Published:Updated:

அசத்தும் ஆதிரா!

நவீன கூத்துப்பட்டறை... பொன்.விமலா, படங்கள்: எம்.உசேன்

'அவள் விகடன்' 400-வது சிறப்பிதழ், நாலாவித துறைகளையும் தொட்டுச் சென்றிருப்பது பற்றி நெகிழ்ச்சியோடு நமக்குக் கடிதம் எழுதியிருந்த நாடகக் கலைஞர் ஆதிரா... 'நாடகக்கலை பற்றி ஏதுமில்லையே' என்கிற வருத்தத்தையும் அதில் பதிவுசெய்திருந்தார். இதைப் படித்ததுமே... சென்னை, வளசரவாக்கத்தில், தான் நடத்திவரும் 'NAVEENA கூத்துப்பட்டறை’யில், தன் குழுவினருடன் விவாதத்தில் இருந்த ஆதிராவை சந்தித்தோம்!

அசத்தும் ஆதிரா!

''நடிப்பு மேல சின்ன வயசுல இருந்தே எனக்கு தனிப்பட்ட ஆர்வம். சொந்த ஊர் பழநி. என்னோட 13 வயசுல எங்க குடும்பம் மொத்தமா துபாய்க்கு போயிட்டோம். ஆனா, மண் மீதும்... இந்த மண்ல விளைஞ்ச பாரம்பரிய கலைகள் மேலயும் ஆர்வம் குறையாம இருந்துச்சு. தாரை, தப்பட்டை முழங்க கொம்பு ஊதிக்கிட்டே பழநி ஆண்டவரை ஊர்வலம் கொண்டு போவாங்க. அதைப் பார்த்தே வளர்ந்த எனக்கு, கலைகள் மீதான ஆர்வம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. துபாய்ல இருந்தபடி அஞ்சல் வழியில ப்ளஸ் டூ படிச்சேன். திருமணத்துக்குப் பிறகும் கலை மீதான ஆர்வம் குறையல.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

2007-ல இந்தியா திரும்பி கூத்துப்பட்டறையில சேர்ந்து பாரம்பரியக் கலைகளைக் கத்துக்கிட்டேன். களரி, சிலம்பம், தேவராட்டம், தெருக்கூத்து இதையெல்லாம் தனிப்பட்ட முறையில கத்துக்கிட்டேன். கதை, கவிதை, நாவல்னு இலக்கியத்திலும் இப்ப பயணப்பட ஆரம்பிச்சுருக்கேன். நான் ஒரு நாவல் எழுதறேன். அதோட தலைப்பு'' என்றபடி அவர் குறிப்பிட்ட வார்த்தையைக் கேட்டதும் அதிர்ந்தோம்.

''என்ன... அதிர்ச்சியா இருக்கா? ஒரு பெண் வெளி உலகத்துக்கு வந்து ஏதாவது சாதிக்கணும்னு நினைச்சா... அவளுக்கு இந்த சமூகமும் ஆணினமும் குத்துற அசிங்கமான முத்திரை பெரும்பாலும் இதுதானே? முன்னுக்கு வரத் துடிச்சு, அப்படி அபாண்டம் பேசி ஒடுக்கப்பட்ட எத்தனையோ பெண்களை நேரடியா அறிவேன். அதை மனசுல வெச்சுதான் இதை எழுதறேன்''

- கண்களில் கொப்புளித்த ஆக்ரோஷத்தை அடுத்த நொடியே மாற்றிய ஆதிரா,

''சரி, கூத்துப்பட்டறைக்கு வந்துடறேன்...'' என்று தொடர்ந்தார்...

''தனியா ஒரு கூத்துப்பட்டறை தொடங்கும் எண்ணம் வந்தது. துணிஞ்சு ஆரம்பிச்சுட்டேன்... நவீன கூத்துப்பட்டறை. இங்க இப்போ 50 பேருக்கும் மேல பயிற்சி எடுக்கறாங்க. முதல் முதலா, 'மூடர் கூடம்’ நவீன் படத்துல, வேலைக்காரி கேரக்டர்ல நடிச்சேன். நவீன் எனக்கு நல்ல நண்பர் மட்டுமல்ல, நல்ல ஆலோசகரும்கூட. அவருக்கு மரியாதை செய்யுறவிதமாதான் அவரோட பேரை, கூத்துப்பட்டறைக்கு முன்ன சேர்த்துக்கிட்டேன்!'' என்றவர், தொடர்ந்தார்...

அசத்தும் ஆதிரா!

''முதல் வேலையா பயிற்சி எடுத்துக்கறவங்களோட பயத்தை போக்குறோம். குரல் வளத்துக்கு பயிற்சி கொடுக்குறோம். உடல் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து செதுக்குறோம். நடிப்பு, மூச்சு, பாவனைகள்னு எல்லாம் கற்றுத்தர்றோம். இதுமட்டுமில்லாம சிலம்பம், கதகளி, களரினு கிராமியக் கலைகளையும் சொல்லித்தர்றோம். திடீர்னு குழுவா சேர்ந்து மெரினாவுக்குப் போவோம். 'யாரும் குப்பை போடாதீங்க’னு வலியுறுத்தி வீதி நாடகம் நடத்துவோம். அதேபோல் அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள்னு பல இடங்களுக்கும் போய் அங்க இருக்கிறவங்களோட மன அழுத்தத்தைப் போக்கும் விதமா நாடகங்கள் நடத்துவோம். இதெல் லாம் நேரடி பயிற்சிகளா அமைஞ்சுடும்'' என்ற ஆதிரா,

''பறைதான் நம்மோட பாரம்பரியக் கருவி. அதை மறந்துட்டு, வீட்டு விசேஷத்தில் இருந்து கடை திறப்புவிழா வரை கேரள செண்டை மேளத்தைக் கொண்டு வர்றோம். அந்த நிலை மாறி, விசேஷங்களுக்கு நம் கலைகளைப் பயன்படுத்தும் போதுதான், நம்ம கலைகளைக் காக்க முடியும். இதை என் மாணவர்கள்கிட்டயும் வலியுறுத்துறேன்.

அரசாங்க பதிவுபெற்ற என் கூத்துப்பட்டறையில், ஒரு மாசம்தான் பயிற்சி வகுப்பு. ஒவ்வொருத்தரும் தங்களால முடிஞ்ச அளவுக்கு 1,000 ரூபாய்ல இருந்து 20,000 ரூபாய் வரை கட்டணமா தர்றாங்க. இதுதான் கட்டணம்னு கட்டாயப்படுத்துறது இல்ல. சிலர், இங்க பகுதி நேரமா வேலை பார்த்துக்கிட்டே நடிப்பு கத்துக்கறாங்க. சிலர் பயிற்சி காலம் முடிஞ்சும் தொடர்றாங்க'' எனும் ஆதிராவுக்கு, தன் முயற்சியில் வெற்றிபெற்ற பெருமை முகம் முழுக்க.

அசத்தும் ஆதிரா!

''தனியா கூத்துப்பட்டறை ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னதும், பலரும் என் தோல்விக்காக காத்திருந்தாங்க. ஆனா, எனக்கு நம்பிக்கை கொடுக்கவும் நிறைய பேர் இருந்தாங்க. என் திறமைக்கு மரியாதை கொடுத்து என்கிட்ட பயிற்சி எடுத்துக்கிற அத்தனை மாணவர்களுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்...''

பேசிக்கொண்டே இருந்தவர் திடீரென ஒரு கதையை தயார் செய்து நம்மிடம் நடித்துக் காட்டுகிறார். கண்களை மூடி வெட்கம் காட்டியவர், உடனடியாக அசுர வேகத்தில் சிரிக்கிறார். அடுத்த விநாடியே கதறிக் கதறி அழுகிறார். காதல், கருணை, கோபம், அழுகை என அத்தனை உணர்ச்சிகளையும் அவர் கொண்டுவர... அவருடைய மாணவர்களும் அவர் சொல்வதை உள்வாங்கி பிரதிபலிக்கிறார்கள்.

