Published:Updated:

நாட்டை உலுக்கும் ஒரு நாடகம்!

பி.என்.அர்ச்சனா, படங்கள்: ரா.மூகாம்பிகை

நாட்டை உலுக்கும் ஒரு நாடகம்!

பி.என்.அர்ச்சனா, படங்கள்: ரா.மூகாம்பிகை

Published:Updated:

''இரோம் ஷர்மிளாவாகிய நான், இருள்பாதையில் நடக்கும் மணிப்பூர் பெண்கள் பல்லாயிரம் பேரில் ஒருத்தி!''

- சிறிய மெழுகுவத்தி வெளிச்சத்தில் தொடங்குகிறது 'லேமா சாலே' என்ற தலைப்பிலான அந்த நாடகம். ஒரே ஒரு பெண் மட்டுமே நடிக்கும் இந்த நாடகத்தைக் காணும் பெண்களின் கண்களில் அருவி பெருக்கெடுக்கும் அதேநேரம்... உறுதியும் பொங்குகிறது!

இரோம் ஷர்மிளா... எனும் பெயரை அறியாதவர்கள் இங்கே வெகு குறைவு. வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில், உள்நாட்டு மக்களின் மீது, குறிப்பாக பெண்களின் மீது இந்திய ராணுவம் மேற்கொண்டிருக்கும் அடாவடி நடவடிக்கைகளுக்கு எதிராக, கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரும் இந்த பெண்ணுக்கு... நாடு முழுக்க ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாட்டை உலுக்கும் ஒரு  நாடகம்!

இந்த ஆதரவை, தனியொருவராக நாடக வடிவில் நாடு முழுக்க எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்... மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த இளம்பெண் ஓஜஸ். மணிப்பூர் மக்களின் சோகக் கதையை, இரோம் ஷர்மிளா எனும் வீரப்பெண்ணின் பார்வையில் சொல்லும் வகையிலான இந்த தனிநபர் நாடகம், சமீபத்தில் சென்னையில் அரங்கேறியது!

நாடகத் துறையில் மிகவும் நாட்டம்கொண்ட ஓஜஸ், 2010-ம் ஆண்டு தொடங்கி, நாடு முழுக்க 170 முறை இந்த நாடகத்தை நடத்தி முடித்திருக்கிறார். எழுத்தாளர் சிவிக் சந்திரன் எழுதிய நூலைத் தழுவி 'லேமா சாலே' எனும் தலைப்பில் இந்தியில் ஓஜஸ் உருவாக்கியதுதான் இந்த நாடகம். பிறமொழி பேசும் பகுதிகளில் ஆங்கிலத்தில் இதை மேடையேற்றுகிறார். இத்தனை ஈடுபாட்டுடன் ஓஜஸ் இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பதற்குக் காரணம், இரோம் ஷர்மிளாவுடன் அவருக்கு நிகழ்ந்த அந்தச் சந்திப்பு.

நாட்டை உலுக்கும் ஒரு  நாடகம்!

''4.11.2010... என் வாழ்க்கையின் முக்கியமான நாள். பெண்களுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் அநியாயங்களை எதிர்க்கும் இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டு சரியாக 10 வருடங்கள் முடிந்திருந்தது அன்றுதான். மக்கள், தங்களின் வாழ்த்தையும் ஆதரவையும் நன்றியையும் ஷர்மிளாவுக்குத் தெரிவிக்கும்விதமாக, வழியெல்லாம் மெழுகுவத்தி ஏற்றி வைத்திருந்தனர்.

அரசாங்கம் அவரைச் சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனாலும் தடுப்புக்கு இந்தப் பக்கம் நின்று அவரைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது அவரின் உதவியாளர், நான் நடத்தி வரும் அந்த நாடகத்தைப் பற்றி அவரிடம் எடுத்துச் சொன்னார். என்னை சிறிது நேரம் உற்றுப் பார்த்தன, ஷர்மிளாவின் கண்கள். மலைபோல உறுதி தெறிக்கும் அந்தக் கண்களில், அந்தக் கணம் தோன்றி மறைந்தது நன்றி. தொடர்ந்து, கண்ணீர் பொழிந்தன அந்த விழிகள். போலீஸ்காரர் ஒருவர் கிளம்பச் சொல்லி விரட்ட, வலுவிழந்த அந்த உடம்பு, உறுதியோடு நடந்து சென்றது. மணிப்பூரில் வாழ்க்கை எத்தனை கொடுமையானது என்பதை அன்றுதான் உணர்ந்தேன்!'' என்கிறார் ஓஜஸ் தவிப்புடன்.

நாட்டை உலுக்கும் ஒரு  நாடகம்!

ஓஜஸ் காட்டி வரும் இந்த சமூக அக்கறைக்கு, அவர் பெற்றோரும் முக்கியக் காரணம். அப்பா, ஓய்வுபெற்ற பேராசிரியர். அம்மா, பல சமூகப் போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்தச் சூழலில் வளர்ந்த ஓஜஸிடம் சமூக அக்கறையும், அதை நாடக வடிவத்தில் செயல்படுத்துவதற்கான திறமையும் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. தனி ஒரு ஆளாக மணிப்பூரின் மொத்த வரலாற்றையும் ஒரு மணி நேரத்தில் மேடையில் வெளிப்படுத்துவது, சாதாரணமான விஷயமல்ல. ஆனால், அதை ஓஜஸின் பலமான நடிப்புத் திறமை, சாதித்துக் காட்டுகிறது. அவர் இரோம் ஷர்மிளாவாகப் பேசினாலும், மணிப்பூரில் ராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக கூறப்படும் பெண் போராளி மனோரமா தேவி கதையைக் கூறினாலும், மக்களின் அவலநிலையை விளக்கினாலும்... பார்க்கும் அனைவரின் மனதிலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

இந்த தனி நாடகத்தை, நாடகத்துறை மாணவிகள் மற்றும் நடிகைகள் மூலமாகவும் முன்னெடுக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கும்  ஓஜஸ், 'பெண்களின் சிறுநீர் கழிக்கும் உரிமை’ என்ற இன்னொரு நாடகம் மூலமாக, நம் நாட்டில் முறையான கழிவறை வசதி இல்லாமல் பெண்கள் படும் அவதிகளையும் மேடையில் சாடி வருகிறார்.

''ஷர்மிளா, தன் மாநிலப் பெண்களின் உரிமைக்காக, பல வருடங்களாக உறுதி குறையாமல், அதேநேரம் அமைதியான வழியில் போராடி வருகிறார். இவரை தற்கொலைக்கு முயற்சிக்கிறார் என்று சொல்லி அடிக்கடி கைது செய்கிறது அரசாங்கம். ஆனால், ஷர்மிளா அடிக்கடி கூறும் வார்த்தைகள், 'என் உயிரைத் தியாகம் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை' என்பதுதான்'' என்று சொல்லும் ஓஜஸ், ஷர்மிளாவுக்காக பாடுகிறார்!

ஷர்மிளாவின் பட்டினிக்கும், ஓஜஸின் பாட்டுக்கும் பதில் கிடைக்குமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism