Published:Updated:

''காதலிலும் உறுதி... கடமையிலும் உறுதி!''

மனம் கசியும் மேஜரின் மனைவிந.கீர்த்தனா, படங்கள் : க.பாலாஜி 

''காதலிலும் உறுதி... கடமையிலும் உறுதி!''

மனம் கசியும் மேஜரின் மனைவிந.கீர்த்தனா, படங்கள் : க.பாலாஜி 

Published:Updated:

நாடே துயரம் கொண்ட இழப்பு, 'மேஜர்’ முகுந்த் வரதராஜனுடையது. எனில், அவரது வீடு எப்படியிருக்கும்? மிகுந்த துயரத்துடனும், தயக்கத்துடனும்தான் உள்ளே சென்றோம்.

ஏப்ரல் 25 அன்று காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகளுடனான போரில், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்திருக்கிறார் 'மேஜர்’ முகுந்த் வரதராஜன். காதலித்துப் போராடி, இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து 5 ஆண்டுகளே ஆகியிருக்கும் வேளையில்தான், இந்த பேரிழப்பு!

மேஜரின் காதல் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் மற்றும் ஐந்து வயதான குழந்தை அர்ஷியா இருவரையும் பார்த்தபோது, ஒரு நிமிடம் நாம் ஆடித்தான் போனோம். ஆனால், அழுகையைவிட, கணவர் மீதான அன்பையும், நாட்டுக்காக உயிர்நீத்த பெருமையையும் நிதானமாகப் பேசினார் இந்து. இவர் மட்டுமல்ல... மொத்த குடும்பமும் துயரத்தை வெளியில் காட்டாமலேதான் எதிர்கொண்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''முகுந்த்துக்கு அழுதால் பிடிக்காது...'' என்றபடி ஆரம்பித்த இந்து,

''காதலிலும் உறுதி... கடமையிலும் உறுதி!''

''மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் 2004-ம் ஆண்டு, மாஸ் மீடியா முதுநிலை படிப்பில் நான் சேர்ந்தபோது, அவர் ஜர்னலிஸம் முதுநிலை படிப்பில் சேர்ந்தார். எங்களுக்குள் காதல் உருவாக, தன் வீட்டில் சொல்லி, என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அனுமதியும் வாங்கினார். ஆனால், எங்கள் வீட்டின் சம்மதத்தைப் பெற... ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 2009-ம் ஆண்டு சென்னையில் கல்யாணம் நடந்தது. கலாசாரம், மொழி என பல வேற்றுமைகளைக் கடந்து, காதல் வெற்றி பெற்றது. முகுந்த் ஒரு விஷயத்தில் இறங்கினால், கடைசிவரைக்கும் உறுதியாக இருப்பார். அந்த உறுதியால்தான் பல தடைகளையும் தாண்டி என்னைக் கைபிடித்தார். அந்த உறுதியோடுதான் களத்திலும் உயிர் நீத்திருக்கிறார்...''

- கண்கள் குளமாகின்றன இந்துவுக்கு.

''நல்ல சினிமாக்களை விரும்பிப் பார்ப்பார். தாய் தந்தையோட வளர்ப்பும், நல்ல மெசேஜ் சொல்லும் திரைப்படங்களும் அவருடைய குணத்தை சீரமைத்தன என்றே சொல்லலாம். அன்பால் ஆளைக் கொல்வது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை முகுந்த்திடம் நான் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். குடும்பத்துக்காக எதையும் செய்யத் துணிந்த அவர், எங்களையே விட்டுப்போகத் துணிந்திருக்கிறார் என்றால்... நாட்டை அந்தளவு நேசித்திருக்கிறார் என்றுதானே அர்த்தம். 'ராணுவ மேஜரின் மனைவியாக இருப்பது கடினமாமே?' என்று என்னிடம் நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். ஆனால், ராணுவம், நாடு இதெல்லாம் எங்களையும் அறியாமல், எங்கள் வாழ்க்கையோடு இரண்டற கலந்துவிட்டன'' என்றவர்,

''அர்ஷியா பிறப்பதற்கு முன், சென்னையில் எழுத்தராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். எப்போதும், யாரையும் சார்ந்திருக்கக் கூடாது என்ற என் கொள்கைக்கு மதிப்பும் சுதந்திரமும் கொடுத்தார் முகுந்த். இப்போது, அந்த சுதந்திரத்தை இழந்துவிட்டேன்'' என்றவர், மாமனார்- மாமியாருடனான உறவு பற்றித் தொடர்ந்தார்.

''காதலிலும் உறுதி... கடமையிலும் உறுதி!''

''எங்களுக்குள் ஆரம்பத்தில் கலாசார வேறுபாடு காரணமாக சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனாலும் எந்தப் பிரச்னையும் வராமல் ஒரு பாலமாக முகுந்த் இருந்தார். ஒருகட்டத்துக்குப் பிறகு, பாலமே தேவையில்லை என்கிற வகையில், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் வாழும் அளவுக்கு எங்களை மாற்றியிருக்கிறார் முகுந்த் என்பது, அவருடைய இழப்புக்குப் பிறகுதான் புரிகிறது.

எந்த நாட்டுக்காக முகுந்த் தன்னோட உயிரை விட்டாரோ, அதேநாட்டில் முகுந்த் இல்லாமல் தனியாக வாழ்ந்தாக வேண்டும். அதை நினைக்கும்போது, என்னுடைய பொறுப்பு அதிகரித்திருக்கிறதாகவே நினைக்கிறேன். அப்பா, அம்மா இருக்காங்க...'' என்கிறார் முகுந்தின் பெற்றோரைப் பார்த்து.

தந்தை இறந்ததை முழுதாக உணரும் வயதில்லாத அர்ஷியா, தான்பாட்டுக்கு விளையாடிக்கொண்டிருந்தாள்.

ரஜினி ரசிகரான முகுந்தை, 'எந்திரன்’ திரைப்படத்தை தங்களுடன் சேர்ந்து பார்க்கச் சொல்லி அவருடைய உயரதிகாரிகள் வற்புறுத்த, 'முடியவே முடியாது, என் பெற்றோருடன் தமிழில்தான் பார்ப்பேன்’ என்று அவர் அடம்பிடித்ததை நம்மிடம் பேசி, நினைவுகளைக் கடக்கிறார் இந்து.

தங்கள் மகன் ராணுவத்தில் சேர தாங்கள் ஆசை கொண்டதை நினைவுகூர்ந்த முகுந்தின் அப்பா வரதராஜன், இன்று அவர் நாடே போற்றும் 'மேஜர்’ முகுந்த் ஆகிவிட்டதைக் கூறி கண் கலங்குகிறார்.

முகுந்தின் அம்மா கீதா, ''அவன் அப்பாவை செல்லமா, 'நைனா’னும், என்னை 'ஸ்வீட்டி’னும்தான் கூப்பிடுவான்'' என்கிறார் அழுகை கலந்த குரலில்.

தாயும் சரி, தாரமும் சரி... முகுந்த் உயிர் தியாகத்துக்காக சில நேரங்களில் வருந்தினாலும், பல நேரங்களில் தலை நிமிர்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism