Published:Updated:

புடவையில் சித்தன்னவாசல்!

படுக்கை விரிப்பில் பொன்னியின் செல்வன்...பொன்.விமலா, படங்கள்: ஆ.முத்துக்குமார்

புடவையில் சித்தன்னவாசல்!

படுக்கை விரிப்பில் பொன்னியின் செல்வன்...பொன்.விமலா, படங்கள்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:

வீன தோற்றத்துடன் வண்ணமயமாக்கப்பட்ட சென்னை, எழும்பூர் கோ-ஆப்டெக்ஸில் நுழையும்போதே கண்களைப் பறிக்கும் பல வண்ணச் சேலைகளுக்கு மத்தியில், வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன, படுக்கை விரிப்புகள். என்ன வித்தியாசம் என்கிறீர்களா?! இதுவரை புத்தகங்களில் மட்டுமே பார்த்த 'பொன்னியின் செல்வன்’, 'சிவகாமியின் சபதம்’, 'குற்றாலக் குறவஞ்சி’ போன்ற இலக்கியக் காட்சிகள், படுக்கை விரிப்புகளில் தத்ரூபமாக நெய்யப்பட்டிருக்கின்றன. இவை மட்டுமா... திருக்குறள், ஆத்திச்சூடி, சாலை விதிமுறைகள், விஞ்ஞானிகள் - அவர்களின் கண்டுபிடிப்புகள் என பற்பலவும் இப்படி இடம்பிடித்துள்ளன. தேனிலவு படுக்கை விரிப்புகளிலும் அழகழகான காட்சிகள் இடம்பிடித்துள்ளன!

புடவையில் சித்தன்னவாசல்!

அதிகபட்சமாக 700 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த படுக்கை விரிப்புகள் ஒருபுறமென்றால்... கண்ணைப் பறிக்கும் புடவைகள் இன்னும் இன்னும் வசீகரிக்கின்றன. இப்படி, கோ-ஆப்டெக்ஸுக்கு புதுப்பொலிவு கொடுத்திருக்கும் அதன் மேலாண்மை இயக்குநர் சகாயம் ஐ.ஏ.எஸ்-ஸுக்கு வாழ்த்து தெரிவித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சென்ற வருடம் 245 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த விற்பனையை, இந்த வருடம் 301 கோடியாக உயர்த்தியிருக்கிறோம். இந்த நிறுவனத்தின் பணியாளர்கள், நெசவாளர்கள் என சம்பந்தப்பட்ட அனைவருக்குமே இந்த வெற்றியில் பங்கு உண்டு.

புடவையில் சித்தன்னவாசல்!

குறைந்தபட்சம் படுக்கையில் விளையாடும் நேரத்திலாவது தமிழ் சார்ந்த விஷயங்களை குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே படுக்கை விரிப்புகளை புதுமைப்படுத்தியிருக்கிறோம். 'கோ-ஆப்டெக்ஸில் பாரம்பரிய புடவைகள் மட்டும்தான் இருக்கும், நவீன டிரெண்ட் ஆடைகள் இருக்காது' என்கிற எண்ணத்தை தகர்த்தெறியும் வகையில், நவீன யுவதிகளையும் ஈர்க்கிற வகையில் புடவைகளில் புதிய டிசைன்களையும் நுணுக்கத்தையும் கொண்டு வந்துள்ளோம். சரித்திர சேலைகளில் சித்தன்னவாசல் ஓவியங்கள் முதல் சிந்து சமவெளி நாகரிகம் வரை எல்லாவற்றையும் டிசைன்களாக கொண்டுவந்துள்ளோம். குகை ஓவியங்கள், கோயில் சிற்பங்கள், அஜந்தா சிற்பங்கள் என நுணுக்கமான டிசைன்களையும் பெண்களுக்கு பிடித்த வகைகளில் புதிய வண்ணங்களில் கொடுத்துள்ளோம்.

புடவையில் சித்தன்னவாசல்!

இதில் கவனிக்கப்பட வேண்டியது, அகிம்சா பட்டு. பட்டுப் பூச்சியைக் கொல்லாமல் அது கூட்டைவிட்டு வெளியேறிய பின் கிடைக்கும் குறைந்த அளவு நூலைத் திரட்டி செய்யும் பட்டுக்கு 'அகிம்சா பட்டு' என்று பெயர். ரசாயன சாயம் தோய்த்த துண்டுகளால் உடம்பிலும் முகத்திலும் சருமப் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதால் இலை, பூ, வேர், விதை இவை மூலம் கிடைக்கக்கூடிய இயற்கை சாயத்தில் தோய்த்த ஆரோக்யா துண்டுகளையும் தயாரிக்கிறோம். கண்டாங்கி சேலை, கோடம்பாக்கம் சேலை, கூறைநாடு சேலை, சுங்குடி சேலை என நம் அம்மாச்சிகள் கட்டிய அத்தனை சேலைகளும் அதே மண் மணத்துடன் கிடைக்கின்றன!'' என்று பெருமிதம் பொங்கச் சொன்னார் சகாயம்!

கோ-ஆப்டெக்ஸில் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, விற்பனைச் சாதனையை, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தியிருப்பதுடன்... அடுத்த ஆண்டின் இலக்கு 500 கோடி ரூபாய் எனவும் நிர்ணயித்துள்ளார் சகாயம். சென்ற ஆண்டின் லாபத்தை நேரடியாக நெசவாளர்களுக்கே பிரித்துக் கொடுத்துள்ளார். நெசவாளர்களின் வீடு தேடிச்சென்று, குறைகளை கேட்டறிந்துள்ளார்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு 'வேட்டி புரட்சி' என்ற ஒன்றை அறிவித்து, லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்களை வேட்டி கட்ட வைத்தார். அதேபோல் 19 மாவட்ட ஆட்சியர்களும் அன்று வேட்டி அணிந்து வந்திருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அளவில் கைத்தறி உற்பத்தியில் முதலிடம், கைத்தறிக்கு மகத்தான பங்களிப்பு என இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் 2013-14 ஆண்டுக்கான இரண்டு தேசிய விருதுகள், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்குக் கிடைத் துள்ளன.

புடவையில் சித்தன்னவாசல்!

''பாரம்பரிய புடவை உங்ககிட்ட இருக்கா?!''

ஒரு புதுமுயற்சியில் இறங்கியிருக்கும் சகாயம், அதைப் பற்றியும் பகிர்ந்தார். ''புடவைகளில் நம் முன்னோருடைய பாரம்பரியம் தொட்டுத் தொடர வேண்டும் என்பதற்காக... ராணிகள், ஜமீன்தாரிணிகள் கட்டியிருந்த புடவைகள் யாரிடமாவது உள்ளதா என தேடிக் கண்டுபிடித்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். ஒன்றிரண்டு புடவைகள் கிடைத்துள்ளன. இன்னும் நிறைய தேவைப்படுகிறது. இத்தகைய பாரம்பரியமிக்க புடவைகளை வைத்திருப்பவர்கள், அவை எந்த நிலையிலிருந்தாலும், அவற்றை எங்களிடம் கொடுக்கும்படி அவள் விகடன் மூலமாக கேட்டுக் கொள்கிறேன். இதற்காக எங்கள் நிறுவனத்தை அவர்கள் தாராளமாக அணுகலாம். இப்படி சேகரிக்கும் புடவைக்கான அங்கீகாரத்தை, சம்பந்தபட்டவர்களுக்கு வழங்குவோம். இந்த பாரம்பரிய டிசைன்களை எல்லாம் நவீனமாக்கி, புதிய புடவைகளில் கொடுப்பதுதான் எங்களின் திட்டம். இதை இளைய தலைமுறைப் பெண்கள் நிச்சயம் அள்ளிக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கையோடு உழைக்கிறோம்'' என்று எதிர்பார்ப்போடு சொன்னார் சகாயம்!

நெசவாளிக்கு மரியாதை!

கோ-ஆப்டெக்ஸில் ஒவ்வொரு புடவையை வாங்கும்போதும், அதனுடன் கூடவே ஓர் அட்டையையும் சேர்த்தே கொடுக்கிறார்கள். அதில், அந்தப் புடவையை நெய்த நெசவாளரின் பெயர், புகைப்படம், அவர் சேலை நெய்த விதம் என்பது உள்ளிட்ட தகவல்கள் இடம்பிடித்துள்ளன.

உதாரணத்துக்கு... நெசவாளரின் பெயர்: பரிமளம், ஊர்: சின்னாளப்பட்டி, வயது: 50

இந்த நெசவுக் கலைஞர் 6.20 மீட்டர் நீளமுள்ள கோரா காட்டன் சேலையை உற்பத்தி செய்ய, 16,500 முறை கைகளையும் கால்களையும் ஒருசேர அசைத்து நெசவு செய்துள்ளார். இதில் ஒவ்வொரு இழையையும் இருபக்கமும் சரியாக நிறுத்துவதால், புடவையின் வடிவங்கள் உருவாகின்றன. இந்தச் சேலையை உற்பத்தி செய்வதற்கு மூன்று நாட்கள் ஆனது. இதற்கு, பரிமளத்துடன் சேர்ந்து அவருடைய கணவரும் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் உழைத்திருக்கிறார். இவர், கடந்த 30 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

- இப்படி புடவைதோறும் நெசவாளரை பெருமைப்படுத்தும் அட்டையைக் காணலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism