பிரீமியம் ஸ்டோரி
குட்டீஸ் குறும்பு!

'அது வேற...  இது வேற!’

ஒருநாள் எனது மூக்குக் கண்ணாடியை மாடி அறையில் வைத்துவிட்டு கீழே வந்து விட்டிருந்தேன். நான்கு வயது பேரனிடம், அதை எடுத்து வரும்படி கூறினேன். அதற்கு அந்தப் பொடியன் ''போ பாட்டி... கால் வலிக்கும்'' என மறுத்துவிட்டான். சற்றுநேரம் கழித்து விடுமுறைக்கு வந்திருந்த வாண்டுகளுடன் ஓடிப்பிடித்து விளையாடுகையில் பல முறை மாடிப்படி ஏறி இறங்கினான். அவனை அருகே அழைத்து, ''ஏம்பா... நான் கண்ணாடி எடுத்து வரச் சொன்னப்போ 'கால் வலிக்கும்’னியே... இப்போ நிறைய தடவை ஏறி இறங்குறயே?'' என்றேன். அதற்கு அவன், ''நீங்க சொன்னது வேலை... நான் செய்றது விளையாட்டு. ரெண்டையும் கம்பேர் பண்ணாதீங்க!'' என்று சிம்பிளாக சொல்ல... வியப்பால் வாயடைத்துப் போனேன்.

- ஏ.ஜே.ஜபீன்பேகம், சத்தியமங்கலம்

'கறார்’ சகோதரன்!

எங்கள் தாத்தா, பாட்டிக்கு திருமணமாகி 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, உறவினர்களுக்கு மட்டும் சொல்லி, அவர்களுடைய திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடினோம். என் தங்கை, தன்னுடைய 3 மாத பெண் குழந்தையைத் தூக்கி வந்திருந்தாள். மூத்தவன் படுசுட்டி. அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தவனிடம், ''உங்க பாப்பாவை நாங்க வெச்சிக்கப் போறோம். நீ மட்டும் உங்க அம்மாவோட போ'' என்று விளையாட்டாக பாட்டி சொல்ல... அவனுக்கு வந்ததே கோபம்! ''இன்னிக்குத்தானே உங்களுக்கு கல்யாணமாயிருக்கு... கடவுள்கிட்ட வேண்டிக்கங்க. உங்களுக்கு குழந்தை பொறக்கும். என் தங்கச்சிப் பாப்பாவை தரமுடியாது'' என அவன் கண்டிப்பாகக் கூற... சுற்றிலும் குபீர் சிரிப்பு!  

- எ.லில்லி, தஞ்சாவூர்

சூப்பர் 'சமாளிஃபை’!

விடுமுறைக்கு வந்திருந்த, பக்கத்து வீட்டுத் தோழியின் பேத்தி ஓவியாவை, டிராயிங் வகுப்பில் சேர்த்தார்கள். ஒருநாள் தற்செயலாக தோழியின் இல்லம் சென்றபோது, தான் வரைந்திருந்த படங்கள் அடங்கிய நோட்டை என்னிடம் காட்டினாள் ஓவியா. அதைப் புரட்டியபோது, ஒரு பக்கத்தில் மிஸ் வரைந்த கத்திரிக்காய் பெரிதாக, கலர்ஃபுல்லாக இருந்தது. கீழே இவள் வரைந்த படத்தைப் பார்த்த நான், ''ஓவியா, உன்னோட கத்திரிக்காய் குட்டியா இருக்கு... சுருங்கியும் இருக்கு'' என்றேன். அவள் பளிச்சென்று சொன்ன பதில்... ''ஆன்ட்டி... இது ஃப்ரிட்ஜில் வைக்காத கத்திரிக்காய்... அதனாலதான் சுருங்கியிருக்கு!'' அவளுடைய 'சமாளிஃபை’ பேச்சைக் கேட்டு சிரித்து மகிழ்ந்தேன்.

- என்.கோமதி, திருநெல்வேலி

'பழைய பஸ் ஸ்டாண்ட்ல பழைய பஸ்’!

நிச்சயதார்த்த விழாவுக்காக, தஞ்சாவூர் செல்ல ஆயத்தமானோம். அப்போது, 'பழைய பஸ் ஸ்டாண்டுக்கு செல்வதா... இல்லை புதிய பஸ் ஸ்டாண்டுக்கு செல்வதா’ என்று பேசிக்கொண்டிருந்தோம். இதைக் கேட்ட வீட்டிலிருந்த சரண்யா குட்டி, திடீரென்று பேச்சுக்குள் நுழைந்து, ''புது பஸ் ஸ்டாண்டே போங்க... அங்கேதான் புது பஸ்ஸா கிடைக்கும். பழைய பஸ் ஸ்டாண்டுல பஸ் எல்லாம் பழசா இருக்கும்'' என்று கூற... எழுந்த சிரிப்பொலி அடங்க நீண்ட நேரம் ஆனது.

- த.சாந்தி, திருவாரூர்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ200

குட்டீஸ் குறும்பு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு