'மால்குடி’ கவிதா... பிரபல சமையல் கலைஞர். சென்னை சவேரா ஹோட்டலின் தென்னிந்திய சிறப்பு உணவகமான 'மால்குடி’ யூனிட் செஃப் பொறுப்பில் பணியாற்றியவருக்கு, சமையல்தான் உயிர். இதைப் பற்றியே எந்நேரமும் சிந்தித்துக்கொண்டிருக்கும் இந்தப் பெண்மணி, பெண்களையெல்லாம் திரட்டி ஒரு மெகா சமையல் திருவிழா நடத்தும் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளாகவே அடைகாத்து வந்தார். அந்த இனிய நிகழ்வு... மே 4-ம் தேதியன்று சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்டமாக அரங்கேறியது... 'உணவோடு விளையாடு’ எனும் தலைப்போடு!

தென்னிந்திய உணவு வகைகளின் சிறப்பை எடுத்துரைக்கும் விதமாகவும், அதை உலக சாதனையாக ஆக்கும் நோக்கத்துடனும் நடத்தப்பட்ட இந்தத் திருவிழாவில், தமிழ்நாடு, ஆந்திரா,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த பெண்களும், சமையல்கலை வல்லுநர்களும் கலந்துகொண்டனர்!
'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', 'அசிஸ்ட் வேல்ட் ரெக்கார்ட்’ மற்றும் 'மிராக்கிள் வேர்ல்ட் ரெக்கார்ட்’ சாதனை நிகழ்வாகவும் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் பெண்கள் கலந்துகொள்ள, சமைப்பதற்காக ஒவ்வொருவருக்கும் ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. சைவ சமையலாக... உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், காலிஃப்ளவர், பனீர், காளான் ஆகிய 5 வகையான காய்கறிகளை உபயோகித்தும், அசைவ சமையலாக... கோழி, மீன், இறால், கறி, முட்டை ஆகியவற்றை உபயோகித்தும் மொத்தம் 100 விதமான உணவுகளைச் சமைக்க வேண்டும் என்பதுதான் போட்டி. ஆயிரம் பெண்களும் அசத்திவிட்டனர் அசத்தி! சமையலில் இந்தப் பெண்களுக்கு உதவுவதற்காக... சென்னையிலிருக்கும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள், தாங்களாகவே முன்வந்து பங்கேற்றது நெகிழ்ச்சியான விஷயம்.
நிறைவாக... சமையல்கலை வல்லுநர்களால் 'சிறந்த உணவுகள் - 100' என்று தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
ஹைலைட்: இங்கே சமைக்கப்பட்ட உணவு வகைகள், உடனுக்குடன் பேக் செய்யப்பட்டு, 20 ஆசிரமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது... அனைவரையும் ஈர்ப்பதாக இருந்தது!