Published:Updated:

கிருஷ்ணவேணி ஹேப்பி!

ந.ஆஷிகா , படங்கள் : பா.காளிமுத்து

கிருஷ்ணவேணி ஹேப்பி!

ந.ஆஷிகா , படங்கள் : பா.காளிமுத்து

Published:Updated:

''சின்னப் புள்ளையா இருக்கும்போது குளிக்க அடம் பிடிப்பான் மகன். என் வீட்டுக்காரரு இவனுக்காவே வீட்டுல ஷவர் மாட்ட, 'தம்பி நம்ம வீட்ல மட்டும் மழை பெய்யுதுடா!’னு சொல்லி குளிக்க வைப்பேன். இப்போ மழைக்கு, வெயிலுக்கு நான் பிழைச்சுக் கிடக்கேனானுகூட பார்க்க அவனுக்கு நேரமில்ல!''

''பொண்ண மொதநாளு பள்ளிக்கூடத்துல சேர்த்தப்போ, என்னைய விட்டுட்டு இருக்கமாட்டேன்னு என் கைய புடிச்சுக்கிட்டு ஒரே அழுக. மனசு பொறுக்காம, கொஞ்ச நாள் நானும் அவளோடயே பள்ளிக்கூடத்துல உட்கார்ந்துட்டே வருவேன். இப்போ அவளுக்கு இந்த அம்மா தேவையில்லாம போயிட்டேன்!''

- மதுரை, 'அரவிந்த்’ முதியோர் இல்லத்தில் எந்நேரமும் அலையடிக்கின்றன இதேபோன்ற பேச்சுக்களும் கவலைகளும். கொஞ்சம் காது கொடுத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எனக்கு ரெண்டு பையன், ரெண்டு பொண்ணு. ஆனா, யார் இருந்தா என்ன... புருஷன் இருக்கிறவரைதான் பொண்டாட்டிக்கு மதிப்பு. என் வீட்டுக்காரர் கண்ணுக்குள்ள மணியா பார்த்துக்கிட்டாரு. மலேசியாவுக்கு எல்லாம் கூட்டிட்டுப் போய் சுத்திக் காட்டுனாரு. அவருக்குப் பிறகு, எல்லாம் போச்சு. மகனுக்கு வியாபாரத்துல நஷ்டமாகிருச்சு. என்னைப் பார்த்துக்கறது பாரம்னு இங்க சேர்த்துட்டான். அவன் கிடக்கான். ஆனா... பேரன், பேத்திகளைப் பார்க்கத்தான் ஆசையா இருக்கு. அதுக 'அப்பத்தா’னு வாய் நிறையக் கூப்புடுற கனவுதான் தெனமும். ஆனா, இப்போயெல்லாம் யாரும் நம்மளப் பார்க்க வர மாட்டாங்கங்கிற உண்மைய மனசு ஏத்துக்கப் பழகிருச்சு. எட்டு வருஷமா இங்க இருக்கேன். இவங்க எல்லாரும்தான் என் சொந்தபந்தங்க!''

கிருஷ்ணவேணி ஹேப்பி!

- புஷ்பத்தின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையிலும் வேதனை கசிகிறது.

அப்போது உள்ளிருந்து முனகல் சத்தம் கேட்க, எழுந்து சென்ற புஷ்பம், அந்தப் பாட்டிக்கு சுடுநீர் வைத்துக் கொடுத்துவிட்டுத் தொடர்ந்தார்.

''இவங்க டீச்சரா வேலை பார்த்தவங்க. புதுசா யாரு வந்தாலும், 'என்கிட்ட படிச்சவளா நீ?'னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. இவங்களுக்கு எல்லா வேலையும் நான்தான் செய்வேன். மத்தவங்களுக்கு காபி போட்டுத் தர்றது, சமையலுக்கு உதவி செய்றது, கூட்டுறது, ரொம்ப வயசான வங்களுக்கு வாக்கிங் துணையா போறதுனு என் கஷ்டத்தை எல்லாம் மறக்க‌, எல்லாருக்கும் ஏதாவது செஞ்சுட்டே இருப்பேன். சிலசமயம், 'என்ன ஆனாலும் பரவாயில்ல, பேசாம அவங்ககிட்ட போய், கெஞ்சிக் கேட்டாவது இருந்திடலாம்’னு தோணும். அவனுங்க போடுற சாப்பாட்டுக்கு இல்ல... பேரன், பேத்திகளுக்கு கதை சொல்லி, அவங்க அப்பனுங்க சின்னப்புள்ளையில பண்ணுன சேட்டையை எல்லாம் அதுககிட்ட சொல்லிச் சிரிச்சுக் கிடக்கத்தான்'' என்று சொல்லிவிட்டு, டீச்சர் பாட்டிக்கு தேவையானதை செய்வதில் மூழ்குகிறார் புஷ்பம்.

''ஒண்ணரை வருஷமா இங்க இருக்கேன். நானே விரும்பிதான் வந்தேன்!'' என்று ஆரம்பித்த கிருஷ்ணவேணி, ''என் வீட்டுக்காரர் இறந்துட்டாரு. ஒரே பொண்ணோட மாப்பிள்ளையும் ஆக்ஸிடென்ட்ல இறந்துபோக... அவ நிலைமையைப் பார்த்து உடம்பும் மனசும் தளர்ந்து போச்சு. அவளுக்கு பாரமா இருக்க வேண்டாம்னு, இங்க வந்துட்டேன். அவ வந்து அப்பப்ப பார்த்துட்டுப் போவா.

கிருஷ்ணவேணி ஹேப்பி!

இங்க பிள்ளைங்கள நெனச்சு புலம்புறவங்களுக்கு எல்லாம், 'எதுக்கு அழுகிறீங்க..? பொம்பளையா பொறந்தா புருஷனுக்கு, புள்ளைகளுக்கு, பேரன், பேத்திகளுக்கு உழைச்சுக்கிட்டேதான் இருக்கணுமா? இங்க நாம சந்தோஷமா இருக்கலாம், நமக்காக வாழலாம். டி.வி. இருக்கு, நியூஸ் பேப்பர் வருது, சிரிச்சுப் பேசிக்க நாம எல்லோரும் இருக்கோம், தாயம், பல்லாங்குழி விளையாடுறோம், வாக்கிங் போறோம்... அப்புறம் என்ன?’னு தைரியம் சொல்லுவேன்.

சினிமா பார்க்க எனக்குப் பிடிக்கும். செகப்பு சட்டை போட்டுக்கிட்டு, பாட்டுப் பாடுவானே, அவன் பேர் என்ன... ம்... விஜய்சேதுபதி... அவனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தப் பய சொல்ற மாதிரி, நானும் ஹேப்பிதான்!' என்று சிரிக்கிறார், கிருஷ்ணவேணி.

சரஸ்வதிக்கு மூன்று பையன்கள். '’ஒருத்தன் தவறிட்டான். பெரியவனும் சின்னவனும் சொத்துக்கு சண்டை போட்டானுங்க. சமாதானப்படுத்தி, பிரிச்சுக் கொடுத்தேன். பெரியவன், 'இவ்ளோ நாளா இங்க இருந்தேயில்ல’னு சொல்லி, சின்னவன் வீட்டுக்கு கொண்டுபோய் விட்டான். அவன், இங்க கொண்டு வந்து விட்டுட்டான். வீட்டுல இருக்கறப்ப வாய்விட்டுப் பேசக்கூட மாட்டானுங்க‌. அவனுங்க‌ மதிச்சாதானே மருமகள்களும், பேரப்புள்ளைகளும் மதிக்குங்க? யோசிச்சுப் பார்த்தா, வீட்டுல பேசக்கூட யாரும் இல்லாம ஒதுக்கப்பட்டவளா இருக்கறதுக்கு, இங்க இவங்க எல்லார்கூடவும் பேசி, சிரிச்சினு இருக்கிறதே சந்தோஷமா இருக்கு!'' குரலில் தெம்புகூட்டி சொல்கிறார் சரஸ்வதி.

கிருஷ்ணவேணி ஹேப்பி!

''எனக்கு ஒரே மகன். எப்பாடுபட்டு புள்ளைகள வளர்க்குறோம்..? அதுக ஆளாகற வரை நம்மை ஒரு கருவியா வெச்சுக்கிட்டு... பொண்டாட்டி, புள்ளைனு வந்ததும்... 'இனி நீ வேண்டாம்'னு தூக்கிப்போடுறது என்ன நியாயம்? நாம தளர்ந்து உட்காரும்போது நம்ம பிள்ளைங்க பார்த்துக்கிருவாங்கங்கிற நம்பிக்கையிலதானே பெத்தவங்க எல்லாரும் புள்ளைகள உசுரைக் கரைச்சு வளர்க்குறாங்க? ஆனா...''

- வார்த்தைகள் இடறிக் கலங்குகிறார் ரத்தினம்.

'’அட, சரிதான் விடு ரத்தினம். தாயம் போடுவோம் வா. இந்த தடவையாச்சும் உன்னை ஜெயிக்கணுமே...' என்று மற்றவர்கள் வந்து அவரை சகஜமாக்க, கலகலவென்ற சிரிப்பொலிகள் கலைக்கின்றன, அவர்களின் காயங்களை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism