Published:Updated:

மகளுக்கு கால்களான அம்மா..!

நெகிழவைக்கும் நம்பிக்கைப் போராட்டம்

மகளுக்கு கால்களான அம்மா..!

நெகிழவைக்கும் நம்பிக்கைப் போராட்டம்

Published:Updated:

அது ஒரு தாயின் நம்பிக்கைப் போராட்டம்! அதை சேய் சொல்லக் கேட்கும்போது, அவர்களுக்கான பிரார்த்தனை அனிச்சையாக மனதில் எழுகிறது! வாழ்க்கையின் மீதான நம்பிக்கை... மேலும் அழுத்தமாகிறது!

''எனக்காக வாழும் ஆசையைவிட, எங்கம்மாவுக்காக வாழணும்ங்கிற வைராக்கியம்தான் எனக்கு அதிகம் இருக்கு!'' எனும் மேகலாவின் ஒவ்வொரு வார்த்தையிலும், தன் தாய் ஜெயாவின் மீதான பாசம் பொங்குகிறது.

''எங்களுக்குச் சொந்த ஊர்... வேலூர் மாவட்டம், முனூர். அப்பா செக்யூரிட்டியா வேலை பார்க்கிறார். எங்க வீட்டுல மூணு பிள்ளைங்க. நான் ரெண்டாவது பொண்ணு. நல்லா ஆடி, ஓடி விளையாடிட்டு இருந்த நான், ஆறாவது படிக்கும்போது ஒரு நாள் காய்ச்சல்னு பள்ளிக்கூடத்துல இருந்து பாதியிலயே வந்துட்டேன். அடுத்த நாள் பார்த்தா... என்னால் எழுந்து நடக்க முடியல. எழுந்து நிக்கறதுக்காக நான் படாதபாடு பட்டதைப் பார்த்துட்டு, எங்கம்மா அழுது துடிச்சது இன்னமும் அப்படியே நினைவுல இருக்கு. பலவித டெஸ்ட், பல ஆஸ்பத்திரிங்க, ஐ.சி.யூ., ஃபிஸியோதெரபினு நிறைய அலைஞ்சதுக்கு அப்புறம், 'இனி உன்னால நடக்கவே முடியாது'னு சொல்லிட்டாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குடும்பமே இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டோம். எந்நேரமும் எல்லாருக்கும் அழுகைதான். ஆனா, முதல் ஆளா கண்ணீரைத் துடைச்சுட்டு மீண்டு எழுந்தது... எங்கம்மாதான். அவங்க முதல்ல எனக்கு சொன்ன தைரியம், 'எக்காரணம் கொண்டும் படிப்பை நிறுத்தக் கூடாது' என்பதுதான். பத்தாவதுல 419 மார்க் வாங்கினேன். அம்மாவுக்கு சந்தோஷம். கொணவட்டத்துல இருக்கற அரசுப் பள்ளியில ப்ளஸ் ஒன் சேர்த்துவிட்டாங்க. அதுல 860 மார்க் எடுத்தேன். காலேஜ்ல படிக்க வெச்சே தீரணும்னு வைராக்கியம் அம்மாவுக்கு. அறிவியல் பிரிவுகள் எடுத்தா... லேப்ல அதிக நேரம் நிக்க வேண்டி வரும்ங்கிறதால, பி.ஏ இங்கிலீஷ் சேர்ந்தேன்.

மகளுக்கு கால்களான அம்மா..!

என் படிப்புக்காக முனூர்ல இருந்து, சித்தேரிக்கு வீட்டையே மாத்திட்டு வந்துட்டாங்க. ஆனாலும், காலேஜுக்கும் வீட்டுக்கும் 15 கிலோ மீட்டர் தூரம். இந்த தூரத்தை எப்படி கடந்து காலேஜுக்கு போகப்போறோம்னு எனக்கு கவலை. ஆனா, அம்மா ஒரு திட்டத்தோடயே இருந்திருக்காங்கங்கறது... காலேஜ் தொடங்கின அன்னிக்குத்தான் தெரிஞ்சுது. தினமும் காலையில சமையல், வீட்டு வேலைகளை எல்லாம் முடிச்சு வெச்சுட்டு, என்னை சைக்கிள்ல உக்கார வெச்சு, வேகவேகமா கூட்டிட்டுப் போய் காலேஜ்ல விடுவாங்க அம்மா. காலேஜ் 8.50 மணிக்கு ஆரம்பிச்சி, 1.30 மணி வரைக்கும் நடக்கும். அதுவரைக்கும் வாசல்லயே காத்திருந்து, வீட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. எனக்கு உடம்பு சரியில்லாத சமயங்கள்ல, கிளாஸ் ரூமுக்கே தூக்கிட்டுப் போய் உக்கார வெச்சிட்டு வருவாங்க. இதுக்காக ஒரு நாளும் சோர்ந்ததில்லை.

'இவளை ஓரமா விட்டுட்டு பொழப்பைப் பார்க்காம, எதுக்கு இப்படி தூக்கிச் சுமக்கிறே?’னு அம்மாகிட்ட பலரும் கேட்டிருக்காங்க. அதையெல்லாம் கேட்டு கொதிச்சிப் போன அம்மா, அந்த மாதிரி கேட்டவங்களுக்கு முன்ன, என்னை ஆளாக்கிக் காட்டணும்ங்கிற தீயோட இரவும் பகலுமா சுழன்றது... மனசுல இருக்கு. நல்லா பிறக்கிற பொம்பளைப் பிள்ளைகளையே படிப்பை பாதியில நிறுத்தற எத்தனையோ அம்மாக்கள் இருக்காங்க. ஆனா, என்னைத் தூக்கி சுமக்கும்போதெல்லாம், முகத்துல அந்த பாரத்தைக்கூட துளியும் காட்டாத அம்மாவை எனக்கு கொடுத்திருக்கிற கடவுளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. பொம்பளைங்களுக்கு மனதைரியம் ஜாஸ்தினு சொல்லுவாங்க. அது வெளியில தெரியாதுனும் சொல்லுவாங்க. அதை எங்கம்மாகிட்ட நான் நேர்லயே உணர்றேன். இத்தனை வருஷமா படாதபாடுபட்டு வளர்த்தெடுத்ததைவிட, இந்த மூணு வருஷமா என்னை காலேஜ்ல கொண்டுவிடறதுக்காக தினமும் அவங்க சைக்கிள் மிதிச்சது ஒண்ணே போதும்..!'' எனும்போது கண்களில் நீர்த்திரையிடுகிறது மேகலாவுக்கு.

''சுயபச்சாதாபத்துல நான் தளர்ந்துடாம எப்பவும் நம்பிக்கை வார்த்தைகள் சொல்லிட்டே இருப்பாங்க அம்மா. 'நீ நல்லா படிச்சு, நிச்சயமா ஒரு வேலைக்குப் போய், உன்னை மாதிரி இருக்கிறவங்களுக்கும், அவங்களோட அம்மாக்களுக்கும் நம்பிக்கை தர்ற முன்னோடியா இருக்கணும்’னு என் மனசுக்கு பாச மந்திரம் போட்டுட்டே இருப்பாங்க.

இப்போ மூணாவது வருஷம் படிக்கிறேன். இத்தனை வருஷமா எனக்கு கால்களா இருக்கிற அவங்க கால்களைத் தொட்டு கும்பிட்டுட்டு, நான் முதல் நாள் வேலைக்குப் போகப்போற தினம்... சில வருஷங்கள்ல நிச்சயமா வரும்!''

- கண்களின் நீர்த்துளிகள் துடைக்கிறார் மேகலா.

''இவளை மேற்கொண்டு பி.எட் படிக்க வைக்கணும். இப்போ அதுக் கான தகவல்களைத்தான் படிச்சவங்ககிட்ட எல்லாம் கேட்டு சேகரிச்சுக்கிட்டு இருக்கேன். மேகலா பி.ஏ., பி.எட்... சொல்லிப் பார்க்கவே சந்தோஷமா இருக்கு. என்னையும் என் பிள்ளையையும் கேலி பேசினவங்களுக்கு எல்லாம் அப்போ சேர்ந்து தர்றோம் பதில்!'' - ஆக்ரோஷ அன்பு பேசுகிறார் ஜெயா!

- ஜெ.பாரதி 

படம்: ச.வெங்கடேசன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism