Published:Updated:

முடக்க நினைத்த வலியை... துரத்தியடித்த நம்பிக்கை!

ஜுவல்ஸ் தொழிலில் கலக்கும் பட்டதாரிவே.கிருஷ்ணவேணி, படங்கள்: ஆ.முத்துக்குமார்

''எப்பவும் துறுதுறு இருக்கறவள, திடீர்னு முடக்கிப் போட்டிருச்சு உடல்நிலை. உடனே சுயபச்சாதாபத்தோட, 'எனக்கு மட்டும் ஏன் இப்படி..!’னு உட்கார்ந்துடாம, 'விரும்பியதைச் செய்ய முடியலைனாலும், முடிஞ்சதை செய்வோம்’னு வாழ்க்கையை எதிர்கொண்டேன். இன்னிக்கு மறுபடியும் 'துறுதுறு’னு ஆயிட்டேன்!''

- உற்சாகம் ஊற்றெடுக்கப் பேசுகிறார்... ஃபேஷன் ஜுவல்ஸ் பிசினஸில் கலக்கிவரும் சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுதா கார்த்திகேயன்.

''பிறந்து, வளர்ந்தது கோயம்புத்தூர். எம்.ஏ., ஆங்கில இலக்கியம் படிச்ச நான், கல்லூரி நாட்களில் பரதம், கவிதை, கட்டுரைகள்னு பரிசுகள் வாங்குவேன். லீவு நாட்களில் 'பொக்கே மேக்கிங்’ கத்துக்கிட்டேன். பார்ட் டைம் பிசினஸா, பியூட்டி பார்லர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கி வித்துட்டு இருந்தேன். அடுத்ததா பி.எட். படிச்சப்போ, ஐம்பொன் கொலுசு பிசினஸும் செய்தேன். படிச்சு முடிச்ச உடனே தனியார் கல்லூரியில ரெண்டு வருஷம் லெக்சரர் வேலை பார்த்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முடக்க நினைத்த வலியை... துரத்தியடித்த நம்பிக்கை!

2001-ல், கார்த்திகேயனோடு திருமணம் ஆகி, சென்னையில் செட்டில் ஆனேன். எதிர்பாராத ஒரு விபத்தால சில மாதங்கள்லயே ஆரம்பமாச்சு... உடல்நலக் கோளாறு. அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கான அந்த மூணு நாள் வலி, எனக்கு அப்நார்மல் அவஸ்தையா இருந்துச்சு. வாட்டர் பாட்டிலைக்கூட தூக்க முடியாத அளவுக்கு, உடல் முழுக்க வலி இருந்தது. டாக்டர்கள் ரெஸ்ட் எடுக்கச் சொல்ல... 'வீட்டு வேலை, வெளி வேலை எதையும் பார்க்க வேண்டாம், ஓய்வெடு’னு சொன்னார் கணவர். கல்யாணம் வரைக்கும் நிமிஷ நேர ஓய்வில்லாம எப்பவும் பிஸியாவே வெச்சுக்கிட்டதால, அந்த ஓய்வு பெரிய பாரமா இருந்துச்சு. கணவர், அவரோட குடும்பம் மற்றும் அப்பப்போ ஊர்ல இருந்து வந்து அப்பா, அம்மா, சித்தினு எல்லாரும் என்னை டர்ன் வெச்சு பார்த்துப்பாங்க'' என்பவர், சிறிது உடல் நலம் மீண்டதும், மீண்டும் சுறுசுறுப்பாகி இருக்கிறார்.

