Published:Updated:

பரவசமூட்டும் படிக்கிணறுகள்!

பிருந்தா

பரவசமூட்டும் படிக்கிணறுகள்!

பிருந்தா

Published:Updated:

ம்நாட்டின் மேற்குப் பகுதி... வறண்ட பூமி, வானம் பார்த்த பூமி. அதிலும் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் மிகமிக வறண்ட பூமி. கோடையில் நீர்மட்டம் மிகவும் கீழே போவதால், தண்ணீருக்கு தவியாய்த் தவிக்கும் பிரதேசம் இவை. இப்போதெல்லாம் போர் போட்டு தண்ணீரை உறிஞ்சுகிறார்கள். ஆனால், அந்தக் காலங்களில் இதற்காக, இப்பகுதிகளில் ஏராளமான ஆழ்கிணறுகள் தோண்டப்பட்டன. முதலில் சாதாரணமாகத் தோண்டப்பட்ட இவை, காலப்போக்கில் கலைநயம் கொண்ட கோயில்களுக்கு இணையாக வடிவமைக்கப்படவே... இன்றைக்கு, 'படிக்கிணறுகள்' (Stepped wells) என்கிற பெயருடன் அதிசய கிணறுகளாக உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன!

இறந்தவர்களை நினைவுகூர்வதற்காக, நடுகல் வைப்பது, சுமைதாங்கி அமைப்பது, மரம் நடுவது என்று ஊருக்கு ஊர் ஏதாவது ஒரு வழக்கம் இருக்கும். அந்த வகையில்தான் இந்தப் பகுதிகளில் இப்படிப்பட்ட கிணறுகள் வெட்டப்பட் டிருக்கின்றன. அதிலும்,  காய்ந்துகிடக்கும் நிலப்பரப்பில், இவ்வளவுதூரம் மெனக்கெட்டு இவை அலங்கரிக்கப்பட்டிருப்பது... புதையல்கள் போலவே காண்போரைக் கவர்கின்றன.

பரவசமூட்டும் படிக்கிணறுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவற்றில் மிகச்சிறந்ததும், பெரியதுமாக இருப்பது... குஜராத்தில் உள்ள 'ராணி கி வாவ்’ எனப்படும் ராணி படிக்கிணறு. அகமதாபாத்திலிருந்து 130 கி.மீ. தொலைவில், அழகான புல்வெளிக்கு நடுவே அமைந்துள்ள இந்தப் படிக்கிணறு, முதலாம் பீமதேவன் என்ற மன்னனின் நினைவாக, அவருடைய ராணி உதயமதியால் 11-ம் நூற்றாண்டின் கடைசியில் கட்டப்பட்டது.

நீளம் 213 அடி, அகலம் 70 அடி, ஆழம் 100 அடி என இதன் பரிமாணம் நம்மை பிரமிக்க வைக்கிறது. படிகளில் கீழ் இறங்குகிறோம். பக்கவாட்டு சுவர்களில் இருக்கும் சிற்பங்கள்... நம்மை அப்படியே நிலைக்கச் செய்கின்றன. சுற்றுச்சுவர்களோ... பலவித வேலைப்பாடுகளால் மிளிர்கின்றன.

படிகளில் மொத்தம் 7 மண்டபங்கள் இருந்தனவாம். இப்போது நான்கே எஞ்சியுள்ளன. இதை 'கிணற்றுக் கோயில்' என்று சொல்லுமளவுக்கு மொத்தம் 800 சிற்பங்களுக்கு மேல் இருந்திருக்கின்றன. தற்போது, 400 என்கிற அளவிலேயே எஞ்சியிருக்கின்றன. இதில் கடவுளர்களின் சிற்பங்களே அதிகம். இதில் விஷ்ணுவின் தசாவதாரம் பிரதானமாக உள்ளது. சிவன், மகிஷாசுரமர்த்தினி,  தேவலோக மங்கையர், நாக கன்னிகையர் என்று விதம்விதமாக நம்மை அசர வைக்கின்றன அந்தச் சிற்பங்கள்!

படிகளின் கடைசியில் நீர்தேக்கம். அதன்பிறகு கிணறு. அதற்கும் கீழாக குகை போன்ற பாதை உள்ளது. இது 30 மைல் தூரம் வரை சென்று, அங்கிருக்கும் சித்துபூர் எனும் ஊரை அடையும். எதிரிகள் தாக்கும்போது இந்த வழியாக மன்னர்கள் தப்பித்து விடுவார்களாம். மூன்றாவது மண்டபத்தில் நாம் நிற்கும்போதுதான், நாற்புறமும் நன்றாகத் தெரிகின்றன. வரிசை வரிசையாக உள்ள செதுக்கல்கள்... நம்மை மூச்செறிய வைக்கின்றன.

சரஸ்வதி நதியால் மூழ்கடிக்கப்பட்டு... புதையுண்டு கிடந்த இந்தக் கிணறு... சென்ற நூற்றாண்டின் கடைசியில்தான் (1987) இந்திய தொல்பொருள் நிறுவனத்தால் அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்டதாம்.

அடுத்த முறை குஜராத் செல்லும்போது, தவறாமல் சென்று பாருங்கள்... படிக்கிணற்றை!

பரவசமூட்டும் படிக்கிணறுகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism