நீண்ட நெடுங்காலம் ஆனது ஸ்வாமியை மீண்டும் நினைப்பதற்கும்... பார்ப்பதற்கும். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், ஸ்வாமியின் அழைப்பு எப்போது வருகிறதோ அப்போதுதான் அவரை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டுகிறது. 'என் சங்கல்பமில்லாமல் என் இருப்பிடத்திற்கு... புட்டபர்த்திக்கு யாரும் வரமுடியாது’ என்று ஸ்வாமி சொல்வதுண்டு.

சத்தியப் பாதையில்..! - 3

திருமணமாகிப் பிள்ளைகள் பிறந்தார்கள். குடும்ப வேலை, கல்லூரி வேலை, இலக்கியப் பணி என்று இறக்கை கட்டிப் பறந்துகொண்டிருந்தது வாழ்க்கை! புகழும் மேன்மையும் கொண்டு வளர்ந்தது குடும்பம். ஆழ்வார்ப்பேட்டை பங்களாவில் ஸ்வாமியைப் பார்த்ததற்குப் பிறகு, பல வருடங்கள் இடையில் உருண்டோடிவிட்டன. இத்தனை வருடங்களில் ஸ்வாமி பலமுறை சென்னை 'சுந்தர’த்திற்கு (வழிபாட்டு மையம்) வந்து போயிருக்கலாம். எத்தனையோ இடங்களில் அற்புதங்களை அவர் நிகழ்த்தியிருக்கலாம். எதுவும் என் கவனத்திற்கு வரவில்லை. வீடு... கடமைகள், விழாக்கள்... பிள்ளைகள் வளர்ப்பு... வழக்கமான வழிபாடு... எழுத்து... பேச்சு என்று காலம் கரைந்துகொண்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலில் ஒரு கவிதை நூலும், ஒரு நாவலும் பிறகு மூன்று குறுநாவல்களும் எழுதி வெளியிட்டேன். என்னுடைய முனைவர் பட்டத்திற்கான 'ஆய்வு நூலை’ கடுமையான உழைப்பிற்குப் பிறகு வெளியிட்டேன். எல்லாம் நல்லபடியாக அமைந்தன. பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு எழுதி வெளியிட்டதுதான் என் இரண்டாவது கவிதைத் தொகுதியான 'மீண்டும் சரஸ்வதி’. இந்த நூலை வெளியிடும்போது சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதைப் பிறகு சொல்கிறேன்.

ஓயாமல் தொடர்ந்துகொண்டிருந்த பணிச்சுமைகளினாலும் வாழ்க்கையின் பரபரப்பினாலும்... மனம் அமைதியைத் தேடியது... மனதில் இனம்புரியாத தேடல் புள்ளியாய்த் தொடங்கியது. பாட்டியும் தாத்தாவும் ஒருவர் பின் ஒருவராக மறைந்துபோனார்கள். சொல்ல முடியாத துயரத்தில் மூழ்கிப்போனேன்.

என் பிஞ்சு வயதில் எனக்குப் போதுமான ஞானத்தைப் புகட்டி என் உச்சி நுகர்ந்து, 'கண்ணு... ராஜா... நீ புத்தியில் சரஸ்வதி... வித்தையில் வாணி... மகாலக்ஷ்மி... பராசக்தி’ என்று அடுக்கடுக்காக ஆசீர்வதித்த, என் மூன்று வயதில் எங்கள் பக்கத்துக் கிராமமான திருநின்றவூர்ப் பெருமாள் திருவிழாவிற்கு என்னைத் தோளில் தூக்கிக்கொண்டு கால்நடைப் பயணமாக கதை சொல்லிக்கொண்டே வந்த என் அன்பான தாத்தா மறைந்துபோனார். அந்தத் திருவிழாவில் அவர் வாங்கித் தந்த பேரீச்சம்பழம்... பொரிகடலை... ஓலைப்பெட்டியிலிருந்த 'மரச்சொப்பு’ச் சாமான்கள் எல்லாம் என் ஞாபகத்தில் உறைந்து கிடக்கின்றன.

என் பாசமுள்ள பாட்டியின் மறைமுக அன்பும், அவர் தந்த பயிற்சியும் என்னால் மறக்க முடியாதவை. மனம் நிறைந்த நன்றியோடுதான் எப்போதும் அவர்களை நினைக்கிறேன். முன்னோர்களுக்கு நன்றி சொல்லி வாழும் வாழ்வே நல்ல வாழ்வு.

பிரியமானவர்களை இழந்த துன்பத்தில் மனம் மூழ்கிக் கிடந்தது. வேறுசில சம்பவங்களாலும் மனஉளைச்சல் ஏற்பட்டது. என் வழக்கமான வழிபாடும் பிரார்த்தனையும் அமைதியைத் தரவில்லை.

