Published:Updated:

“எல்லா ஆண்களும் தப்பானவங்களும் இல்லை... சரியானவங்களும் இல்லை!”

பொன்.விமலா

“எல்லா ஆண்களும் தப்பானவங்களும் இல்லை... சரியானவங்களும் இல்லை!”

பொன்.விமலா

Published:Updated:

சில மாதங்களுக்கு முன், பணி முடித்து திரும்பும் வழியில் கொடூரமாகக் கொல்லப்பட்ட சென்னை, சிறுசேரி மென்பொறியாளர் உமாமகேஸ்வரி; சில வாரங்களுக்கு முன் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு போரூர் ஏரியில் வீசப்பட்ட ரேகா; சில தினங்களுக்கு முன்

“எல்லா ஆண்களும் தப்பானவங்களும் இல்லை... சரியானவங்களும் இல்லை!”

மத்தியப்பிரதேச மாநிலத்தில், சொந்த மாமன் மகனாலேயே மணமேடையில் சுட்டுக்கொல்லப்பட்ட டாக்டர் ஜெய்ஸ்ரீ... பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் கொலைச் செய்திகள் தினசரி வாடிக்கையாகவே மாறிவிட்டன. படிக்கப் படிக்க மனம் பதறுகிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில ஆண்டுகளாகத்தான் அதிக அளவிலான பெண்கள் தைரியமாக பணிகளில் சேர்ந்துகொண்டுள்ளனர். குக்கிராமங்களில் இருக்கும், அவ்வளவாக கல்வியறிவு இல்லாத பெற்றோரும்கூட, மிக தைரியமாக தம் பெண்களைக் கண்காணாத தூரத்துக்கெல்லாம் அனுப்பிவைத்துக் கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில், பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் என்பவை தொடர்கதையாகிக் கொண்டிருப்பது... பெற்றோர்களையெல்லாம் வெகுவாக கவலைகொள்ளச் செய்திருக்கிறது.

கடந்த 2012-ம் ஆண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்கார மரணத்துக்குப் பிறகு, பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தை மாற்றிவிட்டனர். சில வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அப்படியும்கூட பெண்களின் பாதுகாப்பு என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இங்கே இருக்கிறது!

'இத்தகைய ஆபத்தான சூழலில் ஒரு பெண், எப்படி தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள முடியும்?' என்ற கேள்வியோடு சிலரிடம் பேசினோம்.

“எல்லா ஆண்களும் தப்பானவங்களும் இல்லை... சரியானவங்களும் இல்லை!”

சோனியா, தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்: ''சமூக மாற்றம் வராதவரைக்கும், என்னதான் சட்டங்களைப் போட்டாலும்... கொடுமை தொடர்ந்து கிட்டுதான் இருக்கும். ஆண் சமூகம் பெரிய அளவுல மாற்றம் அடையணும். இது எப்ப நடக்குமோ தெரியல. அதுவரைக்கும், நமக்கு... நாமதான் பாதுகாப்பு.

'எனக்குப் பிடிச்ச உடையைப் போடுவேன்... நான் எதுக்கு பயப்படணும்?னு கேட்கலாம். ஆனா, நாம போற பாதையில முள் இருக்குனு தெரிஞ்சா... அதை நாம மிதிப்போமா? வேற பாதையைத்தானே தேடுவோம்? இப்படித்தான் ஒரு முறை இரவு தாமதமா வீடு திரும்ப வேண்டிய சூழல். யாரோ ஒருத்தன் பின்தொடர்ந்துட்டே வந்தான். திரும்பிப் பார்த்து திட்டவோ, முறைக்கவோ செய்யல. அவன் எதிர்பார்க்காத நேரத்துல தடதடனு ஓடி, 'ஆட்டோ ஆட்டோ’னு கத்தி, ஒரு ஆட்டோவைப் பிடிச்சு தப்பிச்சு வந்துட்டேன். அந்த நேரத்துல எதிர்க்கிறதைவிட, பாதுகாப்பா தப்பிக்கணும்னுதான் எனக்குத் தோணுச்சு. ஏன்னா, யாரோ ரோட்டுல போறவன்கிட்ட நம்ம தைரியத்தை காட்டுறதைவிட, தற்காப்புதானே முக்கியம்..!''

“எல்லா ஆண்களும் தப்பானவங்களும் இல்லை... சரியானவங்களும் இல்லை!”

