Published:Updated:

முதலில் கஷ்ட காலம்... பிறகு வசந்த காலம்!

சுகன்யா  வர்மா, படம்: க.பாலாஜி 

முதலில் கஷ்ட காலம்... பிறகு வசந்த காலம்!

சுகன்யா  வர்மா, படம்: க.பாலாஜி 

Published:Updated:

ணவு, உறைவிடம், ஆடைகள்... அதிமுக்கியமான இந்த தேவைகளைத் தனக்கும், தன் குழந்தைகளுக்கும் பூர்த்தி செய்துகொள்வது ஒரு பெண்ணுக்கு எளிதான காரியமல்ல. அதிலும் ஆண் துணை இல்லாத, ஒரு பெண்ணுக்கு..? ஆனால், இதையெல்லாம் மிகமிக எளிதாக கடந்துகொண்டிருக்கும் பெண்... பரிமளா! சென்னையைச் சேர்ந்த இவர், இளம் வயதிலேயே கணவரை இழந்த சூழலில், ஒரு ரைஸ் மில்லை ஆதாரமாகப் பற்றிக்கொண்டு, இன்று தன் குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வியைக் கொடுத்துக்கொண்டிருக்கும் தாய். மேலும் தானும் மாணவியாக சட்டம் படித்துக்கொண்டிருப்பவர், 'கிரீன் ஃப்ளவர்’ என்ற கன்சல்டன்ஸி நிறுவனத்தையும் நடத்திவருபவர்!  

''தேவைகள் துரத்தியதால் ஓடி, வெற்றியைத் தொட்ட கதை என்னுடையது!'' என்று ஆரம்பித்தார் பரிமளா.

''பி.காம் முடிச்சதோட, வீட்டில் எனக்கு கல்யாணம் செய்து வெச்சாங்க. கணவரோட குடும்பத்துக்கு ஒரு ரைஸ்மில் இருந்துச்சு. அந்த வருமானத்தில் பல பங்குகள். அதில் எங்களுக்கும் ஒண்ணு. குறைஞ்ச வருமானம்தான். இதுலயும் ரெண்டு குழந்தைகளோட சந்தோஷமா குடும்பம் நடத்தினோம். என் கணவர் என்னை எம்.காம் படிக்க வெச்சார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலில் கஷ்ட காலம்... பிறகு வசந்த காலம்!

ஒன்பது வருஷத்துக்கு முன்ன, திடீர்னு ஒரு நாள் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அப்போ என் பொண்ணுக்கு 11 வயசு, பையனுக்கு ரெண்டரை வயசு. இவங்களை எப்படி ஆளாக்கப் போறேன்னு இடிஞ்சு போய் உட்கார்ந்திருந்தேன். இடி மேல இடியா, அவர் நிறைய பேரிடம் கடன் வாங்கியிருந்தது அப்போதான் தெரிஞ்சது. வாழ்க்கையைப் பத்தின பயத்தை விரட்டியடிச்சிட்டு, தைரியத்தை வரவழைச்சுக்கிட்டேன். என் மாமியார் வீட்டில் கேட்டு, போராடி, போலீஸ் ஸ்டேஷன் வரை போய் எங்க பங்கா அந்த ரைஸ் மில்லை கேட்டு வாங்கினேன்.

ரைஸ் மில்லை எப்படி தொடர்ந்து நடத்தறதுனு எனக்குத் தெரியாது. ஆனா அதுக்காக நிலைகுலைஞ்சிடாம, கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன். மில்லில் வந்த வருமானத்தில், அவர் வெச்சிருந்த கடனையெல்லாம் அடைச்சி முடிக்க ரெண்டு வருஷம் ஆகிடுச்சி. 'நல்லா படிச்சிட்டு, இப்படி மில் வேலை பார்க்கிறியே?’னு பலரும் கேட்டாங்க. 'என்ன வேலை பார்த்தா என்ன... என் குழந்தைகள் பசி ஆறுறதும், தரமான ஸ்கூல்ல படிக்கறதும்தான் முக்கியம்'னு மனசுல நினைச்சிக்கிட்டு, வேலையில் கவனம் செலுத்தினேன். ஆரம்பத்துல மாத வருமானம் 5,000 ரூபாயா இருந்தது... இப்போ குறைந்தது 20,000 ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கு.

நான் படும் கஷ்டம், குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது, அவங்க படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தணும்னு ஹாஸ்டல்ல சேர்த்து படிக்க வெச்சேன். பொண்ணு மோகனப்பிரியா விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., மூணாவது வருஷம் படிக்கறா. பையன் நிதிஷ், போர்டிங் ஸ்கூல்ல 8-ம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு ஏரோஸ்பேஸ் சயின்டிஸ்ட் ஆக ஆசை. நான், இப்போ திருப்பதி யுனிவர்சிட்டியில் இரண்டாவது வருஷம் சட்டப்படிப்பு படிச்சிட்டு இருக்கேன். வழக்கறிஞர் சுஜாதா வேணுகோபால்கிட்ட ரெண்டு வருஷம் இன்டர்ன்ஷிப் செய்திட்டிருக்கேன். தவிர 'கிரீன் ஃப்ளவர்’னு கன்சல்டன்ஸி நிறுவனம் நடத்தி, ஹோம் லோன், பர்சனல் லோன், கார் லோன்னு நிதி மற்றும் அலுவலக சேவைகள் செய்றேன்''

- வாழ்க்கையில் வெள்ளம் கடந்து, தான் கரையேறிய கதையை கடகடவென சொல்லிய பரிமளா,

''இனி என்ன பண்ணப் போறோம்ங்கற நிலைமையில் பல பெண்களையும் வைத்து வேடிக்கை பார்க்கத்தான் செய்யும் காலம். நம்பிக்கையோட அதை கடக்கிற பெண்களுக்கு, அதே காலம் வசந்தத்தைத் திருப்பிக் கொடுக்கும். இதுக்கு நானும் ஓர் உதாரணம்!''

- சிரித்த முகத்துடன் சொல்கிறார்.