Published:Updated:

“என் ஆயுள் முடிவதற்குள்... அவர்களுக்கு ஆயுள் தண்டனை!”

57 வயது பெண்ணின், 22 வருட போராட்டம்பொன்.விமலா, படம் : ப.சரவணகுமார்

பிறந்து ஓர் ஆண்டுகூட நிறையாத ஆண்-பெண் குழந்தைகள் இருவருக்குத் திருமணம். இதைத் தடுத்து நிறுத்துவதற்காக வீரம் பொங்கக் குரல் கொடுத்தார் அந்தப் பெண். ஆனால், அந்தக் குழந்தைகளை மட்டுமல்ல, தன்னையும் அவரால் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனதுதான் கொடுமை! ஆம், குழந்தை திருமணத்தை தடுக்க முயன்றது குற்றம் என்று சொல்லி, கணவர் முன்னிலையே 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் அந்தப் பெண்!

தற்போது பரபரப்பாக பேசப்படும் டெல்லி இளம்பெண் நிர்பயா பாலியல் பலாத்கார கொலை வழக்கு போலவே, 22 ஆண்டுகளுக்கு முன் நாடு முழுக்க பரபரக்கப்பட்ட அந்தக் கொடுமையில் சிக்கி இரையானவர்... பன்வாரி தேவி. அன்று அவருக்கு வயது 35. இன்று வரை, அந்தக் கொடுமைக்கு நீதி கேட்டு, நீதிமன்ற கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறார், இந்த 57 வயதிலும்!

“என் ஆயுள் முடிவதற்குள்... அவர்களுக்கு ஆயுள் தண்டனை!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'மரண தண்டனை வேண்டாம்!’ என இப்போது நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வரும் பன்வாரி தேவி, இதற்காக, சென்னையில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்வுக்காக சமீபத்தில் வந்திருந்தார். அப்போது தனியே அவரைச் சந்தித்தபோது, ராஜஸ்தானிய மொழியின் ஒரு வகையான தூந்தாரி மொழியில் அவர் வெளிப்படுத்திய ஆதங்கங்களை... 'மக்கள் சிவில் உரிமைக் கழக' தேசிய செயலாளர் கவிதா, நமக்கு மொழிபெயர்த்தார்.

''ஜெய்ப்பூர் மாவட்டத்தில் இருந்து 55 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புட்டேரி எனும் குக்கிராமத்தில், நானும் கணவரும் சிறு நிலத்தில் விவசாயம் செய்தும், மண்பாண்டங்கள் செய்தும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். அப்போது மதிய சத்துணவு திட்டத்தில் அங்கன்வாடி பணியாளராக சேர்ந்தேன். அந்தக் காலகட்டத்தில், குழந்தை திருமணத்தை எதிர்ப்பதற்காக 'சாத்தின்’ என்ற பெயரில் பெண்கள் வளர்ச்சித் திட்டத்தை, சுமார் 9,000 பஞ்சாயத்துகளில் கொண்டு வந்தார்கள். அதில் என்னை இணைத்து... பெண் கல்விக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் குரல் கொடுத்தேன்.

அட்சய திருதியை நாளன்று ராஜஸ்தானில் குழந்தைத் திருமணங்கள் நடப்பது வழக்கம். பிறந்த குழந்தை முதல் 12 வயது குழந்தைகள் வரை பாரபட்சமில்லாமல் திருமணம் செய்வார்கள். அந்த வகையில், குர்ஜார் எனும் மேல்சாதி குடும்பத்தைச் சேர்ந்த அந்த இரு குழந்தைகளுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். குயவர் இனத்தைச் சேர்ந்தவளான நான், காவல் நிலையம் சென்று புகார் தந்தேன். பணம் மற்றும் சாதி பலம் கொண்ட அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்யாத காவல் துறையினர், என்னை விரட்டியடித்தார்கள்.

இயன்றவரை போராடியும், குழந்தைத் திருமணத்தை தடுக்க இயலவில்லை. ஆனால், பிரச்னை அதோடு ஓயவில்லை. சம்பந்தப்பட்ட குழந்தைகளின் உறவினர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், என் கணவரைத் தாக்கி, அவர் எதிரிலேயே ஒவ்வொருவராக என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். 'எங்களுக்கு எதிராக புகார் செய்யச் சென்றதற்கு இதுதான் உனக்கு தண்டனை’ என்றும் சொல்லிச் சென்றனர். கணவரை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்துக்கு ஓடினேன். ஆனால், இந்தக் கொடுமை குறித்த புகாரையும் காவல்துறையினர் ஏற்க மறுத்தனர்.

காற்றில் கரைந்த என் கண்ணீர், பல திசைகளுக்கும் பரவ... பத்திரிகைகளும், பெண்ணிய அமைப்புகளும் ஓங்கிக் குரல் கொடுத்தார்கள். இதையடுத்து, சுமார் 24 மணி நேரம் கழித்து வழக்குப் பதிவு செய்தார்கள். 52 மணி நேரம் கழித்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினார்கள். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து வழக்கை சி.பி.ஐ-யிடம் கொண்டுபோனார்கள்'' என்று பெருமூச்சுவிட்டார் பன்வாரி தேவி.

