Published:Updated:

2,000 ரூபாயில் ஒரு வீட்டுத் தோட்டம்!

2,000 ரூபாயில் ஒரு வீட்டுத் தோட்டம்!

2,000 ரூபாயில் ஒரு வீட்டுத் தோட்டம்!

2,000 ரூபாயில் ஒரு வீட்டுத் தோட்டம்!

Published:Updated:

''காய்கறிகள் விலை விண்ணை முட்டுகிறது. அதை வாங்கினாலும், ரசாயன உரங்களில் விளைந்த அவற்றால் என்னென்ன கேடுகள் வருமோ என்று அஞ்சியே உண்ண வேண்டியுள்ளது. 'ஆர்கானிக்' என்று கடைகளில் விற்கப்படும் காய்கறிகள் வாங்கினால், எந்தளவுக்கு நம்பகமானது என்ற கேள்வி எழுகிறது. இதற்கெல்லாம் தீர்வு... வீட்டில், மாடியில் நாமே தோட்டம் போட்டு காய்கள் வளர்ப்பதுதான். இதற்கு உங்களுக்கு உதவும், எங்களின் இந்த நேச்சர் கேர் ஃபார்மிங் கிட்!'' என்று சிரிக்கிறார்கள், கோவை, பி.எஸ்.ஜி கல்லூரியின் எம்.பி.ஏ மாணவர்களான வினோதினி, ஜாஃபர் சாதிக் மற்றும் தினேஷ் சந்திரசேகர். இவர்களின் தயாரிப்பே, இந்த கிட்!

''நம் முன்னோர்களுக்கு 70 வயதில் வந்த நோய்கள் எல்லாம், நமக்கு 30 வயதிலேயே எட்டிப் பார்க்கின்றன. காரணம், நம் உணவில் கலந்திருக்கும் ரசாயனங்கள். இதற்கு மாற்று வழி, இயற்கை வழி விவசாயம். 'ஆனால், அதை எல்லோரும் செய்ய முடியுமா?' என்கிற தேவையற்ற அச்சம்தான், பலரையும் இயற்கை விவசாயத்திலிருந்து தள்ளி வைத்திருக்கிறது. அந்த அச்சத்தைப் போக்கி, இயற்கை விவசாயம் எளிதானது என்பதை புரிய வைப்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காக நாங்கள் தயாரித்திருக்கும் பொருட்கள் அடங்கியதுதான், இந்த கிட்!'' என்று வினோதினி நிறுத்த,

''தேங்காய் நாரால் ஆன மெத்தை போன்ற அமைப்பு 7 கிலோ, தவிட்டு படுக்கை 7 கிலோ, மண்புழு உரம் 7 கிலோ, இயற்கை விதைகள் (கீரை வகைகள், தக்காளி, கத்திரிக்காய், மிளகாய், வெண்டை, முள்ளங்கி, அவரை, பூசணி, வெள்ளரிக்காய், முருங்கை, பீர்க்கங்காய்) 5 கிராம்கள், விதை படுக்கை, வளர்ப்பு பைகள், வேப்பம் புண்ணாக்கு, மருந்து தெளிப்பான், வேப்பம் எண்ணெய், அமுதகரைசல் ஆகியவற்றோடு கையேடு மற்றும் சில பண்ணைக் கருவிகள் அடங்கியதுதான் இந்த நேச்சர் கேர் ஃபார்மிங் கிட். இதை வாங்குபவர்களுக்கு, தோட்டம் வளர்ப்பதற்கான வழிமுறைகளை இலவசமாகவே கற்றுத்தருகிறோம்!'' என்றார் ஜாஃபர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2,000 ரூபாயில் ஒரு வீட்டுத் தோட்டம்!

மாணவர்கள், விவசாயம் பக்கம் வந்ததன் பின்னணி சொன்னார் தினேஷ். ''மூவருமே எம்.பி.ஏ மார்க்கெட்டிங் படிக்கிறோம். இறுதியாண்டு புராஜெக்ட் பற்றி முதல் ஆண்டிலேயே யோசித்தோம். அதற்காக விவசாயத்தைக் கையில் எடுத்தோம். எங்களுக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் உண்டாகக் காரணம், நம்மாழ்வார் அய்யா. அவர் ஏற்படுத்திய விழிப்பு உணர்வு பிரசாரங்கள்தான் விவசாயத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தியது. உடனே அது தொடர்பாக நிறைய ஆய்வுகள் செய்தோம். அப்போது எங்களுக்கு தோன்றியதுதான் இந்த வீட்டு மற்றும் மாடித்தோட்ட வழிமுறைகள்.

வீட்டுத்தோட்டத்துக்கு முதலில் மண்ணை நன்கு கிளறி, காற்று செல்லும் வகையில் தயார் படுத்தவேண்டும். மாடித்தோட்டத்துக்கு வளர்ப்பு பைகளில் தேங்காய் நார் படுக்கை இடவேண்டும். இது தண்ணீரை நன்கு உறிஞ்சி மண்ணை ஈரப்பதமாக வைத்திருக்கும். அடுத்து அரிசி தவிடு. இதில் பொட்டாசியம், பாஸ்பரஸ், நைட்ரஜன் போன்றவை தேவைக்கதிகமாகவே இருப்பதால், இது சிறந்த இயற்கை உரம்.  மேலும் சூரிய ஒளி நேராக மண்ணில் படாமலும் தடுக்கும். அடுத்து மண்புழு உரம். இது மண்ணை வளப்படுத்துவதோடு மண்புழு மண்ணைக் கிளறிக்கொண்டே இருப்பதால் காற்றோட்டமாகவும் இருக்கும்.

இப்படி மண்ணை தயார் செய்துவிட்டு, விதைகளை இடவேண்டும். வளர்ந்த பிறகு வேப்பெண்ணெய், வேப்பம்புண்ணாக்கு ஆகியவை பூச்சி விரட்டியாக பயன்படுத்தப்படும். அடுத்தது வளர்ச்சி ஊக்கியாக அமுதக் கரைசல் இடவேண்டும். இது, மாட்டுச் சாணம், கோமியம் மற்றும் வெல்லம் கலந்தது. ஒரு லிட்டர் அளவுக்கு இந்தக் கரைசலை தருவதுடன், அதை தயாரிக்கும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துக் கூறுவதால், அடுத்த முறை சுயமாக தயாரித்துக்கொள்ளலாம்'' என்றார் தினேஷ்.

மீண்டும் ஆரம்பித்த வினோதினி, ''நாங்கள் இந்த முறையில் பயிரிட்டு அறுவடை செய்த முதல் விளைச்சல் பயிரான பசலைக்கீரையை உண்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த மகிழ்ச்சியை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்ப்பதே எங்கள் லட்சியம்'' என்றார்.

''தற்போது, இந்த 'கிட்' எங்கள் வீடுகளில் வைத்தே தயாரித்து, கேட்பவர்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கிறோம். எங்களின் கிட், இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விலை 2,000 ரூபாய். ஒரு மாதத்துக்கு காய்கறிகளுக்கு செலவிடும் தொகையை செலவிட்டாலே இதை வாங்க முடியும். இதன் மூலம் விலைமதிப்பில்லா ஆரோக்கியத்தை சேமிக்கலாம். உங்கள் கைகளால் சமைத்த உணவை சாப்பிட்ட அனுபவம் ஏற்கெனவே அனைவருக்கும் இருக்கும். உங்கள் கைகளால் விளைவித்த உணவை உண்ணும் அனுபவத்துக்கு துணை புரிகிறோம் நாங்கள்! எங்களின் இந்த முயற்சிக்கு உதவிய கல்லூரி ஆசிரியர்களுக்கும், குறிப்பாக ஆசிரியர் நாச்சிமுத்துவுக்கும் நன்றி '' என்றனர் கோரஸாக.

- ஞா.சுதாகர்

படம்: ர.சதானந்த்