Published:Updated:

“எல்லாமே தேவையில்லாத ஆணிதான்!”

பொன்.விமலா, படங்கள்: ஆ.முத்துக்குமார், பா.காளிமுத்துஜூஸர்... கட்டர்... டோஸ்ட்டர்... காபி மேக்கர்...

“எல்லாமே தேவையில்லாத ஆணிதான்!”

பொன்.விமலா, படங்கள்: ஆ.முத்துக்குமார், பா.காளிமுத்துஜூஸர்... கட்டர்... டோஸ்ட்டர்... காபி மேக்கர்...

Published:Updated:

'இந்த ஜிம் மெஷினை வாங்கினால் மூன்றே மாதத்தில் உங்கள் எடை குறையும்’, 'இந்த வெஜிடபிள் கட்டரில் கண்ணை மூடித் திறப்பதற்குள் சன்னமாக காய்கறிகளை நறுக்கலாம்’, 'மொத்த தூசியையும் பக்காவாக இழுத்து உறிஞ்சும் வேக்குவம் க்ளீனர் இது’ என கண்களையும் காதுகளையும் ஒருசேர கட்டி இழுக்கும் விளம்பரங்களின் மீதான போதை ஒரு பக்கம்... 'எங்க வீட்டுல சப்பாத்தி மேக்கர் இருக்கே...', 'அட, அவங்க வீட்டுல பிரெட் டோஸ்ட்டர் வெச்சிருக்காங்களாம்' என்று பேச்சோடு பேச்சாக வந்து சேரும் தகவல்களால் ஈர்க்கப்படுவது மறுபுறம்... என பார்க்கும் பொருட்களையெல்லாம் வாங்கிக் குவிக்க வைத்துவிடுகின்றன பலரையும்!

இப்படி வாங்கிய பொருட்களையெல்லாம் முறையாகப் பயன்படுத்துகிறார்களா?

பெரும்பாலும் 'இல்லை' என்பதே பதிலாக இருக்கிறது. இல்லத்தரசிகள் சிலரிடம் பேசியபோது..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எல்லாமே தேவையில்லாத ஆணிதான்!”

ரேவதி, மதுரை : ''மூணு வருஷத்துக்கு முன்ன இந்த 'ஜிம் மெஷின்' வாங்கினேன். டி.வி-யில பாக்கும்போது விளம்பரத்துல நடிக்குற மாடல் ரொம்ப ஈஸியா அதை இயக்கற மாதிரி இருந்துச்சு. வாங்கின பிறகுதான் தெரிஞ்சது... அது எவ்வளவு சிரமம்னு. ஒரு மாசம் ரொம்பக் கஷ்டப்பட்டு, அதில் வொர்க் அவுட் பண்ணினேன். பெருசா, உடம்புல மாற்றம் கிடைக்கும்ங்கிற நம்பிக்கை வரல. அதை ஒரு மூலையில ஓரங்கட்டிட்டேன். ஒருவேளை முறைப்படி கத்துக்கிட்டு பண்ணியிருந்தா, பயன்பட்டிருக்குமோ என்னவோ. ஆனா, எனக்கு அதுக்கான நேரமெல்லாம் இல்ல.

காபி மேக்கர்  வாங்கின புதுசுல, நினைக்கும்போதெல்லாம் அதுல காபி போட்டு குடிச்சிட்டு இருந்தேன். ஆனா, எங்க வீட்ல நான் ஒருத்திதான் காபி குடிப்பேன். 'ஒரு ஆளுக்காக அவ்ளோ பெரிய மெஷினை தினமும் கழுவி காய வைக்கணுமா?'னு ஓரம்கட்டிட்டேன்.''

“எல்லாமே தேவையில்லாத ஆணிதான்!”

மஞ்சுளா, சென்னை : ''கையாலயே ஜூஸ் பிழியிற ஜூஸரை ரெண்டு வருஷத்துக்கு முன்ன வாங்கினேன். ஆரம்பத்துல ஆர்வத்தில் நல்லா அழுத்திப் பிழிஞ்சு ஜூஸ் போட்டுக் கொடுத்தேன். பிறகு, அதை அழுத்தறது ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. அதை பயன்படுத்தாம அப்படியே வெச்சிட்டேன். அடிக்கடி எண்ணெய் போட்டு தேய்ச்சி வைக்காததால, துரு பிடிச்சிருச்சு.

எலெக்ட்ரிக் ஜூஸர் விளம்பரம் பார்த்துட்டு, 'நம்ம பிரச்னைக்கு தீர்வு கிடைச்சாச்சி'னு ஓடிப்போய் வாங்கினேன். ஆனா, அதை அக்குவேறா... ஆணிவேறா கழட்டி காயப்போடுறதுக்குள்ள, போதும் போதும்னு ஆகிடும். இதைக் கழுவுற நேரத்துல, மிக்ஸியிலயோ கையாலயோ ஜூஸ் போட்டுக்கலாம்னு இப்போ அதையும் தூக்கி பரண்ல போட்டுட்டேன்.

பாத்திரம் கழுவறது பெரிய தொல்லையான விஷயம். அதை ஈஸியாக்கறதுக்காக... ஒரு டிஷ் வாஷ் மெஷின் வாங்கினேன். ஆனா, அதிகமா பிசுக்குப் பிடிச்ச பாத்திரங்களை எல்லாம் அப்படியே இதுல போட முடியாது. ஒரு தடவை பிரஷ் பண்ணிட்டுதான் போடணும். பெரும்பாலும் சமையல் பாத்திரம்னாலே... பிசுக்குதான் இருக்கும். எல்லாத்தையும் பிரஷ் பண்ணிட்டு போடறதுக்கு... கையாலயே தேய்ச்சி கழுவறது ரொம்ப ஈஸினு முடிவு பண்ணிட்டேன். அந்த டிஷ் வாஷ், இப்போ பயன்படுத்தாம தூங்கிட்டிருக்கு.''

“எல்லாமே தேவையில்லாத ஆணிதான்!”

கமலா, சென்னை : ''ஆனியன் கட்டர், ஆசைப்பட்டு வாங்கினேன். நிறைய வெங்காயம் கட் பண்ண வேண்டி வரும்போது, உண்மையாவே கண்ணு எரியாம சரசரனு வெட்டிடலாம். ஆனா, தினமும் மூணு, நாலு வெங்காயம் கட் பண்றதுக்கு, இது தேவையில்லைதான். வெங்காயம் கட் பண்றதோட அதை நல்லா கழுவி காய வைக்கலைனா, கட்டர் துரு பிடிச்சிடும். அதுக்கு கட் பண்ணாம இருக்கிறதே மேல்னு முடிவு பண்ணிட்டேன்.

இந்த ரொட்டி மேக்கர் இருக்கே... அதுல சப்பாத்தி பண்றதுக்கு நமக்கு ஸ்பெஷல் டிரெயினிங் வேணும். டி.வி-யில செய்யும்போது நொடியில வேலை முடியுற மாதிரி தெரிஞ்சது. ஆனா, வாங்கிட்டு வந்து செஞ்சு பார்த்தா, கோணல் கோணலா ஓடுச்சு. ஒரு கட்டத்துல இதுகூட போராடுற நேரத்துக்கு... கட்டையில தேய்ச்சே ரொட்டி செய்யலாம்னு முடிவெடுத்துட்டேன். ரொட்டி மேக்கரை மூட்டை கட்டியாச்சு.

பிரெட் டோஸ்ட்டர் வாங்கினேன். ஆனா, அதை எடுத்து, சுத்தம் பண்ணி, டோஸ்ட் பண்ணி, பிறகு சுத்தம் பண்ணி துடைச்சு வைக்கணும். அதுகூட பெரிய பிரச்னையா தெரியல. இப்படி பிரெட்டை சமைச்சு கொடுக்கறதைவிட, வழக்கமான சாப்பாட்டை சமைச்சுக் கொடுக்கறது நல்லதுனு அதையும் மூட்டைக் கட்டிட்டேன். அதுவும் நம்ம ஊர் கரன்ட் கட்டுக்கு, அதெல்லாம் சரிப்பட்டு வரல.''

இப்படி பணத்தை அள்ளிக்கொடுத்து வாங்கிய பொருட்களில் சில, நம்முடைய தேவைக்கு பயன்படாமல் படுத்தி எடுக்கின்றன; சில பொருட்கள், அவற்றின் உபயோகம் சரிவர தெரியாததால் தூங்குகின்றன; சில பொருட்கள், நம் சோம்பேறித்தனத்தால் தூரத்தில் வைக்கப்படுகின்றன!

ஷாப்பிங் போகும் முன் இனியாவது யோசிப்போமா?

“எல்லாமே தேவையில்லாத ஆணிதான்!”
“எல்லாமே தேவையில்லாத ஆணிதான்!”

'பண விரயம், கால விரயம் தவிருங்கள்’!

பொருட்களை இஷ்டம்போல வாங்குவது பற்றி, சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் அனிதா ஆர் பட் கூறும்போது, ''பார்ப்பதையெல்லாம் வாங்கிக் குவிப்பதை ஒரு ஃபேஷனாகவே பலரும் வைத்துள்ளனர். ஒரு பொருளை வாங்க நினைத்தால், 'இது நமக்கு கட்டாயம் தேவையா... நிச்சயமாக அடிக்கடி பயன்படுத்துவோமா...’ என்பதை எல்லாம் முதலில் யோசிக்க வேண்டும். வாங்குவது என்று முடிவு எடுத்துவிட்டால்... பொருளின் தரத்தையும் விலையையும் பற்றி ஆராய்ந்த பிறகே வாங்க வேண்டும்.

பக்கத்து வீட்டில் இருக்கிறது... எதிர்வீட்டில் இருக்கிறது... அண்ணன் வீட்டில் இருக்கிறது என்பதற்காகவெல்லாம் வாங்கக் கூடாது. அவர்களிடம் எல்லாம், அதன் பயன்பாட்டை கேட்டுத் தெரிந்துகொண்டு வாங்கலாம். கூடவே அவர்களுடைய லைஃப் ஸ்டைல்... நம்முடைய லைஃப் ஸ்டைல் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவது முக்கியம். உதாரணமாக, அந்த வீட்டில் இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக இருக்கலாம்... அல்லது, மேலை நாட்டு லைஃப் ஸ்டைலை விரும்புவர்களாக இருக்கலாம். அதனால், அதற்கு தோதான பிரெட் டோஸ்ட்டர், சப்பாத்தி மேக்கர் என்று பயன்படுத்துவார்கள். தேவைப்பட்டால், தினமும் ஹோட்டலில்கூட சாப்பிடுவார்கள். இந்த லைஃப் ஸ்டைல் உங்கள் வீட்டுக்கு சரிப்பட்டு வராது என்றால், அவர்களைப் பார்த்து வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது... மொத்தமும் வீண் செலவாகத்தான் முடியும். தேவையில்லாமல் ஒரு பொருளில் நம் பணம் முடங்குவதைவிட, அதை முதலீடு சார்ந்த ஒன்றுக்கு பயன்படுத்தி பணம் மற்றும் காலவிரயத்தை தவிர்க்கலாம்'' என்று அறிவுரைகளை தந்தார்!