Published:Updated:

''ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கு ஆண், பெண் தெரியாது!''

ஆகாய தேவதை தீபாவே.கிருஷ்ணவேணி

மார்ச் 8... பெண்கள் தினத்தைக் கொண்டாடும்விதமாக, சென்னையைச் சேர்ந்த 18 பெண் பத்திரிகையாளர்களை, சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் அழைத்துச் சென்றது ஏர் இந்தியா. இதில் சிறப்பே... விமானத்தின் ஏர்ஹோஸ்டஸ்கள் மட்டுமல்ல... அதை இயக்கிய விமானியும் பெண் என்பதுதான். ஆம்... ஏர் இந்தியா நிறுவனத்தின் தென்னிந்திய செயல் இயக்குநர் மீனாட்சி துவா, கேப்டன் தீபா ஐயர், ஏர்ஹோஸ்டஸ்கள் ரப்தப், தன்யா, தெரசா, மீனா, தரோபி மற்றும் பெண் பத்திரிகையாளர்கள் என அன்றைய விமானம் தன் சிறகுகளைப் பெண்களுக்காக மட்டுமே விரித்தது! இந்தக் காற்றுப் பயணத்தில் நாமும் இணைந்த அனுபவம், படுசுவாரஸ்யம்!

''ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கு ஆண், பெண் தெரியாது!''

திருவனந்தபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில், பெண் நலம் குறித்த விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. ஒரு பெண், விமானியாக ஆவதற்கு முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்த வழிகாட்டல்களும் தரப்பட்டன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ஏர் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 160 பெண் விமானிகள் பணி யாற்றுகிறார்கள். தென் மண்டலத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு வழித் தடங்களில் மட்டும் 25 பெண் விமானிகள் பணி யாற்றுகிறார்கள்!'' என்ற கேப்டன் தீபா ஐயரிடம், அவரின் பலதரப்பு வேலை களுக்கு இடையிடையே பேசினோம்...

''நான் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாமே கேரளா, திருவனந்தபுரத்தில்தான். சமூகத்தின் முன், நான் ஒரு முன்னுதாரணப் பெண்ணாக இன்று நிற்கக் காரணம், என் அப்பா கிருஷ்ணா ஐயரும், அம்மா மங்களம் ஐயரும்தான். சிறு வயதில் ஒருமுறை திருவனந்தபுரத்தில் நடந்த விமானங்களின் சாகசக் காட்சியைப் பார்க்கச் சென்றிருந்தேன். அதைப் பார்த்தபோதே நாமும் ஆகாயத்தில் பறந்து, 'விமானம் ஓட்டினால் எப்படி இருக்கும்?’ என்று நினைத்துப் பார்த்தபோதே மனதெல்லாம் பரவசம். இதோ... இன்று நான் கேப்டன்!'' எனும் தீபாவுக்கு முகத்தில் அளவில்லா ஆனந்தம்.

''ஏர்ஹோஸ்டஸ் ஆவதற்கு ஏதாவது ஒரு டிகிரி போதுமானது. அதன் பின் ஏர்ஹோஸ்டஸ் பயிற்சிபெற்று, உள்ளே வந்துவிடலாம். ஆனால், கேப்டனாவதற்கு 12-ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடத்தை உள்ளடக்கிய பிரிவைப் படித்திருக்க வேண்டும். 'ஃபிளையிங் கிளப்’ல் பயிற்சி எடுத்திருக்க வேண்டும். பிறகு, ஏர்லைன் பரீட்சை எழுதி தேர்ந்தெடுக்கப்படுவோம். இதில் ஆப்டிட்யூட் டெஸ்ட், இன்டலிஜன்ட் டெஸ்ட் என்று நிறைய படிகளைத் தாண்டி வரவேண்டியிருக்கும். இப்படி பல தகுதித் தேர்வுகளையும் கடந்து வந்தால்தான், கேப்டனாக முடியும்.

பயிற்சி முடித்த பிறகு... டிரெயினி பைலட், கோ-பைலட் என பல படிகளைத் தாண்டி, கேப்டன் என்ற இடத்தைப் பிடிக்க, எனக்கு 13 வருடங்கள் பய ணிக்க வேண்டியிருந்தது. என்னுடன் படித்தவர்கள் பலரும் சயின்ட்டிஸ்ட், டாக்டர் என்று பல துறைகளில் இருக்கிறார்கள். ஆனாலும், என் பணியைத்தான் எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். வெளியே இருந்து பார்ப்பவர் களுக்கு ஆச்சர்யம் என்றால், வேலை செய் பவர்களுக்கு இது மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய சவாலான துறை. விமா னப் பயணிகள் உயிர்கள் அனைத்தும், நம் விரல் அசைவில் இருக்கும். பயணத்தில் ஏதா வது பிரச்னை ஏற்பட்டாலும்... பதறாமல், நிதானமாக... அதேசமயம், சமயோசிதமாக செயல்பட்டு, திறமையுடன் கையாள வேண்டும்.

''ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கு ஆண், பெண் தெரியாது!''

விமானப் பணியாளர்களின் உடை, ஒப்பனை போன்றவை, உங்களுக்கெல்லாம் கிளாமரான தோற்றம் தரும். ஆனால், இங்கே வெளித்தோற்றத்துக்கான வாய்ப்பு 5 பர்சன்ட் மட்டும்தான். மற்ற 95 பர்சன்ட் வாய்ப்பை நம் உழைப்பே நமக்கு பெற்றுத்தரும். எப்போதும் விழிப்பான வேலையும், எந்தச் சூழலையும் சந்திக்கும் தன்னம்பிக்கையும் அவசியத் தேவை'' என்று உண்மையை வலியுறுத்திய தீபா,

''என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத பயணம்... நான் விமானியாகப் பணியாற்றும் விமானத்தில் என் பெற்றோரை ஒருமுறை அழைத்துச் சென்ற தினம்தான். விமானத்தை விட்டு அவர்கள் இறங்கியதும், வரவேற்க நின்றிருந்த என் சக பணியாளர்கள் 'உங்க பொண்ணா!’ என அவர்களுக்கு கைகொடுத்து வாழ்த்துச் சொன்னபோது அவர்கள் முகத்தில் வெளிப்பட்ட சந்தோஷமும், பெருமையும் என் பொக்கிஷத் தருணம்!'' என்று நெகிழ்ந்தவர்,

''என் பெற்றோர், அன்றே தன் பெண் பிள்ளையை, எல்லைகளை உடைத்து முன்னேற்றப் பாதையில் வழியனுப்பி வைத்ததால்தான், இன்று நான் கேப்டன் தீபா. அதனால், பெண்கள் இந்தத் துறையில் அதிகம் இடம் பெற, அவர்களின் ஆர்வத்துடன், பெற்றோரின் ஒத்துழைப்பும் நிச்சயம் வேண்டும்.

''ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கு ஆண், பெண் தெரியாது!''

நான் பகவத் கீதையை மிகவும் நேசிப்பவள். எனக்கு துன்பம் வரும்போதெல்லாம் துணையாக வரும் கீதை வாக்கியம், 'இதுவும் கடந்துபோகும்’ என்பதுதான். அதேபோல, என்ன நடந்தாலும், நடக்காவிட்டாலும் இந்த நிமிடம் நமக்காகக் காத்துக்கொண்டிருக்காது என்பதையும் உணர்ந்தவள் நான். 'அவ்ளோ பெரிய ஃப்ளைட்டை ஒரு பெண்ணால எப்படி ஓட்ட முடியும்?’ என ஆச்சர்யப்படுபவர்களைப் பார்த்திருக்கிறேன். கேப்டனாக இருப்பதற்கு, அதற்கான தகுதிகள் மட்டுமே போதுமானது, பாலினம் தேவையில்லை. ஏனெனில், நாம் ஆபரேட் பண்ணப்போகும் சிஸ்டத்துக்கு தன்னை இயக்குபவர் ஆணா, பெண்ணா என்ற வேறுபாடெல்லாம் தெரியாது. எனவே, வரவேற்கிறேன் பெண்களை!'' என்றபடி மீண்டும் ஃப்ளைட் ஏறினார் கேப்டன் தீபா ஐயர்!

ஃப்ளைட்டை விட்டு இறங்கி நடந்தால்... திரும்பிய பக்கமெல்லாம் சுழன்று சுழன்று அடித்துக்கொண்டிருந்தது... 239 பயணிகளுடன் மாய மான மலேசிய விமா னம் பற்றிய 'திக் திக்’ பேச்சுக்கள்!