Published:Updated:

குடிசையில் வாழ்க்கை, கோபுரத்தில் மதிப்பெண்!

சி.ஆனந்தகுமார்,  உ.சிவராமன்   பா.வேலுமணி   ந.ஆஷிகா   தி.ஹரிஹரன் , க.பாலாஜி ,  பி.கமலா படங்கள்: பா.காளிமுத்து, வீ.சிவக்குமார், வீ.சக்தி அருணகிரி

குடிசையில் வாழ்க்கை, கோபுரத்தில் மதிப்பெண்!

சி.ஆனந்தகுமார்,  உ.சிவராமன்   பா.வேலுமணி   ந.ஆஷிகா   தி.ஹரிஹரன் , க.பாலாஜி ,  பி.கமலா படங்கள்: பா.காளிமுத்து, வீ.சிவக்குமார், வீ.சக்தி அருணகிரி

Published:Updated:

மிழக அளவில் லட்சக்கணக்கானோர் எழுதிய ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் கடந்த 9-ம் தேதியன்று வெளியாகி, முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பிடித்த மாணவ - மாணவிகள் பற்றிய செய்திகள் மீடியாக்களில் படபடக்கின்றன. இவர்களுக்கு நடுவே, படாடோப பள்ளிகள்... பணக்கார அப்பா - அம்மாக்கள்... வசதிமிக்க நகரங்கள்... என்பது போன்ற எதுவுமே வாய்க்கப் பெறாத நிலையிலும், சத்தமில்லாமல் சாதனை படைத்திருப்பவர்கள் பற்றிய செய்திகளுக்கும் பஞ்சமில்லை. அத்தகையோரில் சிலர், இங்கே பேசுகிறார்கள்.

குடிசையில் வாழ்க்கை, கோபுரத்தில் மதிப்பெண்!

வறுமை... வறுமை... வறுமை... இதைத் தவிர, வேறு எதையுமே அறியாத குடும்பங்களில் பிறந்து... அரசுப் பள்ளிகள், அரசாங்கத்தின் உதவியோடு தனியார் பள்ளிகள் என்று படித்து, அசத்தலான மதிப்பெண்களைப் பெற்றிருக்கும் இந்த மாணவிகள் ஒவ்வொருவருமே டாக்டர், இன்ஜினீயர், ஐ.ஏ.எஸ் என்று கனவுகளை சுமக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சி.ஏ. படிக்கறதுக்கு... பூ கட்டி சம்பாதிக்கணும்!''

எம்.சரண்யா - 1153 / 1200, சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப் பள்ளி, ராயப்பன்பட்டி, தேனி

சரண்யாவைத் தேடி, அவருடைய வீடு இருக்கும் சீலையம்பட்டி சென்றபோது... பாட்டியுடன் சேர்ந்து பூ கட்டிக்கொண்டிருந்தார்.

''ஒரு வயசு இருக்கும்போதே, அம்மா இறந்துட்டாங்க. கொத்தனாரா இருக்கற அப்பா, கேன்சர் நோயால பாதிக்கப்பட்டிருக்கார். கொத்தனார் வேலை பார்த்துட்டிருந்த தாத்தாதான், ஹாஸ்டல்ல சேர்த்து படிக்க வெச்சாரு. ஒன்பதாவது படிக்கறப்ப திடீர்னு தாத்தா இறந்துபோக, ரொம்பவே நொறுங்கிட்டேன். பாட்டி, சித்தப்பா, அத்தை எல்லாம் ஆறுதலா இருந்ததால தொடர்ந்து படிச்சேன். பூ கட்டி வித்துட்டு கிடைக்கற பணத்துலதான் செலவுக்கு பணம் கொடுப்பாங்க பாட்டி.

பத்தாவதுல 458 மார்க் எடுத்தேன். மருத்துவம் படிக்கத்தான் ஆசை. காரணம்... குடும்பத்துல வந்த இழப்புகள்தான். ஆனா, முதல் குரூப் எடுத்து படிச்சு, மார்க் குறைஞ்சிட்டா என்ன பண்றதுங்கற பயத்துல... தொழில்படிப்புக்கான 'வொகேஷனல் குரூப்’ (Vocational group) எடுத்தேன். இந்த கோர்ஸுக்கு கைடு எல்லாம் கிடையாது. புக்கை வெச்சுதான் படிச்சேன். ஸ்கூல்ல அலெக்ஸ், கார்த்திக் சார் எல்லாம் ஹெல்ப் பண்ணாங்க.

கணக்குப்பதிவியல், தணிக்கையியல், கருத்தியல் பாடங்கள்ல நான் மட்டும்தான் தமிழ்நாட்டுலயே இருநூறுக்கு இருநூறுனு டி.வி மூலம் தெரிஞ்சுகிட்டேன்.

தாத்தா உசிரோட இருக்கறப்ப... ஒவ்வொரு வருஷ ரிசல்ட் சமயத்துலயும் டி.வி, பேப்பர் எல்லாம் பாத்துட்டு... 'நீயும் இந்த மாதிரி பேட்டி கொடுக்கணும்'னு சொல்லிட்டிருப்பார். இப்ப என்னை பேட்டி எடுக்க நீங்க வந்திருக்கறத பார்க்கறப்ப... தாத்தா சொன்னதை நிறைவேத்திட்டோம்ங்கிற சந்தோஷம் எட்டிப்பார்க்குது.

சி.ஏ படிக்கணும்... டி.என்.பி.எஸ்.சி குரூப் எக்ஸாம் எழுதணும்னு ஆசை இருக்கு. ஆனா, அதுக்கெல்லாம் பணம் வேணும். அதுக்கு தொடர்ந்து பூ கட்டணும்'' என்று பூ கட்டும் வேலையில் மும்முரமாகிறார்.

குடிசையில் வாழ்க்கை, கோபுரத்தில் மதிப்பெண்!

''மெடிக்கல் படிக்க வாய்ப்பு கிடைக்குமா?''

இசைவேணி - 1139 / 1200, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புகளூர், கரூர்

பத்தாவது வரை மட்டுமே படித்திருக்கும் அப்பா பாலகிருஷ்ணன், பேங்க் ஏ.டி.எம் காவலாளி. ஐந்தாம் வகுப்பைத் தாண்டாத அம்மா பொன்மணி, தையல் தொழிலாளி. இசைவேணியோ... பள்ளியில் முதலிடம், மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகள் அளவில் மூன்றாமிடம்!

''குடும்பத்துல மட்டுமில்ல... சொந்தங்கள் வட்டாரத்துலயும் நான்தான் 12-ம் வகுப்பு வரை வந்தவ. 5-ம் வகுப்பு வரைக்கும் இங்கிலீஷ் மீடியத்துலதான் படிக்க வெச்சாங்க. மேற்கொண்டு ஃபீஸ் கட்ட முடியாம, அரசாங்க உதவிபெறும் பள்ளியில  தமிழ் மீடியம் சேர்த்துட்டாங்க. தமிழுக்கு மாறின பிறகு, முதல்ல கஷ்டமா இருந்துச்சு. சமாளிச்சி படிச்சிட்டேன்.

டாக்டர் கனவோடதான் சின்ன வயசிலிருந்தே படிக்கிறேன். பத்தாவதுல நிறைய மார்க் வாங்குவேன்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க. ஆனா, 500-க்கு 464 மார்க்தான் வாங்க முடிஞ்சது. அதனால, மனசொடிஞ்சு போன நான், '11-ம் வகுப்புக்கு தனியார் ஸ்கூல்லதான் சேருவேன்'னு அடம்பிடிச்சேன். வசதி இல்லாத காரணத்தால அரசாங்க பள்ளிக்கூடம்தான் வாய்ச்சது. 'ம்... அரசாங்க பள்ளிக்கூடத்துல நல்லா சொல்லித்தர மாட்டாங்களே'ங்கற நினைப்போடதான் ஸ்கூல்ல கால் வெச்சேன். ஆனா, அடுத்தடுத்த நாள்ல, அந்த நினைப்பு நொறுங்கிடுச்சி. அங்க இருந்த ஆசிரியர்கள் எல்லாரும், பெற்றோர்கள் மாதிரியே அக்கறை காட்டினது... நெகிழ வெச்சிடுச்சி.

வேதியியல் ஆசிரியை மோகனசுந்தரி மிஸ், எனக்கு ரொம்ப ஆதரவா இருந்தாங்க. தலைமை ஆசிரியையும் நிறைய சலுகைகள் கொடுத்தாங்க. தனியார் பள்ளி அளவுக்கு கோச்சிங் கொடுத்தாங்க. இப்ப மெடிக்கல் காலேஜ்ல சேர்ற அளவு 'கட் ஆஃப்' வெச்சிருக்கேன்.

காலையில 4 மணிக்கே எழுந்து, 9 மணி வரை படிப்பேன். ஸ்கூலுக்கு சைக்கிள்லதான் போவேன். நைட்லயும் 2 மணி வரை படிச்சிட்டுதான் தூங்குவேன். போர் அடிச்சா... தம்பிகூட சண்டை போடுவேன். கவனம் சிதறாம இருக்கறதுக்காக ராமாயணத்தை அப்பப்ப படிச்சிப்பேன்'' என்று சந்தோஷம் பொங்கப் பேசிக்கொண்டே வந்த இசைவேணி,

''அப்பா, வேலைக்குப் போனாத்தான் சாப்பாடுங்கற நிலையில இருக்கற குடும்பம்தான் என்னுது. பல நாள் பசியோடவே தூங்கினது உண்டு. இதையெல்லாம் மனசுல வெச்சிதான் நல்லா படிச்சேன். சிறந்த டாக்டராகி, வறுமையில இருக்கறவங்களுக்கு உதவணும்ங்கிறதுதான் ஆசை. ஆனா, மருத்துவப் படிப்புக்கு நிறையா செலவு ஆகுமே..?'' என கண்கலங்கினார்.  

குடிசையில் வாழ்க்கை, கோபுரத்தில் மதிப்பெண்!

''டீச்சர் கனவு நிறைவேறணும்!''

முருகேஸ்வரி - 1119 / 1200, நாவலர் சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளி, மதுரை

''பத்தாம் வகுப்புல மாநகராட்சி அளவில் மூன்றாம் இடம் வாங்கினேன். இப்ப பன்னிரண்டாம் வகுப்பிலும் மூன்றாம் இடம். அப்பா, ஜூஸ் கடையில் வேலை பார்க்கறாங்க. அக்கா பி.ஏ ஆங்கிலம் ரெண்டாம் ஆண்டு படிக்கறா. அப்பா, அம்மா ரெண்டுபேருமே 'படிக்கிற பிள்ளைக்கு, தன்னால மரியாதை கிடைக்கும். சொந்தபந்தம், நண்பர்கள் எல்லாம் ஒரு காலம் வரைக்கும்தான் துணையா வருவாங்க. படிப்புதான் எந்நாளும் கூடவே வரும்... உனக்கு பெருமையை சேர்க்கும்'னு சொல்லிச் சொல்லியே வளர்த்தாங்க.

பல நாட்கள் எங்களுக்கு மட்டும் சாப்பாடு கொடுத் துட்டு, அவங்க ரெண்டு பேரும் தண்ணிய மட்டும் குடிச்சிட்டு படுக்கறத நிறையவே பார்த்திருக்கேன். அதையெல்லாம மனசுல ஏத்தி படிச்சதுக்கு நல்ல பலன் கிடச்சிருக்கு. டி.வி சுத்தமா பார்த்ததே கிடை யாது. காலையில பேப்பர் மட்டும் மறக்காம படிச்சிடுவேன். என்னோட டீச்சர்ஸ் ரொம்ப உதவியா இருந்தாங்க. டாக்டர், இன்ஜினீயர் ஆசையெல்லாம் கிடையாது. டீச்சர் ஆகணும்ங்கிற சின்னவயசு கனவு மட்டும் அப்படியே இருக்கு.''

குடிசையில் வாழ்க்கை, கோபுரத்தில் மதிப்பெண்!

''முதல்ல டாக்டர்... பிறகு, ஐ.ஏ.எஸ்!''

சண்முகப்பிரியா - 1097 / 1200, ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி, மேலமாத்தூர், பெரம்பலூர்

''வீட்டில் மூணு பெண்ணுங்க. ஒரு தம்பி. கரூர் டெக்ஸ்டைல் கம்பெனியில் வேலை செய்தார் அப்பா. கரன்ட் கட் பிரச்னை காரணமா கம்பெனிய மூடிட்டதால, பெரம்பலூர் மாவட்டம், திருவாளந்துறை உறவுக்காரங்க வீட்டுல தஞ்சம் புகுந்தோம். அப்பா, கொத்தனார் வேலைக்கு போய் குடும்பத்தைக் காப்பாத்த ஆரம்பிச்சார்.

வி.களத்தூர், அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது படிச்ச நான், 439 மார்க் எடுத்தேன். அரசு பள்ளிகள்ல நிறைய மார்க் எடுத்தவங்கள... வேற பள்ளிகள்ல படிக்க ஏற்பாடு செய்தார் மாவட்ட கலெக்டர் தாரேஸ் அகமது. அந்த வகையில்தான் ராஜவிக்னேஷ் பள்ளியில் சேர்ந்தேன். வீட்டு கஷ்டத்தையும், மற்றவங்களோட உதவிகளையும் உணர்ந்து படிச்சதால... 1097 மார்க் எடுத்திருக்கேன். டாக்டருக்குப் படிக்கணும்... பிறகு, ஐ.ஏ.எஸ் படிச்சி, என்னைப் போல கஷ்டப்படுற மக்களுக்கு உதவி செய்யணும்.''

குடிசையில் வாழ்க்கை, கோபுரத்தில் மதிப்பெண்!

''இன்ஜினீயர் ஆகிடுவேனா?''

கா.ராஜேஸ்வரி - 1072 / 1200, தியாகராஜா மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்

''அம்மா, அப்பா, ரெண்டு அக்காக்களோட சேர்த்து மொத்தம் 5 பேரு. அப்பாவுக்கு நெசவுத் தொழில். மூத்த அக்காவை வரதட்சணை இல்லாம, எங்க மாமா கட்டிகிட்டதால... ரெண்டாவது அக்காவோட படிப்புக்கு அப்பாவால செலவு செய்ய முடிஞ்சுது. 'இருக்கற கொஞ்சநஞ்ச பணத்தை வெச்சி ரெண்டாவது அக்காவுக்கு கல்யாணம் பண்றதா... இல்லை என்னைப் படிக்க வைக்கறதா?'னு அப்பாவுக்கு புரியல. எங்க தலையில என்ன எழுதியிருக்குன்னு தெரியல. கம்ப் யூட்டர் சயின்ஸ் படிக்கணும்ங்கிற என்னோட ஆசை நிறை வேறுமா?''

குடிசையில் வாழ்க்கை, கோபுரத்தில் மதிப்பெண்!

''மார்க் இருக்கு, 'மணி’?''

ரேவதி - 1063 / 1200, அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளங்குழி, நெல்லை.

''சின்ன வயசுல இருந்தே அரசாங்க பள்ளிக்கூடத்துலதான் படிக்கிறேன். டீச்சர்ஸ், பேரன்ட்ஸ் கொடுத்த ஊக்கம்தான் எல்லாத்துக்கும் காரணம். பரம்பரைத் தொழிலான நெசவையும் பார்த்துகிட்டு, வீட்டுலயே இட்லி மாவு விற்பனை செஞ்சி குடும்பத்த பாத்துக்கறார் அப்பா ரவீந்திரன். என்னையும், தம்பியையும் ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் வளர்க்கறாங்க. படிப்புக்குனு பத்து பைசா சேர்த்து வைக்கல. ஆனாலும், அப்பா ஆசைப்பட்ட மாதிரியே அரசாங்க பொறியியல் கல்லூரிக்கு அப்ளை பண்ணியிருக்கேன். கிடைச்சா ஓ.கே... இல்லைனா என் ஆசைப்படி பி.எஸ்ஸி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கப் போயிடுவேன். வகுப்புல அக்கம்பக்கம் திரும்பாம கூர்மையாக கவனிச்சது...இவ்வளவு மார்க எடுக்க வெச்சிருக்கு.''

குடிசையில் வாழ்க்கை, கோபுரத்தில் மதிப்பெண்!

''பி.சி.ஏ... கனவாவே போயிடுமோ?''