''ஒரு இன்ஸ்டிடியூட்ல ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆசிரியரா வேலை பார்த்தேன். முதல் குழந்தை, சொந்த வீடு கட்டும் வேலைகள், இரண்டாவது குழந்தைனு வீட்டுக்குள்ளேயே பரபரப்பா இருந்தேன். இடையில், அஞ்சல் வழியில எம்.ஃபில் படிச்சு முடிச்சேன். ஆனா, மறுபடியும் அதே உடல்நலக் கோளாறு ஆரம்பமாச்சு. உடம்பைவிட, மனசைத்தான் அந்த நோய் அதிகமா தாக்கிச்சு. அதனால, மனசை நல்லபடியா வெச்சுக்கறதுக்காக, கிரியேட்டிவா ஏதாவது கத்துக்கலாம்னு முடிவு பண்ணி, ஃபேஷன் ஜுவல் கிளாஸ் போனேன். 'கல்லூரிப் பேராசிரியையாக ஆசைப்பட்ட நீ, இப்படி பாசி கோத்துட்டு இருக்கியே...’னு கணவர் வருத்தப்பட்டார். 'பிடிச்சு செய்றதால, இப்பவும் நான் 100 பர்சன்ட் ஹேப்பி!’னு பதில் சொன்னேன். உடனே என்னை உற்சாகப்படுத்தினவர், நான் செய்த ஜுவல்ஸை தன் ஆபீஸுக்கு எடுத்துட்டுப் போய் காண்பிச்சார். எல்லாரும் அன்னிக்கே ஆர்டர் கொடுக்க, சந்தோஷமா வீடு திரும்பினார். என் ஃபேஷன் ஜுவல்ஸுக்கு அன்றிலிருந்தே ஆரம்பித்தது ஃபாஸ்ட் பிக் அப்!'' என்பவர், பல மருத்துவங்களும் முயன்று பார்த்து, இறுதியில் அக்குபஞ்சர் சிகிச்சையில் குணம் பெற்றிருக்கிறார்.

''இப்போ ஃபேஷன் ஜுவல்ஸ், கிறிஸ்டல் ஜுவல்ஸ், ஒரிஜினல் ஃபேர்ல் ஜுவல்ஸ், வகை வகையான கொலுசுகள்... இது மட்டுமில்லாம வெளிநாடுகளில் இருந்து ஜுவல்ஸ் வாங்கி வந்தும் விற்பனை செய்றேன். ஒவ்வொரு டிசைன் செய்யும்போதும், எனக்கு ஒரு ஜுவல் செய்தா எப்படி ஆர்வமா, அர்ப்பணிப்போட செய்வேனோ, அப்படித்தான் செய்றேன். அதனாலதான் எங்கிட்ட

முடக்க நினைத்த வலியை... துரத்தியடித்த நம்பிக்கை!

பீஸ்கள் மிச்சமில்லாமல் வித்துப்போயிடும்'' என்பவர், இப்போது இதில் பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறார்.

''எங்கிட்ட கத்துக்கறவங்க எல்லோருமே இதை தொழிலா எடுத்துச் செய்து, நல்ல நிலைமைக்கு வரணும்னு மனதார விரும்புறேன். நம்மால் சிலர் உயரும்போது, அதைவிட பெரிய சந்தோஷம் வேற என்ன?!''

- உளப்பூர்வமாக நலம் விரும்புகிறார் சுதா கார்த்திகேயன்.

'அவள்’ தந்த சர்ப்ரைஸ்!

''அவள் விகடனுக்கு 2001-ம் வருஷம் ஒரு ஆர்ட்டிகிள் எழுதி அனுப்பினேன். அதை பிரசுரிக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவிச்சு, சர்ப்ரைஸா என் முதல் திருமண நாளன்னிக்கு பூங்கொத்தும், வாழ்த்தும் அனுப்பியிருந்தா 'அவள்’! அந்த உற்சாகத்துல 'அவள்’ விகடனில் வெளியாகும் தன்னம்பிக்கைக் கட்டுரைகளைத் தொடர்ந்து படிச்சுட்டு என்னை நானே மெருகேத்திக்கிட்டேன். இப்போ என் பேட்டியே வரப்போகுதுனு நினைக்கும்போது, சந்தோஷமா இருக்கு. தன் வாசகிகளைப் பெருமைப்படுத்துவதில், அவள் விகடனோட அக்கறை, முத்திரை இது!'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார், சுதா.

முடக்க நினைத்த வலியை... துரத்தியடித்த நம்பிக்கை!