உஷா ரமேஷ், இல்லத்தரசி: ''என் பொண்ணு காலேஜ் படிக்கிறா. இந்தச் சூழல்ல அவளுக்கு அம்மாவா இருக்கிறதைவிட, நல்ல தோழியாத்தான் இருக்கேன். வீட்டை விட்டு வெளியில போற பொண்ணுக்கு ஆண்களால நிறைய பிரச்னைகள் வரலாம். நாம தோழியா இருக்கும்போதுதான் அதையெல்லாம் அவங்க வெளிப்படையா பேசுவாங்க. அப்போதான் சுமுகமா தீர்க்க முடியும்..!

சமுக வலைதளங்கள்ல இயங்கும்போது, பிரச்னைகள் வராம பார்த்துக்கச் சொல்லி அவகிட்ட வலியுறுத்துறேன். 40 'லைக்ஸ்’ வாங்கிதான் ஃபேஸ்புக்ல நம்மை நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல.... முகம் தெரியாத அங்க உலவுற சதிகாரர்கள்கிட்ட சிக்கிக்கக் கூடாது, அதுதான் முக்கியம்னு சொல்வேன். ஆடையும், உடல் பாவனையும் சரியா இருக்கணும்னு சொல்வேன். ஆண்களை ஒதுக்கிட்டு சமுதாயம் இல்ல. எல்லா ஆண்களும் தப்பானவங்களும் இல்லை, அதேபோல சரியானவங்களும் இல்லைங்கறதை அவளுக்கு அடிக்கடி புரியவைப்பேன்.''

“எல்லா ஆண்களும் தப்பானவங்களும் இல்லை... சரியானவங்களும் இல்லை!”

கிருஷ்ணவேணி, ஐ.டி நிறுவனப் பணியாளர்: ''முன்பைவிட இப்ப ஐ.டி நிறுவனங்கள்ல பெண்களுக்கான பாதுகாப்பை அதிகமாக்கி இருக்காங்க. 'கேப்ஸ்’ வண்டியில ஓட்டுநரோடு, செக்யூரிட்டி ஒருத்தரையும் அனுப்பி பாதுகாப்பு தர்றதோட, அந்த செக்யூரிட்டி கடைசி பணியாளரை இறக்கி விட்ட பிறகு நிறுவனத்துக்கு தெரிவிக்கணும். ஒருவேளை டிரைவர் மீதோ... செக்யூரிட்டி மீதோ... சக ஊழியர் மீதோகூட நம்பிக்கையில்லாத பட்சத்தில், நிறுவனத்தில் தைரியமா புகார் கொடுக்கலாம். நம் பெயர் வெளிவராம நடவடிக்கை எடுப்பாங்க. இரவு நேர வேலையைத் தவிர்க்க முடியாத சூழல்ல, நம்மோட பாதுகாப்பு எந்தளவுக்கு இருக்குனு சரி பார்த்துக்கிறது ஐ.டி நிறுவனப் பெண்களுக்கு மட்டுமில்ல, வேலைக்குப் போற எல்லா பெண்களுக்குமே பொருந்தும்''.

“எல்லா ஆண்களும் தப்பானவங்களும் இல்லை... சரியானவங்களும் இல்லை!”

சரஸ்வதி, பெண்ணியவாதி: ''பெண் என்பவள், ஆணுக்கான போகப் பொருள் என்கிற பார்வைதான் இந்த சமூகத்தின் பொதுபுத்தி. பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்த வன்கொடுமைகள் இன்றைக்கோ நாளைக்கோ முடிகிற பிரச்னை இல்லை. குடும்பத்தில் ஆரம்பித்து, சமூகம் வரை பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலில், தனியாக செல்லும் ஒரு பெண் எப்படி தன்னை தற்காத்துக்கொள்ள முடியும்? ஒரு பெண்ணை தற்காப்புக் கலையை கற்றுக்கொள்ளவும், மிளகாய்ப் பொடியை வைத்திருக்கவும் சொல்லும் சமூகம், ஆண்களுக்கு அறிவுரையோ, எச்சரிக்கையோ விடாதது ஏன்? பெண்களுக்குப் பிரச்னைகள் எழுகிற சமயங்களிலெல்லாம் பெண்கள் அமைப்புகளைக் கூட்டிதான் கருத்துக்களைப் பேசுகிறோமே தவிர, ஆண்கள் அமைப்புகளைக் கூட்டிப் பேசுவதில்லை. குறைந்தபட்சம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஆண் மாணவர்களைத் திரட்டிகூட அறிவுரை கூறுவதில்லை. பாதிக்கப்படுபவரை 'பத்திரமா இரு’னு சொல்றதைவிட, குற்றவாளியை தப்ப விடாம உடனுக்குடன் தண்டிச்சாதான் குற்றங்கள் குறையும்.''

“எல்லா ஆண்களும் தப்பானவங்களும் இல்லை... சரியானவங்களும் இல்லை!”

தேவதர்ஷினி, கல்லூரி மாணவி: ''பொதுவா ஆண்களோட பார்வை பதியற மாதிரியான இறுக்கமான ஆடைகளை நான் போடமாட்டேன். போட்டா என்ன தப்புனு கேக்கலாம். போடாம இருக்கறதுதான் நமக்கு பாதுகாப்புனு நான் யோசிக்கிறேன். ஸ்பெஷல் கிளாஸ், வீட்டுக்கு லேட்டா போக வேண்டிய சந்தர்ப்பங்களில் என் தோழிகள்கூட இருக்கற மாதிரி பார்த்துப்பேன். இல்லைனா... வீட்டில் இருந்து யாரையாவது வரச் சொல்வேன். அதுவும் முடியலைனா, நான் கிளம்பும் நேரத்தையும் எந்த வாகனத்தில் டிராவல் பண்றேன்ங்கிற விவரத்தையும் வீட்டுக்குத் தெரிவிப்பேன். கராத்தே, பெப்பர் ஸ்ப்ரே இதையெல்லாம்விட... சமயோஜித புத்திதான் பாதுகாப்பைத் தரும்.

சம உரிமை பேசலாம்... ஆனா, அதுக்கு இன்னும் இந்த சமுதாயச் சூழல் பொருத்தமானதா மாறல. அரசாங்கம்தான் பெண்களோட பாதுகாப்பை உறுதிப்படுத்தணும். அதுக்காக எப்பவும் என் பாதுகாப்புக்கு கூடவே ஒரு போலீஸை கூடவே அனுப்பணும்னு கேக்க முடியாது. அது... சாத்தியம் இல்லாத விஷயமும்கூட! அதனால, என்னைப் பொறுத்தவரைக்கும் முதல்ல நம்மோட பாதுகாப்பு நம்மகிட்டதான் இருக்கு!''

“எல்லா ஆண்களும் தப்பானவங்களும் இல்லை... சரியானவங்களும் இல்லை!”

பாதுகாப்பு டிப்ஸ்!

பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு சில டிப்ஸ் தருகிறார்... சென்னை மாநகர காவல்துறை துணை ஆணையர் (மத்திய குற்றப்பிரிவு) ஜெயக்குமார். ''வேலை முடித்து இரவு 'கேப்’ வாகனத்தில் வீடு திரும்பும் பெண்கள், டிரைவரிடம் பர்சனல் விஷயங்களைப் பேசக் கூடாது. வண்டி ரெகுலராக செல்லும் ரூட்டில்தான் செல்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். குடும்ப நபர்களிடம் வண்டி புறப்பட ஆரம்பித்ததிலிருந்து வீட்டுக்குச் செல்லும் வரை நடுவில் நடக்கும் அப்டேட்களை குறுஞ்செய்தி மூலமோ அல்லது குறைவான பேச்சின் மூலமோ தெரியப்படுத்தலாம். இரவு நேரங்களில் கண்ணை உறுத்தும் பெரிய நகைகளை அணியக் கூடாது. இரவில் வெளிச்சமான ரோட்டிலேயே செல்ல வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் சட்டத்துக்கு வலுவான பங்களிப்பு உள்ளது. சைகை அல்லது கேலி மூலமாக ஒருவன் தொந்தரவு செய்தால், சம்பந்தப்பட்ட பெண் புகார் அளிக்கும்போது... அவருடைய பெயரை வெளியிடாமலே நடவடிக்கை எடுப்போம். குற்றவாளி அதிக அளவில் தொந்தரவு தந்தால் அந்தப் பெண் தன் பெயரோடு புகார் அளிக்கும்பட்சத்தில், சட்டத்தில் அவனுக்கு கடுமையான தண்டனைகள் காத்திருக்கின்றன'' என்கிறார் ஜெயக்குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism