Published:Updated:

சிலம்பரசிகள்!

சிலம்பரசிகள்!

சிலம்பரசிகள்!

சிலம்பரசிகள்!

Published:Updated:

'ஆழம் அளக்கும்
கவ்வுநாய்க்கு அடிகொடுக்கும்
முள் விலக்கும்
முதுமைக்கு துணை நிற்கும்
தன்னை தற்காத்துக் கொள்ளும்
கையில் ஒரு கோல் இருந்தால்’ என்று 'கம்பு சூத்திரம்’ சிலம்பத்துக்கு விளக்கம் கூறுகிறது.

பெரும்பாலும் ஆண்கள்தான் சிலம்பக் கலையை கற்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், மதுரை, மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் சுமார் 30 மாணவியர் வரை சிலம்பம் கற்று பல்வேறு போட்டிகளில், நிகழ்ச்சிகளில் வெற்றிவாகை சூடி வருகிறார்கள் என்ற செய்தி கேட்டு, காலைவேளையொன்றில் அந்தக் கல்லூரிக்குச் சென்றோம்.

மைதானத்தில் வெறும் கையை காற்றில் வீசி, மடக்கி என சில மாணவிகள் பயிற்சி செய்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் வளையத்தை வைத்து வித்தை காட்டிக்கொண்டிருந்தார்கள் சிலர். அருகில் சென்று பேச்சுக் கொடுத்தபோது... கலகலவென பேசிய லட்சுமி, சுஸ்மிதா மற்றும் பிரசன்னா, ''சிலம்பாட்டம்னு சொன்னாங்க, சிலம்பைக் காணோம்னு யோசிக்கிறீங்களா..? இந்த வளையம் வெச்சி ஆடுறது... சிலம்பத்திலேயே ஒரு வகையான 'சைலாத்’ என்னும் கலை'' என்று விளக்கம் சொல்ல,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அதேபோல, சிலம்பு என்பது கம்பு வைத்து செய்றது மட்டுமில்ல. அது சிலம்பத்தில் ஒரு வகை மட்டுமே. இன்னும் பல வகைகள் இருக்கு. உதாரணமா, கையாலேயே சண்டை போடும் முறைக்கு பேர், கைச்சிலம்பு!'' என்று தங்கள் பங்குக்கு பொழிப்புரை தந்தார்கள் ப்ரியா மற்றும் மகேஸ்வரி.

சிலம்பரசிகள்!

சற்றுத் தொலைவில் கார்த்திகை ஜோதி, ஜெயப்பிரியா, சுதா மூவரும் கம்பு வைத்து சுழற்றிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் சிலம்பத்திலேயே பல 'லாக்’ முறைகளை மாணவிகளுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார் சிலம்ப பயிற்சியாளர் ஷேக் உஸ்மான். பயிற்சி யின் இடைவேளையில் அவரிடம் பேசிய போது...

''50 வருஷமா இந்த சிலம்பத்தோட வாழ்ந்துகிட்டிருக்கேன். இதுல இந்த மூணு வருஷமா இந்தக் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்திட்டிருக்கேன். கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள், மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள்னு இவங்க பரிசுகள் வாங்கிட்டு வந்திருக்காங்க.

தனியார் விழாக்கள்ல இப்போ இவங்களை சிலம்பம் ஆட அழைக்க ஆரம்பிச்சிருக்காங்க. இதுவே இவங்களுக்கு கிடைச்ச நல்ல அங்கீகாரம். இந்த சிலம்பம், தற்காப்பு கலைகளின் தாய்க்கலைனு சொல்வாங்க. இதிலிருந்துதான் யோகா, ஜிம்னாஸ்டிக், கராத்தே, ஜூடோ போன்ற கலைகள் எல்லாம் வந்திருக்கு. சிலம்பத்தில் பல வகை இருக்கு. சிலம்பத்தைப் பத்தி என் மாணவிகளே சொல்வாங்க...'' என்று அவர் பெருமையுடன் சொல்ல, உற்சாகமானார்கள் பெண்கள்.

''உடலையே ஆயுதமா பயன்படுத்தி நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் தற்காத்துக்க இந்தக் கலையால முடியும். அந்தக் காலத்தில் பெண்கள் நோய்வாய்ப்பட்டா, திரைக்கு மறைவில் பெண்கள் இருக்க, மறுபக்கத்திலிருந்து சிலம்பத்தை கற்றுத் தேர்ந்தவங்க, அந்தப் பெண்களுக்கு தன் சிலம்பால எங்கே வலிஇருக்கோ, அங்கே அழுத்தம் கொடுத்து பிணியை சரிசெஞ்சாங்களாம். அந்த சிகிச்சை முறைதான் இன்னிக்கு 'அக்குபஞ்சர்’னு வளர்ந்திருக்கு'' என்று சுதா தகவல்கள் சொல்ல, தொடர்ந்தார் மகேஸ்வரி.

சிலம்பரசிகள்!

''இந்த சிலம்பம்... விளையாட்டு, கலை மற்றும் தற்காப்புனு மூன்று தளங்களிலும் இயங்கக்கூடியது. இந்தக் கலையின் அடிப்படைகளை முழுமையா தெரிஞ்சுக்க, குறைஞ்சது ஒரு வருஷம் ஆகும். ஐந்து வயதுக் குழந்தை முதல் 50 வயதுப் பெரியவர்கள் வரைனு பல பாடத்திட்டங்கள் இருக்கு. யெல்லோ ஸ்டார் முதல் கோல்டன் ஸ்டார் வரை கிரேடு இருக்கு. கோல்டன் ஸ்டார் வாங்கறதுக்கு, 50 வருடங்கள் ஆகலாம். சிலம்பத்தோட உச்சநிலைதான் வர்மம்'' என்று சிலம்பம் தியரி வகுப்பெடுத்தார் மகேஸ்வரி.

''சிலம்பம் ஆடுவதால பெண்களுக்கு உடல் வலிமையும் மனவலிமையும் கிடைக்கும். எங்களுக்கு இந்த சிலம்ப வகுப்பை ஏற்பாடு செய்து தந்த எங்க பேராசிரியர்கள் கீதா மேம் மற்றும் காந்திமதி மேம்க்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கோம். இதோ இப்போ எங்க கார்த்திகை ஜோதி, சிலம்பம் டீச்சராயிட்டா!'' என்று மாணவிகள் அனைவரும் மகிழ்ச்சியாகச் சொல்ல,

''சிலம்பத்தை ஆர்வத்தில்தான் கற்றேன். இப்போ அதுவே எனக்கு ஒரு பார்ட் டைம் ஜாப் ஆகியிருக்கு. மதுரை டி.வி.எஸ். பள்ளியில இப்போ நான் சிலம்ப ஆசிரியை. கற்றுக்கொண்டதைவிட, கற்றுக்கொடுக்கும்போது இன்னும் பொறுப்பு அதிகமாகியிருக்கு!'' என்றார் கார்த்திகை ஜோதி பரவசத்துடன்!

சபாஷ் கேர்ள்ஸ்!

- ந.ஆஷிகா 

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism