Published:Updated:

''அதிகாரம் மட்டுமல்ல... சுதந்திரமும் கிடைக்கிறது!''

வாழும்கலை பேசும் பானுமதிகணேஷ் வைஷ்ணவி 

''அதிகாரம் மட்டுமல்ல... சுதந்திரமும் கிடைக்கிறது!''

வாழும்கலை பேசும் பானுமதிகணேஷ் வைஷ்ணவி 

Published:Updated:

பானுமதி நரசிம்ஹன்... 'வாழும் கலை’ ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் தங்கை என்பது, முதல் அடையாளம். இன்னும் ஆக்கபூர்வமான பல அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான அவருடன், ஓர் இனிமையான சந்திப்பு கனிந்தது.

ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் 'வாழும் கலை’யின் சாரம் நிறைந்த வாழ்வு, ஆன்மிகம், பரந்த மனிதாபிமானம், மக்கள் சேவை, மனஅழுத்தமற்ற, வன்முறையற்ற உலகை உருவாக்கும் கருத்துக்களைப் பரப்ப, தன் வாழ்வையே ஒப்படைத்த அர்ப்பணிப்பு, அதற்காக பல திட்டங்களை உருவாக்கி வரும் முனைப்பு என்று, தன் ஒவ்வொரு செயலிலும் மரியாதை கூட்டுகிறார் பானுமதி நரசிம்ஹன்.

''தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் பிறந்தேன். வளர்ந்ததெல்லாம் பெங்களூருவில். எங்கள் பெற்றோருக்கு நானும், அண்ணனும் என இரண்டு குழந்தைகள். ஆன்மிகம் எங்களுக்குள் திடீரென நுழைந்தது அல்ல... படிப்படியாகப் பிரவேசித்தது. சிறுவயதில் தினமும் எங்களுக்குப் புராணக் கதைகள் சொல்வார் அப்பா. ஒவ்வொரு நாளும் ராமாயணத்திலிருந்து ஒரு கதை, மகாபாரதத்திலிருந்து ஒரு கதை எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். வீட்டில் பெரியவர், அடியவர், குரவர் என்று யாராவது ஒருவருடைய பிறந்தநாளைக் கொண் டாடிக் கொண்டே தான் இருப்போம். பரந்த மனப்பான்மையுடனான ஆன்மிகத்தை நாங்கள் பெற்றது இப்படித்தான்!'' என்ற பானுமதி, பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். எகனாமிக்ஸ் மற்றும் சோஷியாலஜியும் கற்றுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அதிகாரம் மட்டுமல்ல... சுதந்திரமும் கிடைக்கிறது!''

''மனித வாழ்க்கை என்பது ஒரு சம்பவம் அல்ல, நிகழ்வு அல்ல, அது ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒரு கலை என்பதே, 'வாழும் கலை’யின் அடிப்படை. எப்படி ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி ஒரு கலையை ரசிக்கிறோமோ, அவ்வாறே வாழ்க்கையும் ரசிக்கப்பட வேண்டிய கலை. ஆனால், அது சுலபமல்ல. சிக்கலான வாழ்க்கைக்கு மெருகேற்றும் வேலையை, 'வாழும் கலை’ செய்யும். இதன் மூலம் ஒரு நல்ல மனமாற்றத்தைக் கொண்டுவர முடியும்; மனஅழுத்தமற்ற, வன்முறையற்ற உலகைக் கட்டியெழுப்ப முடி யும்'' என்று சுருக்கமாகப் புரியவைக்கும் பானுமதி, ஆன்மிக வழியில் தான் செயல்பட்டுக்கொண்டிருக் கும் ஆக்கபூர்வ விஷயங்கள் பற்றிப் பகிர்ந்தார்.

''வாழும் கலை நிர்வாகத்தின்கீழ் ஆசியாவின் மிகப்பெரிய ஆயுர்வேதக் கல்லூரி செயல்படுகிறது. 405 பாடசாலைகள், பதினெட்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்படுகின்றன. அங்கெல்லாம் கல்வியுடன் தனித்திறன் பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. குறிப்பாக, பெண் பிள்ளைகளின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு குழந்தையின் கல்விக்கு உதவியளிப்பதன் மூலம், ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு உதவ முடியும்'' என்றவர், பெண்களின் முன்னேற்றத்துக்கான தங்களின் முயற்சிகள் பற்றித் தொடர்ந்தார்.

''பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் சமுதாயத்தில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பது, எங்களின் ஆழ்ந்த நம்பிக்கை. எனவே அதிகாரம் கையில் வர, அவர்களைப் பொருளாதார அடிப்படையில் முன்னேற்ற, ஊறுகாய் தொழிலில் இருந்து கணினிப் படிப்புகள் வரை கற்றுத்தருகிறோம். தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தவும் செய்கிறோம். இதன் மூலம் அதிகாரம் மட்டுமல்ல, அந்தப் பெண்கள் சுதந்திரமும் கிடைக்கப் பெறுகிறார்கள். உறுதியுடன் இருந்தால்தான் இதையெல்லாம் சாதிக்க முடியும். அதனால், பெண் என்பவள், உறுதியுடன் இருக்கவேண் டும். உறுதி என்பது மனதில், கொள்கையில் மற்றும் செய லில் இருக்கவேண்டும். மாறாக, ஆக்ரோஷத்தில் இருக்கக் கூடாது'' என்று அழுத்தம் கொடுத்த பானுமதி,

''அதிகாரம் மட்டுமல்ல... சுதந்திரமும் கிடைக்கிறது!''

''தியானம், தனக்குள் இருக்கும் வளத்தை அறிய உதவும். இதனால் மனப்பாங்கு மாற்றமடையும், சூழலும் மாற்றமடையும். எனவே, பெண்கள் தினமும் 15 நிமிடங்களையாவது தியானத்துக்கு ஒதுக்கவேண்டும். 'தியானம் செய்வதால் பிரச்னையே வராதா’ என்று கேட்டால், அப்படி இல்லை. ஆனால், தியானம் செய்பவர்கள், பிரச்னைகளை முறையாகக் கையாளும் திறமை பெறுவார்கள். தியானம் செய்து பாருங்கள்... உங்களுக்கே இன்னும் பலவும் புரியும்!'' என்று மெல்லிய புன்னகையுடன் அறிவுறுத் தும் பானுமதி... இரண்டு மகன்கள், பேரப்பிள்ளைகள் என்று குடும்ப வாழ்விலும் சந்தோஷத்தை தக்க வைத்துள்ளார்.

மனைவி, தாய், பாட்டி என பல பரிமாணங்களில் குடும்பப் பொறுப்பையும், 'வாழும் கலை', அதன் நலத் திட்ட நிர்வாகம் என்று தெளிவுடன் கையாளும் இவரின் ஆளுமை... ஆச்சர்யம். ''வாழும் கலை என்பது ஓர் அமைப்பு இல்லை; அதுவும் எனக்கு ஒரு குடும்பம்தான். என் கணவர், பிள்ளைகள் அனைவருமே 'வாழும் கலை’யின் தன்னார்வத் தொண்டர்கள். இதனால் வீட்டில் நாங்கள் அனைவரும் பேசும் மொழி, அதாவது விஷயம், ஒன்றாகத்தான் இருக்கும்'' என்று அழகாக விளக்கம் கொடுக்கிறார் பானுமதி நரசிம்ஹன்!