ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

ரேணுகா... அன்றும்... இன்றும்!

ப்ளாஷ்பேக் கட்டுரை : சா.வடிவரசு, படங்கள் : ப.சரவணகுமார்

##~##

 'அவள் விகடன்' முதல் இதழ் வெளியானது 1998-ம் ஆண்டு அக்டோபரில். அந்த காலகட்டத்தில் 'பிரேமி’ எனும் டி.வி. சீரியலில் அசத்திக்கொண்டிருந்த நடிகை ரேணுகாவின் பேட்டி, முதல் இதழில் வெளியானது. இதோ, 400-வது இதழில் வந்து நிற்கும் இந்த நேரத்தில்... 'ரேணுகாவிடம் அந்த நாட்களை நினைவுபடுத்தினால் எப்படி இருக்கும்?' என்று தோன்றவே, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் மரங்கள் சூழ்ந்த பகுதியில் உள்ள அவரது வீட்டில் போய் நின்றோம்.

''அந்தப் பேட்டி இப்போதான் வந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள 16 வருஷம் ஆயிடுச்சா..?!''

- ரேணுகாவின் 'டிரேட் மார்க்' பட்பட்பட் பேச்சு... வாசலிலேயே ஆரம்பமானது!

''அப்ப எனக்கு கல்யாணம் ஆகல. அந்த நேரம் 'பிரேமி' சீரியல்ல பரபரப்பா நடிச்சுட்டிருந்தேன். ஊரே என்னை 'பிரேமி'னு கூப்பிட்டிருந்த காலமது. அப்ப, 'அவள் விகடன்'ல இருந்து என்னை பேட்டி எடுப்பாங்கனு கொஞ்சம்கூட நினைக்கல. அதேபோல இப்பவும் நான் நினைக்கல. ரெண்டுமே சந்தோஷ சர்ப்ரைஸ்தான்... ரொம்ப பெருமையா இருக்கு'' என்று கொஞ்சநேரம் அந்த நாள் நினைவுகளில் மூழ்கியவர், அடுத்ததாக அதற்கும் முந்தைய நாட்களுக்குள் புகுந்தார்.

ரேணுகா... அன்றும்... இன்றும்!

''திருச்சி, ஸ்ரீரங்கம்தான் சொந்த ஊர். சாதாரண பிராமணக் குடும்பத்தில் பிறந்த மூத்த பெண் நான். ரெண்டு தம்பிங்க. எனக்கு 10 வயசானப்போ, வழக்கறிஞரான என் அப்பா தவறிட்டாரு. இளமை முழுக்க வறுமை. அப்போ நான் பட்ட கஷ்டங்கள்தான், வாழ்க்கையில் என் வழியில் வந்த எல்லா சவால்களையும் எதிர்த்துப் போராடுற வைராக்கியத்தை தந்துச்சு! இப்பவும் சரி, அப்பவும் சரி... பிரச்னைகளைக் கண்டு கண்ணைக் கசக்கிட்டிருக்கிறது கொஞ்சம்கூட பிடிக்காது. எந்த விஷயமா இருந்தாலும் தூக்கிப் போட்டுட்டு, அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டா... அடுத்த நிமிஷமே பிரச்னைகள் ஓடி மறைஞ்சுடும்தானே!'' என்று சொல்லும் ரேணுகாவின் ஸ்ரீரங்கம் டு சென்னை கிராஃப்... மேடு, பள்ளங்கள் பலவற்றையும் தாண்டியது. முப்பது வருடங்களுக்கு முன், ஊர்க்காரப் பெண்ணாக இருந்த அவர், மீடியாவில் தன்னை நிலைநிறுத்த எடுத்த முயற்சிகளும் கொடுத்த உழைப்பும் அதிகம்!

