Published:Updated:

கருத்தரிப்பு சிகிச்சை... பலன் என்ன?

காசு பார்க்கும் கருத்தரிப்பு மையங்கள்... சருகாகும் அப்பாவி பெண்கள்!சென்ற இதழ் தொடர்ச்சி...கோவிந்த் பழனிச்சாமி, பொன்.விமலா, எம்.கார்த்தி

'காசு பார்க்கும் கருத்தரிப்பு மையங்கள்... சருகாகும் அப்பாவிப் பெண்கள்!’ என்ற தலைப்பில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பற்றிய அதிர வைக்கும் ஸ்கேன் ரிப்போர்ட் பற்றிய முதல்

கருத்தரிப்பு சிகிச்சை... பலன் என்ன?

பாகம், கடந்த இதழில் இடம்பெற்றது. இரண்டாம் பாகம் இதோ...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'குழந்தையின் பிஞ்சுக் கால்கள், நம் நெஞ்சில் முட்டி மோதாதா...?' என்று, குழந்தையில்லாதோருக்கு ஏற்படும் ஏக்கமே... காசு பார்க்கும் கருத்தரிப்பு மையங்களின் முதலீடாகிப் போனதுதான் கொடுமை. குழந்தைக்கு ஆசைப்பட்டு, பணம் முதல், உயிர் வரை இழந்த 'கேஸ் ஹிஸ்டரி’... இங்கே ஏராளம். ஒவ்வொரு கதையுமே நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ரகம்தான்!

ராஜபாளையம் நகரிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ள 'அசோக் மருத்துவமனை’யின் டாக்டர் உமாமகேஸ்வரி மீது, 2013-ம் ஆண்டு, செயற்கை கருவூட்டல் மோசடி தொடர்பான குற்றவழக்கு பதிவானது. மம்சாபுரத்தைச் சேர்ந்த 38 வயது தாமரைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில், இ.பி.கோ-406 (நம்பிக்கை மோசடி), இ.பி.கோ-420 (ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ், டாக்டர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிறகு, முன்ஜாமீன் பெற்றுக்கொண்டுவிட்டார் டாக்டர். இப்போதும் இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நடக்கிறது.

கருத்தரிப்பு சிகிச்சை... பலன் என்ன?

படிக்காமலே மருத்துவம்!

'என்னுடைய புகைப்படத்தை வெளியிட வேண்டாம்' என்ற வேண்டுகோளுடன் நம்மிடம் பேசிய தாமரைச்செல்வி, ''திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. அந்த மருத்துவமனையின் விளம்பரத்தைப் பார்த்துதான் டாக்டர் உமாமகேஸ்வரியிடம் சென்றோம். எங்களைப் பரிசோதித்தவர், 'நீங்கள் குழந்தை பெறத் தகுதியானவர்தான். ஆனால், அதற்கு என் மருத்துவமனையில் மூன்று மாதங்கள் தங்கியிருக்க வேண்டும், கரு உண்டானதும் வீட்டுக்குச் செல்லலாம்’ என்றார். ஒப்புக்கொண்டோம். முதலில் ஆபரேஷன் மூலம் கருமுட்டை எடுக்க வேண்டும் என்று சொல்லி, ஒரு லட்ச ரூபாய் வாங்கினார். பிறகு, வாரம்தோறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏதேதோ ஊசிகள் போட்டார். பின்னர், எனது கருமுட்டையில், செயற்கை முறையில் கணவரின் விந்தணுவை செலுத்த வேண்டும் என்று ஒன்றரை லட்சம் வாங்கினார்.

மூன்று மாதங்கள் மருத்துவமனையில் தங்கியும், மாதவிடாய் நிற்கவில்லை. டாக்டரிடம் கேட்டதற்கு, 'நீங்கள் கருத்தரித்திருக்கிறீர்கள், மாதவிடாய்க் கும் இதற்கும் சம்பந்தம் இல்லை’ என்று சமாளித்தார். 'அப்படியென்றால் கருவுற்றிருப்பதற்கான மருத்துவ ஆதாரங்களைக் காட்டுங்கள்’ என்று என் கணவர் மணிவண்ணன் கேட்க, 'இஷ்டம் இருந்தால் இருங்கள்... இல்லை என்றால் போங்கள்’ என்று கடுப்பாகச் சொல்லிவிட்டார்.

