Published:Updated:

“சந்தோஷம்ங்கிறது... அடுத்தவங்கதான் தரணும்னு இல்ல!”

முதுமையை விரட்டும் ஓர் ஆதர்ச தம்பதிவே.கிருஷ்ணவேணி, படம்: ஜெ.வேங்கடராஜ்

'முதுமையை சுமையாகக் கருதும் சீனியர் சிட்டிஸன்கள், நிச்சயம் மீரா ராவ் - ரங்கநாத் ராவ் தம்பதியைச் சந்திக்க வேண்டும். இந்த வயதிலும் ஓய்ந்து உட்காராமல், ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்வதுடன், ஃபேஸ்புக் வரை அப்டேட்டடாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இருவரும்!

காலை நாளிதழில் தொடங்கும் தினசரி பொழுதை... வாக்கிங், சமையல், அவுட்டிங், ஜிம் என்று பரபரப்பாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். கூடவே... இலவசமாக கிராஃப்ட் மற்றும் பெயின்ட்டிங் பயிற்சிகள் அளித்துக் கொண்டிருக்கிறார் மீரா. வீடு முழுக்க கைவேலைப்பாட்டுப் பொருட்களும், உற்சாகமும் நிரம்பி வழிகின்றன!

''ஏன்னு தெரியலை... முதுமை பலருக்கும் புலம்பலாவும், பயமுறுத்துறதாவுமே இருக்கு. என்னைப் பொறுத்தவரை, முதுமை ஒரு தவம். அதை நாங்க இருவரும் இனிக்க இனிக்க அனுபவிக்கிறோம்!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- ரசனையோடு ஆரம்பித்த... 75 வயது மீரா, சென்னை, அபிராமபுரத்தில் இருக்கும் சொந்த வீட்டில் ஊஞ்சலில் ஆடியபடியே பேசினார்.  

“சந்தோஷம்ங்கிறது... அடுத்தவங்கதான் தரணும்னு இல்ல!”

''எங்களோடது அரேஞ்சுடு மேரேஜ். இவர் எலெக்ட்ரிசிட்டி போர்ட்ல இருந்ததால, ஒவ்வொரு முறை புரமோஷன் கிடைக்கும்போதும் ஒவ்வொரு ஊருக்குப் போகணும். அந்த வகையில் தமிழ்நாடு முழுக்கவே ஒரு ரவுண்ட் வந்துட்டோம். திருமணமான புதுசுல மதுரை லோயர் கேம்ப்ல குடியிருந்தப்போ, இவர் வேலைக்குப் போனதும் பொழுதை நகர்த்துறது கஷ்டமா இருந்துச்சு. பத்திரிகைகள் வாங்கி, கைவேலைப்பாடுகள் சார்ந்த விஷயங்களைக் கத்துக்கிட்டேன். இதுக்கு தேவையான பொருட்களை சென்னைக்கு வந்து வாங்கிட்டுப் போவேன்.

வெற்றிகரமா தனிமையை விரட்டி... மனசு திருப்தியாவும், உடம்பு பிஸியாவும் இருந்துச்சு. தொடர்ந்து பல ஊர்களுக்கு டிரான்ஸ்ஃபர் ஆனபோதும், ஒவ்வொரு இடத்திலும் அந்த ஊர்ப் பெண்களை ஒருங்கிணைச்சு, எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை சொல்லிக் கொடுத்துட்டே இருப்பேன். கிராஃப்ட் கத்துக் கொடுப்பேன். 'உன்னோட பிஸி டைம்ல என்னை மறந்துடாதே’னு சிரிப்பார் கணவர். இப்படி எப்பவுமே பரபரப்போட வேலை பார்த்த எனக்கு, முதுமையில் மட்டும் ஓய்வெடுக்கப் பிடிக்குமா? இல்லை, முதுமையில் ஓய்வெடுக்கணும்கிறது கட்டாயமா..?'' என்று மீரா கேட்க,

''ஓய்வுன்னா என்னன்னே என் மீராவுக்குத் தெரியாது. அதனால, அவளோட சேர்ந்து நானும் இந்த வீடும் எப்பவும் பிஸிதான்!'' என்று சிரிக்கிறார் 79 வயது ரங்கநாத்.

தன் தினசரி ஷெட்யூலை மீரா சொன்னபோது, அதிசயித்துப் போனோம். ''காலையில ஐந்து மணிக்கு எழுந்திருச்சு ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, பிறகு நியூஸ் பேப்பர் ரீடிங், சமையல்னு படிப்படியாக ஆரம்பிக்கற வேலைகளோட சேர்த்து வாரத்தில் ரெண்டு, மூணு நாட்களாவது பொதுநிகழ்ச்சிகளுக்கு போறதோட, மறுபடியும் மாலை ஜிம்முக்குப் போவதுனு ராத்திரி பதினோரு மணி வரை பயங்கர பிஸி. ஒவ்வொரு நொடியும் வீணாகக்கூடாதுனு நினைக்கிற நான்... பெயின்ட்டிங், எம்ப்ராய்டரினு பல கைவினைப் பொருட்கள் சார்ந்த விஷயங்களையும் செய்றதோடு, இலவச வகுப்புகளும் எடுத்துட்டு இருக்கேன்'' என்று மீரா நிறுத்த,

''சென்னையில எங்கு கலை சார்ந்த பொது நிகழ்ச்சிகள் நடந்தாலும், அழைப்பிதழோ அல்லது போன் கால் மூலம் செய்தியோ வந்துவிடும் மீராவுக்கு. அந்த நிகழ்ச்சிகளில் இவரோட பங்களிப்பா இவர் செய்த ஏதாவது ஒரு பெயின்ட்டிங்கும் இருக்கும்'' என்று தகவல் சொன்னார் ரங்கநாத்.

மீரா அடுத்து சொன்ன வார்த்தைகளை... முதியவர்கள், முதியவர்களாகப் போகிறவர்கள் அனைவருமே அடிக்கோடிட்டுப் படிக்க வேண்டும்.

''எங்களைப் போல ஓய்வுல இருக்கிற தம்பதி... 'பிள்ளைகள், பேரன், பேத்திகள் எங்களை கண்டுக்கறதே இல்லையே'னு கவலைப்படாம, உங்களுக்குப் பிடிச்ச ஏதாவது ஒரு விஷயத்தை தேர்ந்தெடுத்துச் செய்யலாம். உதாரணமா, வாசிப்பில் ஆர்வம் இருக்கறவங்க புத்தகங்கள் படிக்கலாம், ஆன்மிகத்தில் ஆர்வம் இருக்கறவங்க தங்களுக்குத் தெரிஞ்ச ஆன்மிகத் துணுக்குகள், கதைகளை பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பலாம், சமையலில் அசத்துறவங்க தங்களோட ஸ்பெஷல் ரெசிபிகளை எல்லாம் எழுதி வெச்சு, மணமாகும் புதுப்பெண்களுக்குப் பரிசா கொடுக்கறத பழக்கமாக்கிக்கலாம், இன்னும் தியானம், இசை, சினிமானு... உங்களுக்குப் பிடிச்ச ஒரு விஷயத்தை உற்சாகமா செய்றதன் மூலமா எப்பவும் உங்களை மகிழ்ச்சியா வெச்சுக்கலாம். ஏன்னா, சந்தோஷம்ங்கிறது... அடுத்தவங்கதான் நமக்குத் தரணும்னு இல்ல! பேரன், பேத்திகள் கூட இருந்தா அவங்களுக்கு அறிவூட்டற மாதிரியான செய்திகளையும், கதைகளையும் அவங்க வயசுக்குப் புரியற மாதிரி சொல்லிக் கொடுக்கலாம். இன்னிக்கு நிறைய குழந்தைகள் தாத்தா, பாட்டி பாசத்துக்கு ஏங்கறவங்களாதான் இருக்காங்க'' என்றவர், வயதான காலத்தில் தனியாக இருப்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் குறிப்பிட்டார்.

''உங்க ஏரியா போலீஸ் ஸ்டேஷன் நம்பரையும், அவசர உதவிக்கு அழைக்க வேண்டிய நம்பரையும் எப்பவும் கையோட வெச்சுக்குங்க. வெளிய போகும்போது, மாத்திரைகளோட இதையும் மறந்துடாம எடுத்துட்டுப் போங்க. அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட அன்பா நடந்துக்குங்க. அந்நியர்கள்கிட்ட உங்க தனிமையைப் புலம்பாதீங்க. நாட்டுநடப்பை அறியாம நாம எப்பவும் விலகி நிற்கக்கூடாது... குறிப்பா, முதுமையில். அப்போதான் நாலு பேர் சேர்ந்து ஒரு விஷயத்தைப் பேசும்போது, 'பாட்டி, தாத்தாவுக்கு அதெல்லாம் தெரியாது’னு உங்களை ஒதுக்க மாட்டாங்க. அதனால எப்பவும் அப்டேட்டடாக இருங்க!'' என்று அழகாக சொல்லும் மீரா, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் கம்ப்யூட்டர் பயிற்சி எடுத்திருக்கிறார்.

''இப்போ நானும் ஃபேஸ்புக்கில் இருக்கேன்! வெளிநாடுகளில் இருக்கும் என் உறவினர்கள்கிட்ட பேசறது, நான் செய்ய நினைக்கும் டிசைன்கள் பலவற்றையும் கூகுள், யூடியூப்ல போய் கத்துக்கறதுனு, கம்ப்யூட்டர் எனக்கு நல்ல ஃப்ரெண்டா இருக்கு!'' என்று மீரா சொல்ல,

''எங்களுக்குக் குழந்தைகள் இல்ல. இப்பவரைக்கும் எனக்கு மீராவும், மீராவுக்கு நானும்தான் குழந்தை!'' என்று நேசம் பேசினார் ரங்கநாத்!

அந்த வீட்டில் இருந்து கிளம்பும்போது, முதுமை பற்றிய பாஸிட்டிவ் எண்ணங்களே பரிசாகக் கிடைத்திருந்தன நமக்கு!