''திருச்சி, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில பி.ஏ. எக்கனாமிக்ஸ் சேர்ந்தேன். குடும்பச் சூழ்நிலையால படிப்பைத் தொடர முடியல. 'ஒரு சினிமா நடிகையாகணும்’னு முடிவெடுக்க, இந்த ஸ்ரீரங்கத்துப் பொண்ணுக்கு எப்படி தைரியம் வந்ததுனு தெரியல. அது அப்போ அவ்வளவு சுலபமான காரியமும் இல்ல. ஆனா, என் முடிவில் உறுதியா இருந்தேன். இதுக்காகவே சென்னை, மேற்கு மாம்பலத்துல குடியேறினோம்.

ரேணுகா... அன்றும்... இன்றும்!

என்னோட நடிப்பு ஆர்வத்தைத் தெரிஞ்சுகிட்ட பக்கத்துவீட்டுக்காரர், 'கோமல் சுவாமிநாதன்’ நாடக குழுவுல சேரச் சொன்னார். அதன்படியே சேர்ந்தேன். 'இருட்டுல தேடாதீங்க’... இதுதான் நான் நடிச்ச முதல் நாடகம். பத்து ஆண்களோட ஒரே பொண்ணா நடிச்சேன். இதுலயெல்லாம் எனக்கு எந்த சவாலும் இல்ல. 'இந்த மேடையில நம்மள தொடர்ந்து நிலைநிறுத்திக்கணும்'ங்கிறது மட்டும்தான் ஒரே சவாலா மனசுக்குள்ள ஓடிட்டிருந்துச்சு. கொடுத்த ஒவ்வொரு டயலாக்கையும்

ரேணுகா... அன்றும்... இன்றும்!

துல்லியமாவும், கடைசி வரிசையில இருக்குறவங்க வரைக்கும் கேட்கற மாதிரி சத்தமாவும் பேசினேன். பலருக்கும் என்னோட நடிப்பு, பேச்சு பிடிச்சுப் போச்சு. நாலு வருஷமா தொடர்ந்து பல நாடங்கள்ல நடிச்சேன். இடையில், 'பட்டர்ஃப்ளை’ உள்ளிட்ட சில விளம்பர வாய்ப்புகளும் வந்துச்சு'' என்றவர், தொடர் தேடலால் ஒருவழியாகத் தொட்டிருக்கிறார் வெள்ளித்திரையை... கதாநாயகியாக!  

''காமெடி நடிகர் 'இடிச்சபுளி' செல்வராஜ், 'டி.ராஜேந்தர் தன்னோட அடுத்த படத்துக்கு புது கதாநாயகியைத் தேடிட்டிருக்கார். நீ போய் வாய்ப்புக் கேளு’னு சொன்னார். ராஜேந்தர் சாரும் என்னை 'ஓ.கே’ பண்ணினார். பொதுவா, ராஜேந்தர் சாருக்கு எந்த டயலாக்கையும் பேப்பர்ல எழுதுற பழக்கமில்ல. ஸ்பாட்ல தோணுறதை அப்படியே சொல்வார், அதை கற்பூரம் மாதிரி பிடிச்சுக்கணும்னு எதிர்பார்ப்பார். கிடைச்ச வாய்ப்பை காப்பாத்திக்கணும்ங்கிற போராட்டத்துல, ஒவ்வொரு காட்சியையும் சின்ஸியரா செய்தேன். 'சம்சார சங்கீதம்’ங்கிற அந்தப் படம் வெளியானப்போ, என் நடிப்புக்கு நல்ல வரவேற்பு.

தொடர்ந்து, மலையாளப் படங்கள்ல நடிச்சேன். அதில் ஒரு படத்தைப் பார்த்துதான், பாலச்சந்தர் சார், தன்னோட 'கையளவு மனசு’ சீரியல்ல முதல் வாய்ப்புக் கொடுத்தார். அதுக்கப்புறம் தொடர்ந்து அவரோட சீரியல்கள்ல எனக்கு நிச்சயம் ஒரு கேரக்டர் இருக்கும். சொல்லப்போனா, சினிமாவைவிட, சீரியல்தான் தமிழ்நாட்டுக்கே என்னை பிரபலப்படுத்தியது, பாராட்டுகள் குவிய வெச்சது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டு தொடர் முயற்சியால, இந்த ஸ்ரீரங்கத்துப் பெண்ணும் ஒரு செலிப்ரிட்டி ஆனேன்!'' என்றவர்,  

ரேணுகா... அன்றும்... இன்றும்!

''என்னோட குரலை, ஆரம்பத்தில் நெகட்டிவ்வாவே நினைச்சுருந்தேன். தோழிகளில் இருந்து பலரும், 'ஆம்பளக் குரல்’னு கேலி பண்ணியிருக்காங்க. இதை ஒரு முறை பாலச்சந்தர் சார்கிட்ட சொல்லி, 'என் குரல் இப்படி அமைஞ்சுடுச்சே சார்’னு வருத்தப்பட்டேன். அதுக்கு அவர், 'உன்னோட 'ப்ளஸ்’ஸே இந்தக் குரல்தான். அதுதான் மத்தவங்ககிட்ட இருந்து உன்னைத் தனிச்சு காட்டுது’னு சொன்னார். அதுக்கு அப்புறம் என்னோட தன்னம்பிக்கை இன்னும் கூடிச்சு'' என்றவர், இதுவரை 40-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள், 90-க்கும் மேற்பட்ட மலையாள படங்கள், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீரியல் எபிசோட் என நடித்திருக்கிறார். இடையில் தயாரிப்பாளர் குமரனுடன் திருமணம் முடிந்திருக்கிறது. இப்போது கணவருடன் சேர்ந்து ஒரு பள்ளியை நடத்தி வரும் ரேணுகா,

''அது என் கணவரோட கனவு புராஜெக்ட். நீலாங்கரையில 'ஜி.டி அலோஹா வித்யா மந்திர்’னு ஒரு சி.பி.எஸ்.இ. பள்ளியைத் தொடங்கியிருக்கோம். படிப்பு தவிர நடிப்பு, நாடகம், நடனம்னு பலவிதமான பயிற்சிகளையும் கொடுக்கிறோம். பள்ளியில எந்தப் பொறுப்பையும் நான் எடுத்துக்கல. பொதுவா நான் ஒரு விஷயத்தில் கமிட் ஆனா, அதுக்கு 100 சதவிகிதம் வொர்க் பண்ணணும்னு நினைப்பேன். என்னோட ஷூட்டிங் ஷெட்யூல்கள், பள்ளியில் என்னோட பொறுப்பை தொந்தரவு செய்யும்ங்கிறதால, அதிலிருந்து விலகி இருக்கேன்'' என்றவரிடம்,

''நடிகை ரேணுகா, வீட்ல எப்படி?’' என்றால், கலகலவெனச் சிரிக்கிறார்.

''வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமே எனக்கு வெளியுலகம் மறந்துடும். சராசரி குடும்பப் பெண்ணா, வீட்டு வேலை செய்றதுனா, எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. சோம்பேறித்தனம் சுத்தமா பிடிக்காது. நிறைய புக்ஸ் படிப்பேன். குறிப்பா, 'அவள் விகட’னின் தொடர், தீவிர வாசகிகள்ல நானும் ஒருத்தி! பெண்கள் சமூகத்துக்கு பல நல்ல விஷயங்களை 'அவள் விகடன்' செய்துட்டு வருது. இது, இனிவர்ற காலத்துலயும் தொடரணும்னு ஆசைப்படுறேன். இதுதான் இந்த தீவிர வாசகியோட ஒரேயொரு கோரிக்கை!''

- சொல்லிவிட்டு, கலகலவெனச் சிரிக்கிறார் ரேணுகா... வெண்கல குரல் வீட்டுக்கு வெளியேயும் பரவுகிறது!