ஒருகட்டத்தில் சந்தேகமடைந்த என் கணவர், வேறு மருத்துவமனையில் என்னை பரிசோதித்தபோது, நான் கர்ப்பமாகவில்லை என்ற உண்மை தெரிந்தது. மேலும், செயற்கை கருவூட்டல் சிகிச்சை பற்றிய படிப்போ, பட்டமோ பெறாமல் என்னைப் போல் நிறைய பேரை ஏமாற்றி, ஏகப்பட்ட பணத்தை உமாமகேஸ்வரி வசூலித்திருப்பதும் தெரிந்தது. இதையடுத்துதான் போலீஸில் புகார் செய்தும் பலனில்லை. பிறகு, உயர் நீதிமன்றக் கிளை மூலமாகத்தான் வழக்குப் பதிவுசெய்ய வைத்தோம்'' என்றவர்...

கருத்தரிப்பு சிகிச்சை... பலன் என்ன?

கொஞ்சம்கூட இரக்கமே இல்லையா?!

''என் போன்றோரின் ஏக்கமே... 'நமக்கும் ஒரு வாரிசு வாய்க்காதா?' என்பதுதான். இப்படி பரிதாப ஜீவன்களாக இருக்கும் எங்களைப் போன்றவர்களிடம் துளியும் இரக்கம் இல்லாமல் பணம் பார்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் இதுபோன்ற டாக்டர்களை என்னவென்று சொல்ல?'' என்றார் விரக்தியாக!

இதே, டாக்டர் மீது குற்றம்சாட்டும் பெண்களில் மற்றொருவர், சிவகாசி, திருத்தங்கல் மாரியப்பனின் மனைவி ராணி. திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், உமாமகேஸ்வரியின் மருத்துவமனையில் இவரும் மூன்று மாதங்கள் தங்கியிருந்திருக்கிறார். தாமரைச்செல்விக்கு நடந்த அதே பாணியிலான சிகிச்சைகளும் (!) செலவுகளும் கிட்டத்தட்ட நடந்தேறி இருக்கின்றன. ஆனால், பலன் பூஜ்யமே!

''ஏற்கெனவே குழந்தை இல்லாமல் கடும் மன உளைச்சலில் இருக்கும் எங்களிடமிருந்து, இப்படி பணம் பறித்து, இன்னும் எங்கள் துன்பத்தைக் கூட்டுவது, ஒரு மருத்துவருக்கு அழகா?'' என்று ஆதங்கக் கண்ணீருடன் கேட்கிறார் ராணி.

''கருத்தரிப்பு மையத்தை மூடிவிட்டேன்!''

டாக்டர் உமாமகேஸ்வரி தரப்பை அறிய, மருத்துவமனை தேடிச் சென்றோம். மறுநாள் அழைப்பதாகக் கூறி நம்மை அனுப்பிவைத்தார். மறுநாள் போனில் அழைத்தவர், ''வழக்கு நிலுவையில் இருக்கிறது. இப்போது அதைப் பற்றி நான் பேசக்கூடாது. நான் நடத்தி வந்த 'கற்பக விருட்சம் செயற்கை கருத்தரிப்பு மைய’த்தை மூடிவிட்டேன்'' என்றார், படபடப்பாக.

''நீங்கள், எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றுள்ளீர்கள். ஆனால், செயற்கை கருவூட்டல் தொடர்பாக படித்து ஏதேனும் பட்டம் பெற்றிருக்கிறீர்களா?'' என்றதும்,

கருத்தரிப்பு சிகிச்சை... பலன் என்ன?

''அமெரிக்காவில் படித்திருக்கிறேன். விருதுநகர், ராஜபாளையம், அருப்புக்கோட்டையில் பலருக்கு செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது'' என்றவர், ''இன்னொரு நாள் 'ஃப்ரீயாக’ பேசுகிறேன்'' என்று போனை கட் செய்தார்.

இது ஒரு சாம்பிள்தான். தமிழகம் முழுக்க செயல்படும் எண்ணற்ற கருத்தரிப்பு மையங்கள் பலவற்றிலிருந்தும் இத்தகைய புலம்பல்கள் எதிரொலித்தபடிதான் இருக்கின்றன. என்ன... அவையெல்லாம் காவல் நிலையம், நீதிமன்றம் என்று மீடியாக்களில் இடம்பெறாமல், அப்படி அப்படியே அமுங்கிக்கொண்டிருக்கின்றன! 'இதெல்லாம் வெளியில் தெரிந்தால் கேவலம்’ என்கிற காரணத்துக்காகவே பலரும் மறைத்து விடுகிறார்கள். இதன் காரணமாக பல பெண்களின் வாழ்க்கை, சருகாகிக்கொண்டிருக்கிறது.

ஆம்... சிகிச்சை என்கிற பெயரில் மாதம்தோறும் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைகள், தினம்தோறும் தரப்படும் மருந்துகள், தேவையற்ற சிகிச்சைகள்... போன்றவற்றின் எதிர்விளைவாக, பல பெண்கள் கிட்டத்தட்ட நடைபிணங்களாகவே வாழக்கூடிய சூழலுக்குத் தள்ளப்படுவது... கொடுமையிலும் கொடுமை!

கருத்தரிப்பு சிகிச்சை... பலன் என்ன?

குழந்தை பெற்றுக்கொள்ள வேறு என்னதான் வழி..?

கருத்தரிப்பு மையங்கள் எப்படி செயல்பாடுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது... மேற்கொண்டு இத்தகைய சிகிச்சையை எடுத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவோ... பாடமாகவோ இருக்கும். அதைப் பற்றி இங்கே பேசுகிறார்... மகளிர் மருத்துவத்தில் சிறப்பிடம் பெற்றிருப்பவரும், நிறைய தம்பதியருக்கு சிகிச்சை அளித்து குழந்தைபெறும் உடல் கூறை ஏற்படுத்திக் கொடுத்திருப்பவருமான கோவையின் பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் மிருதுபாஷினி.

''எடுத்ததுமே சோதனைக் குழாய் குழந்தை... அது, இது என்றெல்லாம் செல்வது தவறு. 'குழந்தையில்லை' என்று வரும் கணவன் - மனைவி இருவரையும் முதலில் துல்லியமாக பரிசோதனை செய்து, சரியான சிகிச்சை அளித்தாலே... மலட்டுத்தன்மையை நீக்கி, கிட்டத்தட்ட 85 சதவிகிதம் பேருக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இது, வெறும் 50 ரூபாய் விலையுள்ள மருந்தின் மூலமும் நடக்கலாம், 50 ஆயிரம் ரூபாய் மருந்திலும் கிடைக்கலாம். அடுத்ததாக... ஆணின் விந்தணுக்களின் டி.என்.ஏ-க் களைக்கூட துல்லியமாக கண்டறிந்து, அதிலுள்ள குறைகளின் அடிப்படையில் மருந்துகள் கொடுத்து, 'கவுன்ட்’களை அதிகரித்து, இயற்கையாகக் குழந்தை பெறும் தகுதியை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் உண்மையான மருத்துவம். இதற்கான உபகரணம் மட்டும் 4 கோடி ரூபாய் விலையாகிறது. இந்த வசதி இல்லாத மருத்துவர்களில் சிலர், குழந்தை இல்லாத தம்பதியருக்கு கருத்தரித்தலுக்கான ஆலோசனையைச் சொல்லி, லட்சக்கணக்கில் கட்டணம் பெற்றுக்கொள்கிறார்கள்.

கருத்தரிப்பு சிகிச்சை... பலன் என்ன?

யாருக்கெல்லாம் செயற்கை கருவூட்டல்..?

நாங்களும் செயற்கை முறை கருவூட்டல் செய்கிறோம். அது எப்படிப்பட்டவர்களுக்கு என்றால், இனி இயற்கை முறை கருத்தரிப்புக்கான சாத்தியக்கூறு துளியும் இல்லை என்று கைவிடப்பட்டவர்கள், கருமுட்டைகள் உருவாகும் வயதைக் கடந்தவர்கள், எதிர்பாராமல் பிள்ளைகளைப் பறிகொடுத்து வந்து நிற்கும் வயதான தம்பதியர் போன்றோருக்கு. விந்து வங்கி மூலம், பெண்ணின் சினைமுட்டைகள் மற்றும் விந்தணுக்களை தானமாகப் பெற்று, தரம் வாய்ந்த செயற்கைக் கருவறையில் உள்ள டெஸ்ட் டியூப்பில் வளர்த்து, குறிப்பிட்ட நாளில் பெண்ணின் கருவறையில் வைத்து அவளைத் தாயாக்குவோம். இதை, தம்பதிகளின் சம்மதத்துடன் வெளிப்படையாகவே செய்கிறோம்'' என்ற மிருதுபாஷினி, டோனர் குறித்த சில விதிகளையும் குறிப்பிட்டார்...

''கணவன், மனைவி இருவரிடமும் விந்து தானம்/சினைமுட்டை தானம் கொடுத்தவருடைய உயரம், நிறம், பருமன் ஆகிய மூன்று தகவல்களை மட்டும்தான் தெரிவிப்போம். அல்லது, டோனர்களின் உயரம், நிறம், கனம் குறிப்பிடப்பட்ட டோனர்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட தம்பதிக்கு காட்ட... அவர்கள் அதிலிருந்து தங்களுக்கான டோனரை தேர்வு செய்யலாம். மற்றபடி பேர், ஊர் என எந்த விவரங்களையும் தரமாட்டோம். டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும் என்று பயப்பட தேவையில்லை. அதிகபட்சம் அனைத்து சிகிச்சைக்கும் சேர்த்து 1.50 லட்சம் ரூபாய் மட்டும்தான் மருத்துவ செலவு'' என்றார்.

இயற்கையாக கிடைத்த மெய்யழகி!

தகுந்த சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டிருக்கும் சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் சிவரஞ்சனி - மதன்குமார் தம்பதியிடம் பேசியபோது, ''எங்களுக்கு கல்யாணமாகி நாலு வருஷமா குழந்தை இல்லீங்க. பல டாக்டருங்க, வாரா வாரம் ஒரு டெஸ்ட்டு, ஆயிரக்கணக்கில் செலவு... ஆனா, பலன் எதுவும் இல்ல. எங்க ரெண்டு பேருக்குமே குறையிருக்கிறதா சொல்லி, மாத்தி மாத்தி வைத்தியம் பார்த்தாங்க. அப்பத்தான் ஒரு நண்பர், 'இந்த சிகிச்சையைப் பொறுத்தவரை, மருத்துவமனையும், டாக்டரும் நம்பகமா இருக்கறது அவசியம்’னு சொன்னார். விசாரிச்சு, இங்க வந்தோம். எனக்கு கருப்பை பாதையில இருந்த நீர்க்கட்டி இருந்ததுதான் பிரச்னைனு கண்டுபிடிச்சு சொன்னாங்க டாக்டர் மிருதுபாஷினி. நவீன சிகிச்சை மூலமா கர்ப்பப்பைக்கு பங்கமில்லாம அந்த நீர்க்கட்டியை நீக்கினாங்க. இப்ப இயற்கையாவே கர்ப்பமாகி, இந்த மெய்யழகி எங்களுக்கு கிடைச்சா!'' என்று குழந்தையைக் கொஞ்சிய சிவரஞ்சனி,

''ஆனா... மூணு வருஷமா, 'உங்களுக்கு அந்தக் குறை இருக்கு, இந்தக் குறை இருக்கு, குழந்தை பொறக்கறதுக்கு கொஞ்சம்தான் வாய்ப்பிருக்கு, ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்றோம்’னு சொல்லிச் சொல்லியே எங்களை அலையவிட்டதோட, ஏகப்பட்ட பணத்தைப் பறிச்ச டாக்டருங்களை எல்லாம் யார்கிட்ட சொல்லி நோக..?!'' என்றார் வருத்தத்துடன்.

இந்தப் பிரச்னைக்கு சித்த மருத்துவம் சொல்லும் தீர்வுகள், குழந்தையின்மை காரணமாக எதிர்கொள்ளும் சமூகத் தாக்குதலுக்கான மனநல ஆலோசனை, மூலிகைக் குழந்தைகள் பற்றி...

அடுத்த இதழில் பார்ப்போம்...

கருத்தரிப்பு சிகிச்சை... பலன் என்ன?

ஆண் பூப்படைந்தால்..?!

''பாலியல் கல்வியை மாணவர்களுக்கு முறையாகத் தருவது, பாலுறுப்புகளில் பிரச்னைகள் வராமல் ஒருவர் தன்னை தற்காத்துக்கொள்ள உதவும். ஒருவேளை குறை ஏற்பட்டாலும், 'குழந்தையின்மையா... வாருங்கள்...’ என்று வலைவிரிக்கும் மோசடி பேர்வழிகளிடம் சிக்காமல், தன் குறைபாட்டையும், அதற்கான காரணத்தையும் அறிந்து, சரியான சிகிச்சையை கண்டறிய உதவும்'' என்று அக்கறையோடு சொல்கிறார் இயன்முறை மருத்துவரும், சூழலியலாளருமான ரமேஷ் கருப்பையா.

''பூப்படைந்த பெண், கருப்பை, சினைப்பை, சினைமுட்டை, இதில் ஹார்மோன்களின் பங்கு உள்ளிட்ட கரு உருவாகும் மருத்துவ உடலியலை அறிய வேண்டியது அவசியம். அப்போதுதான் தனக்கு மாதவிடாய் குறைபாடு, உடல் பருமன், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் அதை இனம் கண்டுகொள்ளவும், தேவையான சிகிச்சை எடுக்கவும் விழிப்பு உணர்வு பெற்றிருப்பாள். திருமணத்துக்குப் பின் 'குழந்தையின்மை’க்காக தேவைஇல்லாத சிகிச்சையில் சிக்கவும் மாட்டாள்.

பெண்ணுக்குக்கூட 'பெரியவளாகும்’ சடங்கில் ஓரளவு விஷயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், ஆண்களுக்கு பதின்ம வயதில் அப்படி எந்த வழிகாட்டலும் கிடைப்பதில்லை. ஓர் ஆண், தனக்கு ஏற்படும் ஆண்மைக் கோளாறு பற்றி பகிர, அவனுக்கு எந்த வாய்ப்பும் கிடைப்பதில்லை. விளைவு, அவனுக்கு உளவியல் சிக்கல் ஏற்படும். ஒன்று அடக்கி ஆள நினைப்பான் அல்லது கூச்ச சுபாவத்துக்கு ஆளாவான். பெரும்பான்மையான ஆண்களின் குறை, இங்கே திருமணத்துக்குப் பிறகே தெரியவருகிறது. ஆணும் தன் பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய மருத்துவச் சூழல் இங்கே சகஜமாக வேண்டும்'' என்று வேண்டுகோள் வைக்கிறார் ரமேஷ் கருப்பையா.

வாடகைத் தாய்!

ற்போது, வாடகைத் தாய் எனும் முறை பரவலாகப் பேசப்படுகிறது. தங்களுடைய கருப்பை மூலமாக கரு சுமக்க முடியாத பெண்கள், வாடகைத் தாய்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவோர் உலகம் முழுவதும் இருந்து குஜராத்தில் அதிகம் குவிகின்றனர். இங்கு, இந்த முறையில் ஓர் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் வரை பெற்றெடுக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இந்தியாவிலேயே வாடகைத் தாய்க்கு மிகவும் குறைந்த தொகை வழங்கப்படுவதும் இதே குஜராத்தில்தான். அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, குழந்தையைச் சுமந்து பிரசவித்துத் தர, அதிகமான ஏழைப் பெண்கள் இங்கே தயாராக இருக்கிறார்கள்.