இந்தக் கொடுமை நடந்தது... 92-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 22-ம் தேதி. அப்போது அவருக்கு வயது 35. காலங்களும் காட்சிகளும் மாறின. அந்த ஐந்து பேரும் இரண்டே ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

''இதற்கு நீதிபதிகள் சொன்ன காரணம் என்னை அதிர வைத்தது. 'தலைமுடி நரைத்த ஒரு பெண்ணை, எப்படி பாலியல் பலாத்காரம் செய்ய முடியும்? இந்தப் பெண் பொய் சொல்கிறாள்’ என்று கூறியதோடு 'கீழ்சாதிப் பெண்ணை எப்படி மேல் சாதியினர் பாலியல் பலாத்காரம் செய்ய முடியும்’ என்றனர். உயர்சாதியும் பண பலமும் எனக்கான நியாயத்தைத் தரவில்லை என்பதால், 96-ம் வருடம் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தேன். இன்றுவரை 'வாய்தா... வாய்தா' என

“என் ஆயுள் முடிவதற்குள்... அவர்களுக்கு ஆயுள் தண்டனை!”

தள்ளி வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது என் வழக்கு. 22 வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். எனக்கான நீதி இன்னும் வழங்கப்படவே இல்லை'' என்று சொல்லும் பன்வாரி தேவி, இதற்கு நடுவே சமூக அவலங்களுக்கு எதிரான போராளியாக மாறியிருக்கிறார். கூடவே, மரண தண்டனைக்கு எதிராகவும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்!

''என்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்குக்கூட மரண தண்டனை கொடுங்கள் என்று கோரவில்லை. ஆனால், என் ஆயுள் முடிவதற்குள்ளாவது, அவர்களுக்கு ஆயுள் தண்டனை தரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். கணவரும், நான்கு பிள்ளைகளும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்களை நான் பட்டதாரிகளாக்கியிருக்கிறேன்'' என்றவர்,

''பெண்கள் பலவீனமாக இருக்கும் வரை, ஆண்கள் பலசாலிகளாகத்தான் இருப்பார்கள். அதனால் பெண்கள் எப்போதும் தங்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. தாமதிக்கும் நீதியால்தான் இதுபோன்ற குற்றங்கள் இந்நாட்டில் தாராளமாக நடக்கின்றன. அரசாங்கத்திடம் நான் கேட்பதெல்லாம் ஒன்றுதான்... தாமதிக்காமல் தீர்ப்பு வழங்குங்கள், அப்போதுதான் குற்றம் செய்யத் துணிபவர்கள் அஞ்சுவார்கள்''

- ஆதங்கம் பன்வாரி தேவியின் கண்களில்.

சாதி, இனம், பணம் என்று அதிகாரங்களில் உட்கார்ந்திருப்போரின் ஊசலாட்டங்கள் சரி செய்யப்படாதவரை, இன்னும் பல பன்வாரி தேவிகள் தள்ளாடும் வயதிலும் நீதிக்காக அல்லாடப் போவதை மறுப்பதற்கில்லை.

விசாகா கமிட்டி!

மீபகாலமாக, 'விசாகா கமிட்டி' என்பது பற்றிய பேச்சு அடிபடுகிறது. பெண்களின் பாதுகாப்புக்கு உறுதிகூறும் வகையிலான அமைப்புதான் 'விசாகா கமிட்டி'. இது உருவாக்கப்பட்டதே... பன்வாரி தேவிக்கு நடந்த கொடுமைக்குப் பிறகுதான்!

ராஜஸ்தானில் இயங்கிவரும் விசாகா எனும் பொதுநல அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சில, 'பன்வாரி தேவி, தான் ஏற்றுக்கொண்ட பணியை செவ்வனே செய்யும் வகையில்தான், காவல் நிலையத்தில் புகார் தரச் சென்றார். ஆனால், பணியில் அவருக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே, பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என்று நீதிமன்ற படியேறினர். பலகட்ட விசாரணைக்குப் பின், 'பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் உள்ளிட்ட பலவற்றையும் விசாரித்து, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், விசாகா கமிட்டி என்பதை ஒவ்வொரு நிறுவனமும் ஏற்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு முன் வைத்தது நீதிமன்றம். பல ஆண்டுகளுக்குப் பின், தற்போது இது சட்டமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரம் மட்டுமல்லாமல், பணியிடத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றாலோ... அவர்களின் உழைப்பை சுரண்டினாலோ... தகுதிக்கு உரிய பதவியை தரவில்லை என்றாலோ கூட, இந்த கமிட்டி மூலமாக நடவடிக்கை எடுக்க முடியும். ஒரு பெண் வேண்டுமென்றே பொய்யாக புகார் தரும் பட்சத்தில், அவரும் நடவடிக்கைக்கு உள்ளாவார்.