வள்ளிலட்சுமி - 1003 / 1200, தியாகராஜா மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்

''அம்மா, அப்பா, 3 அண்ணன்களோட சேர்த்து மொத்தம் 6 பேரு எங்க குடும்பத்துல. எல்லாருக்கும் சாப்பாடு கொடுக்கறதுக்கே அப்பா ரொம்ப கஷ்டப்பட்டார். அதனால, படிக்க முடியாத அண்ணன்கள், சின்ன வயசுலயே வேலைக்குப் போயிதான் குடும்பத்த காப்பாத்தினாங்க. எல்லாரும் கல்யாணம் ஆகி, அவங்கவங்க குடும்பத்த பாத்துக்கிறதுக்கே இப்ப சரியா இருக்கு. எனக்கு பி.சி.ஏ (BCA) படிக்கணும்னு ஆசை. ஆனா, நெசவுத் தொழில் வருமானம் வீட்டு வாடகைக்கும், சாப்பாட்டுக்குமே போதல. மேற்கொண்டு எங்க படிக்கறது?''

குடிசையில் வாழ்க்கை, கோபுரத்தில் மதிப்பெண்!

''நர்ஸிங் படிச்சாலே போதும்!''

அனிதா - 869 / 1200, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர், சென்னை

சென்னை, பட்டாபிராம் பகுதியில் அதிக குடிசை வீடுகள் இருக்கும் ஏரியாவில்தான் அனிதாவின் வீடு. 1193, 1192 என தமிழக அளவிலான முதன்மை மதிப்பெண்களை ஊடகங்களில் பார்த்த நமக்கு, அனிதாவின், 869 பெரிதாக தோன்றாது. ஆனால், அனிதாவின் குடும்பச் சூழலை பார்க்கும்போது... 'மதிப்பில்லா எண்கள்'தான்!

''கூட பிறந்தவங்க மொத்தம் நாலு பேரு. அக்காக்கு கல்யாணம் ஆகிடுச்சு. ரெண்டு தங்கச்சி, ஒரு தம்பி இருக்காங்க. அப்பா, இறந்துட்டாரு. அம்மா நாகம்மா, தினமும் சிக்னல்ல கார் கண்ணாடிய தட்டி, வெளிச்சம் வராம தடுக்கற மேட், கண்ணாடி துடைக்குற துணி எல்லாம் விக்கிறாங்க. எட்டாவது படிக்கறப்பவே ஸ்கூல் போறத நிறுத்திட்டேன். அப்ப உமா மேம்னு (சுயம் சேரிடபிள் டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி. சுயம் மான்டிசோரி ஸ்கூல் நடத்துகிறார்) ஒருத்தங்க, 'உன்னால முடியும் முயற்சி பண்ணு'னு சொல்லி, பத்தாம் வகுப்பு படிக்க வெச்சாங்க. அந்த சமயம் பார்த்து அப்பா இறந்து போக, மறுபடியும் படிப்பு நின்னுடுச்சி. உமா மேடத்தோட யோசனையால... தனியா பரீட்சை எழுதி, பத்தாவது பாஸ் பண்ணினேன். அவங்கதான், பெரம்பூர் பள்ளியில 'ஹோம் சயின்ஸ் குரூப்' சேர்த்துவிட்டாங்க. விழுந்துவிழுந்தெல்லாம் படிக்க மாட்டேன். புரிஞ்சுகிட்டு படிக்கறதால, சுலபமா மண்டையில ஏறிடும். எங்க ஏரியாவுல, பொண்ணுங்க படிக்கறதே ரொம்ப கஷ்டம். இந்த நிலையில இத்தனை மார்க் எடுத்ததை எல்லாருமே ஆச்சர்யமா பார்க்கறாங்க. நர்ஸிங் கோர்ஸ் படிக்கணும்னு ஆசை’' என்று சொன்ன அனிதாவிடம், ''எதற்காக நர்ஸிங்?'' என்றதற்கு வந்த பதில் -

''டாக்டராகணும்ங்கிறதுதான் சின்ன வயசிலிருந்தே ஆசை. ஆனா, அதுக்கு ரொம்ப செலவாகுமே? இருந்தாலும் கஷ்டப்படறவங்களுக்கு எந்த வகையில சேவை பண்ணினா என்ன... எல்லாம் ஒண்ணுதானேண்ணே?!'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism