Published:Updated:

‘கல்வி’ச்சாலை to ‘கனவு’ச்சாலை...

ஆடுகளம் ஸ்டெல்லாவின் அனுபவப் பயணம் பொன்.விமலா, படம்: தே.தீட்ஷித்

''சினிமாவுல நடிக்கறதுக்காக தலைமைஆசிரியை வேலையில இருந்து வி.ஆர்.எஸ். (கட்டாய ஓய்வு) வாங்கிட்டு வந்தப்போ, என் னோட சம்பளம்... 56,000 ரூபாய். அதுல ஒரு பாகம்கூட நடிப்புக்காக வாங்க முடியாதுனு பலரும் முன்கூட்டியே எச்சரிச்சாங்க. இருந்தாலும், சினிமாவை நான் தொழிலா பார்க்கல... கலையா பார்க்கிறேன்!''

- ஆச்சர்யம் தந்து பேசுகிறார், 'ஆடுகளம்’ ஸ்டெல்லா.

ஆசிரியை டு நடிகை... அதிக பழக்கமில்லாத வழியில் பயணிக்கும் அனுபவத்தைப் பேசுகிறார் ஸ்டெல்லா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''எனக்கு 47 வயசு இருக்கும்போது நடிக்க வந்தேன். இப்ப 53 வயசாகுது. நான் நடிக்க வந்த கதையை, இன்னிக்கு நினைச்சாலும் எனக்கே ஆச்சர்யமாதான் இருக்கு. மதுரை, வாடிப்பட்டிதான் சொந்த ஊர். எம்.ஏ., இங்கிலீஷ்., எம்.ஏ., பொலிட்டிக்கல் சயின்ஸ் படிச்ச நான்... தனியார் பள்ளியில தலைமை ஆசிரியரா வேலை பார்த்துட்டு இருந்தேன். 'அனைவருக்கும் கல்வி’ இயக்கம் மூலமா ஒரு புராஜெக்ட்டுக்காக ஊர்ல நாடகம் நடத்தினோம். அதுல நடிச்ச என்னை, பலரும் வியந்து பாராட்டினாங்க. அதுக்கப்புறம்தான் என் வாழ்வில் அந்த திருப்புமுனை...'' என்றவர், கண்களில் புதுத்தெம்புடன் தொடர்ந்தார்.

‘கல்வி’ச்சாலை to  ‘கனவு’ச்சாலை...

''பொதுவா, ஸ்கூல்ல எல்லோரும் என்னை 'கலகல டீச்சர்’னுதான் சொல்வாங்க. அந்த அளவுக்கு என் வகுப்புகள் சுவாரஸ்யமா இருக்கும். பசங்க எல்லாரும் என் வகுப்புனா குஷி ஆயிடுவாங்க. 'ஸ்கூல்ல பொறுப்பான தலைமை ஆசிரியை... அதேசமயம், வீட்டுல அன்பான இல்லத்தரசியா என் பொறுப்புகளை ஒருபோதும் மறந்ததில்லை. கணவர், மின்சார துறையில வேலை பார்த்து ஓய்வு பெற்றுட்டார். எங்களுக்கு மூணு பசங்க. என் வாழ்க்கை இப்படி சத்தம் இல்லாம போயிட்டு இருந்த நேரத்துலதான், எங்க நாடகத்தைப் பார்த்த டைரக்டர் ராசுமதுரவன், அவரோட 'பாண்டி’ படத்துல சின்ன ரோல்ல நடிக்க வெச்சார். அப்புறம் சினிமாவையே அளவுக்கு அதிகமா நேசிக்க ஆரம்பிச்சுட்டேன்.

