Published:Updated:

அரசியல்வாதிகளுக்கு எதிராக சுளீர் தீர்ப்பு!

86 வயதிலும் சாட்டையைச் சுழற்றும் லில்லி... புஷ்பா  கரம்

அரசியல்வாதிகளுக்கு எதிராக சுளீர் தீர்ப்பு!

86 வயதிலும் சாட்டையைச் சுழற்றும் லில்லி... புஷ்பா  கரம்

Published:Updated:

'குற்றப் பின்னணி கொண்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகவேண்டும். அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது!’ என்று கடந்த ஆண்டில் வெளியான உச்ச நீதிமன்ற அதிரடி தீர்ப்பு, இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத் தீர்ப்பு.

அரசியல்வாதிகளுக்கு அச்சத்தை தந்து, பொதுமக்களிடம் பாராட்டு பெற்ற இந்த தீர்ப்பின் அச்சாணி, கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த, பெண் வழக்கறிஞர் லில்லி தாமஸ்! இதை இவர் சாதித்திருப்பது... தன்னுடைய 86-ம் வயதில் என்பது கூடுதல் ஆச்சர்யம்!

'ஜனநாயக நாடான இந்தியாவில், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், குற்றவாளிகள் என்பது உறுதியானால், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடைசெய்யும் வகையில், தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என, 2005-ம் ஆண்டு லில்லி தாமஸ் மற்றும் லோக் பிரஹாரி நிறுவனம் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். பலகட்ட விசாரணைக்குப் பிறகுதான் தீர்ப்பு வந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசியல்வாதிகளுக்கு எதிராக சுளீர் தீர்ப்பு!

இதன் அடிப்படையில் பழம்பெரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஷீத் மசூத், லாலு பிரசாத் யாதவ், ஜெகதீஷ் சர்மா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்; எம்.பி. பதவியும் பறிபோனது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத் தவிர, தீர்ப்புக்காக காத்திருக்கும் வழக்குகளில் சிக்கியிருக்கும் அரசியல்வாதிகள் பலரும் கதிகலங்கி உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பாக முடிந்து, நாடு முழுக்க இருந்து புது எம்.பி-க் கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆசை ஆசையாக டெல்லியை முற்றுகையிட்டுள்ள சூழலில்... வாழ்த்துக்களுடன் லில்லியைச் சந்தித்தோம்.

''வழக்காடுவதில் என்னுடைய ஈடுபாடு இப்போது தோன்றியது இல்லை. நான்காம் வகுப்பிலிருந்தே உருவானது. அந்த வகுப்பில் என்னுடைய அன்புத் தோழி சுதா. எனக்கு வழக்கறிஞராக ஆசை, அவளுக்கு மருத்துவராக ஆசை. எனவே, நாங்கள் எங்கள் பெயரை எழுதும்போது, டாக்டர் சுதா, வழக்கறிஞர் லில்லி தாமஸ் என்றே எழுதுவோம். எதற்கெடுத்தாலும், எல்லோருடனும் சண்டை போடுவேன். இதனாலேயே 'வழக்காளி’, 'வாயாடி’ என்று என்னை அழைப்பார்கள். என் அம்மா பள்ளிக்கு வந்து, நான் இப்படி சண்டைக்கோழியாக இருப்பதை வருத்தமாகச் சொல்வார். அதற்கு என் ஆசிரியை, 'அவள் மனதில் ஒரு தெளிவான நியாயம் இருக்கிறது. அதை சண்டையாக வெளிப்படுத்துகிறாள்’ என்பார். அதன் பிறகு, என் வளர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் அம்மா. ஒரு பெண், சமூகத்தில் எப்படி போராடி ஜெயிக்க வேண்டும், பெண்களின் ஆளுமைத் திறனை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைஎல்லாம் பகவத் கீதையிலிருந்து கற்றுத் தந்தார் அப்பா'' என்று சொல்லும் லில்லியின் தந்தை, மறைந்த வழக்கறிஞர் கே.டி.தாமஸ். சென்னை சட்டக் கல்லூரியில் படித்த லில்லி, சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமைக்குரியவர்.

''குற்றப் பின்னணியில் இருக்கும் அரசியல்வாதிகள் எப்படி நாடாளுமன்றத்தில் இடம் பெறமுடியும்? பொறுத்துக்கொள்ள முடியாத இந்தக் கேள்வி என்னை அரித்துக்கொண்டே இருந்ததுதான்... வழக்காக மாறியது. நேர்மையற்ற அரசியல்வாதிகளுக்கு எதிரான இந்த வழக்கை நான் தொடர்ந்தபோது, எதிர்ப்புகளைப் பற்றி சிந்திக்கவில்லை, அஞ்சவும் இல்லை. ஆனால், இதுவரையில் எந்த ஒரு எதிர்ப்பையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை. இனி வந்தாலும் எதிர்கொள்ளக் காத்திருக்கிறேன்! பணத்துக்காக எல்லா வழக்குகளையும் கையில் எடுத்து வாதாட மாட்டேன். எந்தவொரு பிரச்னையிலும் பின்புலம் ஆராய்ந்து, நீதியுள்ள பக்கமே வழக்கறிஞராக ஆஜராவேன். எடுத்துக்கொண்ட வழக்கில் வெற்றி, தோல்வி பற்றிக் கவலைப்படாமல் முழுமுயற்சியைக் கொடுப்பேன்''

- இந்த வயதிலும் லில்லியின் குரலிலும், மனதிலும் உள்ள உறுதி, வியக்க வைக்கிறது.

தொடர்ந்தவர், ''உறுதிகொண்ட நெஞ்சுடன் எடுத்துக்கொண்ட செயலில் இறங்கினால், பெண்களை மிஞ்ச இவ்வுலகில் யாரும் இல்லை. அப்படி ஒரு பெண்ணாக என்னை நம்பினேன். பெண்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தேன். எனவே, எனக்குத் துணை தேவைப்படவில்லை. இன்றுவரை தனித்தே வாழ்கிறேன்!

சில பெண்கள், அன்பு, வேலை, தொழில் என்று பலவற்றிலும் தோல்வியைத் தழுவுகிறார்கள். அதற்குக் காரணம், அவர்களேதான். அவர்களுக்கு அடிப்படை அறிவும், இந்த சமூகத்தை எதிர்கொள்ள தெளிவான புரிதலும் இல்லாமல் இருக்கும்போது, அவர்களின் பலவீனம் பிறரால் பயன்படுத்தப்படுகிறது. எனவே, நல்ல பெண்ணாக இருப்பதுடன், அறிவுமிக்க பெண்ணாகவும் இருப்பதுதான் காலத்தின் தேவை!''

- அழகாக முடித்தார் அந்த சீனியர்!

குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகளை நடுங்க வைத்திருக்கும் லில்லி தாமஸுக்கு, திருச்சூர் இந்தியன் சீனியர் சேம்பர் சார்பில், வருகிற ஆகஸ்ட் 15 அன்று தங்கப்பதக்கம் வழங்கப்படவிருக்கிறது!