''பயமும், தாழ்வு மனப்பான்மையும் போயே போச்சு!''

ன்று தமிழ் சினிமாவில் தங்களது யதார்த்த நடிப்புகளால் முத்திரை பதித்து வரும் பலரும், கூத்துப்பட்டறைகளில் பட்டை தீட்டப்பட்டவர்களே. அதே இலக்குடன் ஆதிராவிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் சிலரிடம் பேசினோம்...

ராம்குமார்: ''பத்தாவதுதான் படிச்சுருக்கேன். சினிமாதான் என் கனவுனு பயிற்சி எடுத்துக்கிட்டே 11 வருஷமா வாய்ப்பு தேடுறேன். 'அட்டக்கத்தி’, 'போராளி’, 'சுந்தரபாண்டியன்’னு நண்பன் ரோல் கிடைச்சுது... முயற்சி தொடருது.''

சுமன்: ''நான் ஒன்பதாவது ஃபெயிலுங்க. எல்லாரும் 'லூஸு சுமன்’னுதான் கூப்பிடுவாங்க. 'வருத்தப்படாத வாலிபர் சங்க’த்துல எனக்கு ஃப்ரெண்ட் ரோல் கிடைச்சப்போதான், பலரும் நான் லூஸு இல்லைனு புரிஞ்சுக்கிட்டாங்க. இது ஏழு வருஷ முயற்சி. பயிற்சியை மட்டுமில்ல... தளராத நம்பிக்கையையும் தர்றாங்க இங்க.''

சுரேஷ்குமார்: ''பேக்கரியில வேலை பார்த்துட்டு இருந்தேன். சினிமாவுல நடிக்க வைக்கறதா சொல்லி புரோக்கர்கள் ஏமாத்தி பணம் பிடுங்கினாங்க. எட்டு வருஷமா வாய்ப்புத் தேடின நான், இங்க பயிற்சி எடுத்துக்கிட்ட பிறகு, வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு.''

அசத்தும் ஆதிரா!

ஸ்ரீதேவி: ''சென்னையைச் சேர்ந்த நான், பி.காம் படிச்சுருக்கேன். காலேஜ் படிக்கும் போதே என்.எஸ்.எஸ்-ல இருந்தேன். அப்பவே வீதி நாடகங்கள்ல நடிப்பேன். நடிப்பு மேல  இருந்த  ஆர்வத்தால... ஆதிரா அக்கா நடத்தற கூத்துப்பட்டறையில  சேர்ந்தேன். இங்க வந்த  பிறகு நடிப்பை மட்டும் கத்துக்கல.... என்னோட  குரலுக்கும் நல்ல பயிற்சி கிடைச்சுருக்கு. சீரியல், கார்ட்டூன்னு டப்பிங் கொடுக்குறேன். குறும்பட  வாய்ப்பு வந்ததோட... ஒரு சினிமா விலும் ஹீரோயின் வாய்ப்பு கிடைச்சுருக்கு. இதை விட முக்கியமா, இந்த பயிற்சியால என் பயமும்,  தாழ்வு மனப்பான்மையும் போயே போச்சு!''

தேவி: ''சொந்த ஊர் சேலம். நான்  ஒரு திருநங்கை. நடிப்பு  கத்துக்கறதுக்காகத்தான்  சென்னைக்கு வந்தேன்.  ஆனா, எனக்கு  பாட்டு வரும்னு தெரிஞ்சுகிட்டு, இவங்க கொடுத்த பயிற்சியால நல்லா பாடறேன். 'ஆயிரம் பொய், ஒரு கல்யாணம்’   படத்துல பாடியிருக்கேன். இதன் மூலமா... ' இந்தியாவின் முதல் பின்னணி பாடும் திருநங்கை'னு பேரு வாங்கியிருக்கேன். இப்ப நிறைய குறும்படங்கள்லயும் நடிக்கிறேன்''