ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

“பாட்டும் பேச்சும் எனக்கு கை வந்த கலை!”

சாரதா நம்பி ஆரூரன்ஆன்மிகம் கட்டுரை : எஸ்.கதிரேசன்

##~##

''வாழ்க்கையில் ஆன்மிகம், தொழில் இரண்டும் ஒன்றாக அமையப் பெற்றவர்கள் பாக்கியவான்கள். அதோடு தமிழும் சேர்ந்துகொண்டால், அதுதான் முக்தி!''

- ஒவ்வொரு வார்த்தையிலும் நிதானம் காக்கிறார், சாரதா நம்பி ஆரூரன்; தனது பேச்சுத் திறத்தால் ஆன்மிகச் சொற்பொழிவுகளோடு, பட்டிமன்ற மேடைகளையும் அலங்கரிக்கும் 'கலைமாமணி’, 'செந்தமிழ் விறலி’ டாக்டர் சாரதா நம்பி ஆரூரன்!

''திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில்தான் சொந்த ஊர். பேச்சாளராக வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. பள்ளியில் படிக்கும்போதுகூட பாட்டுதான் என் அடையாளமாக இருந்தது. என் அம்மா ஜானகி, 60 வருடங்களுக்கு முன்பே மேடையில் பாடியவர். சின்ன வயதிலேயே கந்தரனுபூதி, திருப்புகழ், தேவாரம் என சைவ சமயப் பாடல்களையெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தவர், அம்மாதான். அப்பா, அய்யம்பெருமாள் பிள்ளை, வணிக வரித்துறை அதிகாரி. எங்கள் உறவினர்கள் சுப்புஆறுமுகம், ரா.செல்வகணபதி, சுகி.சிவம் என பலரும் மேடைப் பேச்சாளர்களாக வலம் வருகிறவர்கள்தான்'' என்று சொல்லும் சாரதா, எம்.ஏ. தமிழ் இலக்கியம் முடித்த கையோடு, இசையில் முறையாகப் பயிற்சி பெற்றிருக்கிறார்.

''என் புகுந்த வீட்டிலும் மறை.திருநாவுக்கரசு, திரிபுரசுந்தரி, வை.குஞ்சிதபாதம் பிள்ளை என பலரும் சிறந்த பேச்சாளர்கள். கணவர் நம்பி ஆரூரன், தமிழ்க் காவலர் மறைமலை அடிகளாரின் மகள் வயிற்றுப் பேரன். திருமணத்துக்குப் பிறகு, முதன்முதலாக குன்றத்தூர், முருகன் கோயிலில், 1967-ல் சேக்கிழார் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு காரைக்கால் அம்மையார் பற்றி பேசினேன். எல்லோரும் பாராட்டினார்கள். பொதுவாக, 'பாடுகிறவர்களுக்கு மேடைப் பேச்சு வராது... பேசுகிறவர்களுக்கு பாட வராது' என்பார்கள். எனக்கு இரண்டுமே கை வந்ததால்... ம.பொ.சி. அய்யா, 'இசைப் பேருரையாக உன்னுடைய பேச்சு இருக்கிறது. இதில் உன் திறமையை வளர்த்துக்கொள்’ என்று வாழ்த்தினார். அவருடைய ஆசீர்வாதம், இன்றைக்கு நான் உலகில் தமிழர் வாழும் பகுதிகளுக்கெல்லாம் சென்று ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறேன்'' என்று பெருமிதத்தோடு சொன்னவர், தொடர்ந்தார்.

“பாட்டும் பேச்சும் எனக்கு கை வந்த கலை!”

''தோழிகளான நானும், மறைந்த அரசு மணிமேகலையும் 'கலைமாமணி’ பட்டத்துக்குரியவர்களைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினர்களாக இருந்தோம். அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம், பேச்சாளர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதில்லை என்கிற எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினோம். அந்த ஆண்டே பேச்சாளர்களுக்கு 'கலைமாமணி’ விருது வழங்க முடிவெடுத்தார். ஆனால், நாங்களே தேர்வுக் கமிட்டியில் இருந்ததால், எங்களுக்கு அந்த ஆண்டு விருது வேண்டாம் என சொல்லிவிட்டோம். அடுத்த ஆண்டு எனக்கு 'கலைமாமணி’ விருதை வழங்கினார்கள். அதன் பிறகு, நல்லாசிரியர் விருது, ஒளவை விருது, தமிழ்ச் செம்மல் விருது என பல விருதுகளைப் பெற்றாலும், கட்சி சார்பற்ற எனக்கு, 'அண்ணா விருதை’ வழங்கியது ரொம்ப சந்தோஷமாக இருந்தது!

நான் எந்த மேடையில் பேசுவதென்றாலும், முறையாக குறிப்புகள் தயாரித்துக்கொண்டுதான் பேசுவேன். கடந்த 40 ஆண்டுகளாக தயாரித்த இத்தகைய குறிப்புகள்... இரண்டு பீரோக்கள் நிறைய என்னிடம் இன்னமும் இருக்கின்றன. ஒரு பேச்சாளராக எப்போதும் விழிப்பாகவே இருக்கிறேன். என்றாலும், சறுக்கிய அனுபவமும் உண்டு.

'ஒளவை' நடராசன் ஒருமுறை, 'தகவல்களை சொல்லும்போது கவனமா இருக்கணும். நாம சொல்ற தகவல்களைக் கேட்டு ஆயிரம் பேர் கைதட்டலாம். ஆனா, தவறாக சொன்னால் ஒரே ஒருத்தர் எழுந்து கேள்வி கேட்டாலும் சங்கடமாயிடும்’னு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதற்கேற்றாற்போல் நடந்தது அந்த சறுக்கல் சம்பவம். காரைக்குடி கம்பன் கழகம் சார்பாக நடந்த சொற்பொழிவில், 'மலையாளத்தில் ராமாயணத்தை ராகமாலிகை என 10 விதமான ராகங்களில் இயற்றியவர் சியாமா சாஸ்திரி' என்று சொல்லிவிட்டேன். அது ஆல் இண்டியா ரேடியோவிலும் ஒலிபரப்பாகிவிட்டது. நிகழ்ச்சி முடிந்ததும், 'ராகமாலிகையை எழுதியவர் சுவாதி திருநாள்’ என்று ஒருவர் திருத்தம் சொன்னார். உடனே தவறுக்கு வருத்தம் தெரிவித்து, ஆல் இந்தியா ரேடியோவுக்கு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தை அவர்கள் ரேடியோவில் வாசித்த பிறகுதான் மனம் ஆறுதலடைந்தது'' என்ற சாரதா, நிறைவாக தன் குடும்பம் பற்றியும் பேசினார்.

''என்னுடைய 39-வது வயதில் என் கணவர் நம்பி ஆரூரன் மறைந்தார். நானும் மகள் சித்ராவும் ரொம்பவே இடிந்துபோனோம். இனி என் வாழ்வு... தமிழ், ஆன்மிகம், பேச்சுதான் என முடிவெடுத்தேன். மேடைகளே, என் மனக்கவலையை மாற்றும் மருந்தாக அமைந்தன. நான் பெற்ற விருதுகள் அனைத்தையும் கணவருக்கே காணிக்கையாக்குகிறேன்!'' என்பவரின் மகள், தன் கணவர் கணபதியுடன், மதுரை அருகே 'கடம்பவனம்’ என்னும் பண்பாட்டுத் திருத்தலத்தை அமைத்திருக்கிறார்.