சுற்றுலா ஸ்பெஷல்
ஸ்பெஷல் 1
Published:Updated:

என் இனிய கதைநாயகிகள்! - 3

திரையுலக பிரம்மாக்களின் ரீவைண்ட் தொடர்இயக்குநர் ஃபாசில், படம் : வீ.சக்தி அருணகிரி

''எண்பதுகளில் வெளிவந்த படங்கள், பெரும்பாலும் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குற மாதிரி இருக்கும். அந்தச் சமயத்துல நான் எடுத்த படம்தான், பூவே பூச்சூடவா...''

- மென்மையான குரலில் ஆரம்பித்தார், மென்மையான திரைக்கதையால், நம் இதயங்களையெல்லாம் கட்டிப்போடும் இயக்குநர் ஃபாசில்.

''பூவே பூச்சூடவா...
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா...

- இந்தப் பாட்டை எப்பக் கேட்டாலும், மனசுக்குள்ள ஏதோ மயிலிறகு வருடுறது போல ஒரு மெல்லிய உணர்வு எனக்குள்ள எழும். ஒரு பாட்டிக்கும் பேத்திக்குமான உறவை, அழுத்தமா சொல்ற படம் இது. பாட்டியா, பத்மினியும், பேத்தி சுந்தரியா நதியாவும் நடிச்சிருப்பாங்க. நான் அதிகம் விரும்பும் என்னோட கதைநாயகி... இந்த சுந்தரிதான். அதுக்குக் காரணம்... ஒவ்வொரு விநாடியும் தன்னோட செயல்கள்ல அவ காட்டற துடுக்குத்தனம்தான்.

என் இனிய கதைநாயகிகள்! - 3

'சில வருஷங்களுக்கு முன்ன நடந்த விபத்து காரணமா சுந்தரிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய கட்டாயம். அப்படியே அறுவை சிகிச்சை செய்தாலும், உயிர் பிழைச்சிருக்கறதுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை'னு டாக் டர்கள் சொல்லிடுவாங்க. ஆப ரேஷன் பண்ணிக்காம, இறுதி நாட்களை சந்தோஷத்தோட கழிக்கறதுக்காக பாட்டி வீட் டுக்கு வந்துடுவா. அவ அப்பா மேல உள்ள கோபத்தால, ஆரம் பத்தில் அவளை ஏத்துக்காத பாட்டி, கொஞ்சம் கொஞ்சமா மனசுமாறி ஏத்துக்குவா. க்ளைமாக்ஸ்ல, அவங்க அப்பா வந்து சிகிச்சைக்காக கூட்டிட்டு போவார். குணமடைஞ்சி, தன்னிடமே பேத்தி திரும்பி வருவாங்கற நம்பிக்கையோட காத்திருப்பா பாட்டி. இதுதான் 'பூவே பூச்சூடவா’!

எல்லாரும் தன் மேல அனுதாபப் பார்வை வீசறது கொஞ்சமும் பிடிக்காமதான், கடைசி நாட்களை சந்தோஷமா கழிக்கறதுக்காக எங்கோ கிராமத்துல இருக்கற பாட்டி வீட்டுக்கு வந்திருப்பா சுந்தரி. அங்க தனக்குக் கிடைச்ச ஒவ்வொரு நிமிஷத்தையுமே சந்தோஷமா அனுபவிப்பா. பாட்டியோடயும், தெருக்குழந்தைங்களோடயும் அடிக்கற லூட்டி; தன் மேல கொஞ்சம் போல காதலோட திரியற பக்கத்து வீட்டுப் பையனை (எஸ்.வி.சேகர்) துரத்தி துரத்தி கலாய்க்கறது; ஊர்க்காரங்க ஒருத்தர் விடாம எல்லாரையும் கிண்டல் அடிக்கறதுனு... நொடிக்கு நொடி 'கலகல’னே இருப்பா சுந்தரி. கிட்டத்தட்ட சாவு உறுதிங்கற நிலையிலயும், அதை நினைச்சி பயந்து ஒடுங்கிப் போகாம, இருக்கும் நாட்களைத் தைரியமா அனுபவிக்கும் என் சுந்தரி... சின்னது, பெரியதுனு பலமாதிரியான கவலைகளுக்கெல்லாம் தளர்ந்து போறவங்களை, 'வாழ்க்கையைத் தைரியமா கொண்டாடுங்க'னு சொல்ற பேரழகி. அவளுக்கும் பாட்டிக்குமான உறவு எல்லாமே என்னோட பதின்ம காலங்கள்ல நேர்ல பார்த்து ரசிச்சதுதான். ஆமாம்... நண்பர்களோட வீடுகளுக்குப் போகும்போது, அங்க எப்படியும் ஒரு பாட்டியும் பேத்தியும் இருப்பாங்க. தங்களோட பேத்திகளுக்கு அந்தப் பாட்டிகள் தலைவாரி பூச்சூடுறது, பிடிச்ச பலகாரங்களை செய்து தர்றது, ஊட்டிவிடுறது, அரட்டை அடிக்கறது, அப்பா, அம்மாவைவிட அதிகம் பாசம் பொழியறதுனு... நான் பார்த்த அழகான பிணைப்புகளைத்தான் படத்தில் கோத்தேன்.  

என் இனிய கதைநாயகிகள்! - 3

ன்னோட மரியாதைக்குரிய இன்னொரு நாயகி, 'காதலுக்கு மரியாதை’ மினி. அந்தக் கதாபாத்திரமாவே மாறியிருப்பாங்க ஷாலினி. 'பூவே பூச்சூடவா’ படத்துல நதியாவோட கொண்டை பயங்கர ஃபேமஸ். இப்பவும் அந்த கொண்டையை 'நதியா கொண்டை’னுதான் சொல்றாங்க. அதேபோல 'காதலுக்கு மரியாதை’ படம் வந்தப்ப... ஷாலினியோட ஃப்ரீ ஹேர்ஸ்டைல், துப்பட்டாவை கழுத்தில் போடும் ஸ்டைல் ரெண்டுமே பிரபலமாச்சு.

மூணு அண்ணன்களுக்கு தங்கையா பிறக்கும் மினி, அவங்க மேல இருக்கிற அளவுக்கதிகமான அன்பு, மரியாதை காரணமா, தன் காதலையே தியாகம் செய்ய முடிவெடுப்பா. இறுதியில், அந்தப் பாசத்துக்கு மாரியாதை... அவளோட காதலை ஏத்துக்கும் அந்தக் குடும்பம்.

காதலிக்கும் தருணத்தில் மினியும், ஜீவாவும் மிக கண்ணியமா நடந்துக்குவாங்க. ஒருசமயம் ரெண்டு பேரும் பைக்கில் போகும்போது மினியோட கழுத்தில் இருக்கும் செயின் ஜீவாவோட சட்டையில் சிக்கிக்கும். அதை எடுக்க மினி முயற்சி செய்யும்போது ஜீவாவோட முகத்தை உரச வேண்டிய நெருக்கடி ஏற்படும். அதனால செயின் அறுந்தாலும் பராவாயில்லைனு, அதை தவிர்த்து ஓடுவா மினி. முத்தம், உரசல் இதெல்லாம் இல்லாம காதலுக்கு மரியாதை தந்தவ என் மினி.

காதல் கைகூடுவதற்கான வாய்ப்பிருந்தும்... பெற்றவர்கள்தான் முக்கியம்னு நினைக்கற மினி, 'நாம பிரிஞ்சிடலாமா ஜீவா? உங்க அம்மாகிட்ட உங்களைத் திருப்பிக் கொடுத்துட்டேன்னு சொல்வீங்களா ஜீவா?’னு கேட்பா. 'ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம், அப்புறம் குழந்தைனு ஒண்ணு பொறந்தா எல்லாம் சரியாகிடும்’னு பெத்தவங்களுக்கே தெரியாம ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கும் பொண்ணுங்களுக்கு மத்தியில், அவங்க மனசை மாத்தி 'காதலுக்கு மரியாதை’ கொடுக்கச் சொல்லும் உதாரணப் பெண், என் மினி. இன்னிக்கும் பல காதலர்களுக்கு உதாரணமா நின்னுகிட்டிருக்கா.

என் இனிய கதைநாயகிகள்! - 3

'கற்பூரமுல்லை’ படத்துல வர்ற மாயா, என் அடுத்த அன்புக்குரிய நாயகி. அந்த கேரக்டர்ல அமலா நடிச்சிருப்பாங்க. அவங்க அம்மா (ஸ்ரீவித்யா) ஒரு பாடகி. தன் வாழ்க்கையில் ஏற்படற சில நிகழ்வுகளால, சொந்த மகளை, 'மகளே'னு கட்டிக்கொள்ள முடியாத நிலையில இருக்கும் தாய்... அம்மாவை, 'அம்மா'னு கூப்பிட முடியாத நிலையில இருக்கும் மகள்னு ஒரு புதுவித பாசப் போராட்டம்தான் கதைக்களம். தாய்ப்பாசம் கிடைக்காம ஏங்குற மாயா, அதை வெளியில காட்டிக்காம ரொம்ப சந்தோஷமா ஆடிப்பாடி துள்ளித் திரிவா.

என்னோட ஊர்ப்பக்கம் ஹாஸ்டல் காம்பவுண்ட் சுவர் ஏறி குதிச்சு போற பெண்கள் நிறைய பேரை பார்த்திருக்கேன். அவங்க ஏன் அப்படி குதிச்சு வெளிய போகணும்னு யோசிச்சிருக்கேன். ஆனா, தனிப்பட்ட வகையில ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது காரணம் இருக்கலாம். அந்த மாதிரி காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதிச்சு சந்தோஷமா இருக்கற பொண்ணாதான் மாயாவை வடிவமைச்சிருப்பேன். ஆனா, மாயாவோட சோகமும் வலியும் யாருக்கும் தெரியாது.

ஒவ்வொரு பொண்ணுமே... இந்த மாயா மாதிரி வெளியில் சந்தோஷத் துள்ளலையும், உள்ளுக்குள் சொல்ல முடியாத வலிகளையும் வெச்சிருப்பா... இதுதான் நிஜம். ஆனா, பெண்கள் மனசு வெச்சா எதையும் சாதிக்க லாம்... சமாளிக்கலாம்ங்கறதும் நிஜம். இதைத் தான்... என் கதை நாயகிகள் எப்பவுமே சொல்லிட்டிருக்காங்க. நாளைக்கும் சொல்லிட்டே இருப்பாங்க!''

சந்திப்பு: பொன்.விமலா