பாடம் சொல்லிக் கொடுக்கறது எப்படி ஒரு கலையோ, அதேமாதிரி சினிமாவும் அழகான கலைனு உணர்ந்த எனக்கு... அந்தத் துறையில என் திறமையை வெளிப்படுத்துற ஆசையும் ஆர்வமும் அதிகமாச்சு. ஆசிரியர் பணி, சினிமா ரெண்டிலும் ஒரே நேரத்துல கவனம் செலுத்த முடியாம போனதால, வேலையை விட்டுட்டேன். அதுக்கப்புறம் 'ஆடுகளம்’ பட வாய்ப்பு, சினிமாவில் நல்ல விசிட்டிங் கார்டா அமைஞ்சுது!'' என்றவர், 'ஆடுகளம்’ படத்தில் தனுஷின் அம்மாவாக கரகர குரலில், தன் எதார்த்த நடிப்பின் மூலமாக பலரையும் கவனிக்க வைத்தார்.

''அந்த கதாபாத்திரம்... 'யாரது... புதுசா?’னு திரைத்துறையில பலரையும் கேட்க வெச்சது. அதுல இருந்து நான் 'ஆடுகளம்’ ஸ்டெல்லா ஆனேன். அதுவரை பிளாக் போர்டு, சாக்பீஸ், ஸ்டூடென்ட்ஸ்னு ஆசிரியையா இருந்த நான்... மேக்கப், கேமரா, டப்பிங்னு சினிமா உலகத்துல ஒரு ஸ்டூடென்ட்டா மாறி கத்துக்க ஆரம்பிச்சேன். தனுஷ் சார், வெற்றி மாறன் சார் இவங்கள எல்லாம் நேர்ல பார்க்கும்போது, ஆரம்பத்துல பதற்றமா இருக்கும். ஐஸ்வர்யா தனுஷ் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது, ரஜினி சாரோட பொண்ணுனு அதிசயமா பார்ப்பேன். யூனிட்ல இருந்தவங்க எல்லோரும் 'புதுசா நடிக்க வந்தவதானே..?’னு எந்த அலட்சியமும் இல்லாம, சக கலைஞரா மதிப்புக் கொடுத்தாங்க. குறிப்பா தனுஷ் சார்தான் என்னோட தயக்கம், கூச்சம் எல்லாம் போக்கி என்னை இயல்பா நடிக்க வெச்சார்'' என்று சொல்லும் ஸ்டெல்லா... 'மலையன்’, 'அரும்பு மீசையும் குறும்பு பார்வையும்’, 'பரதேசி’, 'பண்ணையாரும் பத்மினியும்’ என்று தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார்.

‘கல்வி’ச்சாலை to  ‘கனவு’ச்சாலை...

''என் ஆசிரியப் பணியில் வாங்கிய சம்பளத்தில் பாதியில் பாதிகூட சினிமாவில் வாங்கல. ஆனாலும் இதில் எனக்கு ஒரு சந்தோஷம், அங்கீகாரம், ஆத்ம திருப்தி கிடைக்குது. இங்க ஒவ்வொரு கலைஞரும் தனிப்பட்ட முறையில் கடுமையா உழைக்கறாங்க. அந்த கூட்டு உழைப்போட பலன்தான் தியேட்டரில் எல்லாரையும் கைதட்ட வைக்குது. 'பரதேசி’ ஷூட்டிங் ஸ்பாட்ல, ஒரு முறை எனக்கு உடம்பு சரியில்லாம வாந்தியும், மயக்கமுமா இருந்துச்சு. சரியா வசனம் பேச முடியல. 'துணை நடிகைதானே'னு நினைக்காம, ஷூட்டிங்கையே கேன்சல் பண்ணி, மறுநாள் நடிக்க வெச்சார் பாலா சார். அவர் இப்படி நடத்தினது... 'இன்னும் சிறப்பா நடிக்கணும்'ங்கற உத்வேகத்தை எனக்குள்ள ஏற்படுத்திச்சு'' என்ற ஸ்டெல்லா,

''எந்தளவு ஆசை இருந்திருந்தா, பார்த்துக்கிட்டிருந்த வேலையை விட்டுட்டு இந்த சினிமாவுக்கு வந்திருப்பேன். அந்த ஆசை தீரத்தீர நடிக்கணும். நல்ல நடிகைனு பேர் வாங்கணும்!''

- குரலில் கூடுதல் அழுத்தம் கொடுக்கிறார்!