அலைமோதும் கூட்டம், அலங்கார மின் விளக்குகள் என திருவிழா கலகலப்புடன் இருந்த அந்த மேடையில், 25 வயது முதல் 76 வயதுடைய பெண்கள் அட்டகாசமாக நடனமாடிக் கொண்டிருந்த காட்சி... ஆச்சர்யத்தின் உச்சம்.
சென்னையில் எட்டு கிளைகளுடன் இயங்கிவரும், 'ஆத்மாலயா’ எனும் நடன அமைப்பு 'டான்ஸ் ஹவர் நைட் 14’ என்கிற பெயரில், ராஜா அண்ணாமலைபுரத்தில் நடத்திய இந்த நடன நிகழ்ச்சி பற்றி, அதன் நிறுவனர் மாலா பரத் நம்மிடம் பேசியபோது... ''88-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எங்கள் அமைப்பின் ஒரே நோக்கம், பெண்களுக்கு நடனமும் தியானமும் கற்றுக்கொடுப்பதே. பெண்கள் தங்களின் சிறு வயதில் நிறைவேற்றிக்கொள்ள முடியாத ஆசைகளில் ஒன்றாக, நாட்டியம் இருக்கிறது. எங்களிடம் வருபவர்கள் பெரும்பாலும் 30 வயதைக் கடந்த இல்லத்தரசிகள் என்பதால், எந்த வயதில் உள்ளவர்களும் கற்றுக்கொள்ளும் விதமாக, பரதத்தை எளிமையான அசைவுகளில் கற்றுத்தருவது, எங்களின் சிறப்பு. இப்படி வரும் பெண்களில் பலர் வீட்டில், பணியிடத்தில் ஏற்படும் பிரச்னைகளை மறந்து, நடனத்தில் கலக்கிறார்கள்'' என்று சொன்னார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நடன ஆசிரியர் கமலப்பிரியா, ''இதுவரை எங்குமே நடனம் கற்றிராத பெண்கள், தங்களின் சின்ன வயதுக் கனவை நனவாக்கும் வகையிலேயே அதிகம் இங்கே வருகின்றனர். எடையைக் குறைக்க

வேண்டி வருபவர்களும் உண்டு. ஆரம்பத்தில் உட்கார்ந்து எழுந்து நமஸ்காரம் செய்யக்கூட சிரமப்பட்டவர்கள் எல்லாம், இப்போது எப்படி பிரமாதப்படுத்துகிறார்கள் பாருங்கள்!'' என்றார் ஓர் ஆசிரியருக்கே உரிய பெருமையுடன்.
நிகழ்ச்சியின் அட்ராக்ஷன்... 76 வயது சுந்தரிப் பாட்டி. ''என் பேரப் பசங்க ஆடுறதைப் பார்க்கும்போது, இந்த வயசுல எனக்கும் டான்ஸ் கத்துக்கிட்டு மேடையில ஆட ஆசை வந்துருச்சி. இப்ப அடுத்த தலைமுறையோட இணைஞ்சி ஆடுறேன். ஐ லவ் டான்ஸ்!'' என்றவர், தன் நடனத்தால் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
பெண்களின் மனதில் தேங்கியிருக்கும் ஏக்கத்துக்கு வடிகால் போட்டிருக்கும் இந்த மேடை நிகழ்ச்சியில், அவர்கள் ஆடியதைப் படம் பிடிக்க... கணவன்மார்கள்களும், பிள்ளைகளும் போட்டி போட்ட காட்சி, அன்பான அழகு!