Published:Updated:

உறவுகளை இணைத்த ‘ஒன்றுகூடல்’!

சண்முகவடிவு, படங்கள் : சுதன் - லீ

உறவுகளை இணைத்த ‘ஒன்றுகூடல்’!

சண்முகவடிவு, படங்கள் : சுதன் - லீ

Published:Updated:

''வர்றதா இருந்தா (!), ஒரு போன் பண்ணிட்டு வாங்க...''

- இதுதான் இன்றைய விருந்தோம்பல்.

சொந்தங்கள் கூடி சந்தோஷிக்கும் இன்பம் பற்றி இந்தத் தலைமுறை அறிவதற்கான சூழலை, பெரும்பாலான பெற்றோர்கள் தருவதில்லை. ஆனால், எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 90 பேரை ஒன்றிணைத்து நாங்கள் நடத்திய 'ஒன்றுகூடல்' (கெட் டுகெதர்) நிகழ்வு பற்றியும், அதில் சம்பாதித்த சந்தோஷங்கள் பற்றியும் அறிந்தால், நீங்களும் அப்படி ஓர் நிகழ்வுக்கு ஆசை கொள்வீர்கள்!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈரோடு அருகே லக்காபுரம் கிராமம்தான் என் அம்மா பிறந்த ஊர். அம்மாவுக்கு மூன்று அக்காக்கள். சிறு வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் பெரியம்மாக்களின் பிள்ளைகளுடன் அடித்த கூத்தும் கும்மாளமும் சொல்லி மாளாது.

எல்லோரும் வளர்ந்து திருமணமாகி அவரவர் குடும்பம், குழந்தைகள் என்றான பிறகு, அவ்வப்போது ஏதாவது விசேஷங்களில் மட்டுமே சந்தித்துக்கொள்ள முடிந்தது... அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே! எதிர்பாராத ஓர் இன்ப அதிர்ச்சியாக, என் தம்பி ஒரு ஏற்பாடு செய்தான். வருடம் ஒருமுறை எல்லோருமாக அவனுடைய தோட்டத்தில் ஒன்றுசேர்வது என்பதுதான் அது. கிட்டத்தட்ட 25, 30 பேர் ஒன்று கூடி இரண்டு, மூன்று நாட்கள் சந்தோஷமாக, கொண்டாட்டமாக இருந்துவிட்டுப் போவோம்.

உறவுகளை இணைத்த ‘ஒன்றுகூடல்’!

அப்படி போன வருடம் நடந்த ஒன்றுகூடலுக்கு வந்திருந்த தட்சிணாமூர்த்தி அண்ணன் (என் பெரியம்மா மகன்), ''ஏன் இதே போல நம் வீட்டிலும் ஒரு 'கெட் டுகெதர்' வைக்கக் கூடாது!’' என்று சொல்ல, அண்ணியும் சந்தோஷமாக சம்மதித்தார். சங்கம மழையின் முதல் துளி விழுந்தது அந்த நிமிடம். அதைச் செயல்படுத்த ஒவ்வொருவரும் காட்டிய ஆர்வம்... அழகு!

உறவுகளை இணைத்த ‘ஒன்றுகூடல்’!

நான்கு சகோதரிகளின் பிள்ளைகள், அவர்களின் பேரப் பிள்ளைகள் என்று என் அம்மா வழி சொந்தங்கள் அனைவரையும் ஒன்றுகூட்ட முடிவு செய்தோம். அப்போது 'ஃபேமிலி ட்ரீ’ அடங்கிய புத்தகம் ஒன்று வெளியிட்டால் நன்றாக இருக்குமென்று ஒரு அற்புதமான யோசனை சொன்னான், என் தங்கை மகன் மதன்குமார். அதை வெறும் பெயர்களாக இல்லாமல், ஒவ்வொருவரின் புகைப்படம், விலாசம், தொடர்பு எண், பிறந்த நாள், திருமண நாள் மற்றும் பிளட் குரூப் உள்ளிட்ட விவரங்களுடன் சேகரித்தால் நன்றாக இருக்கும் என்று மதன் சொல்ல, அந்த விவரங்களைச் சேகரிக்கும் பணியை அவனுடன் பகிர்ந்துகொள்ள முன்வந்தாள் தங்கை பூங்கோதை. ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த தம்பதி பற்றிய பாஸிட்டிவ் விஷயங்களைப் பட்டியலிடும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

என் அம்மா தவிர, என் அப்பா மற்றும் மற்ற பெரியம்மா, பெரியப்பாக்கள் என்று யாருமே இப்போது இல்லை. அவர்களின் பிள்ளைகளுக்கு போன் செய்து நான் அந்தத் தகவல்களைக்

உறவுகளை இணைத்த ‘ஒன்றுகூடல்’!

கேட்க, தங்கள் பெற்றோர் பற்றிச் சொல்லும்போதே அவர்கள் கரைந்து அழுத தருணங்கள்... நெகிழ்வு! இறுதியாக என் அம்மாவிடம் வந்தேன். இத்தனை வருடங்களில் ஒருநாள் கூட நான் என் அம்மாவின் அருகில் அமர்ந்து, அவரை பேசவிட்டுக் கேட்டதில்லை. வாழ்வில் முதல் முறையாக மடை திறந்த வெள்ளமாக அம்மா பேசப்பேச, குற்ற உணர்வோடு கேட்டுமுடித்து, போனை வைத்ததும் கரகரவென அழுதுவிட்டேன்.

சேகரித்தவற்றை எல்லாம் எழுதத் தொடங்கினேன். புகைப்படங்கள் முதல் பிளட் குரூப் வரை தாங்கள் சேர்த்த விவரங்களை மதனும், பூங்கோதையும் தொகுத்தார்கள். எத்தனை போன் கால்கள், இ-மெயில்கள், 'வாட்ஸ்ஆப்’ பரிமாற்றங்கள்! குறிப்பாக, ஒரு அக்கா மகனின் குடும்பப் புகைப்படம் கேட்டபோது... அவர்கள் டூரில் இருக்க, வழியிலேயே காரை நிறுத்தி, புகைப்படமெடுத்து, சுடச்சுட 'வாட்ஸ்ஆப்’ மூலமாக அனுப்பி, வந்து சேர்ந்தது, சூப்பர்!

ஒருபுறம் புத்தகம் தயாராக, இன்னொருபுறம் அண்ணனின் குடும்பம் அழைப்பிதழ் அடித்து, உறவினர்களுக்கு அனுப்பி, அவர்களைத் தொலைபேசியிலும் அழைத்துக்கொண்டிருந்தனர்.

ஈரோடு, பெருமாள்புரத்தில் உள்ள என் அண்ணன் வீட்டில், ஒன்றுகூடல் விழா நாளுக்கு முதல் நாளான சனிக்கிழமை மதியமே பெங்களூரு, சென்னை, நெய்வேலி, ஈரோடு, கோயம்புத்தூர் என்று பல ஊர்களில் இருந்தும் உறவினர்கள் கூட ஆரம்பித்தோம். சின்ன வயதில் குதித்துக் கும்மாளமிட்ட அந்த பிரமாண்ட வீட்டில், மீண்டும் குழந்தை குட்டிகளுடன் கூடிய பரவசத்தை, வார்த்தைகளால் சொல்லத் தெரியவில்லை. கிட்டத்தட்ட 90 பேர் வீடு முழுக்க நிரம்பியிருக்க, 'அண்ணா வந்தாச்சா?’, 'சித்தி எங்கே இன்னும் காணோம்?’, 'மாமா, நீங்க எப்ப வந்தீங்க?’, 'குட்டித் தங்கம் எவ்ளோ வளர்ந்துட்டே!’ என்று ஒரே அன்பு விசாரிப்புகள். 'கய்யாமுய்யா'வென்று சந்தோஷ அளவளாவல்கள்.

மதிய உணவு முடிந்ததும் 'ஃபேமிலி ட்ரீ’ புத்தகம் விநியோகம் செய்யப்பட, அத்தனை பேரும் ஆவலோடு புரட்ட ஆரம்பித்தனர். புகைப்படங்களைப் பார்த்து குதூகலித்து, தங்கள் பெற்றோரைப் பற்றிய நினைவலைகளைப் படித்து கண்ணீர்விட்டு என, அந்தக் காட்சி, கவிதை! என் அம்மா அவருடைய பிறந்த வீடு, சகோதரிகளைப் பற்றி எல்லாம் படித்தபோது உணர்ச்சிப் பெருக்கில் அழுதவாறே, ''இந்த நிமிஷ நிறைவு போதும் எனக்கு. இப்போவே செத்தாலும் நான் நிம்மதியா சாவேன்!’' என்று எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு சிறுகுழந்தையாய் விம்மினார். அத்தனை பேரின் ஒட்டுமொத்தப் பாராட்டும், அந்தப் புத்தகத்துக்காகப் பட்ட சிரமங்கள் அனைத்தையும் மறக்கடித்தது.

உறவுகளை இணைத்த ‘ஒன்றுகூடல்’!

மாலை டீ சாப்பிட்டுவிட்டு, அப்படியே காலாற நடந்து ஒரு கோயில் விசிட் முடித்து, வீடு வந்து சேர்ந்தோம். சிறியவர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொண்டு, 'உன் ஃபேஸ்புக் ஐ.டி என்ன?’, 'நீ வாட்ஸ்ஆப்ல இருக்கியா?’ என்று விசாரித்து, அப்போதே 'வேண்டுதல்’ அனுப்பி இணையத்தில் இணைந்தனர். தொடர்ந்து, ஜோடிப் புறா, கோகோ, மியூசிக்கல் சேர் என சிறியவர், பெரியவர் அனைவரும் விளையாடியதை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது.

இரவு உணவு முடிந்து பேச்சும் சிரிப்பும் அரட்டையுமாக, உறங்க இரவு இரண்டு மணி ஆகிப்போனது. மறுநாள் காலை வீட்டின் பெரிய வாசலில், பெண்கள் ஒரு குழுவாக இணைந்து பிரமாண்ட கோலம் போட்டோம். பின் அனைவரும் குளித்து ரெடியாக, காலையிலேயே ஆரம்பமானது அசைவ விருந்து. அன்று என் அக்கா ஒருவரின் பிறந்தநாள். அவருக்கு சர்ப்ரைஸாக கேக் வெட்டினோம். அவர் ஆனந்தக் கண்ணீரோடு குழந்தையாகி நன்றி சொன்னது, அழகுக் கவிதை!

உண்ட மயக்கம் தீர கொஞ்சம் ஓய்வு. தேநீர் நேரம் முடிந்து புறப்பட ஆரம்பித்தபோது, ஒவ்வொரு மனதிலும் சந்தோஷத்துக்கு சமமாக ஏக்கமும். ''அடுத்து எப்போ இப்படி சந்திக்கப் போறோம்?'' என்ற கேள்வியே ஒவ்வொருவரிடமும். நிச்சயம் சந்திப்போம் என்ற உறுதியோடு, நம்பிக்கையோடு விடைபெற்றுக் கலைந்தோம்.

உறவுகளின் வலிமையை உணரச் செய்த 'கெட் டுகெதர்' அது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism