என்.சி.சியில் சாதிக்கும் வாணிஸ்ரீ
''சினிமா பாடல்களில் எல்லாம் பார்த்த பனி படர்ந்த மலை அடுக்குகளில் நடந்த எங்களோட பயிற்சி முகாமை, இப்போ நினைச்சாலும் ஜில்லுனு இருக்கு!''
- என்.சி.சி. சீருடையில் மிடுக்காக இருக்கும் வாணிஸ்ரீக்கு, பேச்சிலும் துடுக்கு.
வேலூர், டி.கே.எம். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு விலங்கியல் பயிலும் இவர், என்.சி.சி. சார்பாக அகில இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு மாணவி என்ற சிறப்புடன், டார்ஜிலிங் வரை சென்று மலையேற்றப் பயிற்சியை முடித்துத் திரும்பியிருக்கிறார்... 'பெஸ்ட் ஸ்டூடென்ட்' என்கிற விருதுடன்!
''எங்க வீட்டுல மொத்தம் அஞ்சு பொண்ணுங்க. நான்தான் கடைக்குட்டி. அப்பா மணியும், அம்மா ஜெயகாந்தியும் எங்க எல்லாரையுமே அவங்கவங்க விருப்பப்படி படிக்க வெச்சாங்க. அப்பா, ராணுவத்துல 'நாயக்’ கிரேடுல வேலை பார்த்தவர். அவரோட இன்ஸ்பிரேஷன்ல, மூணாவது அக்கா சீதா, காவல்துறையில் இருக்காங்க. நானும் அப்படித்தான் என்.சி.சி-யில் ஆர்வமானேன். அக்காவும், நிறையவே ஊக்கம் கொடுத்தாங்க. ராணுவத்தைப் போலவே இதுலயும் தரைப்படை, கடற்படைனு தனித்தனி துறைகள் இருக்கு, இதில் நமக்கு விருப்பமான துறையில் இணைஞ்சு சேவையாற்ற முடியும்!'' என்ற வாணிஸ்ரீ, டார்ஜிலிங் வாய்ப்பு குறித்துப் பகிர்ந்தார்.

''என்.சி.சி. சார்புல ஆண்டுதோறும் நடத்தப்படற கேம்ப் (Combined Annual Training Camp), சென்னையில நடந்துச்சு. இதுல, தமிழ்நாடு முழுக்க இருந்து 675 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாங்க. ஓட்டம், தடைதாண்டி ஓட்டம்னு பல கட்ட சோதனைகள் நடத்தி, முடிவுல தேறின ஒரே மாணவி, நான்தான். இதேபோல மற்றொரு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட கோவை மாணவர் மற்றும் உத்தரகாண்ட் மாணவர்னு, இந்தியா முழுவதிலும் இருந்து டார்ஜிலிங் பயிற்சிக்கு மூணு பேர் தேர்வானோம். இமாலய மலையேறும் பயிற்சி நிறுவனம், எங்க மூணு பேரோட சேர்த்து, மொத்தம் 64 பேரை மலையேற்றப் பயிற்சிக்கு அழைச்சுட்டு போனாங்க. மத்தவங்க எல்லாருமே கட்டணம் செலுத்தி பயிற்சிக்காக வந்தவங்க'' என்றவர்,
''முதல்ல டிரெயின்ல டார்ஜிலிங் போனோம். அந்த தட்பவெப்ப சூழல் பழக, முதல்ல மலையடிவாரத்தில் நாலு நாட்கள் மரத்தாலான சிறு குடில்கள்ல தங்கினோம். அப்புறம் மூணு நாள் நடைபயணம் செய்து போனா... நம்ம ஹீரோ, ஹீரோயின்ஸ் எல்லாம் ஆடுவாங்களே... அப்படி பனி போர்த்தின மலைகள். அங்கதான் எங்களோட பயிற்சி. அடிப்படையான சில பயிற்சிகள் செய்தப்போ, 'ஐ... ஜாலி!’னு இருந்துச்சு. அதுக்கு அப்புறம்தான் கடுமையான மலையேற்றப் பயிற்சி தொடங்கிச்சு. ஆனா, நமக்குதான் ரிஸ்க்னா... ரஸ்க் ஆச்சே. 28 நாள் டிரெயினிங்கை அலர்ட்டாவும், அசால்ட்டாவும் முடிச்சதோட, 'பெஸ்ட் ஸ்டூடென்ட் அவார்டு’ம் வாங்கிட்டு ஊர் திரும்பியாச்சு.
என்ன.... அங்கிருந்த வரை நம்ம இட்லியையும் சாம்பாரையும்தான் ரொம்பவே மிஸ் பண்ணினேன். இனிப்பும் காரமும் கலந்த அந்த மாநில உணவும் ஓ.கே-தான்'' என்று சிரிக்கும் வாணிஸ்ரீ, வட்டு எறிதல், கபடி, உயரம் தாண்டுதல் என பல விளையாட்டுகளிலும் பதக்கங்களை அள்ளியிருக்கிறார்.
''என்.சி.சி. பயிற்சி ஆசிரியர் டாக்டர் வள்ளி மேடம் துணையோடதான் என்னால இந்த சாதனையை எட்ட முடிஞ்சுது!'' என்று நன்றி சொல்லும் வாணிஸ்ரீக்கு, எதிர்காலத்தில் கிரண்பேடி போல காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பதே லட்சியம்!
வாழ்த்துக்கள்!
- த.வா.நல்லிசை அமிழ்து
படங்கள்: க.முரளி