மீண்டும் தொடங்கியது ஸ்வாமியின் வருகை! சாயிவாசம்! எங்கள் குடும்பத்திற்குப் பழக்கமான ரசிகையும் பாபாவின் பக்தையுமான ஒரு பெண்மணி அனுப்பிய ஸ்வாமி சத்யசாயிபாபாவின் படங்களும் விபூதிப் பொட்டலங்களும் தொடர்ந்து வரத்தொடங்கின. அந்த பக்தை கொண்டுவந்து தந்த சத்யசாயி பாபாவின் வாழ்க்கைச் சரிதமான, 'சத்யம் சிவம் சுந்தரம்’ என்ற தெய்விக நூலை வாசிக்கத் தொடங்கினேன். மனதில் மெல்ல மெல்ல தெய்விக அதிர்வுகள் கிளம்பின. மனதின் அலைகள் அடங்கி, அமைதி மொட்டுவிடத் தொடங்கியது. மனம் ஆசுவாசப்பட்டது. அந்தச் சரிதத்தின் நிகழ்வுகள்... பாபாவின் மகிமைகள்... லீலைகள்... அற்புதங்கள்... சொற்பொழிவுகள் எல்லாம் எனக்குள் பெருமாற்றம் புரியத் தொடங்கின. என் பழைய ஊருக்கு வந்ததுபோன்ற நிம்மதியும் நெடுங்காலத்திற்குப் பிறகு பழைய உறவொன்றைப் பார்த்துப் பேசுகின்ற மனநிறைவும் எனக்கு ஏற்பட்டன. மனம் நெக்கு நெகிழ்ந்துருகிக் கொண்டிருந்தது. காரணம் புரியாமல் அழுதுகொண்டே இருந்தேன். ஸ்வாமியைப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பு வளர்ந்து தீவிரப்பட்டது.

சத்தியப் பாதையில்..! - 3

அப்போது 'சத்யமே சாயி’ என்ற தலைப்பில், ஸ்வாமியின் வாழ்க்கைச் சரிதத்தை, ஸ்ரீவேணுகோபாலன் 'சாவி’ பத்திரிகையில் எழுதினார். அந்த நூலின் வெளியீட்டுவிழா தொடர்பான ஒரு நிகழ்ச்சி, எழுத்தாளர், பெரியவர், சாயிபக்தரான சாவி அவர்களின் வீட்டில் நடந்தது. சாயிபஜனோடு நடந்த அந்த நிகழ்ச்சிக்கு எங்களை அழைத்திருந்தார்கள். பஜன் முடிந்து, ஏறக்குறைய விழாவின் பாதியில்தான் செல்ல முடிந்தது. சிம்ம£ சனத்தில் ஸ்வாமி பாபாவின் படம் வைத்து அலங்கரித்து வழிபாடு செய்யப்பட்டு பஜன் நடந்து புத்தகம் வெளியிடப்பட்டது. அங்கே ஸ்வாமி பாபாவின் எண்ணற்ற படங்களை வைத்திருந்தார்கள். ஸ்வாமியின் மேல் நம்பிக்கை கொண்டவர்களாகப் பார்த்து பெரியவர் சாவி, வழிபடச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆவலோடு நான் பார்த்துக் கொண்டிருந்தேன் 'நமக்கு ஒரு படத்தைத் தரக்கூடாதா?' என்று... ம்ஹூஹூம் தரவில்லை. நாங்கள் விடைபெற்று கேட்டருகே போனதும், அவர் சத்தம் போட்டுப் பெயர் சொல்லி எங்களைக் கூப்பிட் டார். ஸ்வாமி சத்யசாயி பாபாவின் ஒரு படத்தை என்னிடம் தந்து ஆசீர்வதித்து, 'உன் பூஜையறையில் வெச்சு வழிபடு... யார் என்ன சொன்னாலும் கேக்காதே... ஸ்வாமி உங்களுக்குக் காவலிருப்பார்’ என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே தந்தார்.

அவருக்கு மனமார நன்றி சொல்லியபடியே மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டேன். அதுதான் எனக்கு முதன் முதலில் வழிபாட்டுக்கென்று வந்து சேர்ந்த சாவி தந்த சாயி படம்! இப்படியாக ஸ்வாமி என் பூஜையறைக்கு வந்து சேர்ந்தார்! மற்ற தெய்வப் படங்களோடு ஸ்வாமிக்கும் பூப்போட்டு வழிபட்டுப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினேன். சிறுபருவத்தில் வேடிக்கை பார்த்த ஸ்வாமியை, மெல்ல மெல்ல குருவாய், தெய்வமாய் மனம் நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டது. ஸ்வாமியை எப்படியாவது போய்ப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து வலுப்பட்டபோது விரைவில் அந்த நல்வாய்ப்பும் வந்தது.

ஒரு கோடை விடுமுறையில் குடும்பத்தோடு கொடைக்கானலுக்குப் போகத் தயாரானோம். சென்னையிலிருந்து புறப்படும்போது, படம், விபூதி அனுப்பிய பக்தை தொலைபேசியில் சொன்னார்.... 'ஸ்வாமி பாபா கொடைக்கானலில் வந்து தங்கியிருக்கிறார் அவசியம் போய் தரிசனம் செய்துகொள்ளுங்கள்’ என்று! திகைத்துப் போனேன்.

ஜெய் சாயிராம்!

தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism