Published:Updated:

' வி லவ் யூ விஜி !'

பெண்கள் கொண்டாடும் ஆர்ஜே !

''ஜஸ்ட் ஒரு விதையைக் கொடுத்தா... ஒரு பூந்தோட்டத்தையே உருவாக்குற சாமர்த்தியம் நம்ம பொண்ணுங்ககிட்ட இருக்கு. ஆனா... தயக்கம், வாய்ப்பின்மைனு சில விஷயங்கள்தான் அவங்கள தலையெடுக்க விடாம பண்ணுது. தடைகள உடைச்செறிஞ்சு ஜெயிக்கறதுக்கு, நான் அவங்களுக்கு ஒரு தூண்டுகோலா இருக்கேன்!''

- ஹெட்போனை வருடியபடி ஹெல்த்தியான வார்த்தைகளை உதிர்க்கிறார் விஜி.

' வி லவ் யூ விஜி !'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

கோவை, 'ரேடியோ சிட்டி’ பண்பலையின் ஆர்ஜே -வான விஜி, கலகலவெனப் பேசுவது, மளமளவெனப் பாடல்களைத் தட்டிவிடுவது என்று ஒரு ஆர்ஜே-வுக்கான வழக்கமான அடையாளங்களையும் தாண்டி வேறுசில நற்காரியங்களையும் செய்து வருகிறார். ஆம்... விஜியின் முயற்சியால் கைத்தொழில் கற்றுக்கொண்டு கணிசமாக சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோவை பெண்கள் பலரும். 'வி லவ் யூ விஜி!’ என்று இவரைக் கொண்டாடுகிறார்கள் அந்தப் பெண்கள். அப்படி என்னதான் செய்கிறார் விஜி?!

அது ஒரு ஞாயிற்றுக்கிழமையின் முற்பகல் நேரம். அந்த அலுவலகத்தின் வரவேற்பறையைத் தாண்டினால், வட்டவடிவில் பெண்கள் உட்கார்ந்து உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்க, புடவைகளுக்கு 'ஆரி வொர்க்’ செய்யும் கலையைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஒரு எக்ஸ்பர்ட். கூடவே நின்றிருந்த விஜி, ''அக்காஸ்... அடுத்த முறை வர்றப்போ நீங்களும் இதைப் பண்ணி அசத்தணும்!’ என்று ஜாலியாக ஆர்டர் போட்டுவிட்டு நம் பக்கம் திரும்பினார்.

''வழக்கமான ஆர்ஜே-வாதான் கொஞ்ச நாளைக்கு முன்ன வரைக்கும் இருந்தேன். ஒரு தடவை நாங்க நடத்துன போட்டியில 'கிஃப்ட் வவுச்சர்’ ஜெயிச்ச ஒரு பெண்ணை, எங்க ஸ்டூடியோவுக்கு வந்து வாங்கிக்கச் சொன்னப்போ, 'வெளியில வந்தெல்லாம் பழக்கமில்லையே!’னு சொன்னாங்க. பயங்கர ஆச்சர்யத்தோட, நானே நேர்ல போய் கிஃப்ட் வவுச்சரைக் கொடுத்தேன். தயக்கத்தோடவும், கூச்சத்தோடவும், மிரட்சியோடவும் அவங்க எங்கிட்ட பேசினது எனக்குள்ளயே ஓடிட்டிருந்துச்சு. இந்த சிட்டிக்குள்ளே நைட்டு பனிரெண்டு மணிக்கு வேலையை முடிச்சுட்டு டூ-வீலர்ல தனியா பல பொண்ணுங்க போயிட்டிருக்காங்க, ஆனா... பகல்ல டவுன் பஸ்லகூட வரத் தயங்கற பெண்களும் இருக்காங்களேங்கற உண்மை எனக்குள்ள பாரமா இறங்குச்சு. அடுத்தடுத்த சந்தர்ப்பங்கள்ல, இப்படிப்பட்ட பெண்களோட சதவிகிதம் எக்கச்சக்கமா இருக்குங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டேன்'' என்பவருக்கு அந்த நிலையை மாற்ற, ஏதாவது செய்ய வேண்டும் என்று மனது தவித்திருக்கிறது.  

''எதிர்பாராதவிதமா கணவரை இழந்து குடும்பப் பாரத்தால நொடிஞ்சு போன குடும்பத் தலைவி, சின்ன வயசுலேயே கல்யாணம் முடிச்சு, வீட்டுக்குள்ளே ஒரு புழுவாட்டம் அடங்கிக் கிடக்கிற பெண்கள், வயசான காலத்துல பசங்களோட பராமரிப்பு இல்லாம சாப்பாட்டுச் செலவுக்கே காசில்லாத வயசான பெண்கள்... இவங்களையெல்லாம் கைதூக்கிவிட நாம் ஏதாவது செய்யலாமே?னு எங்க சீஃப்கிட்டே கேட்டேன். 'நல்ல விஷயம்... பண்ணுவோம்!’னு அவர் சப்போர்ட் கொடுத்தார். பாலா, சாலமன்னு எங்க ஸ்டூடியோ டீம் மெம்பர்களும் ஆர்வமா முன் வந்தாங்க. அந்தக் கூட்டு அக்கறையோட வெளிப்பாடா உருவானதுதான், 'மகளிர் மேளா’.

' வி லவ் யூ விஜி !'

சுயமா சம்பாதிக்கணுங்கற சூழலும் ஆர்வமும் இருந்தும், அதுக்கான வழி தெரியாம வாடிட்டு இருக்கற பெண்கள் பட்டியலைத் தேடித் தேடித் தயாரிச்சேன். கிட்டத்தட்ட ஐந்நூறு பேர் சேர்ந்தாங்க. ஒன்று விட்டு ஒன்றுனு மாதத்துல இரண்டு ஞாயிறுகள் சுயதொழில்கள் பற்றின 'வொர்க்ஷாப்’ நடத்துறதுதான் திட்டம். 'இந்த ஞாயிற்றுக்கிழமை பாட் பெயின்ட்டிங் கற்றுக் கொடுக்கப் போறோம்’னு என்னோட நிகழ்ச்சியில அறிவிப்பேன். ஏற்கெனவே பட்டியல்ல இருக்கற பெண்களோட, ஆர்வமிருக்கற மத்த பெண்களும் வந்து கலந்துக்குவாங்க. இங்க வகுப்பெடுக்கற வர்ற எக்ஸ்பர்ட்கள் கட்டணம் எதுவும் வாங்கறதில்லை. அதனால, முழுக்க முழுக்க இலவசமாதான் இந்த வொர்க்ஷாப் நடத்தப்படுது!'' என்பவருக்கு... இப்போது இதன் பாஸிட்டிவ் ரிசல்ட்டில் அத்தனை மகிழ்ச்சி!

''ஃபர் துணி பொம்மை, ஜுவல் மேக்கிங், ஹேண்ட் எம்ப்ராய்டரி, பெயின்ட்டிங், பியூட்டி கோர்ஸ்னு ஆரம்பிச்சு பல விஷயங்களைக் கற்றுத் தர்றோம். சேலையில 'ஆரி வொர்க்’ பண்ணிக் கொடுக்க ஐந்நூறு ரூபாய் கட்டணம். இங்கே வந்து அதைக் கத்துக்கிட்டவங்க இப்போ 'ஆரி வொர்க்’ பண்றதையே தொழிலா எடுத்துச் செய்றாங்க. நாங்க சொல்லிக் கொடுத்த கலைகளை அடிப்படையா வெச்சு பல பெண்களும் இப்ப டாப் கியர்ல கிளம்பியிருக்காங்க, நிறைவான வருமானம் பார்க்கறாங்க!'' என்று சந்தோஷப்பட்டவர்,

''வருமானத்துக்கான வழி மட்டுமில்லை... இந்த 'வொர்க்ஷாப்’பால அவங்க மனசுக்கும் புத்துணர்ச்சி கிடைக்குது. சீரியல் மாமியாராட்டமா 'உம்’னு வந்த அக்காஸ்கூட... இப்போ சினேகா மாதிரி சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அடுத்ததா, இவங்களுக்கு எல்லாம் 'ஜாப் கவுன்சலிங்’ கொடுக்குறதுக்கான முயற்சிகளில் இறங்கிஇருக்கோம்!'' எனும் விஜி, 'அம்மா சீக்கிரம் வந்துடுவாங்க...’ என்று வகுப்பில் அமர்ந்திருக்கும் 'அக்காஸ்’களின் குழந்தைகளை மிமிக்ரி, பாட்டு, கதை என கவனித்துக் கொள்கிறார்... தானும் ஒரு குழந்தையாகி!

பின்னுங்க விஜி!

- எஸ்.ஷக்தி
படங்கள்: கே.ஆர்.வெங்கடேஸ்வரன்