ல்ல செய்திதான் ஸ்வாமி பாபா கொடைக்கானலில் வந்து தங்கியிருப்பது. ஆனால், போய் பார்ப்பதற்கு அனுமதி வாங்க வேண்டுமே. ஒருவகையாய் போராடி அனுமதி வாங்கியதும் மனம் உற்சாகப்பட்டது. அப்போது பெரிய பிள்ளைக்கு ஏழு வயதும் சிறிய பிள்ளைக்கு ஐந்து வயதுமிருக்கும். ஸ்வாமியின் கொடைக்கானல் இருப்பிடமான, 'சாயிஸ்ருதி’க்கு வெளியே வெளிநாட்டு, உள்நாட்டு பக்தர் வரிசை, ஆஞ்சநேயர் வாலாய் வளர்ந்துகொண்டிருந்தது. திருவிழாக் கூட்டமாய் கடைகள்... மக்கள் நடமாட்டம்... எல்லாம் கோலாகலமாயிருந்தன. பிள்ளைகளை அழைத்துக்கொண்டு குடும்ப நண்பரோடு தரிசனத்திற்குச் சென்றேன். புடவையைப் போர்த்திக்கொண்டு போகச் சொன்னார் ஒரு பெண் சேவாதளத் தொண்டர்.

பிள்ளைகளிடம் ஒரு சாக்லேட் டிரேயினைத் தந்து, அவர்கள் அமர வேண்டிய இடத்திற்கு குடும்ப நண்பரோடு அனுப்பிவிட்டு, நான் ஒரு சாக்லேட் டிரேயை எடுத்துக்கொண்டு நான் அமர வேண்டிய இடத்துக்குச் சென்றேன். 'சாயிராம்... சாயிராம்' என்று சொல்லிக்கொண்டே பக்தர்கள் விரைந்துகொண்டிருந்தார்கள். சாயி வட்டத்தில் யாரும் யாரையும் பெயர் சொல்லி அழைப்பதில்லை. ஒருவருக்கொருவர் 'சாயிராம்' என்று அழைத்தே பேசிக்கொள்வார்கள். எல்லாருக்குள்ளும் ஸ்வாமி இருக்கிறார் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே அது. பக்தர்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது. மூன்றாவது வரிசையில் அமர்ந்தேன். அந்த நாட்களில் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை, மேடை என்று பல நிகழ்ச்சிகளைத் தந்துகொண்டிருந்தேன். எனவே, என் பக்கத்திலிருந்த சாயி பக்தைகளில் சிலர், என்னை அடையாளம் கண்டு, பார்த்த நிகழ்ச்சிகளைப் பாராட்டினர். எந்தக் கோயிலுக்குப் போனாலும் வழிபாட்டிற்கு அப்பாற்பட்டு எவரிடமும் நான் பேசுவதில்லை. தரிசனத்திற்கு வந்த இடத்தில், இந்தப் பெருமைப்பேச்சு கூடாது என்று தலையசைத்து, ஓரிரு வார்த்தைகளைப் பதிலுக்குச் சொல்லிப் புன்னகைத்துவிட்டு, ஸ்வாமி வரும் வாயிலைப் பார்த்தபடியே இருந்தேன்.

சத்தியப் பாதையில்..! - 4

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புல்லாங்குழல் இசை காற்றில் மிதந்து வரத் தொடங்கியது. அடுத்த கணம் ஸ்வாமி தெய்விகச் சித்திரமாய், ஆரஞ்சுத் தெய்வமாய் நடந்து வந்துகொண்டிருந்தார். சிலரைத் தலைதொட்டு ஆசீர்வதித்தார். சிலரிடம் அன்போடு பேசி நலம் விசாரித்தார்... சிரித்தார்... பாத நமஸ்காரம் கொடுத்தார். ஒரு சிலர் கையில் தூக்கிப் பிடித்திருந்த டிரேயிலிருந்து சாக்லேட்டுகளை எடுத்து அள்ளி வீசினார். மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆவலோடும் எதிர்பார்ப்போடும் நானும் சாக்லேட் டிரேயினை ஸ்வாமியின் முன் நீட்டினேன். ஸ்வாமி எங்கள் வரிசைக்கு வந்தார். என்பக்கம் திரும்பவேயில்லை. பதைப்போடு 'சாயிராம்... சாயிராம்' என்று கூப்பிட்ட என் குரலைக் கேட்கவுமில்லை. தரிசனம் முடிந்து நேராக உள்ளே போய்விட்டார். என்ன நடந்தது என்று புரியவேயில்லை.

''அவ்வளவுதான்... இப்படி ஒருமுறைதான் ஸ்வாமி நடந்து வந்து ஆசீர்வதிப்பார். இன்றைக்கு தரிசனம் முடிந்தது. இனி வரமாட்டார்’' என்றார்கள் பக்கத்திலிருந்த பக்தைகள். என் உள்மனம் நொறுங்கிப் போனது. அப்படியே உட்கார்ந்துவிட்டேன். இன்று, இந்த தரிசனத்திற்கு வரவே போராடி அனுமதி வாங்கினேன். இன்னொருமுறை வருவது சாத்தியமில்லை. ஏன் இப்படி ஸ்வாமி என்னைப் பார்க்காமல் போனார்? என்ன தவறு செய்தேன்? தரிசனத்திற்கு வந்த இடத்தில் வேறு நினைப்பும் பேச்சும் கூடாதுதான். மற்றவர்கள், நிகழ்ச்சிகளைப் பாராட்டியதற்கு மரியாதை நிமித்தமாக பதில் சொன்னேனே தவிர இதில் என்னுடைய 'ஈகோ’ என்ன இருக்கிறது? ஸ்வாமி ஏன் இப்படி என்னை அலட்சியப்படுத்த வேண்டும்? சொல்ல முடியாத துக்கத்தில் மூழ்கிப்போனேன். அழுகை பொங்கி வர, கண்களை மூடி உறைந்து போனேன். சற்று நேரத்தில் 'சாயிராம்... சாயிராம்' என்று பக்தர் கூட்டம் ஆரவாரிப்பதைக் கேட்டு கண் திறந்தேன். வழக்கமில்லாத வழக்கமாய் அன்று மறுபடியும் ஸ்வாமி தரிசனத்திற்கு வந்துவிட்டார்! வெளிநாட்டு பக்தர்கள் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்க... ஸ்வாமியும் குதூகலமாய்ச் சிரித்தபடி வரிசைகளில் மீண்டும் வரத் தொடங்கினார்.

என் மனதில் நம்பிக்கை துளிர்த்தது. இந்த முறை விட்டுவிடக் கூடாது என்று முனைப்பின் விளிம்பிலிருந்தது மனம். எங்கள் வரிசையின் ஆரம்பத்தில் ஸ்வாமி வரும்போதே, சுற்றிலும் இருப்பவர்களை மறந்து, சூழலை மறந்து என்னை மறந்து 'சாயிராம்... சாயிராம்’ என்று குரல் கொடுத்தபடி சாக்லேட் டிரேயை நீட்டியபடி எழுந்துவிட்டேன். மனமுருகப் பிரார்த்தித்தபடி நின்றேன். ஸ்வாமி என்னை உற்றுப் பார்த்தார். அந்த தெய்வத் திருப்பார்வை எனக்குள் தெய்விக அதிர்வுகளை ஏற்படுத்தியது. அடுத்த கணம் ஸ்வாமி டிரேயைத் தொட்டார். டிரேயிலிருந்த சாக்லேட்டுகளை அள்ளி நாலா திசையிலும் வீசிவிட்டு வேகமாய் நடந்து போய்விட்டார்.

சொல்ல முடியாத மகிழ்ச்சியில் மூழ்கி அப்படியே உட்கார்ந்துவிட்டேன். ஸ்வாமி ஆசீர்வதித்துவிட்டதால் அத்தனை சாக்லேட்டுகளையும் பிரசாதமாக அள்ளிவிட்டார்கள். பக்கத்திலிருந்த வெளிநாட்டுப் பெண் என்னை உலுக்கினார். ''என்ன... உனக்கு சாக்லேட் பிரசாதம் வேண்டாமா? இந்தா உன் பிள்ளைகளுக்குக் கொடு'’ என்று சரியாக இரண்டு சாக்லேட்டுகளை நீட்டினார். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதை பற்றி அந்த பக்தைக்கு எப்படி தெரியும்?!

மூன்றாவது வரிசையிலிருந்ததால் பாதநமஸ்காரம் செய்ய முடியவில்லை. ஸ்வாமி என்னிடம் பேசவில்லை. ஆனால், நன்றாக ஆசீர்வதித்துவிட்டார். அலட்சியம் செய்வதுபோல் சோதித்து, அங்கீகாரம் செய்து ஆசீர்வதித்து மகிழ்ச்சி தர ஸ்வாமியால் மட்டுமே முடியும்!

அந்தப் பெண்மணி தந்த சாக்லேட் பிரசாதத்தை வாங்கிக்கொண்டதும், 'வெளியில் தரிசனத்திற்கு அமர்ந்திருந்த என் சிறுபிள்ளைகள் ஸ்வாமி தரிசனம் செய்தார்களா...’ என்ற பதைப்பு எழுந்தது.

வெளியில் வந்ததும் பிள்ளைகள் ஓடிவந்தார்கள், மகிழ்ச்சியோடு நடந்ததைச் சொன்னார்கள். ஸ்வாமி அவர்கள் வரிசைக்கு வந்ததும் இருவருமே சாக்லேட் டிரேயை ஆளுக்கொரு கையால் பிடித்தபடி ஸ்வாமி பாதங்களைத் தொட்டு நமஸ்காரம் செய்ய... ஸ்வாமி, பிள்ளைகளின் தலைதொட்டு ஆசீர்வதித்ததோடு, அவர்கள் நீட்டிய டிரேயிலிருந்து சாக்லேட்டுகளை அள்ளி வீசிவிட்டுப் போயிருக்கிறார். எனக்கு அழுகையைத் தாங்க முடியவில்லை. எத்தனை அன்பு! எத்தனை கருணை!

அதன்பிறகு என்வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் ஒவ்வொரு நிகழ்விலும் சாயிபாபாவின் ஆசீர்வாதம் தொடர்ந்தது.

ஜெய் சாயிராம்!

தொடரும்