Published:Updated:

சாதனையா... வேதனையா?

மலை மலையாய் மதிப்பெண்கள்ஒரு சமச்சீர் சர்ச்சைபொன்.விமலா

சாதனையா... வேதனையா?

மலை மலையாய் மதிப்பெண்கள்ஒரு சமச்சீர் சர்ச்சைபொன்.விமலா

Published:Updated:

'தமிழக கல்வி வரலாற்றில் முதல்முறையாக...' என்கிற வகையில் கடந்த கல்வி ஆண்டின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499/500 மதிப்பெண்கள் பெற்று 19 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். 498 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தை 125 பேர் பகிர்ந்துகொள்ள, 321 பேர், 497 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்! இதுமட்டுமா... கணிதப் பாடத்தில் 18,682 பேரும், அறிவியல் பாடத்தில் 69,560 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 26,554 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்! கூடவே, 'தேர்ச்சி சதவிகிதம் 90.7' என்கிற சாதனையும் படைக்கப்பட்டுள்ளது!

சாதனையா... வேதனையா?

மாநிலத் தேர்வு முடிவுகள் இத்தனை ஆச்சர்யங்களை ஏற்படுத்த, சமச்சீர் கல்விதான் காரணம் என்கிற பேச்சுக்கள் அடிபடும்நிலையில், ''இது எந்த அளவுக்கு உண்மை?'' என்ற கேள்வியை இவர்கள் முன்பாக வைத்தபோது...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச்செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை

''மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவன் உயர்ந்தவன், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவன் தாழ்ந்தவன் என்ற ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து, அனைவருக்கும் ஒரே கல்வி என்ற சமத்துவத்துக்காகவே சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. ஆனால், ஆண்டுக்கு ஆண்டு அதன் தேர்ச்சி சதவிகிதத்தை, ரேஸ் போல துரத்த ஆரம்பித்துவிட்டன தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள். 'சென்ற வருட வருவாயைவிட, இந்த வருட டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளது' என்று அரசாங்கம் சந்தோஷப்படுவது போல, தேர்ச்சி சதவிகிதம் குறித்த சந்தோஷத்தை மக்களிடையே உண்டாக்கும் கட்டாயத்துக்கு பள்ளிகள் தள்ளப்படுவது தவறு. மெட்ரிக் பள்ளிகள் தங்களின் விளம்பரத்துக்காக தேர்ச்சி சதவிகிதம் மற்றும் மாவட்ட, மாநில ரேங்குகளுக்காக, மாணவர்களை மதிப்பெண் பெறும் இயந்திரமாக்கிக் கொண்டிருக்கின்றன.

சாதனையா... வேதனையா?

இன்னொரு பக்கம், 100 சதவிகித தேர்ச்சி என்பது, அரசுப் பள்ளிகளுக்கு வாய்வழி உத்தரவாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சில இடங்களில் தேர்ச்சி விழுக்காடு குறைந்த காரணத்தால், தலைமை ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் மாணவர்கள் மதிப்பெண் எடுக்க மட்டுமே தயார்படுத்தப்படுவார்களே ஒழிய, அவர்களுக்குப் பாடத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல் போகிறது.

இதுவரை இருந்த பாட நூல்களைவிட, சமச்சீர் கல்விமுறை சிறந்ததுதான். ஆனால், தேர்ச்சிக்கும் சாதனைகளுக்கும், இந்த சமச்சீர் கல்விப் பாடத்திட்டங்கள் மட்டுமே காரணமல்ல. கல்விச் சந்தையில் மதிப்பெண்களை வைத்து மட்டுமே வெற்றி நிர்ணயிக்கப்படுவதும் முக்கிய காரணம்.''

வா.மணிகண்டன், எழுத்தாளர்

''10 வருடங்களுக்கு முன்புகூட, 460 என்பதுதான் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்ணாக இருந்தது. இப்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் 490 என்ற மதிப்பெண்ணை தாண்டியிருக்கிறார்கள் பல நூறு மாணவர்கள். மதிப்பெண்கள் அதிகரித்திருக்கிறது. ஆனால்,

சாதனையா... வேதனையா?

கல்வியின் தரம் குறைந்திருக்கிறது என்பதுதான் உண்மை. இதன் விளைவுகள் எப்படி இருக்கும். பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண் தாண்டியவர்கள் எல்லாம்... பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பில்தான் சேர்வார்கள். அவர்களில் 90 சதவிகிதம் பேர் பொறியியல் படிப்பில்தான் விழுவார்கள். பொறியியல் துறையில் இவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்க முடியுமா? மற்ற துறைகளுக்கான பட்டதாரிகள் வரத்துக் குறையாதா? இதன் பாதகங்களை 15 வருடங்களுக்குப் பிறகு அறுவடை செய்வோம்.

இன்னொரு பக்கம், இந்த வெற்றியைப் பற்றியேதான் பேச்சுகள் உள்ளதே தவிர, இந்தத் தேர்வில் 300 மதிப்பெண்கள் பெற்றவர்கள் குறித்தோ, தோல்வியடைந்த 10 சதவிகித மாணவர்கள் (கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர்) குறித்தோ பேசுவதில்லை. இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்விக்கும் பதில் இல்லை.''

தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர்

''பல போராட்டங்களுக்குப் பிறகு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியே, இந்த சாதனைகளுக்குக் காரணம் என்று ஆணித்தரமாகச் சொல்வேன். கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்று சொல்லக்

சாதனையா... வேதனையா?

கூடிய தருமபுரி மாவட்டத்திலும்கூட இம்முறை மாணவர்கள் சாதனை படைக்க, சமச்சீர் கல்விதான் காரணம். இந்தக் கல்வி முறையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கற்றலும் கற்பித்தலும் எளிமையாக்கப்பட்டுள்ளன. மனனம் செய்து மதிப்பெண்களைக் குவிக்கச் சொல்லி மாணவர்களைக் கசக்கிப் பிழிந்த தனியார் பள்ளிகளின் பாடத்திட்டங்களிலிருந்து விடுதலை கொடுத்தது, செயல்வழிக் கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் சமச்சீர் கல்வி முறை. ஆனால், சமச்சீர் கல்வி சுலபமானதாக உள்ளதால்தான் இந்த சாதனைகள் என்பது, தவறான கருத்து. அதேசமயம், சமச்சீர் கல்வியின் ஆரம்ப நிலையில்தான் நாம் இருக்கிறோமே தவிர, இன்னும் முழுப்பரிமாணம் கொண்டு வரப்படவில்லை என்பதும் உண்மை. இதற்கிடையில் பாடப்புத்தகத்தில் பிழை இருக்கிறது, பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருக்கிறது என்று சொல்வது, சொத்தையான கருத்துகள். இன்னும் நிறைய மாற்றங்களை சேர்த்துக்கொண்டு, சமச்சீர் கல்வி தொடர்ந்து வெற்றி நடைபோடும்!''

சாதனையா... வேதனையா?

கஸ்தூரி, பத்தாம் வகுப்பு தேறியிருக்கும் மாணவி

''திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற கரிசூழ்ந்தமங்கலம், அரசுப் பள்ளியில படிச்சேன். இந்த வருஷம் பத்தாம் வகுப்பு பரீட்சையில 458/500 மார்க் எடுத்திருக்கேன். இதுக்கு முன்ன இருந்ததைவிட சமச்சீர் கல்வி ரொம்பவே சுலபமா இருக்கு. எங்க டீச்சர்ஸ் பாடத்துக்குப் பின்ன இருக்கிற கேள்விகளை மட்டுமில்லாம, மொத்தப் பாடத்தையும் படிக்கச் சொல்லி பயிற்சி கொடுத்தாங்க. ஆனா, பரீட்சையில புத்தகத்தில் இருந்த கேள்விகள் மட்டும்தான் வந்திருந்துச்சு. அதனால சுலபமா இருந்துச்சு. சமச்சீர் கல்வி முறை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா, கேள்வித்தாள்களை இன்னும் கடினமா தயாரிக்கலாம்னு தோணுது.''

ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர்

''சமச்சீர் கல்வியின் நோக்கம், எல்லோருக்கும் பொதுவான கல்வியை வழங்க வேண்டும் என்பதுதானே தவிர, எல்லோருக்கும் எளிமையான கல்வியை வழங்க வேண்டும் என்பதல்ல. எனவே, பாடங்களை இன்னும் கடினமாக்குவதை பரிசீலிக்கலாம். ஏனென்றால், இது உண்மையான திறமைசாலிகளுக்கு மேற்படிப்பில் சிக்கலை ஏற்படுத்தும். உதாரணமாக, 2,000-க்கும் அதிகமான

சாதனையா... வேதனையா?

மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் 200/200 மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கிற பட்சத்தில், இருக்கும் 2,000 இடங்களில் எப்படி இவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு தரமுடியும்? ஒருவேளை 2,015 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தா வாய்ப்பு வழங்க முடியும்? நுழைவுத் தேர்வையும் ரத்து செய்துவிட்ட சூழலில், இதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம்.

எல்லோரும் தேர்ச்சி பெறும்படி கேள்வித்தாள் இருக்கலாம், ஆனால், எல்லோரும் கூடுதல் மதிப்பெண் பெறும்படி இருப்பதுதான் தவறு. ஒரு வினாத்தாளில் 40 சதவிகித கேள்விகள் நேரடியாக வந்தாலும், 60 சதவிகித கேள்விகளை கடினமானதாகக் கொண்டு வரலாமே. மொத்தத்தில், பாடத்திட்டத்தில் விரிவான மாற்றமும் கேள்வித்தாள் தயாரிப்பில் கடினமும் கொண்டு வந்தால்... சமச்சீர் கல்வி வரவேற்கத்தக்கதே!''

ஏமாற்றும் வேலை!

விருத்தாசலத்தைச் சேர்ந்த, மாணவர்களின் கல்வி உரிமைகளுக்கான பெற்றோர்கள் சங்கத் தலைவர் வெங்கடேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். 'தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஸ்டேட் போர்டு, மெட்ரிக்குலேஷன், ஓரியன்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் ஆகிய நான்கு வகை கல்வி வாரியங்களும், மாநிலத்தில் சமச்சீர் கல்வி செயல்படுத்தப்பட்ட பின் கலைக்கப்பட்டுவிட்டன. பொதுக்கல்வி வாரியம் என்ற ஒரு வாரியம் மட்டுமே தற்போது செயல்படுகிறது. ஒரேவிதமான பாடத்திட்டம், புத்தகங்கள் மற்றும் தேர்வு முறைதான் அமலில் இருக்கிறது. ஆனால், விளம்பரத்துக்காக மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல் என சில பள்ளிகள் தங்களை அடையாளப்படுத்தி வருவது தொடர்கிறது. இது பெற்றோர்களை ஏமாற்றும் வேலை. எனவே, அவற்றையெல்லாம் உடனடியாக நீக்க வேண்டும்'' என்பதுதான் வெங்கடேசனின் தரப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism