Published:Updated:

பேக்கேஜ் டூர் போறீங்களா... இதைப் படிங்க முதல்ல!

சா.வடிவரசு

பேக்கேஜ் டூர் போறீங்களா... இதைப் படிங்க முதல்ல!

சா.வடிவரசு

Published:Updated:

முன்பெல்லாம் டூர் போக வேண்டுமென்றால், பஸ், டிரெயின் டிக்கெட்டுகளுக்கு அலையாய் அலைந்து; டூர் சென்ற இடங்களில் நம் பட்ஜெட்டுக்கான ஹோட்டல்களைத் தேடித் திரிந்து; எந்தெந்த இடங்களெல்லாம் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று புரியாமல் ஹோட்டல் ஊழியர் முதல், ஆட்டோ டிரைவர் வரை விசாரித்து, உணவு விடுதிகளைத் தேடிக் களைத்து... என வீடு வந்து சேர்வதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

ஆனால், இந்த அவஸ்தைகளுக்கு எல்லாம் தீர்வாக வந்துள்ளது, 'பேக்கேஜ் டூர்’. முன்கூட்டியே கட்டணத்தைக் கட்டிவிட்டால் போதும்... வீட்டிலிருந்து கிளம்புவது முதல், வீடு வந்து சேர்வது வரை பயணம், ஹோட்டல், உணவு, பார்க்க வேண்டிய இடங்கள் என்று எல்லாம் அவர்கள் பொறுப்பு.

ஆனால், இந்த 'பேக்கேஜ் டூர்’களின் பாதுகாப்பும், தரமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இப்படி பயணம் செய்பவர்கள், பயணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாகனங்கள், தங்குமிடங்கள், உணவுகள் என்று அனைத்திலுமே பிரச்னைகளைச் சந்திப்பது பல சமயங்களில் வாடிக்கையாகவே இருக்கிறது. ஏன்... தரமற்ற ஏற்பாடுகள் காரணமாக, உயிரிழப்புகள்கூட நடக்கின்றன. சமீபத்தில், அந்தமான் தீவுகளுக்குச் சென்ற காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் படகு விபத்தில் சிக்கியது... இதற்கு அதிரவைக்கும் ஓர் உதாரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேக்கேஜ் டூர் போறீங்களா... இதைப் படிங்க முதல்ல!

இத்தகைய சூழலில், பேக்கேஜ் டூர் பற்றி, தன் பெயரை வெளிப்படுத்தாமல் நம்மிடம் பேசினார், தமிழ்நாடு சுற்றுலா துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர்.

''இன்று தெருவெங்கிலும் முளைத்துள்ள டிராவல் ஏஜென்ஸிகள், பலவித சலுகைகளுடன், குறைந்த கட்டணம் எனக் கூறி 'பேக்கேஜ் டூர்’ வழங்குகிறார்கள். இது சுற்றுலா செல்பவர்களின் சுமையை வெகுவாகக் குறைத்தாலும், அதில் பல அசௌகரியங்களும், அவஸ்தைகளும், ஆபத்துகளும் உண்டு. டூர் செல்லும் ஆர்வத்தில் அதுபற்றி யாரும் யோசிப்பதில்லை'' என்றவர், பேக்கேஜ் டூர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய அம்சங்கள் பற்றிக் குறிப்பிட்டார்.

''முதலில், ஏஜென்ஸியைப் பற்றி நன்கு விசாரியுங்கள். புது ஏஜன்ஸியாக இல்லாமல், பல ஆண்டுகள் அனுபவமிக்கவர்களாக இருக்கட்டும். ஏஜென்ஸி சொல்லும் வார்த்தைகள், அது காட்டும் கையேடுகளில் மயங்காமல், அதுகுறித்து கேள்விகள் கேட்டுத் தெளிவாகுங்கள். ஏனெனில், பேக்கேஜ் டூரில் அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள், நிஜத்தில் பெருமளவில் வேறுபட்டிருக்கும்.

சொகுசு ஹோட்டல் அறைகள், விதவிதமான உணவு வகைகள், கேளிக்கைகள் என்று அவர்கள் காட்டும் கையேடுகளில் உள்ள படங்களைப் பார்த்து ஏமாறாதீர்கள். நீங்கள் தங்குவதற்காக அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் ஹோட்டலை, இன்டர்நெட் மூலமாக கண்டறிந்து, அதன் தரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

அவர்கள் சுற்றிக் காட்டுவதாகச் சொல்லும் இடங்களில், ஏதாவது முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட்கள் விடுபடுகிறதா என்றும் இணையத்தின் மூலமாகவே செக் செய்யுங்கள். அரை நாள் பார்க்க வேண்டிய இடங்களை ஒரு மணி நேரத்தில் 'சுற்றிக்காட்டி’விட்டு ஏமாற்றாமல் இருக்க, அதையும் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

பேக்கேஜ் டூர் போறீங்களா... இதைப் படிங்க முதல்ல!

பயணம், தங்குமிடம் போன்றவற்றில் ஏதாவது அவசர, ஆபத்து நேர்ந்தால், அதற்கான அவர்களின் மாற்று ஏற்பாடு, முதலுதவி நடவடிக்கைகள் என்ன என்று வினவுங்கள். பெண்களுக்கான பாதுகாப்பு, குழந்தைகள், பெரியவர்களின் சௌகரியம் போன்ற அம்சங்களை அவர்கள் நிவர்த்தி செய்வார்களா என்று வினவுங்கள். நீங்கள் செல்லவிருக்கும் ஏஜென்ஸி மூலமாக ஏற்கெனவே சுற்றுலா சென்று வந்தவர்கள் யாராவது கிடைத்தால்... அவர்களுடைய அனுபவத்தையும் கேட்டுக்கொள்ளுங்கள்'' என்றவர்,

''டூர் சென்ற இடத்தில், இளம்பெண் பாலியல் வன்முறைக்கு ஆளானார், டூர் ஏஜென்ஸி தங்கவைத்த ஹோட்டலில் பெண் சுற்றுலா பயணி மர்மமான முறையில் சாவு... இப்படி அடிக்கடி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சொல்லப் போனால், உள்ளூரிலேயே பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியம் என்கிற நிலைதான் நீடிக்கிறது. அப்படியிருக்க... வெளியூர், வெளிநாடுகளில் எந்தளவுக்கு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதில் அக்கறையோடு இருங்கள். இதையெல்லாம் சம்பந்தப்பட்ட ஏஜென்ஸி எப்படி உறுதிப்படுத்துகிறது என்பதையும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலமாகவும் பேக்கேஜ் டூர் நடத்துகிறோம். பயணிகளுக்கு வேண்டிய அனைத்துவித பாதுகாப்பையும், தேவைகளையும் சிறப்பாக செய்துவருகிறோம். கட்டணச் சலுகைகளையும் வழங்கிவருகிறோம். உதாரணமாக, 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கு கட்டணத்தில் 20 சதவிகித சலுகை அளிக்கிறோம். இந்த சிறப்பம்சங்களால்தான் இன்றைக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பயணிகள் எங்களின் 'பேக்கேஜ் டூர்’ நாடி வருகிறார்கள்'' என்று சொன்ன அந்த அதிகாரி,

''சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றுதான் சுற்றுலா செல்கிறோம். அதற்கான ஏற்பாடுகளில் தவறுகள் நேர்ந்தால், சந்தோஷம் தொலைவதுடன் சங்கடங்கள்தான் மிஞ்சும். எனவே, பேக்கேஜ் டூர் விஷயத்தில் தீர விசாரித்து முடிவெடுங்கள்'' என்றார்... அக்கறை பொங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism