Published:Updated:

கட்டிப் போடும் பெற்றோர்... எட்டிச் செல்லும் குழந்தைகள்!

உண்மைகளை உரசும் உஷார் சர்வே அவள் விகடன் டீம்படங்கள் : வீ.சிவக்குமார், கு.கார்முகில்வண்ணன், ர.சதானந்த், ஜெ.பாரதி 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ல்லூரிப் பெண்களிடம் அத்தனை எளிதில் கேள்விகளைக் கேட்டு பதில் வாங்கிவிட முடியாது. ஒன்று... நம் கேள்விகளை வைத்து, நம்மையே ஓட்டி எடுப்பார்கள், அல்லது... ஜஸ்ட் லைக் தட் 'நோ கமென்ட்ஸ்’ சொல்லிவிடுவார்கள். ஆனால், அவர்களின் மனதை வெளிப்படையாக அறியும் ஒரு வழி, கொஸ்டினர். அப்படி கல்லூரிப் பெண்களின் மனதை அறியும் வகையில், மிக நுணுக்கமாகவும், அக்கறையுடனும் நாம் தயாரித்த கொஸ்டினரை, தமிழகத்தின் பரவலான ஊர்களில் இருக்கும் கல்லூரி மாணவிகளிடம் கொடுத்து எடுத்தோம் ஒரு சர்வே!

கட்டிப் போடும் பெற்றோர்... எட்டிச் செல்லும் குழந்தைகள்!

'பெற்றோர்களுக்கும், பெண்களுக்கும் இடையோன புரிதல் எப்படி இருக்கிறது?' என்பதை படிப்பதுதான் நோக்கம்! இது, உறவுகளுக்கு இடையே இருக்கும் உண்மைகளை நன்றாக உரசிப் பார்க்கும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்!

பொறையாறு, மதுரை, புதுக்கோட்டை, சேலம், சென்னை, விருதுநகர், வேலூர், கோவை, தூத்துக்குடி, அரியலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், திருச்செங்கோடு என மொத்தம் 5,000 மாணவிகளிடம், அவர்களின் கல்லூரி நிர்வாக அனுமதியுடன் கொஸ்டினரை நீட்டினோம். வாங்கியவர்கள் முகத்தில் சந்தோஷம், உற்சாகம், சின்ன தயக்கம் என பலவித ரியாக்ஷன்கள். பல கேள்விகளுக்கு 'பட் பட்’டென்று நிமிடத்தில் 'டிக்’ அடித்தார்கள்.

''நல்லவேளை... காலேஜ்ல வந்து நீட்டினீங்க, வீட்டில் கொண்டுவந்து கொடுத்திருந்தீங்கனா, கண்டிப்பா பதில் சொல்லியிருக்க மாட்டோம். அப்புறம் அம்மா, அப்பா எங்க மனசை கண்டுபிடிச்சுருவாங்களே!'' என்று சிரித்தார்கள் தஞ்சாவூர் மாணவிகள்.

கட்டிப் போடும் பெற்றோர்... எட்டிச் செல்லும் குழந்தைகள்!

''பெர்சனல் விஷயங்களை முதல் முதல்ல யார்கிட்ட ஷேர் பண்ணுவீங்கனு கேட்டா, கண்டிப்பா தோழிங்கற சாய்ஸைதான் நாங்க முதல்ல 'டிக்’ பண்ணுவோம். தோழி மாதிரியே நல்ல தோழனும் எங்களுக்கு இருக்காங்க. அப்பா, அம்மா மாதிரி நம்மளை திட்டாம, அடிக்காம, சந்தேகப்படாம நாம சொல்றதை இவங்கதான் உள்வாங்கிப்பாங்க. அஃப்கோர்ஸ்... இந்த லிஸ்ட்ல அக்கா களுக்கும் இடம் உண்டு. ஆனா, அது பெரும்பான்மை கிடையாது'' என்று நீண்ட விளக்கம் தந்தபடியே, ஐந்தாவது கேள்விக்கு 'டிக்' அடித்தார்கள் திண்டுக்கல், தேனி மாணவிகள்.

தேனி, அரியலூர், கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் பாக்கெட் மணி கேள்விக்கு, ''எங்களுக்கு எல்லாம் பாக்கெட் மணினு தனியா கொடுக்கிறதில்லக்கா. பஸ்ஸுக்கு காசு கொடுக்கிறது மட்டும்தான்!'' என்றார்கள் மாணவிகள் வெகுளியாக.

'திருமணம் யாருடைய விருப்பப்படி?’ என்ற கேள்விக்கு... ''பொண்ணு படிப்பை முடிச்ச உடனேயே கல்யாணம்ங்கிற அப்பா, அம்மாக்களோட எண்ணத்தை மாத்தணும். 'ரொம்ப படிச்சா, அதுக்கேத்த மாப்பிள்ளையை நாங்க எங்க போய் தேடுறது?’னு சொல்றாங்க. என்ன கொடுமைக்கா இது..?'' என்று சோக ஸ்மைலியை வீசினார்கள் தூத்துக்குடி பெண்கள்.

கட்டிப் போடும் பெற்றோர்... எட்டிச் செல்லும் குழந்தைகள்!

''எங்களுக்கு இருக்கிற மெகா பிரச்னையில ஒண்ணு, நாங்க வெளிய போக அப்பா, அம்மா தடா போடுறதுதான். அதனாலேயே 'புராஜெக்ட், அது... இது’னு பொய் சொல்லிட்டு வெளிய போறோம்!'' என்று ரகசியங்களைக் கொட்டிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டார்கள் சென்னை மாணவிகள் சிலர்.

''முன்ன மாதிரி இல்ல, இப்ப எல்லாம் அம்மாகிட்ட பெர்சனலா, ஃப்ரெண்ட்லியா கொஞ்சம் பேச முடியுது. போகப் போக மாறிடுவாங்கனு நினைக்கிறோம்!'' என்று ஃபைனல் டச் கொடுத்து அனுப்பினார்கள் கோவை மாணவிகள்.

பெற்றோர்களே... கல்லூரி செல்லும் உங்கள் மகள்களின் மனதை, உங்களுக்கு படம்பிடித்துக் காட்டவே.... இந்த சர்வே.

'உங்கள் பெற்றோர், உங்களுடன் அதிக நேரம் செலவழிக்கிறார்களா?' எனும் கேள்விக்கு, 41% பேர் 'இல்லை' என்று பதில் கூறியிருப்பது, கவலைக்குரிய விஷயமே!

கட்டிப் போடும் பெற்றோர்... எட்டிச் செல்லும் குழந்தைகள்!

'மனது விட்டு உங்களின் பெர்சனல் விஷயங்களை யாரிடம் முதலில் பகிர்ந்து கொள்கிறீர்கள்?' எனும் கேள்விக்கு, அம்மாக்களின் சதவிகிதம் 20. இதுவே யோசிக்க வைக்கும் விஷயம்தான். இந்நிலையில், அப் பாக்களின் சதவிகிதம்... 6 என்பது ரொம்ப ரொம்ப கவலையுடன் யோசிக்க வைக்கிறது. குழந்தைகளின் முதல் தோழியாக, தோழனாக இருக்க வேண்டியது பெற்றோர்கள்தானே! குழந்தைகளுக்கு நாம் காது கொடுக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதைத்தான் இது வலியுறுத்துகிறது.

இப்படி ஒவ்வொரு கேள்வியின் மூலமாகவும் குழந்தைகளின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், விருப்பங்கள், கோபங்கள் எல்லாவற்றையும் இந்த சர்வே முடிவுகள் அழகாக படம்பிடித்துள்ளன. அதற்கு தகுந்தாற்போல் உங்களை கொஞ்சம் சரிசெய்துகொண்டால், நீங்கள் அவர்களின் பெஸ்ட் பேரன்ட் மட்டுமல்ல, பெஸ்ட் ஃப்ரெண்டும்கூட!

பிறகென்ன... குழந்தைகளின் எதிர்காலம், நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மேலாக ஜொலிக்குமே!

கட்டிப் போடும் பெற்றோர்... எட்டிச் செல்லும் குழந்தைகள்!

ஆச்சர்யமான விஷயம்!

சர்வே முடிவுகளை, சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ரங்கராஜனிடம் சேர்ப்பித்தோம். அதை அலசியவர், ''பிள்ளைகளுடன் நட்பாக இருக்கலாமா, எந்தளவுக்கு இருக்கலாம் என்பதே பல பெற்றோர்களுக்கு குழப்பமாக இருக்கிறது. கல்லூரி மாணவர்களோ... 'சக தோழி, தோழன்கள்தான் தங்களின் எண்ணத்தை ஒத்தவர்களாக, நவீன உலகத்துடன் அப்டேட் ஆனவர்களாக இருக்கிறார்கள்' என்று நம்புகிறார்கள். அதை தவறென்று பெற்றோர்கள் சொல்ல, சரி என்று குழந்தைகள் நிரூபிக்க முயல, அங்கேதான் இருதரப்புக்கும் இடைவெளி விழுகிறது.

'என் குழந்தைக்கு நல்ல நண்பனாக இருக்கிறேன்' என்பதற்காக, உங்கள் சோகத்தை எல்லாம் பகிர்வதோ... உங்கள் தோழிகளுடன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவர்களையும் அழைத்து செல்வதோ... கூடாது. நண்பனாக இருக்க வேண்டுமென்றால், குழந்தைகள், எல்லாவற்றையும் உங்களிடம் மனம் திறந்துபேசும் அளவுக்கு நட்பாக இருங்கள்.... அதுபோதும். ஓவர் ஆக்ஷன் தேவையில்லை.

பிள்ளைகள் தவறு செய்துவிட்டார்கள் என்றால், கண்டித்து, அடித்து, களேபரப்படுத்தாமல், தானாக விழுந்து எழுந்து உணர இடம் கொடுங்கள். கீழே விழாமலேயே இருந்தால்... எப்படி அதன் வலி பற்றி அவர்கள் அறிவார்கள்?'' என்று கேட்ட மருத்துவர் ரங்கராஜன்,

''இந்த சர்வேயில், கல்லூரி கால ஆண் - பெண் நட்பை பெற்றோர் சகஜமாக பார்க்கிறார்கள் என்று 63% பேர் பதில் சொல்லி இருப்பதே... ஆச்சர்யமான, பாராட்டப்பட வேண்டிய விஷயம். இது, பெற்றோர்கள், பிள்ளைகளை புரிந்துகொள்ள முயல்கிறார்கள் என்பதற்கான சான்று!'' என்று புன்னகைத்தபடியே சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு