''கடந்த 20 வருஷங்களுக்கும் மேலா திரைப்படங்களை இயக்கியும் தயாரிச்சுட்டும் இருக்கேன். ஆரம்ப காலங்கள்ல 'சிவப்புமல்லி', 'சுமை’, 'இது எங்க நாடு’... இப்படி சமூகப் படங்களா எடுத்தேன். பிறகு, 'கரிமேடு கரிவாயன்’, 'காவல் கைதிகள்’, 'குற்றவாளிகள்’னு ஆக்ஷன் படங்கள் பக்கம் கவனம் திரும்பிச்சி. ஒரு கட்டத்துல... 'தங்கமணி ரங்கமணி’, 'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, 'கந்தா கடம்பா கதிர்வேலா’னு நகைச்சுவைப் படங்கள்ல மூழ்கினேன். இதுக்கு நடுவுல குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிற படங்களை இயக்க முடிவு பண்ணினேன். அந்த வகையில 'ஆடிவெள்ளி’, 'துர்கா’, 'தைப்பூசம்’, 'பாளையத்து அம்மன்’, 'ராஜகாளியம்மன்’, 'நாகேஸ்வரி’ இந்த மாதிரியான பக்திப் படங்களை இயக்கினேன். இந்த இராம.நாராயணன், மக்கள் மத்தியில் பதிய முக்கியமான காரணம், பெண்களை மையமா வெச்சி இயக்கின படங்கள்தான்கிறதை பெருமையா சொல்லிக்குவேன்.

எத்தனையோ படங்களை இயக்கியிருந்தாலும் பெண் தெய்வங்களாக வந்த கதாநாயகிகள்தான் என் மனசுல ஆழமா பதிஞ்சிருக்காங்க.

பல தலைமுறைகளுக்கு முன்ன தோன்றி மறைஞ்சி, தெய்வமான பெண்களை வழிபடுற மரபு இன்னிக்கும் நம்மில் பலர்கிட்டயும் இருக்கு. அப்படி நான்கு தலைமுறைகளுக்கு முன்ன எங்க குலத்தில் தோன்றி மறைஞ்ச பெண் தெய்வம்... தேனாண்டாள்! அந்தத் தாயைப் போற்றும் வகையில்தான் என் நிறுவனத்துக்கு 'தேனாண்டாள் ஃபிலிம்ஸ்’னு பெயர் வெச்சிருக்கேன். செட்டிநாட்டு வழக்கப்படி வருடம்தோறும் உறவினர்களோட அந்த தாய்க்கு படையல் வெச்சி கும்பிடுறதையும் வழக்கமா வெச்சிருக்கேன். எங்க சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு மட்டுமே தெரிஞ்ச அந்த தெய்வத்தோட புகழை, உலக அளவுல கொண்டு போக நினைச்சி, எடுத்த படம்தான் 'ஆடிவெள்ளி’. ஆடி வெள்ளிக்கிழமைங்கறது... பெண்கள் விரதம் இருந்து கொண்டாடுற நாள். அதுமட்டுமில்லாம... நான் ஆடிவெள்ளியில் பிறந்தேன்ங்கிறதாலயும்தான்  இந்தப் பேரை வெச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் இனிய கதைநாயகிகள்! - 5

பெரிய அளவில் பேசப்பட்ட அந்தப் படத்தில் வரும் 'வள்ளி’ கதாபாத்திரத்துல சீதா நடிச்சிருப்பாங்க. பேராசை பிடிச்ச கணவனா வரும் 'நிழல்கள்’ ரவி, தவறான வழிக்கு சென்று 'வள்ளி’யைக் கொலை செய்து கிணத்துல வீசிடுவான். அவனை திருத்துறதுக்காக 'வள்ளி’ உருவத்திலேயே அம்பாள் அவதரிச்சி, அவன் வீட்டுக்கு போவா. அவளுக்கு எதிரா ஏவிவிடப்படற மந்திரவாதியையும் தீயவர்களையும் சூரசம்ஹாரம் செய்வா. சத்தியத்துக்கு கட்டுப்பட்டு கணவனுக்காக உயிரையே கொடுக்கக் கூடிய 'வள்ளி’, விலங்குகள்கிட்டயும் மனிதர்கள்கிட்டயும் அன்பு கொண்டவளா இருப்பா. எனக்குப் பேரும் புகழும் வாங்கிக் கொடுத்தவ இந்த வள்ளி!

டுத்த நாயகி, 'ராஜகாளியம்மன்’ படத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன். அனாதையா இருக்குற ரெண்டு குழந்தைகளுக்குத் தாயா இருந்து வளர்க்கும் அம்மன் கதாபாத்திரத்தில் நடிச்சிருப்பாங்க. அம்மன், அந்த குழந்தைகளோட கண்ணுக்கு மட்டும்தான் தெரிவா. அண்ணனா வடிவேலுவும் தங்கையா கௌசல்யாவும் நடிச்சிருப்பாங்க. வடிவேலு வித்தை காட்டிப் பிழைப்பு ஓட்டிக்கிட்டிருக் கும் போதும், தினசரி வரவு - செலவு கணக்கு களை அம்மன்கிட்ட தவறாம ஒப்படைப் பார். இன்றளவும் பழநி முருகர் கோயிலில் அபிஷேக வரவு இது, பூமாலை செலவு இதுனு முருகன்கிட்ட கணக்கு காட்டுறத வழக்கமா வெச்சிருக்காங்க. அதைத்தான் கதையில் அம்மனுக்கு சொல்றதா சேர்த்திருந்தேன்.

இந்தப் படத்தில் தன் மகளான கௌசல்யாவை ஏமாற்றி திருமணம் செய்து, கொடுமை செய்யும் தீய கணவனை கொல்லப் பார்ப்பா அம்மன். ஆனா, அவனை மன்னிக்கச் சொல்லி அம்மன்கிட்ட மன்றாடுவா கௌசல்யா. 'தப்பு பண்ற புருஷனை எல்லாம் மனைவியோட தாலிதான் வேலியா இருந்து காப்பாத்துது. இப்பவும் உன் மனைவியோட தாலிக்காகத்தான் உன்னை மன்னிக்கிறேன்’னு சொல்லி, மன்னிப்பா. மனைவியின் மகிமையை உணராத பல ஆண்களுக்கு, இந்தப் படம் மூலமா ஒரு பாடம் சொல்லியிருப்பேன்.

'பாளையத்து அம்மன்’ மீனா, பலருக்கும் பிடிச்ச அம்மன். பொதுவா நாம கடவுளுக்கு வேண்டிக்கிட்டா, அந்த வேண்டுதலை நிறைவேத்திடுவோம். இல்லைனா... சாமி பழிவாங்கும்ங்கிற நம்பிக்கை இருக்கு. இதுக்காக சாமி பழிவாங்குமா அப்படிங்கறதுதான் கதை. ஹீரோயின் திவ்யா உன்னிக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. குழந்தை பிறந்தா அதை ஆறு மாசத்துக்குள்ள அம்மனுக்கு தர்றதா வேண்டிக்குவாங்க. சொன்னபடியே குழந்தை பிறக்கும். ஆனா, அம்மனுக்கு தராம, அதுக்கு பதில் பணத்தை அந்த குழந்தையின் கையாலேயே உண்டியல்ல போடுவாங்க. அப்ப, அந்தக் குழந்தை தவறி உண்டியல்ல விழுந்துடும். பிறகு அந்தக் குழந்தையை எடுத்துக்கிட்டாலும், அம்மன் டீச்சரா வந்து அந்தக் குழந்தையைத் தன் பக்கம் இழுத்து வெச்சிருப்பா. ஆறு வருஷம் கழிச்சு பல போராட்டங்களுக்குப் பிறகு மந்திரவாதியிடம் இருந்து குழந்தையைக் காப்பாற்றி, தாயிடமே திருப்பித் தருவா அம்மன். குழந்தைக்கு தோஷம் இருந்ததாலேயே அதை தானே வெச்சிருந்ததா கடைசியில அம்மன் சொல்லும்போது... தியேட்டரே உருகும். இப்படி தாயுள்ளத்தோடு பார்க்கற எல்லோரையும் தாயுள்ளமா மாற வெச்சவ... 'பாளையத்து அம்மன்’.

என்னோட சின்ன வயசுல, என் அப்பா வெளிநாட்டுல இருந்தார். அப்ப இரவு தூங்க வைக்கறதுக்கு எங்கம்மா எனக்கு ராமாயணக் கதைகள் சொல்லுவாங்க. என் மனசுல பதிஞ்ச அந்த கதைகளோட தாக்கம்தான் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குற படங்களா நான் இயக்கக் காரணம். காலம் எனக்கு இடம் கொடுத்தால் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை இன்னும் நிறைய இயக்குவேன்!''

சந்திப்பு: பொன்.விமலா

என் இனிய கதைநாயகிகள்! - 5

'வெள்ளிக்கிழமை ராமசாமி’யை ஞாபகம் இருக்கா?!

'ஆடிவெள்ளி’ நாயகி சீதா பேசும்போது, ''ஆடிவெள்ளி படத்துல நடிச்சப்ப எனக்கு 18 வயசு. யானை, பாம்புனு ஷூட்டிங் போற மாதிரியே இருக்காது; சர்க்கஸுக்குப் போற மாதிரி ஜாலியா இருக்கும். படத்துல வர்ற 'வெள்ளிக்கிழமை ராமசாமி’ யானையை யாருமே மறந்திருக்க முடியாது. அந்த யானையோட பாகன் ஆறு மணிக்கெல்லாம் ஷூட்டிங்கை மூட்டை கட்டிட்டு வீட்டுக்குப் போகணும்னு நினைப்பார். அதுக்காக அந்த யானையோட காதுல அவர் ரகசியமா ஏதோ சொன்னதும் அதுவும் எழுந்துக்கவே மாட்டேன்னு படுத்துக்கும். ஒருவழியா பாகனை சமாதானப்படுத்திதான் மிச்சம் இருக்கிற காட்சிகளை படம் பிடிப்போம். படத்துல என்னைவிட ராமசாமிக்குதான் வேல்யூ அதிகம்.

படம் தமிழ், தெலுங்கு ரெண்டுலயும் சூப்பர் ஹிட். படத்துல 'ஆயி மகமாயி’ பாடல் வந்ததும் தியேட்டர்ல நிறைய பேர் அருள் வந்து ஆடினாங்க. வேப்பிலை, கற்பூரம், மஞ்சள்நிற புடவைனு தியேட்டருக்கு வந்த கூட்டத்தைப் பார்க்கும்போது, ஏதோ கோயிலுக்குப் போன மாதிரி இருக்கும். அருள் வந்து ஆடின பெண்களுக்கு கற்பூரம் காட்டி, தியேட்டர் ஸ்க்ரீன் எரிஞ்ச சம்பவங்கள்கூட நடந்திருக்கு!'' என்றார் வியப்பு குறையாமல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism