ஆன்மிகம் என்பது நமக்குப் புரியாத ஒன்று என்றோ... கடைசிக் காலத்தில் வரவேண்டிய நினைப்பு என்றோ... காடு, மலைகளில் போய் தவமிருக்கும் சங்கதி என்றோ நினைக்கிறோம். தனக்காகவும் உலகின் மேன்மைக்காகவும் தன்னை வருத்தி ஆண்டாண்டுகளாய் தவமிருக்கும் சித்தர்களும், மகான்களும் இன்னும் நம் பாரதத்தில் இருக்கிறார்கள். அது மாபெரும் தவமே!

ஆனால், நம் அன்றாட வாழ்வில் கலந்திருக்கும் ஆன்மிக வாழ்விற்கு, கடவுளின் மேல் நம்பிக்கையும் பக்தியும் கொண்டு சில நல்ல தர்மங்களைக் கடைப்பிடித்தாலேகூட போதும். 'பசித்திருப்பவனுக்கு உணவும்... குளிரால் நடுங்குகின்றவனுக்குப் போர்வையும்... நோயாளிக்கு ஆதரவையும் மருந்தையும்... துன்புற்றவனுக்கு அன்பையும் காட்டுவதே ஆன்மிகம்' என்பார் ஸ்வாமி சத்யசாயிபாபா. தன்னைப் போல் மற்றவரை நினைக்கும் மனோபாவமும்... எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும் கருணையுமே ஆன்மிகத்தின் உயிர்நாடி. இத்தகு அன்போ கருணையோ இல்லாமல் கோயிலைச் சுற்றி வருவதாலோ... ஓயாமல் மந்திரங்களை முணுமுணுப்பதாலோ தெய்வம் இரங்குவதில்லை; அவர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பேதங்களை மனதில் குப்பையாய் குவித்துக்கொண்டு வேதங்கள் ஓதுவதில் அர்த்தமேயில்லை. அதனால்தான் 'எல்லாரிடமும் அன்புகாட்டு... எல்லார்க்கும் சேவை செய்’ என்ற உபதேசத்தை மொழிந்தார் ஸ்வாமி. சொன்னவண்ணமே, 'என் வாழ்க்கையே என் செய்தி’ என்று வாழ்ந்தும் காட்டினார்.

சத்தியப் பாதையில்..! - 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதன் முதலில் பாபாவைப் பார்த்ததைப் பற்றி கடந்த இதழில் சொல்லிக் கொண்டிருந்தேனில்லையா... அந்தச் சம்பவத்துக்கு இப்போது வருவோம். ஆழ்வார்ப்பேட்டை, வேங்கடமுனி பங்களாவுக்கு முன்னிருந்த விசாலமான இடத்தில், அப்பா எங்களை அழைத்துச் சென்று உட்கார வைத்தார். அளவாகத் திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தோடு, குடும்பத்தினரோடு நானும் அமர்ந்திருந்தேன். நான் சென்னைக்கு வந்த புதிது... இந்தச் சூழ்நிலையும் எனக்கு புதிதாயிருந்தது. அங்கு குழந்தைகளோடு பல பெண்கள் உட்கார்ந்திருந்தாலும், எந்த ஒரு சப்தமும் இல்லாமல் அப்படி ஓர் அமைதி நிலவியது. பக்தர்கள் கூட்டம் எதிர்பார்ப்போடும் பக்தியோடும் ஸ்வாமிக்காகக் காத்திருந்தது. ஸ்வாமிக்கு அப்போது முப்பது வயதிருக்கும் என்று நினைக்கிறேன். கூட்டத்தில் திடீரென்று சொல்ல முடியாததொரு சாந்தி பரவியது... ஸ்வாமி வந்தார்... அந்த இனிதான காலைப்போதில்ஆரஞ்சு உடை, வண்ணஜாலமிட, முடி ஆலவட்டம் போட, செஞ்சிவப்புச் சூரியனாய் புன்னகைத்தபடி வலதுகரம் தூக்கி ஆசீர்வதித்தபடி வந்தார்.

எப்படி ஒரு தெய்வீகப் பொலிவு! கிராமத்து 'டென்ட்’ கொட்டகையில் அமர்ந்து பார்த்த புராணப் படங்களில் வரும் தெய்வம், நேரில் பிரகாசமாய் வந்துவிட்டதென்றே நினைத்தேன்! வியப்பில் உறைந்து போனது மனம். பிரமிப்போடு அவர் அசைவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிலருடைய கேள்விகளுக்குப் பதில் சொன்னார். சிலருக்குப் பாதநமஸ்காரம் கொடுத்தார். சிலர் தந்த கடிதங்களை வாங்கிக்கொண்டார். வரிசையில் உட்கார்ந்திருந்த எங்களுக்கிடையே 'அபய ஹஸ்தம்’ காட்டியபடி நடந்துவந்தார்.

அப்போது ஒரு முதிய பெண்மணி நின்று கொண்டிருந்தார். ஸ்வாமி 'உட்காரம்மா’ என்று தெலுங்கில் சொல்ல, அந்தப் பெண்மணி, 'ஸ்வாமி என்னால் உட்கார முடியாது... வருஷக்கணக்கில் இந்தப் பிரச்னை இருக்கிறது’ என்று வருத்தத்தோடு சொன்னார். ஸ்வாமி, வலது கையைச் சுழற்றி ஆள்காட்டி விரலையும் கட்டைவிரலையும் சேர்த்துப் பிடித்ததும்... விபூதி கொட்டியது! அந்தப் பெண்மணியின் கையில், உருவாக்கிய விபூதியைத் தந்தார். 'உட்கார்ந்துக்கோ’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். விபூதி படிந்திருந்த கையை ஸ்வாமி உதறியதும் காற்றில் விபூதி அலையடித்தது. கமகமவென்று எங்கும் விபூதி வாசம்... கை துடைத்த கைக்குட்டையை பின்னே நடந்து வந்த பக்தரிடம் போட்டுவிட்டு, ஸ்வாமி நடந்து கொண்டிருந்தார்.

அந்தப் பெண்மணிக்கு ஒரே சந்தோஷம். ஸ்வாமி தந்த விபூதியை நெற்றியில் இட்டு, வாயில் இட்டு மெல்ல மெல்ல முயன்று உட்கார்ந்தார். நன்றாகவே உட்கார்ந்துவிட்டார்! அவருக்கும் பார்த்துக் கொண்டிருந்த பக்தர்களுக்கும் பரமசந்தோஷம்... கூட்டத்திலிருந்து, 'சாயிராம் சாயிராம்’ என்று மகிழ்ச்சிச் சலசலப்பு எழுந்தது.

'அடடா என்ன அதிசயம்!' என்று மலைத்துப்போய் பார்த்துக் கொண்டேயிருந்தேன். இதென்ன இந்திரஜாலமா... தெய்வசக்தியா? ஆச்சர்யம் தாங்காமல் ஸ்வாமியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஸ்வாமிக்கு யார் யார் வந்திருக்கிறார்கள். யார் தன்னை நினைக்கிறார்கள்... விமரிசிக்கிறார்கள்... வேடிக்கை பார்க்க வந்திருக்கிறார் கள் என்றெல்லாம் தெரியுமே! முதன்முதலில் ஸ்வாமியை மிக நன்றாக வேடிக்கைதான் பார்த்தேன்.

ஒரு சில வருடங்களில், கிராமத்து வீட்டை உறவினர் குடும்பத்தின் பராமரிப்பில் விட்டுவிட்டு, தாத்தாவும் பாட்டியும் சென்னை வீட்டில், எங்களோடு வந்து தங்கிவிட்டார்கள். ஒருவகையில் மனம் சமாதானப்பட்டது. சுற்றுலா பேருந்தில் பல கோயில்களுக்குப் போய் வந்தோம். தெய்வம், தாயாய், தந்தையாய், குருவாய், தோழனாய் நெருக்கமான உறவாய்த் தோன்றியது.

புட்டபர்த்திக்கு அப்பா அடிக்கடி போய்வந்தார். சிலசமயங்களில் தொடர்ந்து சிலநாட்கள் அங்கேயே தங்கிவிடுவார். எனக்குப்பிறகு... மூன்று சகோதரிகள்... ஒரு சகோதரர்... 'குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி இவர் ஸ்வாமி, ஆசிரமம் என்று அலைகிறாரே’ என்ற கவலை குடும்பத்தினருக்கு இருந்தது. ஆனால், எல்லாம் சரியாகவே நடந்தன.

பெரும்பாலும் குடும்ப நிர்வாகத்தை அம்மா பார்த்துக்கொண்டார்; எங்கள் வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டார். வாழ்க்கையில் பக்தி என்பது ஓர் அங்கம் என்று நினைப்போர்க்கும் பக்தியே வாழ்க்கை என்று நினைப்போர்க்கும் இடையே எப்போதும் எண்ண மாறுபாடு இருக்கத்தான் செய்கிறது... காலப்போக்கில் ஏதோ ஒரு வகையில் உடன்பாடு ஏற்பட்டுவிடுகிறது.

ஸ்வாமியைப் பொறுத்தவரை இல்லறவாசிகள் நல்லபடியாக தன் கடமைகளைச் செய்ய வேண்டும் என்றே அறிவுரை கூறுவார். நீயிருக்கும் இடத்திலேயே நான் இருக்கிறேன். 'உனக்கு உள்ளும்புறமும்... முன்னும்பின்னும்... மேலும்கீழும் உன்னைச் சுற்றிலும் நான் இருக்கிறேன் இங்கேதான் என்னைத் தேடிவந்து நீ பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை’ என்றும் கூறுவார். அதேநேரத்தில் அவருடைய தெய்வப் பணிக்கு நல்ல கருவிகளாக சிலரை அவரே தேர்ந்தெடுத்து அழைத்துக் கொள்வதுமுண்டு.

எப்படியோ மிகநீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது ஸ்வாமியை மீண்டும் நினைப்பதற்கும்... பார்ப்பதற்கும்...

ஜெய் சாயிராம்!  

தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism