்லா ஓடிச்சு. தமிழ்ல ரெண்டு படம், கன்னடத்துல ரெண்டு படம்னு மொத்தம் நாலு படங்கள் இயக்கியிருக்கேன். தவிர, நிறைய தொலைக்காட்சித் தொடர்களும் இயக்கியிருக்கேன். என்னைப் பொறுத்தவரை ஒரு பெண், இயக்குநரா இருக்கிறது அசாத்தியமான விஷயம். ஏன்னா, ஒரு ஆண், '24 x7 இந்தப் படத்துக்காக நான் உழைச்சுருக்கேன்...’னு பேட்டி கொடுப்பது போல, தன் வேலையை மட்டும் பார்த்தா போதும். அதுவே ஒரு பெண், தன்னோட குடும்பம், குழந்தைனு எல்லாத்தையும் முதுகுல சுமந்துட்டே வேலை பார்க்கணும்; சமுதாயத்தோட வார்த்தைகளையும் ஒரு பக்கம் கவனிச்சுட்டே இருக்கணும்.

ரெடி... ஸ்டார்ட்... ஆக்ஷன்!

பொதுவா, சினிமா எப்போதும் ஒரு ஆணோட பார்வையிலேயே பயணிச்சு வந்திருக்கு. பெண் இயக்குநர்கள் அதை கையிலெடுக்கும்போது, நிச்சயமா கண்ணியமான, சமூகப் பொறுப்புள்ள படைப்பாதான் கொடுப்பாங்க. உதாரணமா, பலாத்கார காட்சியை 'தத்ரூபமா’ எடுக்கிறதா சொல்லி, ஆண் இயக்குநர் கொச்சையாக்கலாம். ஆனா, என் படத்தில் வந்த பலாத்கார காட்சியை, ஒரு பெண்ணோட உடம்பை கேமராவில் வெளிப்படுத்துறதா இல்லாம, நாகரிகமா எடுத்திருப்பேன். அதேபோல, குத்துப் பாட்டு, இரட்டை வசனங்கள்னு இந்த கசடெல்லாம் கழிஞ்ச நல்ல சினிமாவை பெண் இயக்குநர்கள் கொடுப்பாங்க. இப்ப நான் இயக்கியிருக்கற 'மாலினி 22’ படமும் இந்த ரகம்தான்.

அப்ப எல்லாம் ஒரு படத்தோட வெற்றியை, மக்களே தீர்மானிப்பாங்க. கூட்டம் கூட்டமா தியேட்டருக்கு வருவாங்க, படம் நல்லாயிருந்தா மத்தவங்களுக்கும் போய் சொல்லி, வர வைப்பாங்க. ஆனா, இப்போ மீடியா விமர்சனங்களைப் பொறுத்தே படத்தோட வெற்றி அமையுது. படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே ஃபேஸ்புக், டிவிட்டரில் எல்லாம் தெரிஞ்ச மேதாவியா நெகட்டிவ் கமென்ட்ஸ் கொடுக்கறவங்க நிறைய பேர் கிளம்பிட்டாங்க. படைப்பாளிகளோட வியர்வையை இந்த சமூக வலைதளங்கள், நொடிகள்ல சுலபமா சிதைச்சுடுது.''

''நான் அதிர்ஷ்டசாலி!''  கிருத்திகா உதயநிதி

''தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டத்திலும், மத்திம கட்டத்திலும் ஒரு படம் எடுக்க இயக்குநர், அதிலும் பெண் இயக்குநர் அதிக சிரமப்பட வேண்டி இருந்தது. ஒரு ஷாட் எடுக்க 100 டேக் வாங்கி, வேலைக்கு நடுவில் மர நிழலில் இளைப்பாறி, ஒரு படம் இயக்க பல படங்களில் உதவி இயக்குநரா வேலை பார்த்துனு... அந்த கஷ்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போ ஃபிலிம் மேக்கிங்கை டெக்னாலஜிக்கலா சுலபமாக்கின இந்தத் தலைமுறையில் இயக்குநராகி இருக்கும் நான், அதிர்ஷ்டசாலிதான். இப்போ திரைத்துறைக்கு வழிகாட்ட நிறைய படிப்புகள் இருக்கு, உதவி இயக்குநராகித்தான் இயக்குநர் ஆகணும்ங்கிற அவசியமில்லை, ஷாட் எடுத்து முடிச்சதுமே மானிட்டர்ல பார்த்து கரெக்ஷன்ஸ் பண்ற வசதி இருக்கு.  

டைரக்ஷன் ஏரியாக்குள்ள நான் வந்ததே சுவாரஸ்யமானது. ஸ்கிரிப்ட் எழுதுறது, என்னோட ஹாபி... பேஷன். பொதுவா எல்லா டைரக்டர்களும் அவங்களோட ஸ்கிரிப்டையே இயக்கினதால, எனக்கு வாய்ப்புக் கிடைக்கல. ஒரு தடவை டைரக்டர் ராஜேஷ்கிட்ட என் ஸ்கிரிப்டை காட்டினப்போ, 'நீங்களே ஏன் டைரக்ட் பண்ணக் கூடாது?’னு கேட்டார். அப்புறம் ஆரம்பிச்சதுதான் 'வணக்கம் சென்னை’.

ரெடி... ஸ்டார்ட்... ஆக்ஷன்!

என்னோட ஷூட்டிங் ஸ்பாட் ரொம்ப கலகலனு ஜாலி ஏரியாவாத்தான் இருக்கும். யார்கிட்டயும் அசிஸ்டென்டா வேலைப் பார்க்கல. அதனால எனக்கு ஒரு டைரக்டரா மத்த ஆர்ட்டிஸ்டை எப்படி வேலை வாங்கணும்னுகூட தெரியாது. ஏதாவது சரியில்லைனாலோ, மாத்தி பண்ணலாம்னு தோணினாலோகூட யார்கிட்டயும் கோபமா வெளிப்படுத்த மாட்டேன்.

ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகு டைரக்ஷன்ல இயங்க முடியுதுனா, அதுக்கு ஃபேமிலி சப்போர்ட்தான் முழுக்காரணம். இன்னிக்கு நிறைய பெண்கள் குறும்பட இயக்குநரா வர்றாங்க. ஆனா, வந்த வேகத்துலயே காணாம போயிடறாங்க. அவங்களுக்கும், 'நீ தாராளமா, தைரியமா போ...’னு சொல்ற வீடு இருந்தா, பெண்களோட வெற்றி, திரைத்துறையில் இன்னும் அகலமாகும்!''